Old/New Testament
16 ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.
2 ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.
3 நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய்.
4 ஒவ்வொரு காரியத்திற்க்கும் கர்த்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. கர்த்தருடைய திட்டத்தில் தீயவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
5 மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களை கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாக கர்த்தர் தண்டிப்பார்.
6 உண்மையான அன்பும் நேர்மையும் உன்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தரை மதித்து தீயவற்றிலிருந்து விலகியிரு.
7 ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான்.
8 ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.
9 ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.
10 அரசன் பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும்.
11 எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.
12 தீமை செய்பவர்களை அரசர்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும்.
13 அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.
14 அரசனுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக்கொல்லலாம். அறிவுள்ளவர்கள் அரசனை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள்.
15 அரசன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் அரசன் மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும்.
16 தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது.
17 நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.
18 ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான்.
19 மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.
20 ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
21 ஒருவன் அறிவுள்ளவனாக இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாகப் பேசுபவன் நிரூபிக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கமுடியும்.
22 அறிவானது ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கையைத் தரும். ஆனால் அறிவற்றவர்களோ மேலும் முட்டாள் ஆவதையே விரும்புவார்கள்.
23 அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்.
24 கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது.
25 ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.
26 உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது.
27 பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும்.
28 தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான்.
29 தொல்லையை உருவாக்குகிறவன் பல தொல்லைகளுக்குக் காரணமாகிறான். தனது நண்பர்களுக்கு நன்மை தராத வழிகளில் அவர்களை அழைத்துச் செல்கிறான். 30 அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.
31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.
32 வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.
33 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.
17 எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது.
2 அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட மகனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் மகனைப்போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான்.
3 பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார்.
4 தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர்.
5 சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.
6 பேரப்பிள்ளைகள் முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். பிள்ளைகள் தம் பெற்றோர்களைப்பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
7 அறிவற்றவன் அதிகமாகப் பேசுவது அறிவுள்ள செயல் அல்ல. இதுபோலவே, ஆள்பவன் பொய் சொல்லுவதும் அறிவுள்ள செயல் அல்ல.
8 சிலர், லஞ்சத்தை இனிமையான அதிர்ஷ்டப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அது பணியைச் செய்துமுடிக்கப் பயன்படுவதாக நினைக்கிறார்கள்.
9 ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.
10 சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான்.
11 தீயவன் தவறுகளைச் செய்யவே விரும்புகிறான். முடிவில் தேவன் தன் தூதனை அனுப்பி அவனைத் தண்டிப்பார்.
12 தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது.
13 உனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு, நீ தீமை செய்யாதே. அவ்வாறு செய்தால் நீ உனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவாய்.
14 வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து.
15 தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும்.
16 அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான்.
17 ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான்.
18 அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான்.
19 வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக்கொள்கிறாய்.
20 தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான்.
21 அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
22 மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது.
23 தீயவன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான்.
24 அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப்பற்றியே கனவு காண்பான்.
25 ஒரு அறிவற்ற மகன் தந்தைக்குத் துக்கத்தைத் தருகிறான். அவன் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும் துன்பத்தைத் தருகிறான்.
26 தவறு செய்யாதவனைத் தண்டிப்பது தப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும்.
27 அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.
28 அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக்கொள்வார்கள்.
18 சிலர் மற்றவர்களைச் சுற்றி இருப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தாம் செய்ய விரும்புவதையே செய்வார்கள். யாரேனும் இவர்களுக்கு அறிவுரை சொல்லப்போனால், அது இவர்களைக் கோபமடையச் செய்யும்.
2 மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.
3 ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.
4 ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.
5 ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது.
6 அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும்.
7 அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும்.
8 ஜனங்கள் எப்பொழுதும் வம்புகளை விரும்பிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு நல்ல உணவு வயிற்றுக்குள் போவதைப் போன்றிருக்கும்.
9 ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும்.
10 கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர்.
11 செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர்.
12 பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான்.
13 நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய்.
14 நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும்.
15 அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான்.
16 நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம்.
17 இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.
18 வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
19 நீ உன் நண்பனை அவமானப்படுத்தினால், அவனை வசப்படுத்துவது வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதைவிடக் கடினமானதாகிவிடும். குறுக்குக் கம்பிகள்கொண்ட அரண்மனைக் கதவுகளின் தடுப்பைப் போல விவாதங்கள் ஜனங்களைப் பிரிக்கின்றன.
20 நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும்.
21 மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
22 மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள்.
23 ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான்.
24 பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.
6 நாங்கள் தேவனோடு சேர்ந்து பணியாற்றுகிறவர்கள். எனவே, தேவனிடமிருந்து நீங்கள் பெற்ற கிருபையை பயனற்ற வகையில் வீணடிக்க வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
2 “நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன்.
இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்” (A)
என்று தேவன் கூறுகிறார்.
அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான்.
3 எங்களின் பணியில் எவரும் குற்றம் கண்டு பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் மற்றவர்களுக்குப் பிரச்சனையாய் இருக்கும் எதையுமே நாங்கள் செய்யவில்லை. 4 ஆனால், அனைத்து வழிகளிலும் நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதைக் காட்டி வருகிறோம். பல கஷ்டங்களிலும், பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் இதனை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். 5 நாங்கள் அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்படுகிறோம். மக்கள் அதிர்ச்சியடைந்து எங்களுடன் மோதுகிறார்கள். நாங்கள் கடின வேலைகளைச் செய்கிறோம். சில நேரங்களில் உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறோம். 6 எங்கள் அறிவினாலும், பொறுமையாலும், இரக்கத்தாலும், தூய வாழ்க்கையாலும் நாங்கள் தேவனுடைய ஊழியர்கள் எனக் காட்டிக்கொள்கிறோம். 7 நாங்கள் இதனைப் பரிசுத்த ஆவியாலும், தூய அன்பாலும், உண்மையான பேச்சாலும் தேவனுடைய வல்லமையாலும் வெளிப்படுத்துகிறோம். எங்கள் சரியான வாழ்க்கையைப் பயன்படுத்தி எல்லாவற்றிலும் இருந்தும் எங்களைக் காத்துக்கொள்கிறோம்.
8 சிலர் எங்களை மதிக்கிறார்கள். மற்றும் சிலர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். சிலர் எங்களைப் பற்றி நல்ல செய்திகளையும் வேறு சிலர் கெட்ட செய்திகளையும் பரப்புகிறார்கள். சிலர் எங்களைப் பொய்யர்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையையே பேசுகிறோம். 9 இன்னும் சிலருக்கு நாங்கள் முக்கியமற்றவர்கள். ஆனால் நாங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள். நாங்கள் மடிந்து போவதுபோல் இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து வாழ்கிறோம். நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கொல்லப்படவில்லை. 10 எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது.
11 கொரிந்தியர்களாகிய உங்களிடம் நாங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம். எங்கள் மனதைத் திறந்து காட்டியிருக்கிறோம். 12 உங்களிடம் நாங்கள் கொண்ட அன்பு எப்பொழுதும் குறையவில்லை. அதைத் தடுத்ததும் இல்லை. ஆனால் எங்கள்மீது உங்களிடம் உள்ள அன்பே தடுக்கப்பட்டிருக்கிறது. 13 நீங்கள் எனது பிள்ளைகள் என்ற முறையில் தான் நான் பேசுகிறேன். நாங்கள் செய்வது போலவே நீங்கள் இதயங்களைத் திறந்து காட்டுவீர்களா?
கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு வாழ்வது எப்படி?
14 நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. 15 எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? 16 தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்.? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம்.
“நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன்.
அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.” (B)
17 “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள்.
அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம்.
நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்”. (C)
18 “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது மகன்களாகவும்
மகள்களாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்” (D)
என்று தேவன் கூறுகிறார்.
2008 by World Bible Translation Center