Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நீதிமொழிகள் 25-26

சாலொமோனிடமிருந்து மேலும் ஞானமொழிகள்

25 இது சாலொமோன் சொன்ன மேலும் சில ஞானமொழிகள். இவ்வார்த்தைகள் யூதாவின் அரசனான எசேக்கியா என்பவனின் வேலைக்காரர்கள் பார்த்து எழுதியவை.

நாம் அறிந்துகொள்ளக்கூடாது என்று தேவன் எண்ணும் காரியங்களை மறைத்து வைக்கும் உரிமை தேவனுக்கு உண்டு. ஆனால் தான் சொல்லும் காரியங்களுக்காக ஒரு அரசன் பெருமைக்குரியவன் ஆகிறான்.

வானம் நமக்கு மேலே மிகவும் உயரத்தில் உள்ளது. பூமியில் ஆழங்கள் உள்ளன. இது போலவே அரசனுடைய மனமும் உள்ளது. இவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக்கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும். இதுபோலவே, ஒரு அரசனிடமிருந்து தீய ஆலோசகர்களை நீக்கிவிட்டால், நன்மை அவனது ஆட்சியை வலிமையுள்ளதாக்கும்.

அரசனுக்கு முன்னால் உன்னைப்பற்றிப் பெருமை பேசாதே. நீ புகழ்பெற்றவன் என்றும் கூறாதே. அரசன் உன்னை அவனாக வரவழைப்பதுதான் மிக நல்லது. ஆனால் நீயாகப் போனால் மற்றவர்கள் முன்பு நீ அவமானப்பட்டுப் போவாய்

நீ உன் கண்ணால் பார்த்ததை நீதிபதியிடம் சொல்ல அவசரப்படாதே. வேறு ஒருவன் நீ சொல்வது தவறென்று நிரூபித்துவிட்டால் பிறகு நீ அவமானப்படுவாய்.

நீயும் இன்னொருவனும் ஒத்துப்போகாவிட்டால் இனி என்ன செய்யலாம் என்பதை உங்களுக்குள் பேசி முடிவுசெய். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே. 10 நீ அவ்வாறு செய்தால், பிறகு அவமானப்படுவாய். அதற்குப் பிறகு உன் அவப்பெயர் எப்போதும் நீங்காது.

11 நீ சரியான நேரத்தில் சரியானதைக் கூறுவது, தங்க ஆப்பிளை வெள்ளித் தட்டில் வைப்பதுபோன்றது. 12 ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது.

13 நம்பிக்கைக்குரிய தூதுவன் அவனை அனுப்பியவனுக்குப் பயனுள்ளவனாக இருப்பான். அவன் வேனிற்கால அறுவடையின்போது கிடைக்கும் குளிர்ந்த தண்ணீரைப் போன்றவன்.

14 சிலர் அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவற்றைத் தரமாட்டார்கள். இவர்கள் மழை தராத மேகமும் காற்றும் போன்றவர்கள்.

15 பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்ற வல்லது. அது அரசனையும் மாற்றும் மென்மையான பேச்சு மிகுந்த வலிமை உடையது.

16 தேன் நல்லது. ஆனால் அதை அதிகம் உண்ணாதே. அவ்வாறு செய்தால் நீ வியாதிக்குள்ளாவாய். 17 இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான்.

18 உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன். 19 துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான்.

20 வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும்.

21 உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக்கொடு. 22 இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார்.

23 வடக்கே இருந்து வரும் காற்று மழையைக்கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக்கொண்டுவரும்.

24 உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது.

25 தூரமான இடத்திலிருந்து வரும் நல்ல செய்தி வெப்பமாகவும் தாகமாகவும் இருக்கும்போது கிடைக்கும், குளிர்ந்த தண்ணீரைப் போன்றதாகும்.

26 ஒரு நல்ல மனிதன் பலவீனமாகி கெட்டவன் பின்னால் போவது என்பது நல்ல தண்ணீர் அழுக்காவதைப் போன்றதாகும்.

27 நீ தேனை மிகுதியாகப் பருகினால் அது உனக்கு நல்லதல்ல. இதுபோலவே உனக்கு மிக அதிகளவு பெருமையைத் தேடிக்கொள்ள முயலாதே.

28 ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்

அறிவற்றவர்களைப்பற்றிய ஞான மொழிகள்

26 கோடைக்காலத்தில் பனி விழக்கூடாது. அறுவடை காலத்தில் மழை பெய்யக்கூடாது. அது போலவே ஜனங்கள் அறிவற்றவர்களைப் பெருமைப்படுத்தக் கூடாது.

ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும்.

குதிரைக்கு ஒரு சவுக்கு வேண்டும். கழுதைக்குக் கடிவாளம் வேண்டும். முட்டாளுக்கு அடிகொடுக்க வேண்டும்.

இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான்.

உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய்.

ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும்.

ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும்.

ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும்.

10 ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது.

11 ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

12 ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது.

13 “என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான்.

14 ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான்.

15 சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான்.

16 சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான்.

17 இரண்டுபேர் செய்யும் விவாதத்திற்கிடையில் சிக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது தெருவில் போகும் நாயின் காதைப் பிடித்து இழுப்பது போன்றதாகும்.

18-19 ஒருவன் தந்திரமாக இன்னொருவனை வஞ்சித்துவிட்டு பிறகு வேடிக்கைக்காகச் செய்தேன் என்று கூறுவது தவறு. இது ஒரு பைத்தியகாரன் காற்றில் அம்பை எய்து யாரையாவது எதிர்பாராதவிதமாகக்கொன்று போடும் விபத்தைப் போன்றது.

20 நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும்.

21 கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர்.

22 ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும்.

23 தீய திட்டங்களைச் சிலர் நல்ல வார்த்தைகளால் மூடி மறைத்து வைத்திருப்பார்கள். இது குறைந்த விலையுள்ள மண்பாத்திரத்தின் மீது வெள்ளியைப் பூசியதுபோன்று இருக்கும். 24 ஒரு தீயவன் தனது பேச்சின் மூலம் தன்னை நல்லவனைப்போன்று காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவன் தன் தீய திட்டங்களை தன் இருதயத்தில் மறைத்து வைக்கிறான். 25 அவன் சொல்லும் காரியங்கள் நலமாகத் தோன்றலாம். எனினும் அவனை நம்பவேண்டாம். அவனது மனம் முழுவதும் தீமையால் நிறைந்திருக்கும். 26 அவன் தனது தீய திட்டங்களை மென்மையான வார்த்தைகளால் மறைத்து வைத்திருக்கிறான். எனினும் அவனது கெட்டச் செயல்கள் முடிவில் ஜனங்கள் முன்பு வெளிப்பட்டுவிடும்.

27 ஒருவன் இன்னொருவனைத் தந்திரத்தால் வசப்படுத்த விரும்பினால் அவனே தந்திரத்திற்கு சிறையாவான். ஒருவன் இன்னொருவன் மீது கல்லை உருட்ட விரும்பினால் அவனே கல்லுக்கடியில் நசுங்கிப்போவான்.

28 பொய் சொல்லும் மனிதன் யாரைக் காயப்படுத்துகிறானோ அவரை வெறுக்கிறான். ஒருவன் அர்த்தமற்றவற்றைப் பேசினால் அவன் தன்னையே காயப்படுத்திக்கொள்கிறான்.

2 கொரி 9

உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவுதல்

தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.

“கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும்.

“அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான்.
    அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.” (A)

என்று எழுதப்பட்டுள்ளது.

10 தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். 11 தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர்.

12 தேவைப்படும் தேவனுடைய மக்களுக்கு நீங்கள் உதவி செய்வது பெரும் சேவையாகும். இதற்கு இணையானது வேறில்லை. தேவனுக்கு அளவு கடந்த நன்றிகளை இது கொண்டு வரும். 13 நீங்கள் செய்யும் இச்சேவையானது உங்கள் விசுவாசத்திற்கான நல்ல சாட்சியாகும். இதற்காக மக்கள் தேவனைப் பாராட்டுவர். நீங்கள் விசுவாசிப்பதாக ஒத்துக்கொள்ளும் கிறிஸ்துவின் நற்செய்தியை நீங்கள் பின்பற்றுவதால் மக்கள் அவருக்கு நன்றி சொல்வார்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளிலும் ஒவ்வொருவரின் தேவைகளிலும் நீங்கள் தாராளமாகப் பங்கு கொள்கிறீர்கள். 14 அந்த மக்கள் தேவனிடம் ஜெபிக்கும்போது, அவர்கள் உங்களோடு இருக்கவே விரும்புவர். ஏனென்றால் தேவன் உங்களுக்கு மிகுதியாகக் கிருபை செய்திருக்கிறார். 15 தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center