Old/New Testament
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
147 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள்.
அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
2 கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.
சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
3 தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,
அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
4 தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.
ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
5 நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
6 கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.
ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
7 கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
8 தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.
தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
9 தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.
தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும்
வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.
அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி!
சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார்.
தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை.
உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.
அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.
உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.
அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.
பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.
19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.
தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.
தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.
கர்த்தரைத் துதியுங்கள்!
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி
15 சகோதர சகோதரிகளே, உங்களுக்குக் கூறிய நற்செய்தியை இப்போது நீங்கள் நினைவுகூரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இச்செய்தியைப் பெற்றீர்கள். அச்செய்தியில் உறுதியாய்த் தொடருங்கள். 2 நீங்கள் இந்நற்செய்தியால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னவற்றை தொடர்ந்து நம்புங்கள். அங்ஙனம் செய்யாத பட்சத்தில் உங்களின் விசுவாசம் வீணாய் போகும்.
3 நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். 4 வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார். 5 கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார். 6 அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். 7 அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார். 8 இறுதியாக வழக்கமற்ற முறையில் பிறந்த ஒருவனைப் போன்ற எனக்கும் கிறிஸ்து தன்னைக் காண்பித்தார்.
9 மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். நான் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியவன். எனவே அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல. 10 ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது.) 11 நான் உங்களுக்குப் போதித்தேனா, அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் உங்களுக்குப் போதித்தார்களா என்பது முக்கியமில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே விஷயத்தையே போதிக்கிறோம். இதையே நீங்களும் நம்பினீர்கள்.
நமது உயிர்த்தெழுதல்
12 கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்? 13 மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். 14 மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது. 15 நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். 16 இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். 17 கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள். 18 ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். 19 இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.
20 ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். 21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. 22 ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். 23 ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். 24 அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார்.
25 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். 26 கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும். 27 “தேவன் அவரது அதிகாரத்துக்குள் எல்லாவற்றையும் வைத்தார்” [a] என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது” எனும்போது தேவனை உள்ளடக்கிக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தியவர் தேவனே. 28 எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.
2008 by World Bible Translation Center