Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 148-150

148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
    பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
    நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
    வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதி.
    ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
    என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
    சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
    புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
    கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
    ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார்.
    தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
    முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
    அவர் நாமத்தை என்றென்றும்
    மகிமைப்படுத்துங்கள்!
    பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
    தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
    ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
    தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
    கர்த்தரைத் துதியுங்கள்.

149 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
    சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
    அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
    அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
    அவர் அவர்களை மீட்டார்!
தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
    படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
    அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
    அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான
    ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
    தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!

150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
    பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
    அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
    வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
    நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
    பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!

எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!

கர்த்தரைத் துதிப்போம்!

1 கொரி 15:29-58

29 மரணத்திலிருந்து மக்கள் எழுப்பப்படமாட்டார்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? மரணமடைந்த மக்கள் எழுப்பப்படவில்லை என்றால் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதேன்?

30 நமது நிலை என்ன? ஒவ்வொரு மணி நேரமும் ஏன் நாம் ஆபத்துக்குள்ளாகிறோம்? 31 நான் தினமும் மரணமடைகிறேன். கிறிஸ்து இயேசுவாகிய நமது கர்த்தருக்குள் நான் உங்களைக் குறித்துப் பெருமை பாராட்டுவது போன்ற உண்மை அதுவாகும். 32 எபேசுவில் கொடிய விலங்குகளோடு என் பெருமையை திருப்திப்படுத்தும் எண்ணத்தோடு போராடினேன் என்று கூறினால் எனக்கு எந்த நன்மையுமில்லை. மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவதில்லை என்றால், “நாம் நாளை மரணம் அடையக் கூடுமென்பதால் உண்டு பருகுவோம்.” [a] என்று சொல்லலாமே.

33 முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.” 34 சரியானபடி சிந்திக்க ஆரம்பியுங்கள். பாவம் செய்யாதீர்கள். உங்களில் சிலர் தேவனை அறியவில்லை. நீங்கள் வெட்கப்படும்படியாக இதைக் கூறுகிறேன்.

மகிமையின் சரீரம்

35 “எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும். 36 என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும். 37 அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே. 38 ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார். 39 மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன. 40 வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது. 41 சூரியனுக்கு ஒருவகை அழகும், சந்திரனுக்கு மற்றொரு வகை அழகும், நட்சத்திரங்களுக்கு வேறு வகையான அழகும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் அழகில் வேறுபட்டது.

42 மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும். 43 சரீரம் “புதைக்கப்படுகிறபோது” மரணத்திற்கு எந்த கௌரமும் இல்லை. ஆனால் அது மீண்டும் எழுப்பப்படும்போது அது மகிமையில் எழுப்பப்படுகிறது. புதைக்கப்படுகிறபோது பலவீனமாக இருக்கிறது. ஆனால் அது ஆற்றலில் எழுப்பப்படுகிறது. 44 “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு.

எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு. 45 இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.” [b] இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. 46 ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது. 47 முதல் மனிதன் பூமியின் மண்ணிலிருந்து வந்தவன். இரண்டாம் மனிதன் (கிறிஸ்து) பரலோகத்திலிருந்து வந்தவர். 48 மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள். 49 நாம் பூமியிலிருந்து வந்த மனிதனைப் போன்று அமைக்கப்பட்டோம். எனவே பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றும் அமைக்கப்படுவோம்.

50 சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன். மாம்சமும், இரத்தமும் (பூத சரீரம்) தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கமுடியாது! அழியத்தக்க பொருள் அழிவற்ற பொருளின் பாகமாக மாற முடியாது! 51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம். 53 அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். 54 எனவே அழியக்கூடிய இந்த சரீரம் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். மரணத்திற்குள்ளாகும் இச்சரீரம் மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். இது நடந்தேறும்போது வேத வாக்கியத்தின் வாசகம் உண்மையாகும்.

“மரணம் வெற்றிக்குள் விழுங்கப்பட்டது” (A)

55 “மரணமே, உன் வெற்றி எங்கே?
பாதாளமே, அழிக்கும் உன் வல்லமை எங்கே?” (B)

56 மரணத்தின் ஆற்றலே பாவம். பாவத்தின் ஆற்றலே சட்டமாகும். 57 நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் நமக்கு வெற்றியை அருளினார்.

58 எனவே என் அன்பான சகோதர சகோதரிகளே, உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை மாற்றாமல் இருக்கட்டும். எப்போதும் முழுமையாக உங்களைக் கர்த்தரின் பணிக்கு ஒப்புக்கொடுங்கள். கர்த்தருக்கான உங்கள் பணி வீணாகப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center