Old/New Testament
சாலொமோனின் நீதிமொழிகள்
10 இவை அனைத்தும் சாலொமோனின் நீதிமொழிகள் (ஞானவார்த்தைகள்):
ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.
2 ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும்.
3 கர்த்தர் நல்லவர்களைப்பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக்கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.
4 ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான்.
5 சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.
6 நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப்பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.
7 நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர்.
8 யாராவது நல்லவற்றைச் செய்யவேண்டும் எனக்கூறினால் அறிவாளி அதற்குக் கீழ்ப்படிகிறான். ஆனால் அறிவில்லாதவனோ வீண்விவாதம் செய்து தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்கிறான்.
9 ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான்.
10 உண்மையை மறைக்கிறவன் துன்பங்களுக்குக் காரணமாகிறான். வெளிப்படையாகப் பேசுபவன் சமாதானத்தை உருவாக்குகிறான்.
11 நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும்.
12 வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.
13 அறிவுள்ளவர்கள் கேட்கத்தக்கவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ பாடம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தண்டிக்கப்படவேண்டும்.
14 அறிவுள்ளவர்கள் அமைதியாக இருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்கள் வீணாகப் பேசி தமக்குத்தாமே துன்பத்தை வரவ ழைத்துக்கொள்கிறார்கள்.
15 செல்வமானது செல்வந்தர்களைக் காப்பாற்றுகிறது. வறுமையோ ஏழைகளை அழிக்கிறது.
16 ஒருவன் நன்மை செய்தால் அதற்காகப் பாராட்டப்படுவான். அவனுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. தீமையோ தண்டனையை மட்டுமே பெற்றுத்தருகிறது.
17 ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக்கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச்செல்வான்.
18 வெறுப்பை மறைக்கிறவனால் பொய் சொல்ல முடியும். ஆனால் ஒரு முட்டாளால் வதந்தியை மட்டுமே பரப்ப முடியும்.
19 அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.
20 நல்லவனின் வார்த்தைகள் சுத்தமான வெள்ளியைப் போன்றவை. தீயவனின் எண்ணங்களோ பயனற்றவை.
21 நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்.
22 கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது.
23 அறிவில்லாதவர்களோ தவறு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அறிவுள்ளவனோ ஞானத்தால் மகிழ்ச்சி அடைகிறான்.
24 தீயவர்கள் தாங்கள் அஞ்சுகிறவற்றாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் நல்லவர்களோ தாங்கள் விரும்புவதைப் பெறுவார்கள்.
25 தங்களுக்கு நேரும் பிரச்சனைகளாலேயே தீயவர்கள் அழிவார்கள். ஆனால் நல்லவர்களோ எல்லாக் காலங்களிலும் உறுதியாக நிற்பார்கள்.
26 ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
27 நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ்நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.
28 நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக்கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக்கொண்டுவரும்.
29 கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.
30 நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார்.
31 நல்லவர்கள் ஞானமுள்ளவற்றைப் பேசுவார்கள். தொல்லை உண்டாக்கும் காரியங்களைப் பேசுபவர்களின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்காமல் நிறுத்திவிடுவார்கள்.
32 நல்லவர்கள் சரியானவற்றைச் சொல்ல அறிந்துள்ளனர். ஆனால் கெட்டவர்களோ தொல்லை தருவதையே பேசுகின்றனர்.
11 பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே.
2 வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.
3 நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.
4 தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.
5 நல்லவன் உத்தமனாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை எளிதானதாக இருக்கும். ஆனால் தீயவனோ தான் செய்கிற கெட்ட செயல்களால் அழிக்கப்படுகிறான்.
6 நன்மை உத்தமனைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீயவர்களோ தாம் விரும்புகிற கெட்ட செயல்களால் சிக்கிக்கொள்கின்றனர்.
7 தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும்.
8 துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும்.
9 தீயவன், தன் சொற்களால் பிறரைப் புண்படுத்துவான். ஆனால் நல்லவர்களோ தங்களுடைய ஞானத்தால் காப்பாற்றப்படுவார்கள்.
10 நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள்.
11 உத்தமமானவர்கள் இருந்து ஆசீர்வதிப்பதால் நகரம் சிறப்புடையதாகிறது. தீயவர்களின் பேச்சால் நகரம் அழிந்துபோகிறது.
12 ஒருவன் நல்லுணர்வு இல்லாதவனாக இருந்தால் பக்கத்தில் உள்ளவர்களைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான். ஆனால் ஞானம் உள்ளவனோ எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான்.
13 அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.
14 பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள்.
15 நீ அடுத்தவனது கடனைத் தீர்ப்பதாக வாக்களித்திருந்தால் அதனால் வருத்தப்படுவாய். நீ இத்தகைய செயல்களை மறுத்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பாய்.
16 கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள்.
17 இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
18 தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான்.
19 உண்மையில் நன்மையானது வாழ்வைக்கொண்டுவரும். ஆனால் தீயவர்களோ தீமையைப் பின்தொடர்ந்து மரணத்தை அடைகின்றனர்.
20 தீமை செய்ய விரும்புகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நன்மை செய்ய முயல்பவர்களில் மகிழ்ச்சி அடைகிறார்.
21 தீயவர்கள் தண்டனை பெறுவது உண்மை. நல்லவர்களோ விடுவிக்கப்படுகிறார்கள்.
22 அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
23 நல்லவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் மிகுந்த நன்மை விளையும். தீயவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் தொல்லைகளே விளையும்.
24 ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் மேலும் மேலும் பெறுவான். ஆனால் ஒருவன் கொடுக்க மறுத்தால் பிறகு அவன் ஏழ்மையாவான்.
25 ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய்.
26 தானியங்களைக் கட்டிவைத்து விற்க மறுப்பவர்கள்மீது ஜனங்கள் கோபம் அடைகிறார்கள். ஆனால் தானியங்களை மற்றவர்களுக்கு விற்பவர்கள்மேல் ஜனங்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
27 நன்மை செய்ய முயலுகிற ஒருவனை ஜனங்கள் மதிக்கின்றனர். ஆனால் தீமை செய்கிறவனோ துன்பத்தைத் தவிர வேறு எதையும் பெறுவதில்லை.
28 தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான்.
29 ஒருவன் தன் குடும்பத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்தால், அவன் எதையும் பெறமாட்டான். அதோடு அறிவில்லாதவன் முடிவில் ஞானமுள்ளவனுக்குச் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுவான்.
30 நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வு தரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக்கொடுக்கிறான்.
31 பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.
12 ஒருவன் ஞானமுள்ளவனாக விரும்பினால், அவனது தவறினை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதை வெறுக்கிறவனோ முட்டாளாகக் கருதப்படுகிறான்.
2 நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார்.
3 தீயவர்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால் நல்லவர்களோ பாதுகாப்பாக இருக்கின்றனர்.
4 நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள்.
5 நல்லவர்கள் தாம் செய்யத் திட்டமிட்டவற்றைச் சரியாகவும் நேர்மையாகவும் செய்துவிடுகின்றனர். ஆனால் தீயவர்கள் சொல்லுகின்றவற்றை மட்டும் நம்பாதே.
6 தீயவர்கள் தம் வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்துவார்கள். ஆனால் நல்லவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.
7 தீயவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களில் எதுவும் மிச்சம் இராது. ஆனால் நல்லவர்களை ஜனங்கள் அவர்கள் காலத்திற்குப் பின்பும் நீண்ட காலம் நினைவுகூருவார்கள்.
8 ஞானமுள்ளவர்களை ஜனங்கள் போற்றுவார்கள். ஆனால் அறிவில்லாதவர்களை ஜனங்கள் மதிப்பதில்லை.
9 ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும்.
10 நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிறான். கெட்டவனோ கருணை உள்ளவனாக இருக்கமாட்டான்.
11 தன் நிலத்தில் வேலைசெய்கிற விவசாயி தனக்குரிய உணவைப் பெறுகிறான். ஆனால் பயனற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணாக்குகிறவன் முட்டாளாகிறான்.
12 தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர்.
13 தீயவன் முட்டாள்தனமானவற்றைச் சொல்லி அவ்வார்த்தைகளாலேயே அகப்பட்டுக்கொள்கிறான். ஆனால் நல்லவன் இத்தகைய துன்பங்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்.
14 ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது.
15 அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.
16 அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான்.
17 ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும்.
18 ஒருவன் சிந்திக்காமல் பேசினால் அவ்வார்த்தைகள் வாளைப்போன்று மற்றவர்களை துன்புறுத்தும். ஆனால் ஞானமுள்ளவனோ தான் சொல்பவற்றில் எச்சரிக்கையாக இருப்பான். அவனது வார்த்தைகள் புண்ணைக் குணப்படுத்தும்.
19 ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும்.
20 தீயவர்கள் எப்பொழுதும் துன்பம் செய்யவே எண்ணுவார்கள். ஆனால் சமாதானத்திற்காக வேலைசெய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
21 நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும்.
22 கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
23 அறிவுள்ளவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லமாட்டான். ஆனால் அறிவில்லாதவனோ எல்லாவற்றையும் சொல்லி தன்னை முட்டாளாகக் காட்டிக்கொள்வான்.
24 கடினமாக உழைக்கிறவர்கள் மற்ற உழைப்பாளிகளுக்கு பொறுப்பாளி ஆவார்கள். சோம்பேறியோ அடிமையைப்போன்று மற்றவர்களின் கீழ் வேலைசெய்வான்.
25 கவலையானது ஒருவனின் மகிழ்ச்சியை எடுத்துவிடும். ஆனால் இரக்கமான வார்த்தைகள் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தும்.
26 தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப்பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
27 சோம்பேறி தான் விரும்பியவற்றை செய்து முடிப்பதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவனிடம் செல்வம் வந்து சேரும்.
28 நீ சரியாக வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கையை அடைவாய். அதுவே என்றென்றும் வாழ்வதற்குரிய வாழ்வாகும்.
ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்
4 தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். 2 ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. 3 நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். 4 இந்த உலகத்தை ஆள்பவனாகிய [a] சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். 5 நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
7 இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். 8 எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. 9 நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10 எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11 நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12 ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.
13 “நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்” [b] என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம். 15 இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும்.
விசுவாசத்தால் வாழ்தல்
16 அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17 தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18 ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.
2008 by World Bible Translation Center