Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நீதிமொழிகள் 13-15

13 ஒரு ஞானமுள்ள மகன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை.

நல்லவர்கள், தாம் சொல்லுகிற நல்லவற்றுக்காகத் தகுந்த வெகுமதிகளை அடைகிறார்கள். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் தவறானவற்றைச் செய்ய விரும்புகின்றனர்.

ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும்.

சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள்.

நல்லவர்கள் பொய்யை வெறுக்கிறார்கள். தீயவர்களோ அவமானமடைவார்கள்.

நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும்.

சிலர் செல்வந்தர்களைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதுவுமில்லை. மற்றும் சிலரோ ஏழையைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

செல்வமுள்ளவன் சில சமயங்களில் தன் உயிரைக் காப்பாற்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் ஏழைக்கு இதுபோன்ற மிரட்டல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.

ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப்போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன்.

10 மற்றவர்களைவிட தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்கள் துன்பத்தையே உருவாக்குகிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பவர்கள் ஞானம் உடையவர்கள்.

11 ஒருவன் பணம் பெறுவதற்காக மற்றவனை ஏமாற்றலாம். பிறகு அப்பணமும் அவனை விட்டு உடனடியாகப் போய்விடும். ஆனால் கடினமாக சம்பாதிக்கிறவனின் பணமானது மென்மேலும் வளர்ந்து பெருகும்.

12 நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய்.

13 மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும்போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான்.

14 ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.

15 புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது.

16 ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள்.

17 ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.

18 ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும்போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான்.

19 ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.

20 ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.

21 பாவிகள் எங்கே போனாலும் துன்பங்கள் அவர்களைத் துரத்தும். ஆனால் நல்லவர்களுக்கு நல்லவையே நடக்கும்.

22 நல்லவர்களுக்குத் தம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்கிற அளவிற்குச் செல்வம் இருக்கும். தீயவர்களிடம் உள்ள அனைத்தையும் முடிவில் நல்லவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

23 ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான்.

24 ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.

25 நல்லவர்கள், தமக்கு எது தேவையோ அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தீயவர்களோ, முக்கியமானவற்றைப் பெறாமலேயே இருப்பார்கள்.

14 ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.

சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான்.

அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும்.

வேலை செய்வதற்கு எருதுகள் இல்லாவிட்டால் களஞ்சியங்கள் வெறுமையாக இருக்கும். எருதுகளின் பலத்தைப் பயன்படுத்தி ஜனங்கள் அதிக விளைச்சலைப் பெறமுடியும்.

உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.

தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும்.

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை.

புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப்பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள்.

10 ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

11 தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும்.

12 ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.

13 ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.

14 தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்.

15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.

16 அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.

17 விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.

18 அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள்.

19 நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

20 ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.

21 உனது பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றி கெட்டவற்றை நினையாதே. நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், ஏழை ஜனங்களிடம் இரக்கமாக இரு.

22 தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.

23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

24 அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.

25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

26 கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.

27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.

28 ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.

29 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

30 மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.

31 ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக்கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.

32 தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான்.

33 அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப்பற்றிக்கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.

34 நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்.

35 அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.

15 ஒரு சமாதானமான பதில் கோபத்தை மறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும்.

அறிவுள்ளவன் பேசும்போது மற்றவர்கள் அதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் அறிவற்றவன் முட்டாள்தனமாகவே பேசுவான்.

எல்லா இடங்களிலும் என்ன நடைபெறுகிறது என்று கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நல்லவர்கள் தீயவர்கள் அனைவரையும் கர்த்தர் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும்.

முட்டாள்தனமான மனிதன் தன் தந்தையின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிடுவான். ஆனால் அறிவுள்ளவனோ, ஜனங்கள் தனக்குப் போதிக்கவரும்போது கவனித்துக் கேட்கிறான்.

நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன.

அறிவுள்ளவர்கள் பேசும் பேச்சு உனக்குப் புதிய தகவல்களைத் தருபவையாக இருக்கும். அறிவில்லாதவர்கள் பேசுவதோ கேட்கப் பயனில்லாததாக இருக்கும்.

தீயவர்கள் கொடுக்கிற பலிகளை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார்.

தீயவர்களின் வாழ்க்கை முறையை கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களை கர்த்தர் நேசிக்கிறார்.

10 ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.

11 கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார்.

12 அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.

13 ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.

14 அறிவுள்ளவன் மேலும் அறிவைப் பெற விரும்புகிறான். அறிவில்லாதவனோ மேலும் முட்டாள் ஆவதை விரும்புகிறான்.

15 சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.

16 ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.

17 வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது.

18 எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக்குரியவர்கள்.

19 எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்.

20 அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.

21 முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.

22 ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.

23 நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.

24 வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான்.

25 வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.

26 கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.

27 ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக்கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை.

28 நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.

29 தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.

30 ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக்கொள்ளச் செய்கின்றன.

31 நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.

32 ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான்.

33 கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.

2 கொரி 5

பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது. ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அது நம்மை ஆடையுள்ளவர்களைப் போலாக்கும். நாம் நிர்வாணமானவர்களைப்போல இருக்கமாட்டோம். நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும். இதற்காகத்தான் தேவன் நம்மை ஆயத்தம் செய்திருக்கிறார். ஆவி என்னும் அச்சாரத்தைத் தந்து நமக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறார்.

எனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை. எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம். தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். 10 நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான்.

தூண்டிவிடும் தேவ அன்பு

11 கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். 12 நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். 13 நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான். 14 கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். 15 கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.

16 எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை. 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின. 18 இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 19 தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார். 20 எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம். 21 கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center