Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நீதிமொழிகள் 19-21

19 ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது.

சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.

ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.

ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.

இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.

ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர்களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.

ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.

பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.

10 ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.

11 ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.

12 ஒரு அரசன் கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.

13 ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.

14 ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.

15 ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.

16 ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.

17 ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.

18 உன் மகனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும்.

19 ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும் மீண்டும் செய்வான்.

20 அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.

21 ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்.

22 ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.

23 கர்த்தரை மதிக்கிறவன் நல்ல வாழ்வைப் பெறுகிறான். அவன் தன் வாழ்வில் திருப்தியடைகிறான். அவன் துன்பங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

24 சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக்கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம்பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.

25 சிலர் எதற்கும் மரியாதை காட்டமாட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அறிவற்றவன் தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் சிறு சிட்சையே அறிவாளிகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும்.

26 ஒருவன் தன் தந்தையிடமிருந்து திருடி, தன் தாயை பலவந்தமாக வெளியேற்றினால் அவன் மிகவும் மோசமானவன். அவன் தனக்குத்தானே அவமானத்தையும் அவமரியாதையையும் தேடிக்கொள்கிறான்.

27 போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய்.

28 சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.

29 மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.

20 திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.

ஒரு அரசனின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு அரசனைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய்.

எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும்.

ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை.

நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.

பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது.

நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.

ஒரு அரசன் நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.

ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது.

10 தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்.

11 ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.

12 பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.

13 நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும்.

14 உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான்.

15 தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது.

16 அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய்.

17 ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.

18 திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும். நீ ஒரு போரைத் துவங்கினால், போர் நடவடிக்கைகளில் சிறந்த அறிவுடையவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்.

19 அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.

20 ஒருவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதிராகப் பேசினால், அவன் அணைந்துகொண்டிருக்கும் விளக்கைப் போன்றவன்.

21 உனது செல்வமானது பெறுவதற்கு எளிதானதாக இருந்தால், அது உனக்கு அத்தனை உயர்வாகத் தோன்றாது.

22 எவனாவது உனக்கு எதிராக எதையாவது செய்தால் நீயாக அவனைத் தண்டிக்க முயலாதே. கர்த்தருக்காகக் காத்திரு. இறுதியில் உன்னை அவர் வெற்றிப்பெறச் செய்வார்.

23 சிலர் சரியில்லாத அளவு முறைகளையும் எடைகளையும் பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கர்த்தர் இதனை வெறுக்கிறார். அது அவனை மகிழ்ச்சிக்குட்படுத்தாது.

24 ஒவ்வொருவருக்கும் என்ன நிகழும் என்பதை கர்த்தர் முடிவு செய்கிறார். எனவே ஒருவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.

25 தேவனுக்கு ஏதாவது கொடுப்பதாக வாக்குறுதி சொல்லுமுன் நன்றாகச் சிந்திக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வாக்குறுதியைத் தராமலேயே இருந்திருக்கலாம் என்று பின்னால் நீ வருந்துவாய்.

26 யார் தீயவர் என்னும் முடிவை அறிவாளியான அரசனே எடுப்பான். அந்த அரசனே அவர்களைத் தண்டிப்பான்.

27 ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார்.

28 அரசன் உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால் அவன் தன் அதிகாரத்தைக் காத்துக்கொள்வான். அவனது உண்மையான அன்பு ஆட்சியைப் பலப்படுத்தும்.

29 நாம் ஒரு இளைஞனை அவனது வலிமைக்காக விரும்புகிறோம். முதியவரை அவரது முழுமையான வாழ்க்கையைக் காட்டும் நரைத்த முடிக்காக மதிக்கிறோம். அவரது நரைத்த தலைமுடி அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள் தரும்.

30 நாம் தண்டிக்கப்பட்டால் தவறு செய்வதை நிறுத்திவிடுவோம். வேதனையானது ஒருவனை மாற்றும்.

21 விவசாயிகள் சிறு வாய்க்கால்களைத் தோண்டி தம் வயல்களில் நீர்ப்பாய்ச்சுவார்கள். மற்ற வாய்க்கால் வழிகளை அடைத்து குறிப்பிட்ட ஒரு வாய்க்கால் வழியே மட்டும் நீர்ப்பாய்ச்சுவார்கள். இது போல்தான் அரசனின் மனதையும் கர்த்தர் கட்டுப்படுத்துகிறார். அவன் எங்கெல்லாம் போகவேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவனை கர்த்தர் வழி நடத்துகிறார்.

ஒருவன் தான் செய்வதையெல்லாம் சரி என்றே நினைக்கிறான். ஜனங்களின் செயல்களுக்காக கர்த்தரே சரியான காரணங்களோடு தீர்ப்பளிக்கிறார்.

சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளைவிட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார்.

கர்வமுள்ள பார்வையும், பெருமையான எண்ணங்களும் பாவமானவை. ஒருவன் தீயவன் என்பதை அவை காட்டுகின்றன.

கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும். ஆனால் ஒருவன் கவனம் இல்லாமலும் எதையும் அவசரகதியுமாகச் செய்துகொண்டும் இருந்தால், அவன் ஏழையாவான்.

நீ செல்வந்தனாவதற்காகப் பிறரை ஏமாற்றினால் உன் செல்வம் உன்னைவிட்டு வெகுவிரைவில் விலகிவிடும். உன் செல்வம் உன்னை மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.

தீயவர்களின் செயல்கள் அவர்களை அழித்துவிடும். அவர்கள் சரியானவற்றைச் செய்ய மறுக்கின்றனர்.

கெட்டவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஏமாற்றவே முயற்சி செய்கிறார்கள். ஆனால் நல்லவர்களோ நேர்மையானவர்களாகவும் சிறந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

எப்போதும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டில் வாழ்வதைவிட கூரையின்மேல் வாழ்வது நல்லது.

10 தீயவர்கள் மேலும் தீமையே செய்ய விரும்புகின்றனர். இவர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது இரக்கம் காட்டமாட்டார்கள்.

11 தேவனைக் கேலிச் செய்கிறவனைத் தண்டித்துவிடு. இதனால் அறிவற்றவர்கள் பாடம் கற்பார்கள். அவர்கள் அறிவாளிகளாகின்றனர். அவர்கள் மேலும் மேலும் அறிவைப் பெறுகின்றனர்.

12 தேவன் நல்லவர், தீயவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தேவன் அறிவார், அவர்களைத் தண்டிப்பார்.

13 ஒருவன் ஏழைகளுக்கு உதவ மறுத்தால், அவனுக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்.

14 ஒருவன் உன்மீது கோபமாக இருந்தால் இரகசியமாக அவனுக்கு ஒரு அன்பளிப்பைக்கொடு. அது அவனது கோபத்தைத் தடுக்கும்.

15 நேர்மையான தீர்ப்பு நல்லவர்களை மகிழ்ச்சியாக்கும். ஆனால் அது தீயவர்களைப் பயப்படுத்தும்.

16 அறிவைவிட்டு விலகி நடப்பவன் அழிவை நோக்கியே செல்கிறான்.

17 வேடிக்கை செய்வதையே முதன்மையாகக் கருதுபவன் ஏழ்மையடைவான். அவன் திராட்சைரசத்தையும் உணவையும் விரும்பினால் அவனால் செல்வந்தனாக முடியாது.

18 நல்லவர்களுக்குத் தீயவர்கள் செய்யும் தீமைகளுக்கெல்லாம் விலை கொடுக்கவேண்டும். நேர்மையற்றவர்கள் நேர்மையானவர்களுக்குச் செய்தவற்றுக்காக விலைதர வேண்டும்.

19 முன்கோபமும் வாக்குவாதம் செய்வதில் ஆர்வமும்கொண்ட மனைவியோடு வாழ்வதைவிட பாலைவனத்தில் வாழ்வது நல்லது.

20 அறிவுள்ளவன் தனக்குத் தேவையானவற்றைச் சேகரித்துக்கொள்கிறான். அறிவற்றவனோ தான் பெற்றதை பெற்ற வேகத்திலேயே செலவு செய்துவிடுகிறான்.

21 எப்பொழுதும் அன்பையும், கருணையையும் காட்டுகிற ஒருவன் நல்வாழ்வும் செல்வமும் சிறப்பும் பெறுவான்.

22 அறிவுள்ளவனால் அனைத்தையும் செய்ய முடியும். அவனால் வலிமைமிக்க வீரர்களின் காவலில் உள்ள நகரங்களையும் தாக்கமுடியும். அவர்களைக் காக்கும் என்று நம்பியவைகளையும் தகர்க்கமுடியும்.

23 ஒருவன் தான் சொல்வதைப்பற்றி எச்சரிக்கை உடையவனாக இருந்தால், அவன் தன்னைத் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்கிறான்.

24 பெருமைகொண்டவன் மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைக்கிறான். அவன் தனது செயல்கள் மூலம் தீயவன் என்று காட்டுகிறான்.

25-26 சோம்பேறி மேலும் மேலும் ஆசைப்படுவதால் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவன் அதற்கென உழைக்க மறுப்பதால் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். ஆனால் நல்லவனிடம் ஏராளமாக இருப்பதால் அவனால் கொடுக்க முடியும்.

27 தீயவர்கள் பலிதரும்போது, குறிப்பாக அவர்கள் கர்த்தரிடமிருந்து சிலவற்றைப் பெற முயற்சிக்கும்போது கர்த்தர் மகிழ்ச்சியடைவதில்லை.

28 பொய் சொல்பவன் அழிக்கப்படுவான். அப்பொய்யை நம்புகிறவனும் அவனோடு அழிந்துவிடுவான்.

29 தான் செய்வது சரி என்பதை எப்போதும் நல்லவன் அறிவான். ஆனால் தீயவனோ நடிக்கிறான்.

30 கர்த்தர் எதிராக இருக்கும்போது வெற்றியடையக்கூடிய திட்டமிடுகிற அளவிற்கு யாருக்கும் அறிவில்லை.

31 ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.

2 கொரி 7

அன்புள்ள நண்பர்களே! தேவனிடமிருந்து இந்த வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாம் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது வாழ்க்கை முறையிலேயே மிகச் சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தேவனை மதிக்கிறோம்.

பவுலின் மகிழ்ச்சி

எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை. உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம். ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார். அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது. இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. 10 தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது. 11 தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள். 12 நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம். 13 நாங்கள் மிகவும் ஆறுதலடைந்தோம்.

தீத்து மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். அவன் நலமடைய நீங்கள் அனைவரும் உதவினீர்கள். 14 உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும். 15 நீங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள். இதை நினைத்து தீத்து உங்கள் மீது உறுதியான அன்பைக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் பயத்தோடும் மரியாதையோடும் ஏற்றுக்கொண்டீர்கள். 16 நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center