Old/New Testament
1 ஆமோத்சின் மகனான ஏசாயாவின் தரிசனம். தேவன் யூதேயாவுக்கும், எருசலேமுக்கும் என்ன நிகழப்போகிறது என்பதைப்பற்றி ஏசாயாவுக்குக் காட்டினார். யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா இவர்களின் காலங்களில் ஏசாயா இவற்றைப் பார்த்தான்.
தன் ஜனங்களுக்கு எதிரான தேவனுடைய வழக்கு
2 பரலோகமே, பூமியே, கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள்! கர்த்தர் கூறுகிறார்:
“நான் எனது பிள்ளைகளை வளர்த்தேன்.
நான் எனது பிள்ளைகள் வளர உதவினேன்.
ஆனால் எனது பிள்ளைகள் எனக்கு எதிரானார்கள்.
3 ஒரு பசு தன் எஜமானனை அறியும்.
ஒரு கழுதை தன் எஜமானன் தனக்கு உணவிடும் இடத்தையும் அறியும்.
ஆனால் எனது இஸ்ரவேல் ஜனங்கள் என்னை அறியார்கள்.
என் ஜனங்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை”.
4 இஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள்.
5 தேவன் கூறுகிறார்: ஏன் என் ஜனங்களாகிய உங்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறேன்? நான் உங்களைத் தண்டித்தேன், ஆனால் நீங்களோ மாறவில்லை. நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து வருகிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு தலையும் இதயமும் நோயுற்றுவிட்டது. 6 உங்கள் காலடியில் இருந்து உச்சந்தலைவரை உங்களது உடலின் ஒவ்வொரு பாகமும் காயமடைந்திருக்கிறது, வெட்டுப்பட்டுள்ளது, புண்ணாகியுள்ளது. நீங்கள் உங்கள் புண்களுக்காகக் கவலைப்படப்படவில்லை. உங்கள் காயங்கள் சுத்தப்படுத்தப்படவில்லை, மூடிவைக்கப்படவில்லை.
7 உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. உங்கள் நகரங்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன. உங்கள் பகைவர்கள் உங்கள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். படைகளால் அழிக்கப்பட்ட நாடு போன்று உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன.
8 சீயோனின் மகள் (எருசலேம்), இப்பொழுது, திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட காலியான கூடாரம்போல் இருக்கின்றாள். அது வெள்ளரித் தோட்டத்தில் உள்ள ஒரு பழைய வீடு போலவும் காணப்படுகின்றது. அது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நகரம்போல் உள்ளது.
9 இது உண்மையானாலும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சில ஜனங்களைத் தொடர்ந்து வாழ அனுமதித்தார். நாம் சோதோம் மற்றும் கொமோராபோல முழுவதுமாக அழிக்கப்படவில்லை.
10 சோதோமின் தலைவர்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்லும் செய்தியைக் கேளுங்கள்! கொமோராவின் ஜனங்களாகிய நீங்கள், தேவன் சொல்லும் போதனைகளைக் கேளுங்கள். 11 தேவன் கூறுகிறார், “நீங்கள் ஏன் தொடர்ந்து எனக்கு இத்தனை பலி கொடுக்கிறீர்கள்? நான் போதுமான அளவிற்கு உங்களிடமிருந்து ஆடு, காளை, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பின் பலிகளையும் பெற்றுவிட்டேன். 12 என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்?
13 “தொடர்ந்து எனக்குப் பயனற்ற பலிகளைக் கொண்டுவர வேண்டாம். நீங்கள் எனக்குத் தருகிற நறுமணப் பொருட்களை நான் வெறுக்கிறேன். புது மாதப்பிறப்பின் நாளில், ஓய்வு நாளில், விடுமுறை நாட்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பரிசுத்த கூட்டங்களில் நீங்கள் செய்யும் தீமைகளை நான் வெறுக்கிறேன். 14 நான் முழுமையாக உங்கள் மாதக்கூட்டங்களையும் பண்டிகைகளையும் வெறுக்கிறேன். அவை எனக்குப் பெரும் பாரமாக உள்ளன. அப்பாரங்களைத் தாங்கி நான் சோர்ந்து போனேன்.
15 “நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் ஜெபம் செய்ய வருகிறீர்கள். ஆனால், நான் உங்களை பார்க்க மறுக்கிறேன். நீங்கள் அதிகமதிகமாய் ஜெபங்களை சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைக் கவனிக்க மறுக்கிறேன். ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தால் கறைப்பட்டுள்ளன.
16 “உங்களைக் கழுவுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களை நிறுத்துங்கள். நான் அத்தீயச் செயல்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறுகளை நிறுத்துங்கள்! 17 நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களோடு நேர்மையாக இருங்கள். மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்களைத் தண்டியுங்கள். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு உதவுங்கள். கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவுங்கள்”.
18 கர்த்தர் மேலும், “வாருங்கள், நாம் இதைப்பற்றி விவாதிப்போம். உங்களது பாவங்கள் இரத்தினக் கம்பளம்போல் சிவப்பாக இருக்கிறது. ஆனால், அவைகள் கழுவப்பட்டு நீங்கள் பனிபோன்று வெண்மையாகலாம். உங்கள் பாவங்கள் பிரகாசமான சிவப்பாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் வெள்ளை கம்பளியைப்போன்று வெண்மையாக முடியும்.
19 “நான் சொல்கிறவற்றை நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்நாட்டிலிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். 20 ஆனால் நீங்கள் கவனிக்க மறுத்தால் எனக்கு எதிராவீர்கள். உங்கள் பகைவர்கள் உங்களை அழிப்பார்கள்” என்றார். கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
எருசலேம் தேவனுக்கு உண்மையாக இல்லை
21 “தேவன் கூறுகிறார். எருசலேமைப் பாருங்கள். அது என்னை நம்பி என்னைப் பின்பற்றிய நகரமாக இருந்தது. அது இன்று ஒரு வேசியைப்போன்று மாறக் காரணம் என்ன? இப்போது அவள் என்னைப் பின்பற்றவில்லை. எருசலேம் முழுவதும் நீதி குடியிருந்தது. எருசலேமில் வாழ்கின்ற ஜனங்கள் தேவனுடைய விருப்பம்போல வாழவேண்டும். ஆனால் இப்போது, அதில் கொலைக்காரர்கள் வாழ்கிறார்கள்.”
22 நன்மை என்பது வெள்ளியைப்போன்றது. ஆனால் உங்கள் வெள்ளி இப்போது பயனற்றதாகிவிட்டது. தண்ணீருடன் கலந்த திராட்சைரசத்தைப்போல உங்களுடைய நன்மை இப்போது பலன் குறைந்து போயிற்று. 23 உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கலகக்காரர்களாகவும் கள்ளர்களின் நண்பர்களாகவும் இருக்கின்றனர். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் இலஞ்சத்தை எதிர்ப்பார்க்கின்றனர். தீமை செய்வதற்குப் பணம் பெறுகிறார்கள். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வதில்லை. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கணவனை இழந்த விதவைகளின் தேவைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.
24 இத்தனையும் செய்ததால் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், இஸ்ரவேலின் வல்லமை மிக்க தேவன் கூறுகிறதாவது: “என் பகைவர்களே, உங்களைத் தண்டிப்பேன். உங்களால் எனக்குத் தொல்லை கொடுக்கமுடியாது. 25 ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த புடமிடுவதுபோல உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து விலக்குவேன். உங்களிடமிருந்து பயனற்றவற்றை நீக்குவேன். 26 ஆரம்ப நாட்களில் உங்களிடமிருந்த நீதிபதிகளைப்போன்றவர்களை மீண்டும் கொண்டு வருவேன். உங்களது ஆலோசகர்கள் முன்பிருந்த ஆலோசகர்களைப்போல இருப்பார்கள். அப்போது நீங்கள் இதனை ‘நல்ல நம்பிக்கைக்குரிய நகரம்’ என்று அழைப்பீர்கள்” என்றார்.
27 தேவன் நல்லவர். அவர் நீதியானவற்றை மட்டுமே செய்வார். அவர் சீயோனையும் அதற்குத் திரும்பி வருகிறவர்களையும் மீட்பார்.
28 ஆனால் அனைத்து குற்றவாளிகளும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள். (அவர்கள் கர்த்தரைப் பின்பற்றாதவர்கள்.)
29 நீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள். 30 இது நிறைவேறும். ஏனென்றால் நீங்கள் காய்ந்துபோன கருவாலி மரங்களைப்போன்றும் தண்ணீரில்லாத சோலையைபோன்றும் அழிக்கப்படுவீர்கள். 31 வலிமையான ஜனங்கள் காய்ந்து சிறு மரத்துண்டுகளைப்போலாவார்கள். வல்லமையுள்ள ஜனங்களும் அவர்களின் தீய செயல்களும் எரிந்துபோகும். அவர்களுடைய தீய செயல்கள் தீப்பொறிகள் போன்று இருக்கும். அதை எவரும் அணைக்க முடியாது.
God’s Message to Judah and Jerusalem
2 ஆமோத்சின் மகனான ஏசாயா யூதா மற்றும் எருசலேம் பற்றியச் செய்தியைப் பார்த்தான்.
2 கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும்.
இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும்.
அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள்.
3 ஏராளமான ஜனங்கள் அங்கு போவார்கள்.
அவர்கள், “நாம் கர்த்தருடைய மலைக்குப்போவோம் நாம் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப்போவோம்.
பின் தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்றுத்தருவார்.
நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.
தேவனாகிய கர்த்தருடைய போதனைகளும் செய்தியும் சீயோன் மலையிலுள்ள எருசலேமில் துவங்கி,
உலகம் முழுவதும் பரவும்.
4 பிறகு, தேவனே அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கும் நீதிபதியாவார்.
தேவன் பலரது வாக்குவாதங்களை முடித்துவைப்பார்.
சண்டைக்காகத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஜனங்கள் நிறுத்துவார்கள்.
அவர்கள் தங்கள் வாள்களை கலப்பையின் கொழுவாகச் செய்வார்கள்.
அவர்கள் தங்கள் ஈட்டிகளிலிருந்து செடிகளை வெட்டும் கருவிகளைச் செய்வார்கள்.
ஜனங்கள், மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
ஜனங்கள் மீண்டும் யுத்தத்திற்குரிய பயிற்சி பெறமாட்டார்கள்.
5 யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! 6 நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கிழக்கு நாட்டு ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பெலிஸ்தியர்களைப்போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோத எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். 7 பிற நாடுகளிலுள்ள பொன்னாலும் வெள்ளியாலும் உங்கள் தேசம் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. உங்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான இரதங்களும் உள்ளன. 8 உங்கள் தேசம் ஜனங்கள் தொழுதுகொள்ளும் சிலைகளாலும் நிறைந்துள்ளது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். ஜனங்கள் அவற்றைத் தொழுதுகொண்டனர். 9 ஜனங்கள் மேலும் மேலும் மோசமானர்கள். ஜனங்கள் மிகவும் கீழானவர்கள். தேவன், அவர்களை நிச்சயமாக மன்னியாமல் இருப்பார்.
10 பாறைகளுக்கு பின்னால் மண்ணில் ஒளித்துக்கொள்ள போ! நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். அவரது மகா வல்லமையிலிருந்து மறைய வேண்டும். 11 இறுமாப்புடையவர்கள் இனிமேல் இறுமாப்புடையவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அவமானத்தால் தரையளவு தாழ்த்தப்படுவார்கள். அப்போது, கர்த்தர் ஒருவரே உயர்த்தப்படுவார்.
12 கர்த்தர் ஒரு சிறப்பு நாளுக்குத் திட்டமிட்டார். அன்று, கர்த்தர் பெருமிதம் கொண்டவர்களையும் வீண் பெருமை பேசுபவர்களையும் தண்டிப்பார். பிறகு அவர்கள் முக்கியமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். 13 அவர்கள் லீபனோனிலுள்ள உலர்ந்த கேதுரு மரங்களைப்போலிருக்கிறார்கள். அவர்கள் பாசானில் உள்ள கர்வாலி மரங்களைப்போன்றவர்கள். ஆனாலும் தேவன் அவர்களைத் தண்டிப்பார். 14 அவர்கள் உயர்ந்த மலைகளையும் உயர்ந்த சிகரங்களையும் போன்றவர்கள். 15 அவர்கள் உயர்ந்த கோபுரங்களைப்போன்றவர்கள். பலமான சுவர்களைப்போன்றவர்கள். ஆனால் தேவன் அவர்களைத் தண்டிப்பார். 16 அவர்கள் தர்ஷீசின் கப்பல்களைப்போன்றவர்கள். (அக்கப்பல்கள் முக்கியமான பொருட்களால் நிறைந்தவை) எனினும் தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
17 அப்போது, ஜனங்கள் பெருமை அடைவதை நிறுத்துவார்கள். இப்போது பெருமிதம் கொள்பவர்கள் தரைமட்டும் பணிவார்கள். அப்போது கர்த்தர் மட்டுமே உயரமாக நிற்பார். 18 அனைத்து (பொய்த் தெய்வங்கள்) சிலைகளும் அழிந்துபோகும். 19 ஜனங்கள் பாறைகளுக்குப் பின்னும் நிலப்பிளவுகளிலும் ஒளிந்துகொள்வார்கள். ஜனங்கள் கர்த்தருக்கும் அவரது பெரும் வல்லமைக்கும் பயப்படுவார்கள். பூமி நடுங்கும்படி கர்த்தர் எழுந்து நிற்கும்போது இது நடைபெறும்.
20 அப்போது, ஜனங்கள் தமது பொற் சிலைகளையும், வெள்ளிச் சிலைகளையும் தூர எறிவார்கள். (ஜனங்கள் அந்த உருவங்களைச் செய்து தொழுது கொண்டு வந்தனர்.) மூஞ்சூறுகளும் துரிஞ்சில்களும் வாழ்கிற நிலப்பிளவுகளுக்குள் ஜனங்கள் அந்தச் சிலைகளை எறிவார்கள். 21 பிறகு ஜனங்கள் பாறைப் பிளவுகளுக்குள் ஒளிந்துகொள்ளுவார்கள். அவர்கள் கர்த்தருக்கும் அவரது பெரும் வல்லமைக்கும் அஞ்சுவதால், அப்படிச் செய்வார்கள். பூமி நடுங்கும்படி கர்த்தர் எழுந்து நிற்கும்போது இது நடக்கும்.
22 உங்களைக் காப்பாற்றிக்கொள்ள மற்ற ஜனங்களை நம்புவதை நிறுத்தவேண்டும். அவர்கள் வெறும் ஜனங்களே. ஜனங்கள் மரிப்பார்கள். எனவே, அவர்கள் தேவனைப்போன்று வல்லமையுள்ளவர்கள் என்று எண்ணக்கூடாது.
சுதந்தரத்தைப் பாதுகாத்துக்கொள்
5 நமக்கு இப்போது சுதந்தரம் இருக்கிறது. கிறிஸ்து நம்மைச் சுதந்தரம் உள்ளவர்கள் ஆக்கினார். எனவே உறுதியாய் நில்லுங்கள். மாறாதீர்கள். மீண்டும் அடிமைகளாக மறுத்துவிடுங்கள். 2 கவனியுங்கள்! நான் தான் பவுல். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு சட்டத்தின் அடிமைகளானால் கிறிஸ்து உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படமாட்டார். 3 மீண்டும் எல்லோரையும் நான் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும். 4 சட்டத்தைப் பின்பற்றி நீங்கள் தேவனுக்கு வேண்டியவராக முயன்றால், கிறிஸ்துவோடு உங்களுக்கு உள்ள தொடர்பு அற்றுப்போகும். தேவனுடைய இரக்கத்தை விட்டு விட்டீர்கள். 5 ஆனால் தேவனுடைய கிருபை மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆவோம் என்று விசுவாசிக்கிறோம். ஆவியானவரின் உதவியோடு அதற்காகக் காத்திருக்கிறோம். 6 ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது.
7 பந்தயத்தில் நீங்கள் நன்றாக ஓடினீர்கள். நீங்கள் உண்மைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். ஆனால் இப்போது உண்மையின் வழியில் இருந்து உங்களைத் தடுத்தது யார்? 8 உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை. 9 கவனமாய் இருங்கள். “புளிப்புள்ள மிகச் சிறிதளவு மாவுகூட பிசைந்த மாவு எல்லாவற்றையும் புளிக்கும்படிச் செய்துவிடும்.” (மிகச் சிறிதான ஒன்றுகூட பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.) 10 வேறுவிதமாக நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள் என்று தேவனுக்குள் நான் நம்பிக்கையாய் இருக்கிறேன். சிலர் வேறு விதமாக உங்களைக் குழப்புகிறார்கள். அவ்வாறு குழப்புகிறவன் எவனாக இருந்தாலும் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான்.
11 சகோதர சகோதரிகளே! மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் என்றும் போதித்ததில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தால் சிலுவையை ஏற்பதுபற்றி வரும் தடை நிறுத்தப்பட்டிருக்கும். 12 உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் அவர்கள் விருத்தசேதனத்துடன் துண்டித்துக்கொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.
13 சகோதர சகோதரிகளே, நீங்கள் சுதந்தரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். பாவக் காரியங்களுக்காக அச்சுதந்தரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால் ஒருவருக்கொருவர் அன்புடன் சேவை செய்யுங்கள். 14 “உன்னை நீ நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்ற ஒரு வாக்கியத்திலேயே மொத்த சட்டமும் அடங்கி இருக்கிறது. 15 நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்தும், கிழித்தும் வந்தீர்களேயானால் முழுவதுமாய் அழிந்து போவீர்கள். இது பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.
ஆவியும் மனித இயல்பும்
16 ஆகையால் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், ஆவிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள். பிறகு நீங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள். 17 ஆவிக்கு எதிராக மாம்ச இச்சையும், மாம்ச இச்சைக்கு எதிராக ஆவியும் செயல்பட விரும்புகிறது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆகையால் நீங்கள் உண்மையில் விரும்புவதை உங்களால் செய்ய முடியாது. 18 உங்களை ஆவியானவர் வழி நடத்தும்படி அனுமதித்தால், நீங்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல.
19 மாம்சத்தின் செயற்பாடுகள் தெளிவாய் உள்ளன. அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சுயநல ஆசைகள், பிரிவினைகள், கோஷ்டிப் பூசல்கள், 21 பொறாமை, குடிவெறி, களியாட்டங்கள் என்பன. நான் ஏற்கெனவே உங்களை எச்சரித்தது போன்று இப்போதும் எச்சரிக்கிறேன். இத்தகையப் பாவங்களைச் செய்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள் இடம்பெற முடியாது. 22 ஆனால், ஆவியானவர் நமக்கு அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, கருணை, நன்மை, விசுவாசம், 23 நற்பண்பு, தன்னடக்கம் ஆகிய நற்கனிகளை உருவாக்குகின்றார். இவற்றைத் தவறு என்று எந்தச் சட்டமும் கூறுவதில்லை. 24 இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் மாம்சத்தைச் சிலுவையில் கொன்றுவிட்டார்கள். அவர்கள் ஆசைகளையும் கெட்ட விருப்பங்களையும் கூட விட்டிருக்கிறார்கள். 25 ஆவியானவரிடம் இருந்து நாம் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அவரைப் பின்பற்ற வேண்டும். 26 வீண் புகழ்ச்சியை விரும்பக் கூடாது. நாம் ஒருவருக்கொருவர் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center