Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நீதிமொழிகள் 1-2

முகவுரை

இவை தாவீதின் மகனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும். இந்த ஞானவார்த்தைகள் ஜனங்களுக்குத் தங்களுடைய மனம் நேர்மையான வழியில் செல்ல போதிக்கும். ஜனங்கள் நேர்மையோடும், நியாயத்தோடும் நல்லவர்களாகவும் தங்கள் புத்தியைச் சரியான வழியில் செலுத்த இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். ஞானத்தை அடைய விரும்பும் ஜனங்களுக்கு இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். இந்த ஞானவார்த்தைகள் இளந்தலைமுறையினருக்கு அவர்கள் அறிய வேண்டியவற்றையும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் போதிக்கும். அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம். பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள்.

சாலொமோன் தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை

என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம். உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும்.

10 என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது. 11 அந்தப் பாவிகள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் ஒளித்திருப்போம். ஒன்றும் அறியாதவர்களைக்கொல்லும்படிக் காத்திருப்போம். 12 நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம். 13 நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம். 14 எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக்கொள்வோம்” என்பார்கள்.

15 என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே. 16 அந்தத் தீயவர்கள் எப்பொழுதும் தீமை செய்யவே தயாராக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்கள் ஜனங்களைக்கொல்வதையே விரும்புவார்கள்.

17 ஜனங்கள் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிக்கிறார்கள். ஆனால் பறவைகள் கவனித்துக்கொண்டிருக்கும்போது அதனைப் பிடிக்க வலையை விரிப்பது வீண். 18 அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக்கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள். 19 பேராசை உடையவர்கள் எப்பொழுதும் அதனாலேயே அழிந்துபோவார்கள்.

நல்ல பெண்மணியான ஞானம்

20 கவனியுங்கள்! ஞானம் ஜனங்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறாள். வீதிகளிலும் சந்தையிலும் நின்று அவள் (ஞானம்) சத்தமிடுகிறாள். 21 அவள் நெரிசலான தெருமுனைகளில் நின்று கூப்பிடுகிறாள். நகர வாசல் அருகில் நின்றுகொண்டு ஜனங்கள் தன்னைக் கவனிக்கும்படி முயற்சி செய்கிறாள்.

22 ஞானம் சொல்கிறதாவது, “நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்? 23 நீங்கள் எனது ஆலோசனைகளையும், போதனைகளையும் கேட்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்திருப்பேன். என் அறிவையெல்லாம் உங்களுக்கு வழங்கியிருந்திருப்பேன்.

24 “நான் சொல்வதைக் கவனிக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நான் உதவ முயன்றேன். நான் கைகொடுக்க வந்தேன். ஆனால் என் உதவியை ஏற்க மறுத்துவிட்டீர்கள். 25 எனது அறிவுரைகளைக் கேட்காமல் நீங்கள் திரும்பிக்கொண்டீர்கள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தீர்கள். 26 எனவே, உங்கள் துன்பத்தைக் கண்டு நான் சிரிப்பேன். உங்களுக்குத் துன்பம் வருவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். 27 ஒரு கொடிய புயலைப்போன்று பெருந்துன்பம் உங்களுக்கு வரும். பெருங்காற்றைப்போன்று அது உங்கள் மேல் மோதும். உங்கள் துன்பமும் கவலைகளும் உங்கள் மேல் சுமையாக அழுத்தும்.

28 “இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் என்னை உதவிக்காக அழைப்பீர்கள். ஆனால் நான் உதவிசெய்யமாட்டேன். என்னை நீங்கள் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது. 29 நீங்கள் என் அறிவை விரும்பாததால் நான் உதவி செய்யமாட்டேன். நீங்கள் கர்த்தருக்குப் பயப்படவும் அவரை மதிக்கவும், கனப்படுத்தவும் மறுத்தீர்கள். 30 நீங்கள் என்னுடைய அறிவுரைகளைக் கேட்க மறுத்தீர்கள். நான் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டியபோது நீங்கள் கேட்கவில்லை. 31 நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே செயல்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்கள் சொந்த ஆலோசனையைப் பின்பற்றினீர்கள். உங்கள் சொந்த செய்கைகளினால் வந்த விளைவுகளை நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

32 “முட்டாள்கள் அறிவைப் பின்பற்ற மறுப்பதால் மரணமடைவார்கள். தங்கள் முட்டாள்தனமான பாதையில் தொடர்ந்து செல்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது அவர்களை அழித்துவிடும். 33 ஆனால் எனக்குக் கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவன் வசதியாக இருப்பான். அவன் தீமைக்குப் பயப்படவேண்டியதில்லை.”

ஞானத்தின் உரையைக் கேளுங்கள்

என் மகனே நான் சொல்லுகின்றவற்றை ஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள். ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய். ஞானத்தைக் கூப்பிடு. புரிந்துகொள்ளுவதற்காகச் சத்தமிடு. ஞானத்தை வெள்ளியைப்போல் தேடு, மறைந்துள்ள புதையல்களைத் தேடுவதுபோன்று தேடு. நீ இவற்றைச் செய்தால், கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வாய். நீ உண்மையிலேயே தேவனைப்பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.

கர்த்தர் ஞானத்தைக்கொடுக்கிறார். அவரது வாயிலிருந்து அறிவும் புரிந்துகொள்ளுதலும் வருகின்றன. நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார். மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார்.

கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய். 10 ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும்.

11 ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். 12 ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும். 13 அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள். 14 அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள். 15 அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.

16 அந்நிய பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும். மென்மையான வார்த்தைகளைப் பேசி உன்னைத் தன்னோடு சேர்ந்து பாவம்செய்யத் தூண்டும் அவளிடமிருந்து ஞானம் உன்னைக் காக்கும். 17 அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள். 18 அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள். 19 அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.

20 ஞானம் நீ நல்லவர்களை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்றிச் செல்ல உதவிசெய்யும். நல்லவர்களின் வழியில் நீ வாழ ஞானம் உதவி செய்யும். 21 சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.

22 ஆனால் பொய்பேசுகிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் தம் நாட்டை இழப்பார்கள். தீயவர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

1 கொரி 16

பிற விசுவாசிகளின் காணிக்கை

16 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் உங்களில் ஒவ்வொருவனும் தங்கள் வரவுக்கேற்ப எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியுமோ அத்தனையையும் சேமித்து வையுங்கள். நீங்கள் இந்தப் பணத்தை ஒரு விசேஷமான இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள். அவ்வாறாயின் நான் வந்த பின் நீங்கள் பணத்தைத் திரட்டும் சிரமம் உங்களுக்கு இருக்காது. நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன். நானும் அவர்களோடு போவது நல்லது எனத் தோன்றினால், அந்த மனிதரை என்னோடு அழைத்துச் செல்வேன்.

பவுலின் திட்டங்கள்

நான் மக்கதோனியாவின் வழியாகப் போகத் திட்டமிட்டுள்ளேன். நான் மக்கதோனியா வழியாகப் போனபின் உங்களிடம் வருவேன். நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும். நான் இந்தச் சமயத்தில் மட்டும் போகிற வழியில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. கர்த்தர் விரும்பினால் உங்களோடு நீண்ட காலம் தங்க விரும்புகிறேன். பெந்தெகோஸ்து வரைக்கும் எபேசுவில் தங்கி இருப்பேன். பெரிய வளர்ச்சியுறும் பணி எனக்கு இப்போது தரப்பட்டுள்ளதால் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தும்படிக்கு இங்கு தங்குவேன். அதற்கு எதிராக வேலை செய்வோர் பலர் உள்ளனர்.

10 தீமோத்தேயு உங்களிடம் வரக்கூடும். அவன் உங்களோடு பயமில்லாமல் இருக்க உதவுங்கள். என்னைப்போலவே அவனும் கர்த்தருக்காகப் பணியாற்றுகிறான். 11 எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.

12 இப்போது நமது சகோதரன் அப்பொல்லோவைக் குறித்து எழுதுகிறேன். பிற சகோதரர்களுடன் சேர்ந்து அவன் உங்களைச் சந்திக்க வேண்டுமென மிகவும் ஊக்கமூட்டினேன். அவன் இப்போது உங்களிடம் வருவதில்லை என உறுதியாகக் கூறினான். அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அவன் உங்களிடம் வருவான்.

பவுல் கடிதத்தை முடிக்கிறார்

13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள். 14 அன்பினால் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்.

15 அகாயாவில் ஸ்தேவானும் அவனது குடும்பத்தாரும், முதன் முதலில் விசுவாசம் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். அவர்கள் தங்களை தேவனுடைய மக்களுக்குச் செய்யும் சேவைக்காக ஒப்புவித்துள்ளார்கள். சகோதர சகோதரிகளே! 16 இத்தகையோரின் தலைமையை ஒத்துக்கொள்ளும்படியும் அவர்களோடு சேவை செய்கிற ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளும்படியும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வந்ததை அறிந்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை நிரப்பியுள்ளார்கள். 18 எனது ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் அவர்கள் ஓய்வளித்துள்ளார்கள். இத்தகைய மனிதரின் மதிப்பை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆசியாவின் சபையினர் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறார்கள். அவர்களின் வீட்டில் சந்திக்கிற சபையும் உங்களை வாழ்த்துகிறது. 20 இங்குள்ள எல்லா சகோதர சகோதரிகளும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் சந்திக்கையில் பரிசுத்த முத்தத்தின் மூலம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்ளுங்கள்.

21 பவுல் ஆகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினால் எழுதுகிறேன்.

22 கர்த்தரை நேசிக்காத எவனொருவனும் தேவனிடமிருந்து எந்நாளும் பிரிந்தவனாக முற்றிலும் அழிந்துபோனவனாக இருப்பானாக.

கர்த்தரே, வாரும்.

23 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக!

24 கிறிஸ்து இயேசுவில் என் அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center