Old/New Testament
ஆராமுக்கு ஏற்பட்ட தொல்லைகள்
7 ஆகாஸ் யோதாமின் மகன், யோதாம் உசியாவின் மகன், ரேத்சீன் ஆராமின் அரசன். ரெமலியாவின் மகனான பெக்கா இஸ்ரவேலின் அரசன். ஆகாஸ் யூதாவின் அரசனாக இருந்த காலத்திலே, ரேத்சீனும் பெக்காவும் எருசலேமிற்குப்போய் அதற்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களால் அந்நகரத்தைத் தோற்கடிக்க முடியவில்லை.
2 “ஆராமின் படையும் இஸ்ரவேலின் படையும் சேர்ந்துகொண்டு அவை இரண்டும் போருக்கு வந்துள்ளன” என்ற செய்தி தாவீதின் குடும்பத்திற்குச் சொல்லப்பட்டது.
ஆகாஸ் அரசன் இதனைக் கேள்விப்பட்டதும், அவனும் ஜனங்களும் மிகவும் பயந்தனர். அவர்கள் புயல் காற்றில் அகப்பட்ட மரங்களைப்போன்று நடுங்கினார்கள்.
3 பிறகு கர்த்தர் ஏசாயாவிடம், நீயும் உனது மகனான சேயார் யாசூபும் வெளியே போய் ஆகாசிடம் பேசுங்கள். மேல் குளத்தில் தண்ணீர் பாய்கிற இடத்துக்குப்போங்கள். இது வண்ணார நிலத்துக்குப்போகும் தெரு.
4 “ஆகாசிடம், ‘எச்சரிக்கையாக இரு, ஆனால் அமைதியாக இரு. அஞ்சாதே, ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும் உனக்கு அச்சம் ஏற்படுத்தும்படிவிடாதே! அவர்கள் இருவரும் இரண்டு எரிந்த கட்டைகளைப்போன்றவர்கள். முன்பு எரிந்தார்கள். இப்போது அவர்கள் வெறுமனே புகைகிறார்கள். ரேத்சீன், ஆராம், ரெமலியாவின் மகன் ஆகிய அனைவரும் கோபமாக இருக்கிறார்கள். 5 அவர்கள் உனக்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள். 6 அவர்கள்: “நாம் போய் யூதாவிற்கு எதிராகச் சண்டையிடுவோம். நாம் யூதாவை நமக்காகப் பங்கிட்டுக்கொள்வோம். நாம் தாபேயாலின் மகனை யூதாவின் புதிய அரசனாக்குவோம் என்றனர்.’”
7 எனது கர்த்தராகிய ஆண்டவர், “அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது. 8 தமஸ்குவின் அரசனாக ரேத்சீன் இருக்கும்வரை இது நடக்காது. எப்பிராயீம் (இஸ்ரவேல்) இப்போது ஒரு தேசம். ஆனால் எதிர்காலத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு நாடாக இருக்காது. 9 சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் மகன் சமாரியாவின் அரசனாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.
இம்மானுவேல், தேவன் நம்மோடு இருக்கிறார்.
10 பிறகு கர்த்தர் தொடர்ந்து ஆகாசோடு பேசினார். 11 கர்த்தர், “இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்” என்றார்.
12 ஆனால் ஆகாஸ், “அதை நிரூபிக்க நான் அடையாளத்தைக் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைச் சோதிக்கமாட்டேன்” என்றான்.
13 பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள். 14 ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார்.
இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள்.
இவள் ஒரு மகனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
15 இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார்,
அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும்
பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.
16 ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால்,
எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும்.
நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு அரசர்கள் பற்றியும் பயப்படுகிறாய்.
17 “ஆனால் நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். ஏனென்றால், கர்த்தர் உனக்கு துன்பக் காலங்களைக் கொண்டுவருவார். அத்துன்பங்கள் உனது ஜனங்களுக்கும் உன் தந்தையின் குடும்பத்து ஜனங்களுக்கும் ஏற்படும். தேவன் என்ன செய்வார்? தேவன் அசீரியாவின் அரசனை உனக்கு எதிராகப்போரிட அழைத்து வருவார்.
18 “அப்பொழுது, கர்த்தர் ‘ஈயை’ அழைப்பார். (அந்த ‘ஈக்கள்’ இப்போது எகிப்து ஓடைக் கரைகளில் உள்ளன). கர்த்தர் ‘தேனீக்களை’ அழைப்பார். (இந்த தேனீக்கள் இப்பொழுது அசீரியா நாட்டிலுள்ளன). இந்தப் பகைவர்கள் உன் நாட்டிற்குள் வருவார்கள். 19 இந்தப் பகைவர்கள், வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கல்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முள்காடுகளிலும், மேய்ச்சல் காடுகளிலும் தங்குவார்கள். 20 கர்த்தர் யூதாவைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவார். அசீரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப்போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிருக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்.
21 “அப்போது, ஒருவன் ஒரு பசுவையும் இரு ஆடுகளையும் மட்டும் உயிரோடு பாதுகாப்பான். 22 அவன் வெண்ணெய் தின்பதற்குரிய பாலை மட்டுமே பெறுவான். அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் வெண்ணையையும் தேனையும் உண்பார்கள். 23 இந்தச் தேசத்தில், இப்பொழுது 1,000 திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 1,000 வெள்ளிகள் மதிப்புடையது. ஆனால் இந்த தேசம் முள்ளும் புதரும் நிறைந்ததாகும். 24 அவை காடாக இருப்பதால் வேட்டைக்கு மட்டுமே பயன்படும். 25 ஜனங்கள் ஒரு காலத்தில் உழைத்து இக்குன்றுகளில் உணவுப் பொருட்களை விளைய வைத்தனர். ஆனால் இப்போது ஜனங்கள் அங்கே செல்வதில்லை. அந்தத் தேசம் முள்ளாலும் பதராலும் நிறைந்துவிடும். அது ஆடு மாடுகள் செல்வதற்குரிய இடங்களாகும்” என்றான்.
அசீரியா விரைவில் வரும்
8 கர்த்தர் என்னிடம் கூறினார், “ஒரு பெரிய சுருளை எடுத்துக்கொள். இந்த வார்த்தைகளை எழுத ஒரு பேனாவை எடுத்துக்கொள். அதில் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (‘அங்கே விரைவில் களவும் சூறையாடலும் நடக்கும்’ என்பது பொருள்) என்று எழுது” என்றார்.
2 நான் சிலரைச் சேகரித்தேன். அவர்கள் நம்பிக்கைக்குரிய சாட்சிகள். (அவர்கள் ஆசாரியனான உரியா, சகரியா, யெபெரெகியா ஆகியோர்). இவர்கள் நான் எழுதுவதைக் கவனித்தார்கள். 3 பிறகு நான் தீர்க்கதரிசியான ஒரு பெண்ணிடம் சென்றேன். நான் அவளோடு இருந்தபிறகு அவள் கர்ப்பவதியானாள். அவள் ஒரு மகனைப் பெற்றாள். பிறகு கர்த்தர் என்னிடம், “அப்பையனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” என்னும் பெயரிடு. 4 ஏனென்றால், இவன் “அம்மா, அப்பா” என்று சொல்லக் கற்பதற்கு முன்னால் தேவன், தமஸ்கு மற்றும் சமரியாவிலுள்ள செல்வங்களை எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் கொடுத்துவிடுவார் என்றார்.
5 மீண்டும் கர்த்தர், என்னிடம் கூறினார். 6 என் ஆண்டவர், “இந்த ஜனங்கள் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீரை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ரேத்சீனையும் ரெமலியாலின் மகனையும் ஏற்று மகிழ்ச்சிகொண்டார்கள்.” 7 ஆனால் கர்த்தராகிய நான் அசீரியாவின் அரசனையும் அவனது வல்லமையயும் உங்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் ஐபிராத்து ஆற்றின் பெருவெள்ளத்தைப்போன்று வருவார்கள். அது குளத்தில் தண்ணீர்மட்டம் உயருவதுபோன்று இருக்கும். 8 அந்த வெள்ளம் ஆற்றிலிருந்து வெளியே வந்து யூதாவின்மேல் பாய்வதுபோல இருக்கும். அந்த வெள்ளம் யூதாவின் கழுத்துவரை வந்து அதனை மூழ்கடிக்கும்.
“இம்மானுவேலே, உமது நாடு முழுவதிலும் பரவும்வரை அந்த வெள்ளம் வரும்” என்றார்.
9 நாடுகளே, நீங்கள் போருக்குத் தயாராகுங்கள்!
நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
கவனியுங்கள், தூர நாடுகளில் உள்ளவர்களே!
போருக்குத் தயாராகுங்கள் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
10 போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள்.
உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும்.
உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்!
உங்கள் கட்டளைகள் பயனற்றுப்போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!
ஏசாயாவிற்கு எச்சரிக்கைகள்
11 கர்த்தர் தன் பெரும் வல்லமையோடு என்னுடன் பேசினார். கர்த்தர், மற்ற ஜனங்களைப்போன்று இருக்கவேண்டாம் என்று என்னை எச்சரித்தார். 12 கர்த்தர், “ஒவ்வொருவரும் மற்றவர்கள் தனக்கெதிராகத் திட்டம் தீட்டுவதாகக் கூறுகின்றனர். நீ அவற்றை நம்பவேண்டாம். அவர்கள் பயப்படுகின்றவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” என்றார்!
13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒருவருக்கே நீ பயப்பட வேண்டும். அவர் ஒருவருக்கே நீ மரியாதை செலுத்த வேண்டும். அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும். 14 நீ கர்த்தரை மதித்து அவரைப் பரிசுத்தமானவர் என்று எண்ணுவாயேயானால், அவரே உனக்கேற்ற பாதுகாப்பான இடமாயிருப்பார். ஆனால் நீ அவரை மதிப்பதில்லை. எனவே, அவர் நீங்கள் விழத்தக்கப் பாறையைப்போன்றிருப்பார். இஸ்ரவேலின் இரு குடும்பங்களை இடறச்செய்யும் பாறை இது. கர்த்தர் எருசலேம் ஜனங்களைப் பிடிக்கின்ற வலையைப்போன்று இருக்கிறார். 15 (ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப்போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).
16 ஏசாயா, “ஒரு ஒப்பந்தத்தைச்செய்து முத்திரை இடுவோம். எதிர்காலத்திற்காக என் போதனைகளைப் பத்திரப்படுத்துங்கள். என்னைப் பின்பற்றுகிறவர்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இதனைச் செய்யுங்கள்.”
17 இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன்.
யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார்.
அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார்.
ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.
18 இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் நானும் எனது பிள்ளைகளும் இருக்கிறோம். சீயோன் மலையில் குடியிருக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான்.
19 சிலர், “என்ன செய்யலாம் என்பதையும் எதிர்காலம் பற்றி சொல்பவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் கேளுங்கள்” என்றனர். குறி சொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் பறவைகளைப்போன்று பேசுவார்கள். மறை பொருள் அறிந்தவர்கள் என்று கேட்பவர்கள் எண்ணும்படியாக கிசு கிசுத்து அவர்கள் பேசுவார்கள். ஆனால், நான் சொல்கிறேன் ஜனங்கள் உதவிக்காக தம் தேவனைக் கேட்க வேண்டும்! குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் என்ன செய்யலாம் என்று மரித்துபோனவர்களைக் கேட்கிறார்கள். உயிரோடு இருக்கிறவர்கள் மரித்துப்போனவர்களிடம் ஏன் இதுபோல் கேட்க வேண்டும்?
20 நீங்கள் போதனைகளையும், ஒப்பந்தத்தையும் பின்பற்ற வேண்டும். அந்தக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றாவிட்டால், பின்னர் நீங்கள் தவறான கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். (தவறான கட்டளைகள் என்பது குறிகாரர்களும் அஞ்சனக்காரர்களும் கூறுவதாகும். அக்கட்டளைகள் பயனற்றவை. அக்கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த பயனையும் பெற முடியாது).
21 நீங்கள் அந்தத் தவறான கட்டளைகளைப் பின்பற்றினால், நாட்டில் துன்பமும், பசியும் ஏற்படும். ஜனங்களுக்குப் பசி ஏற்படும். எனவே, அவர்கள் கோபங்கொண்டு தம் அரசனுக்கும் அவனது தெய்வங்களுக்கும் எதிராகப் பேசுவார்கள். பிறகு அவர்கள் தம் உதவிக்கு தேவனிடம் வேண்டுவார்கள்.
22 அவர்கள் அந்த நாட்டில் தம்மைச் சுற்றிலும் பார்த்தால், துன்பத்தையும் கடும் இருளையும் காண்பார்கள். அத்துன்பமாகிய இருள் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும். அந்த இருள் வலைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது.
இறப்பிலிருந்து வாழ்வுக்கு
2 கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம் 2 ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது. 3 கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.
4 ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார். 5 ஆன்மீகப்படி நாம் இறந்துபோனோம். தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். 6 கிறிஸ்துவோடு நம்மையும் தேவன் உயிர்த்தெழச் செய்தார். பரலோகத்தில் நமக்கென்று இருக்கைகளையும் ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற நமக்காக தேவன் இதைச் செய்தார். 7 தேவன் இதைச் செய்ததால் எதிர்காலம் முழுவதும் அவர் தனது செல்வம் மிக்க இரக்கத்தையும் உயர்ந்த தயவையும் காட்டுவார். அவர் இதையும் கிறிஸ்துவுக்குள் நமக்குச் செய்வார்.
8 தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள். உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. இது தேவனிடமிருந்து கிடைக்கும் பரிசு. 9 நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. 10 நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார்.
கிறிஸ்துவில் ஒன்றாகுதல்
11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். 12 கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. 13 ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.
14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். 15 யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார். 16 இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார். 17 தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார். 18 ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.
19 ஆகவே யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள். 20 விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரக்கல் [a] போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாவார். 21 அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார். 22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
2008 by World Bible Translation Center