Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உன்னதப்பாட்டு 1-3

இது சாலொமோனின் மிகவும் அற்புதமான பாடல்

பெண் தான் நேசிக்கிற மனிதனுக்கு

என்னை முத்தங்களால் மூடிவிடும்.
    திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது.
உமது வாசனைத் திரவியங்கள் அற்புதமானவை,
    ஆனால் உமது நாமம் சிறந்த வாசனைப் பொருட்களைவிட இனிமையானது.
    அதனால்தான் இளம் பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
என்னை உம்மோடு சேர்த்துக்கொள்ளும்.
    நாம் ஓடிவிடுவோம்.
அரசன் என்னைத் தன் அறைக்கு எடுத்துச்சென்றார்.

எருசலேமின் பெண்கள் மனிதனுக்கு

நாங்கள் உம்மில் களிப்படைந்து மகிழ்வோம்.
    திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது என்பதை மனதில்கொள்ளும். நல்ல காரணங்களுக்காகவே இளம்பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.

அவள் பெண்களோடு பேசுகிறாள்

எருசலேமின் மகள்களே, கேதார் மற்றும் சாலொமோனின் கூடாரங்களைப்போல நான் கறுப்பாகவும்,
    அழகாகவும் இருக்கிறேன்.
நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம்.
    வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது.
    என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள்.
    அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர்.
    எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.

அவள் அவனிடம் பேசுகிறாள்

நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன்.
    எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்?
    மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்?

நான் உம்மோடு இருக்க வரவேண்டும்.

    அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன்.

அவன் அவளோடு பேசுகிறான்

நீ எவ்வளவு அழகான பெண்
    என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய் தெரியும்.
மந்தையைப் பின்தொடர்ந்து போ.
    மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய
    ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய்.
    அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
10-11 பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன.
    உனது கன்னங்கள் மிக அழகானவை.
    அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
    உனது கழுத்தும் மிக அழகானது.
    அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவள் பேசுகிறாள்

12 எனது வாசனைப்பொருளின் மணமானது
    கட்டிலின்மேல் இருக்கும் அரசனையும் சென்றடைகிறது.
13 என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர்.
14     என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர்.

அவன் பேசுகிறான்

15 என் அன்பே, நீ மிகவும் அழகானவள்.
    ஓ...நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை.

அவள் பேசுகிறாள்

16 என் நேசரே! நீரும் மிக அழகானவர்
    நீர் மிகவும் கவர்ச்சியானவர்.
நமது படுக்கை புதியதாகவும், மனதை மகிழ்விப்பதாகவும் உள்ளது.
17     நமது வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரங்களாலானவை.
    நமது மேல்வீடு தேவதாரு மரத்தாலானவை.

நான் சரோனில் பூத்த ரோஜா.
    பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!

அவன் பேசுகிறான்

எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல்
    நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.

அவள் பேசுகிறாள்

என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில்
    கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர்.

அவள் பெண்களுடன் பேசுகிறாள்

எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன்.
    அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது.
என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார்.
    என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.
காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள்.
    கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள்.
    ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.
என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது.
    அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது.
எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
    நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.

அவள் மீண்டும் பேசுகிறாள்

நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்.
    இங்கே அது வந்தது.
    மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது.
    குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
என் நேசர் வெளிமான்
    அல்லது குட்டி மானைப் போன்றவர்.
அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும்,
    ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
10 என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே!
    வெளியே போகலாம்.
11 பார், மழைக்காலம் போய்விட்டது.
    மழை வந்து போனது.
12 பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
    இது பாடுவதற்குரிய காலம்.
    கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.
13 அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன.
    திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார்.
எழுந்திரு என் அன்பே, அழகே,
    நாம் வெளியே போகலாம்.

அவன் பேசுகிறான்

14 என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும்
    மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய்.
உன்னைப் பார்க்கவிடு,
    உன் குரலைக் கேட்கவிடு,
உன் குரல் மிக இனிமையானது.
    நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார்.

அவள் பெண்களுடன் பேசுகிறாள்

15 திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும்,
    குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள்.
    நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன.
16 என் நேசர் எனக்குரியவர்.
    நான் அவருக்குரியவள்.
17     பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும்,
    நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார்.
என் அன்பரே திரும்பும்,
    இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும்,
    குட்டி மான்களைப் போலவும் இரும்.

அவள் பேசுகிறாள்

இரவில் என் படுக்கைமேல்
    நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன்.
நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன்.
    ஆனால் என்னால் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இப்போது எழுந்திருந்து
    நான் நகரைச் சுற்றி வருவேன்.
அங்குள்ள வீதிகளிலும் சந்துகளிலும்
    என் நேசரைத் தேடுவேன்.
நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள்.
    நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக் கேட்டேன்.
காவலர்கள் என்னைவிட்டுப் போனதும்,
    நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன்.
அவரைப் பற்றிக்கொண்டேன்.
    என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை.

அவள் பெண்களோடு பேசுகிறாள்

எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
    என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.

அவனும் அவனது மணப்பெண்ணும்

பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு
    வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்?
மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும்,
    சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும்,
    வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.

பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த
    60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
    அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன.
    இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.

சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான்.
    அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
10 அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது.
    அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது.
    எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.

11 சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள்.
    சாலொமோன் அரசனைப் பாருங்கள்.
திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள்.
    அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.

கலாத்தியர் 2

பிற அப்போஸ்தலர்களும் பவுலை ஏற்றுக்கொண்டனர்

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமுக்கு நான் மீண்டும் சென்றேன். பர்னபாவோடு நான் சென்றேன். கூடவே தீத்துவையும் அழைத்துச் சென்றேன். தேவன் எனக்குக் கட்டளை இட்டபடியும் வழி காட்டியபடியும் நான் விசுவாசிகளின் தலைவர்களைக் காணப் போனேன். நாங்கள் தனிமையில் இருக்கும்போது யூதர் அல்லாதவர்களிடம் நான் போதிக்கும் நற்செய்தியை அவர்களிடம் சொன்னேன். எனது பணியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இதனால் நான் ஏற்கெனவே செய்தவையும் இப்பொழுது செய்துகொண்டிருப்பதுவும் வீணாகாமல் இருக்கும்.

3-4 என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் சில போலிச் சகோதரர்கள் இரகசியமாய் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தனர். அவர்கள் ஒற்றர்களைப்போல இருந்தனர். இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டான சுதந்தரத்தை அவர்கள் அறிய விரும்பினர். ஆனால் அந்த போலிச் சகோதரர்கள் விருப்பப்படி நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து நற்செய்தியின் முழு உண்மை உங்களோடு இருப்பதையே நாங்கள் விரும்பினோம்.

மிக முக்கியமாய்க் கருதப்பட்ட அந்த மனிதர்கள் நான் பிரசங்கம் செய்த நற்செய்தியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர்கள் “முக்கியமானவர்களா” இல்லையா என்பது பற்றி நான் கவலைப் படவில்லை. தேவனுக்கு முன்னால் அனைவரும் சமம்தானே. அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள். 10 ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது.

பேதுருவின் தவறைப் பவுல் வெளிப்படுத்துதல்

11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன். 12 அந்தியோகியாவுக்கு அவர் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு அவர் சேர்ந்தார். அவர்களோடு உணவு உட்கொண்டார். ஆனால் யாக்கோபிடமிருந்து அனுப்பியிருந்த சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் யூதர்களுக்குப் பயந்துவிட்டார். ஏனென்றால் யூதர்கள், யூதர் அல்லாதவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நம்புகின்றவர்கள். 13 ஆகையால் பேதுரு பொய் முகக்காரராக இருந்தார். ஏனைய யூதர்களும் அவரோடு சேர்ந்துகொண்டனர். எனவே அவர்களும் பொய்முகக்காரர்கள். இதனால் பர்னபாவும் பாதிக்கப்பட்டான். 14 யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன்.

15 யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம். 16 சட்டங்களின் விதி முறைகளை ஒருவன் பின்பற்றுவதினாலேயே தேவனுக்கு வேண்டியவனாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவின் மீது எவன் நம்பிக்கை வைக்கிறானோ அவனே தேவனுக்கு வேண்டியவனாகிறான். எனவே, நாம் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். நாம் சட்டங்களைப் பின்பற்றுவதால் அல்ல, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதாலேயே தேவனுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம். இது உண்மை. ஏனென்றால் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் எவரொருவரும் தேவனுக்கு வேண்டியவராக முடியாது.

17 யூதர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் வந்துள்ளோம். காரணம், நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். எனவே, நாம் பாவிகள் என்பது தெளிவாகிறது. இதற்குக் கிறிஸ்து காரணம் ஆவாரா? இல்லை. 18 ஆனால், நான் விட்டுவிட்டவற்றை மீண்டும் போதிக்கத் தொடங்கினால் நானும் தவறானவன் என்று கருதப்படுவேன். 19 சட்டங்களுக்காக வாழ்வது என்பதை நான் விட்டுவிட்டேன். அச்சட்டங்களோ என்னைக் கொன்றுவிட்டது. நான் விதிமுறையின்படி இறந்து போனேன். எனினும் தேவனுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது கடந்தகால வாழ்வு கிறிஸ்துவோடு சிலுவையில் இறந்தது. 20 நான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்வு எனக்கானது அல்ல. இயேசு கிறிஸ்து இப்போது என்னில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போது இந்த சரீரத்திலே நான் வாழ்ந்தாலும் தேவனுடைய குமாரன் மீதுள்ள விசுவாசத்தால் வாழ்கிறேன். இயேசு ஒருவரே என்மீது அன்பு கொண்டவர். என்னை இரட்சிப்பதற்காக அவர் தன்னையே தந்தவர். 21 இந்தக் கிருபை தேவனிடமிருந்து வந்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் மனிதன் திருந்தி நீதிமானாக முடியுமென்றால் இயேசு கிறிஸ்துவின் மரணம் தேவையில்லாமல் போயிருக்கும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center