Old/New Testament
ஒரு புதிய நாள் வருகிறது
9 கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டை தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும்.
2 இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளைபோன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும்.
3 தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப்போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும். 4 ஏனென்றால், நீர் அவர்களின் மிகுந்த பாரத்தை நீக்குவீர். ஜனங்களின் முதுகில் இருக்கும் பெரிய நுகத்தடியை நீக்குவீர். உமது ஜனங்களைப் பகைவர்கள் தண்டிக்கப் பயன்படுத்திய கோலையும் விலக்கி விடுவீர். இது நீங்கள் மீதியானியரைத் தோற்கடித்த காலத்தைப்போன்று இருக்கும்.
5 போர் செய்வதற்காக நடந்து சென்ற ஒவ்வொரு காலணியும் அழிக்கப்படும். இரத்தம் தோய்ந்த ஒவ்வொரு சீருடையும் அழிக்கப்படும். அவை நெருப்பிலே வீசப்படும்.
6 விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது “ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும். 7 அவரது அரசாங்கத்தில் பலமும் சமாதானமும் இருக்கும். தாவீதின் குடும்பத்திலிருந்து வரும் இந்த அரசர் நன்மையையும் நீதியையும் பயன்படுத்தி தமது அரசாங்கத்தை என்றென்றைக்கும் ஆண்டு வருவார்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் ஜனங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர். அந்தப் பலமான அன்பு இவற்றையெல்லாம் செய்யக் காரணமாய் இருக்கின்றது.
தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார்
8 எனது கர்த்தர் யாக்கோபின் ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) எதிராக ஒரு கட்டளையிட்டார். இஸ்ரவேலின்மேல் அந்தக் கட்டளை வரும்.
9 பிறகு எப்பிராயீமில் (இஸ்ரவேலில்) உள்ள ஒவ்வொருவரும், சமாரியாவில் உள்ள தலைவர்களும்கூட தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை அறிந்துகொள்வார்கள்.
இப்போது அந்த ஜனங்கள் பெருமையும் ஆணவமும் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், 10 “இந்தச் செங்கற்கள் விழலாம், ஆனால் நாங்கள் மீண்டும் கட்டுவோம். நாங்கள் பலமான கற்களால் கட்டுவோம். இந்தச் சிறு மரங்கள் வெட்டப்படலாம். ஆனால் நாங்கள் புதிய மரங்களை நடுவோம். அப்புதிய மரங்கள் பெரியதாகவும், உறுதியுடையதாகவும் இருக்கும்” என்றனர். 11 எனவே, கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகப்போரிட ஜனங்களை கண்டுபிடிப்பார். கர்த்தர் ரேத்சீனின் பகைவர்களை அவனுக்கு எதிராகக் கொண்டுவருவார். 12 கர்த்தர் கிழக்கிலிருந்து ஆராமியரையும் மேற்கிலிருந்து பெலிஸ்தர்களையும் கொண்டுவருவார். அவர்கள் தம் படையால் இஸ்ரவேலர்களைத் தோற்கடிப்பார்கள். ஆனால், கர்த்தர் மேலும் இஸ்ரவேலர்களோடு கோபமாக இருப்பார். கர்த்தர் அந்த ஜனங்களை மேலும் தண்டிக்கத் தயாராக இருப்பார்.
13 தேவன் அவர்களைத் தண்டிப்பார். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் அவரிடம் திரும்பமாட்டார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றமாட்டார்கள். 14 எனவே கர்த்தர் இஸ்ரவேலின் தலையையும் வாலையும் வெட்டி வீசுவார். ஒரே நாளில் கர்த்தர் கிளைகளையும் நாணலையும் வெட்டிப்போடுவார். 15 (தலை என்றால் மூப்பர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் என்று பொருள். வால் என்றால் பொய் சொல்லும் தீர்க்கதரிசிகள் என்று பொருள்).
16 ஜனங்களை வழிநடத்துபவர்கள் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். அவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் அழிந்துபோகிறார்கள். 17 அனைத்து ஜனங்களும் தீமையானவர்கள். எனவே இளைஞர்களைப்பற்றி கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். அவர்களின் விதவைகளிடமும், அநாதைகளிடமும் அவர் இரக்கம் காட்டமாட்டார். ஏனென்றால், அனைவரும் தீமையானவர்கள். ஜனங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானவையே. ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். எனவே, தேவன் தொடர்ந்து ஜனங்களிடம் கோபமாக உள்ளார். தேவன் தொடர்ந்து அந்த ஜனங்களை தண்டிக்கிறார்.
18 தீமையானது சிறு நெருப்பைப்போன்றது. முதலில் அது முட்களையும் நெருஞ்சியையும் எரிக்கும். பிறகு அது காட்டிலுள்ள பெரும் புதர்களை எரிக்கின்றது. இறுதியாக அது பெருநெருப்பாகி எல்லாம் புகையோடு போகும்.
19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கோபமாக இருக்கிறார். எனவே, இந்த நாடு எரியும். எல்லா ஜனங்களும் நெருப்பில் எரிவார்கள். எவரும் தன் சகோதரனைக் காப்பாற்ற முயலமாட்டார்கள். 20 ஜனங்கள் வலது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். இடது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். பிறகு ஒவ்வொருவரும் திரும்பித் தங்களையே தின்பார்கள். 21 (இதற்கு மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் எதிர்த்துப்போராடுவார்கள். பிறகு இருவரும் யூதாவிற்கு எதிராகத் திரும்புவார்கள் என்று பொருள்).
கர்த்தர் இன்னும் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாக இருக்கிறார். கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டிக்கத் தயாராக உள்ளார்.
10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. 2 அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.
3 சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. 4 நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப்போனவனைப்போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.
G o d W ill P u n is h A s s y ria’s P rid e
5 தேவன், நான் அசீரியாவை ஒரு தடியைப்போன்று பயன்படுத்துவேன். கோபத்தில் நான் இஸ்ரவேலைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவேன். 6 நான் அசீரியாவை அனுப்பி தீமை செய்கிற என் ஜனங்களுக்கு எதிராகப்போராடச் சொல்லுவேன். நான் அந்த ஜனங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். அவர்களை எதிர்த்துப்போரிடுமாறு அசீரியாவிற்குக் கட்டளையிட்டேன். அசீரியா அவர்களைத் தோற்கடிக்கும். அவர்களது செல்வங்களை அசீரியா எடுத்துக்கொள்ளும். இஸ்ரவேல் அசீரியாவிற்கு மிதிக்கப்படுகிற அழுக்கைப்போலிருக்கும்.
7 “ஆனால் நான்தான் அதனைக் பயன்படுத்துகிறேன் என்பது அசீரியாவிற்குத் தெரியாது. எனக்கு அது ஒரு கருவி என்பது அசீரியாவிற்கு புரியாது. மற்றவர்களை அழிக்கவேண்டும் என்று மட்டுமே அசீரியா விரும்புகிறது. அசீரியா பல நாடுகளை அழிக்கவேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறது. 8 அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப்போன்றவர்கள்!’ 9 கல்னோ நகரமானது கர்கேமிசைப்போன்றது. ஆமாத் நகர் அர்பாத்தை போன்றது. சமாரியா தமஸ்குவைப்போன்றது. 10 நான் அந்தத் தீமையான அரசுகளைத் தோற்கடித்தேன், இப்போது அவற்றை நான் கட்டுப்படுத்துகிறேன். அவர்களால் தொழுதுகொள்ளப்படுகிற விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ள விக்கிரகங்களைவிட எண்ணிக்கையில் மிகுந்தவை. 11 நான் சமாரியாவையும் அதிலுள்ள விக்கிரகங்களையும் தோற்கடித்தேன். நான் எருசலேமையும் அந்த ஜனங்கள் செய்த விக்கிரகங்களையும் தோற்கடிப்பேன் என்றனர்” என்பார்.
12 எனது ஆண்டவர், எருசலேமில் சீயோன் மலையிலும் செய்யவேண்டுமென்று திட்டமிட்டவற்றைச் செய்து முடிப்பார். பிறகு கர்த்தர் அசீரியாவைத் தண்டிப்பார். அசீரியாவின் அரசன் வீண் பெருமைகொண்டவன். அவனது பெருமை அவனைப் பல தீய செயல்களைச் செய்ய வைத்தது. எனவே, தேவன் அவனைத் தண்டிப்பார்.
13 அசீரியாவின் அரசன், “நான் ஞானமுள்ளவன். எனது சொந்த ஞானத்தாலும் பெலத்தாலும் நான் பல பெரியக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் பல நாடுகளைத் தோற்கடித்துள்ளேன். நான் அவற்றின் செல்வங்களைப் பறித்துள்ளேன். அங்குள்ள ஜனங்களை நான் அடிமைகளாக எடுத்துள்ளேன். நான் மிகவும் பெலமுள்ளவன். 14 எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப்போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப்போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார்.
15 ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னை தேவனைவிட முக்கியமானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும். 16 அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும். 17 இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப்போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப்போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும். 18 பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும். 19 காட்டில் சில மரங்கள் மட்டும் அவனுக்காக விடப்பட்டிருக்கும். ஒரு சிறுபிள்ளைகூட அவற்றை எண்ண முடியும்.
20 அப்போது, இஸ்ரவேலில் மீதியுள்ள ஜனங்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும் தம்மை அடித்தவர்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தரை உண்மையாகவே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வார்கள். 21 யாக்கோபின் குடும்பத்தில் மீதியுள்ள ஜனங்கள் மீண்டும் வல்லமைமிக்க தேவனைப் பின்பற்றுவார்கள்.
22 உங்கள் ஜனங்கள் மிகுதியானவர்கள். அவர்கள் கடற்கரையின் மணலைப்போன்றவர்கள். ஆனால் கொஞ்சம் ஜனங்களே தேவனிடம் திரும்பி வருவார்கள். ஆனால் முதலில் உனது நாடு அழிக்கப்படும். நாட்டை அழித்துவிடுவதாக தேவன் அறிவித்திருக்கிறார். பிறகே, நாட்டுக்கு நன்மை வந்து சேரும். இது ஆறு நிரம்பிவருவது போன்றது. 23 சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், நிச்சயமாக இந்த நாட்டை அழிப்பார்.
24 எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “சீயோன் மலையில் வாழும் என் ஜனங்களே, அசீரியாவுக்கு அஞ்சவேண்டாம்! முன்பு உங்களை எகிப்து அடித்ததுபோன்று அது அடிக்கும். உங்களைக் காயப்படுத்த அசீரியா தடியைப் பயன்படுத்தியது போன்று அது இருக்கும். 25 ஆனால் சிறிது காலத்தில் என் கோபம் நிறுத்தப்படும். அசீரியா உங்களைப்போதுமான அளவிற்குத் தண்டித்துவிட்டது என்று நான் திருப்தி அடைவேன்” என்றார். 26 பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவை ஒரு சவுக்கால் அடிப்பார். கடந்த காலத்தில், கர்த்தர் மீதியானியர்களை காகத்தின் பாறை அருகில் தோற்கடித்தார். கர்த்தர் அசீரியாவைத் தாக்குவதுப்போல் இருக்கும். முன்பு கர்த்தர் எகிப்தைத் தண்டித்தார். அவர் தன் தடியைக் கடலுக்குமேல் ஓங்கினார். தம் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அது அசீரியாவிலிருந்து கர்த்தர் தம் ஜனங்களைக் காப்பாற்றியது போலவே இருக்கும்.
27 உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.
இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல்
28 படையானது “ஆயாத்து” அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப்படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும். 29 அப்படை ஆற்றை மாபாலில் “கடக்கும்” அது கேபாவில் தூங்கும். ராமா அதைப் பார்த்து அஞ்சும், சவுலின் ஊராகிய கிபியாவின் ஜனங்கள் ஓடிச்செல்வார்கள்.
30 பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்! 31 மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள். 32 இந்நாளில், படையானது நோபிலே நிறுத்தப்படும். அப்படையானது எருசலேம் மலையான சீயோனுக்கு எதிராகப்போரிடத் தயார் செய்யும்.
33 கவனி! சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய எனது ஆண்டவர், அசீரியா என்னும் மரத்தை வெட்டித் தள்ளுவார். கர்த்தர் தமது பெரும் பலத்தால் இதனைச் செய்துமுடிப்பார். பெரிய முக்கிய ஜனங்கள் வெட்டி வீசப்படுவார்கள். அவர்கள் முக்கியம் இல்லாமல் போவார்கள். 34 கர்த்தர் அக்காட்டினைத் தனது கோடரியால் வெட்டுவார். லீபனோனில் உள்ள (முக்கிய ஜனங்களான) பெரிய மரங்களும் விழும்.
பவுலின் பணி
3 நான் இயேசு கிறிஸ்துவின் கைதியாக இருக்கிறேன். யூதர் அல்லாத உங்களுக்காகவே நான் அவ்வாறு இருக்கிறேன். 2 தேவன் தம் இரக்கத்தாலேயே இந்த வேலையை எனக்குக் கொடுத்தார் என்பது உறுதியாக உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தேவன் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார். 3 தேவன் தனது இரகசிய திட்டத்தை எனக்குத் தெரியும்படி செய்தார். அதை எனக்கு காட்டினார். நான் ஏற்கெனவே அதைப்பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன். 4 நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். 5 முற்காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இரகசியம் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது ஆவியின் மூலம் தேவன் அந்த இரகசிய உண்மையை அவரது அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கு புலப்படுத்தினார். 6 இது தான் அந்த உண்மை. தேவன் தனது மக்களுக்குக் குறிப்பாக யூத மக்களுக்குக் கொடுத்த அத்தனையும் யூதர் அல்லாதவர்களுக்கும் கொடுப்பார். ஒரே குழுவில் யூதர்களோடு யூதர் அல்லாதவர்களும் சேர்ந்து இருப்பார்கள். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்த வாக்குறுதியில் அவர்கள் யாவரும் பங்கு பெறுவர். யூதர் அல்லாதவர்களும் நற்செய்தியினாலேயே இவற்றை அடைகிறார்கள்.
7 தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார். 8 தேவனின் பிள்ளைகளில் நானே முக்கியத்துவம் மிககுறைந்தவன். ஆனால் யூதர் அல்லாதவராகிய உங்களுக்கு நான் கிறிஸ்துவின் உயர்வு பற்றிய நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்பு பெற்றேன். அவரது உயர்வு சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரியது. 9 தேவனைப் பற்றிய இரகசிய உண்மையை அனைத்து மக்களிடமும் சொல்கின்ற அரிய பணியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உண்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்தது தேவன் ஒருவரே, 10 பரலோகத்தில் உள்ள ஆளுகைகளும், அதிகாரங்களும் தேவனின் அளவற்ற பலவகை ஞானத்தையும் சபையின் மூலம் தெரியவரும்படிச் செய்வதே தேவனுடைய நோக்கமாகும். 11 தொடக்க காலத்திலிருந்தே இது தேவனின் திட்டம். தேவன் தன் திட்டப்படியே செய்து வருகிறார். 12 கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும். 13 நான் உங்களுக்காக பட்ட துன்பங்களால் நீங்கள் நம்பிக்கையில் தளர வேண்டாம் என்றும் தைரியம் இழக்க வேண்டாம் என்றும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனது துயரங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும்.
கிறிஸ்துவின் அன்பு
14 ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். 15 அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும் 16 உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். 17 கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். 18 நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். 19 அவரது அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயரமானது, எவ்வளவு ஆழமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
20 இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது. 21 சபையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எப்போதும் தலைமுறை தலை முறைக்கும் எல்லாக் காலங்களிலும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center