Old/New Testament
22 ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது.
2 செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.
3 அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்.
4 கர்த்தரை மதித்துப் பணிவுள்ளவர்களாக இருங்கள். அப்போது உங்களுக்குச் செல்வமும் மதிப்பும் உண்மையான வாழ்வும் கிடைக்கும்.
5 தீயவர்கள் பல துன்பங்களில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ஆத்துமாவைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்கள் துன்பங்களிலிருந்து விலகி வாழ்கின்றனர்.
6 ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான்.
7 ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான்.
8 துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான்.
9 தாராளமாகக்கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்வதால் அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
10 ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும்.
11 நீ சுத்தமான இருதயத்தையும் கருணைமிக்க வார்த்தைகளையும் விரும்புகிறவனாயிருந்தால் அரசனும் உனக்கு நண்பன் ஆவான்.
12 தேவனை அறிகின்ற ஜனங்களை கர்த்தர் கவனித்து காப்பாற்றுகிறார். ஆனால் தனக்கு எதிரானவர்களை அவர் அழித்துப்போடுகிறார்.
13 சோம்பேறியோ, “என்னால் வேலைக்குப் போகமுடியாது. வெளியே ஒரு சிங்கம் உள்ளது. அது என்னைக்கொன்றுவிடும்” என்று கூறுகிறான்.
14 விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார்.
15 சிறுவர்கள் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவற்றைச் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.
16 நீ செல்வந்தனாகும்பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவதும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்புகளைக்கொடுப்பதும் ஆகிய இரண்டு செயல்களும் உன்னை ஏழையாக்கும்.
முப்பது ஞானமொழிகள்
17 நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 18 நீ இவற்றை நினைவில் வைத்திருந்தால் இது உனக்கு நல்லது. நீ இவ்வார்த்தைகளைச் சொன்னால் இவை உனக்கு உதவியாக இருக்கும். 19 இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 20 நான் உனக்காக முப்பது அறிவுரைகளை எழுதியிருக்கிறேன். இவை அறிவும் ஞானமும் உடையவை. 21 இவை உனக்கு உண்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் போதிக்கும். அப்போது உன்னை அனுப்பியவருக்கு நீ நல்ல பதில்களைக் கூறமுடியும்.
— 1 —
22 ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. 23 கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார்.
— 2 —
24 மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. 25 நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும்.
— 3 —
26 அடுத்தவன் பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே. 27 உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்?
— 4 —
28 உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே.
— 5 —
29 ஒருவன் தனது வேலையில் திறமையுடையவனாக இருந்தால் அவன் அரசனிடம் பணியாற்றும் தகுதியைப் பெறுகிறான். அவன், முக்கியமில்லாதவர்களுக்குப் பணியாற்றும் தேவை இருக்காது.
— 6 —
23 ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார். 2 எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே. 3 அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம்.
— 7 —
4 செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. 5 ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.
— 8 —
6 கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு. 7 எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல. 8 அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.
— 9 —
9 முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான்.
— 10 —
10 பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. 11 கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.
— 11 —
12 உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.
— 12 —
13 தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது. 14 அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய்.
— 13 —
15 என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன். 16 நீ சரியானவற்றைப் பேசுவதை நான் கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன்.
— 14 —
17 தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து. 18 எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.
— 15 —
19 என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. 20 மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! 21 மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.
— 16 —
22 உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு. 23 உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை. 24 நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான். 25 எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு.
— 17 —
26 என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். 27 வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள். 28 மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள்.
— 18 —
29-30 நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும்.
31 மதுவைப்பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது. 32 முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது.
33 மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும். 34 நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும். 35 “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.
— 19 —
24 தீயவர்களைப் பார்த்து நீ பொறாமைப்படாதே. உனது காலத்தை அவர்களோடு வீணாக்காதே. 2 அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப்பற்றியே பேசுகிறார்கள்.
— 20 —
3 ஞானத்தினாலும் புரிந்துகொள்தலினாலும் நல்ல வீடு கட்டப்படுகிறது. 4 அறிவு அறைகளை அரிய அழகுள்ள திரவியங்களால் நிரப்புகிறது.
— 21 —
5 ஞானம் ஒருவனை மிகவும் வலிமையுள்ளவனாக்கும். அறிவு ஆற்றலைத் தருகிறது. 6 நீ ஒரு போரைத் துவங்குமுன் கவனமாகத் திட்டமிட வேண்டும். நீ வெற்றியை விரும்பினால் அநேக நல்ல ஆலோசகர்களை வைத்திருக்கவேண்டும்.
— 22 —
7 முட்டாள்களால் ஞானத்தை உணர்ந்து கொள்ளமுடியாது. முக்கியமானவற்றைப்பற்றி ஜனங்கள் கலந்தாலோசிக்கும்போது முட்டாள்களால் எதுவும் சொல்ல முடியாது.
— 23 —
8 நீ எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தீமை செய்வதைப்பற்றியே திட்டமிட்டுக்கொண்டிருந்தால், தொந்தரவுகளை உருவாக்குபவன் என்று ஜனங்கள் உன்னை நினைத்துக்கொள்வார்கள். நீ சொல்வதை அவர்கள் கேட்கமாட்டார்கள். 9 அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள்.
— 24 —
10 துன்பக்காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்.
— 25 —
11 ஜனங்கள் ஒருவனைக்கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும். 12 “இது எனது வேலை இல்லை” என்று கூறாதே. அனைத்தையும் கர்த்தர் அறிவார். நீ எதற்காக அவற்றைச் செய்கிறாய் என்பதையும் அவர் அறிவார். கர்த்தர் உன்னைக் கவனித்து அறிகிறார். உனக்கு தகுந்த வெகுமதிகளை கர்த்தர் தருவார்.
— 26 —
13 என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது. 14 இதுபோலவே ஞானமானது உன் ஆத்துமாவுக்கு நல்லது. உன்னிடம் ஞானம் இருக்குமானால் உன்னிடம் நம்பிக்கையும் இருக்கும். உன் நம்பிக்கைக்கு முடிவிருக்காது.
— 27 —
15 நல்லவனிடமிருந்து பொருளைத் திருடும் அல்லது அவன் வீட்டையே அபகரிக்கும் திருடனைப்போல நீ இருக்காதே. 16 நல்லவன் ஏழுமுறை விழுந்தாலும் மீண்டும் எழுந்துவிடுவான். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் துன்பங்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.
— 28 —
17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. 18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார்.
— 29 —
19 தீயவர்களைக் குறித்து கவலைப்படாதே. அவர்களைக் கண்டு பொறாமையும் அடையாதே. 20 தீயவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவர்களின் விளக்கு அணைந்துபோகும்.
— 30 —
21 மகனே! கர்த்தருக்கும் அரசனுக்கும் மரியாதை செய். அவர்களுக்கு எதிரானவர்களோடு சேராதே. 22 ஏனென்றால் அத்தகையவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள். தேவனும் அரசனும் தம் எதிரிகளுக்கு எவ்வளவு துன்பத்தைக்கொடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியாது.
மேலும் ஞானமொழிகள்
23 இவை ஞானம் உள்ளவர்களின் வார்த்தைகள்.
ஒரு நீதிபதி நேர்மையாக இருக்கவேண்டும். ஒருவன் தெரிந்தவன் என்பதற்காக அவனுக்கு சார்பாக இருக்கக்கூடாது. 24 ஒரு நீதிபதி தவறு செய்தவனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தால், ஜனங்கள் அவனுக்கு எதிராக மாறுவார்கள். மற்ற நாட்டு ஜனங்களும்கூட அவனை இழிவாகக் கூறுவார்கள். 25 ஆனால் ஒரு நீதிபதி தவறு செய்தவனைத் தண்டித்தால் அதற்காக ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
26 ஒரு நேர்மையான பதில் ஜனங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அது உதடுகளில் இடுகிற முத்தத்தைப் போன்றது.
27 உனது வயலில் நடுவதற்கு முன்னால் வீடு கட்டாதே. வாழ்வதற்கான வீட்டைக் கட்டும் முன்னால் உணவுக்காகப் பயிர் செய்வதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்.
28 சரியான காரணம் இல்லாமல் ஒருவனுக்கு எதிராகப் பேசாதே. பொய் சொல்லாதே.
29 “அவன் என்னைக் காயப்படுத்தினான். எனவே அதுபோல் நானும் அவனைக் காயப்படுத்துவேன். அவன் எனக்குச் செய்ததற்காக நான் அவனைத் தண்டிப்பேன்” என்று சொல்லாதே.
30 சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன். 31 அனைத்து இடங்களிலும் முட்செடிகள் வளர்ந்திருந்தன. தரையில் பயனற்ற புதர்களும் வளர்ந்திருந்தன. தோட்டத்தைச் சுற்றுலுமிருந்த சுவர்கள் உடைந்து விழுந்துகிடந்தன. 32 நான் இவற்றைப் பார்த்து அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நான் இவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். 33 ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா? 34 இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனதுபோல் இருக்கும்.
கிறிஸ்தவர்களின் கொடுக்கும் தன்மை
8 சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 2 அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள். 3 தம்மால் முடிந்த அளவு அவர்கள் கொடுத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அந்த விசுவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கும் மீறி கொடுத்தார்கள். இதனை அவர்கள் சுதந்தரமாகச் செய்தனர். எவரும் அவர்களை அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. 4 ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களைக் கேட்டார்கள். தேவனுடைய மக்களுக்கான சேவையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப வேண்டினர். 5 நாம் எதிர்பார்த்திராத வகையில் அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் தம் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் கர்த்தருக்கும் எங்களுக்கும் தம்மையே கொடுத்தார்கள். இதைத்தான் தேவனும் விரும்புகிறார்.
6 எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். 7 நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.
8 கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம். 9 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.
10 உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள். 11 எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். 12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். 13 மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 14 இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும்.
15 “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை.
குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. (A)
தீத்துவும் அவனது குழுவும்
16 உங்கள் மீது எனக்கிருக்கும் அன்பைப் போலவே தீத்துவின் இதயத்திலும் அன்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் என்னைப் போலவே உங்களிடம் அன்பாய் இருக்கிறான். 17 நாங்கள் செய்யச் சொன்னதையெல்லாம் தீத்து ஏற்றுக்கொண்டான். அவன் உங்களிடம் வர பெரிதும் விரும்பினான். இது அவனது சொந்த முயற்சியே ஆகும். 18 நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன். 19 அதோடு, இக்காணிக்கைப் பணத்தை சுமந்துச் செல்லும்போது எங்களுக்குத் துணையாக இருக்க சபைகளால் நியமிக்கப்பட்டவனே இச்சகோதரன் ஆவான். தேவனுக்கு மகிமை உண்டாகவே நாங்கள் இச்சேவையைச் செய்ண்டிருக்கிறோம். சேவை செய்யும் எங்கள் விருப்பத்தைப் புலப்படுத்தவும் இதைச் செய்கிறோம்.
20 இப்பெரிய தொகையை கையாள்வது குறித்து நாங்கள் கொள்ளும் அக்கறைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது எனக் கூடுமான வரையில் எச்சரிக்கையாய் உள்ளோம். 21 சரியானவற்றைச் செய்யவே நாங்கள் முயல்கிறோம். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல. மக்களுக்கு முன்பாகவும் நேர்மையாகப்படுவதை மட்டுமே செய்ய விரும்புகிறோம்.
22 இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான்.
23 தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள். 24 எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.
2008 by World Bible Translation Center