Old/New Testament
27 எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
2 உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.
3 கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது.
4 கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது.
5 வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.
6 உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.
7 உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய்.
8 ஒருவன் வீட்டைவிட்டு விலகியிருப்பது கூட்டைவிட்டுப் பிரிந்து இருக்கிற பறவையைப் போன்றதாகும்.
9 மணப்பொருட்களும் இனிய வாசனைப் பொருட்களும் உன்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் துன்பங்களோ உனது அமைதியான மனதை அழித்துவிடும்.
10 நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது.
11 என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும்.
12 துன்பம் வருவதை உணர்ந்து ஞானிகள் விலகிவிடுவார்கள். அறிவற்றவர்களோ நேராகப் போய் துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு அதனால் பாடுபடுகிறார்கள்.
13 அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய்.
14 நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான்.
15 எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். 16 அவளைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
17 இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.
18 அத்திமரத்தை வளர்ப்பவன் அதன் பழத்தை உண்பான். இதுபோலவே, தன் எஜமானனைக் கவனிக்கிறவனும் அதனால் பல்வேறு பயன்களைப் பெறுவான். எஜமானனும் அவனைக் கவனித்துக்கொள்வான்.
19 ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.
20 ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.
21 தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இதுபோலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.
22 ஒரு முட்டாளை நீ நசுக்கி அழித்துவிட முடியும். ஆனால் உன்னால் அவனது முட்டாள்தனத்தை அவனிடமிருந்து பலவந்தமாக அகற்ற முடியாது.
23 உனது ஆடுகளையும் மந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொள். உன்னால் இயன்றவரை அவற்றைக் கவனமாக காத்துக்கொள். 24 செல்வம் எப்பொழுதும் நிலைப்பதில்லை. தேசங்களும் எப்பொழுதும் நிலைக்காது. 25 புல்லை வெட்டினால் புதிய புற்கள் முளைக்கும். எனவே மலை மீது வளரும் புல்லை வெட்டு. 26 உனது ஆட்டுக்குட்டி மீதுள்ள மயிரை வெட்டி கம்பளிச் செய். உனது ஆடுகளை விற்று நிலத்தை வாங்கு. 27 உனக்கும் உனது குடும்பத்திற்கும் தேவையான பால் ஏராளமாக இருக்கும். உனது வேலைக்காரிகளின் உடல் நலத்திற்கும் அது உதவும்.
28 தீயவர்கள் எல்லாவற்றுக்கும் அஞ்சுவார்கள். ஆனால் ஒரு நல்லவன் சிங்கத்தைப்போல் தைரியமானவன் ஆவான்.
2 ஒரு நாடு அடிபணிய மறுத்தால், அது குறுகிய காலமே ஆளும் தீய தலைவர்களைப் பெறும். ஆனால் ஒரு நாட்டிற்கு நல்லவனும் ஞானவானுமாகிய ஒருவன் தலைவனாக இருந்தால், அங்கே நீண்டக் காலம் நிலைத்த ஆட்சி நடைபெறும்.
3 அரசன் ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான்.
4 நீ சட்டத்திற்கு அடிபணிய மறுத்தால் தீயவர்களைச் சார்ந்தவனாவாய். ஆனால் நீ சட்டத்திற்கு அடிபணிந்தால் அவர்களுக்கு எதிரானவனாவாய்.
5 தீயவர்கள் நேர்மையைப்பற்றிப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்கள் அதனை அறிந்துகொள்வார்கள்.
6 ஒருவன் செல்வந்தனாகவும் தீயவனாகவும் இருப்பதைவிட நல்லவனாகவும் ஏழையாகவும் இருப்பது நல்லது.
7 சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.
8 ஏழைகளை ஏமாற்றி அதிக அளவில் வட்டியை வாங்கி நீ செல்வந்தன் ஆனால், அச்செல்வத்தை நீ விரைவில் இழந்துவிடுவாய். இரக்கம் உள்ளவனிடம் அச்செல்வம் போய்ச் சேர்ந்துவிடும்.
9 ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.
10 ஒரு தீயவன், ஒரு நல்லவனைப் புண்படுத்தவே பல திட்டங்களைத் தீட்டமுடியும். ஆனால் அத்தீயவன் தனது சொந்த வலையிலேயே விழுவான். நல்லவனுக்கு நன்மையே ஏற்படும்.
11 செல்வந்தர்கள் எப்பொழுதும் தம்மைப் பெரிய ஞானிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழையும் பெரிய ஞானியுமானவன், உண்மையைக் கண்டுகொள்கிறான்.
12 நல்லவர்கள் தலைவர்களாக வந்தால் எல்லோரும் மகிழ்வார்கள். தீயவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லோரும் போய் ஒளிந்துகொள்வார்கள்.
13 ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள்.
14 ஒருவன் எப்பொழுதும் கர்த்தருக்கு மரியாதை செய்தால், அவன் ஆசீர்வதிக்கப்படுவான். ஆனால் ஒருவன் பிடிவாதமாக கர்த்தருக்கு மரியாதை தர மறுத்தால், பிறகு அவனுக்குத் துன்பங்களே ஏற்படும்.
15 பலவீனமானவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் தீயவன் கோபங்கொண்ட சிங்கத்தைப்போன்றும், சண்டைக்குத் தயாரான கரடியைப்போன்றும் இருப்பான்.
16 ஆட்சி செய்பவன் ஞானமுள்ளவனாக இல்லாவிட்டால், தனக்குக் கீழுள்ள ஜனங்களைத் துன்புறுத்துவான். ஆனால் நேர்மையாய் ஆட்சி செய்து, ஜனங்களை ஏமாற்றுவதை வெறுக்கிறவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான்.
17 அடுத்தவனைக்கொன்ற குற்றவாளிக்கு எப்பொழுதும் சமாதானம் இருக்காது. அவனுக்கு ஆதரவு தராதே.
18 ஒருவன் சரியான வழியில் வாழ்ந்தால் அவன் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் தீயவனாக இருப்பவன் இருந்தால் தன் வல்லமையை இழந்துவிடுவான்.
19 கடினமாக உழைப்பவன் உணவை ஏராளமாகப் பெறுவான். ஆனால் எப்போதும் கனவுகள் கண்டு தன் காலத்தை வீணாக்குபவன் ஏழையாகவே இருப்பான்.
20 தேவன் தன்னைப் பின்பற்றுபவனை ஆசீர்வதிக்கிறார். ஆனால் செல்வந்தனாக மாறுவதற்கு மட்டும் முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான்.
21 ஒரு நீதிபதி நேர்மையானவனாக இருக்க வேண்டும். ஒருவன் இன்னான் என்ற காரணத்திற்காகவே அவனுக்குச் சார்பாகப் பேசக்கூடாது. ஆனால் சில நியாயாதிபதிகள் தனக்குத் தரப்படும் சிறு தொகைகளுக்காகக்கூட தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்கின்றனர்.
22 சுயநலக்காரன் செல்வந்தன் ஆவதற்கே முயற்சி செய்கிறான். தன் பேராசை வறுமையின் எல்லைக்கே கொண்டுசெல்லும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான்.
23 ஒருவன் செய்கிற தவறைச் சுட்டிக் காட்டி அவனுக்கு உதவிசெய்தால் பிற்காலத்தில் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பான். எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பேசுவதைவிட இது நல்லது.
24 சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் “இது தவறில்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன்.
25 சுயநலக்காரன் துன்பத்துக்குக் காரணமாக இருப்பான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான்.
26 ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.
27 ஏழை ஜனங்களுக்கு உதவி செய்பவன், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுவான். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவனுக்கோ அதிகத் தொல்லைகள் வரும்.
28 தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.
29 ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
2 ஆள்பவன் நல்லவனாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் தீயவன் ஆள வந்தால் ஜனங்கள் அனைவரும் புகார் சொல்வார்கள்.
3 ஒருவன் ஞானத்தை விரும்பினால் அவனது தந்தை மகிழ்ச்சி அடைவார். ஆனால் தன் செல்வத்தை விபச்சாரிகளிடம் செலவிடுபவன் தன் செல்வத்தை எல்லாம் இழப்பான்.
4 அரசன் நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் அரசன் சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் அரசனுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும்.
5 ஒருவன் தான் விரும்புவதைத் தந்திரமான வார்த்தைகளைப் பேசிப் பெறமுயன்றால் அவன் தனக்குத்தானே வலைவிரிக்கிறான்.
6 தீயவர்கள் தம் சொந்தப் பாவங்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பாடிக்கொண்டும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள்.
7 நல்லவர்கள் ஏழை ஜனங்களுக்கு நேர்மையான காரியங்களைச் செய்யவே விரும்புகின்றனர். தீயவர்களோ இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
8 மற்றவர்களைவிடத் தான் பெரியவன் என்று நினைப்பவன் பல துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறான். அவர்களால் முழு நகரத்தையுமே குழப்பத்தில் ஆழ்த்த முடியும். ஆனால் ஞானம் உள்ளவர்களோ சமாதானத்தை உருவாக்க முடியும்.
9 ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள்.
10 கொலைக்காரர்கள் நேர்மையானவர்களை எப்பொழுதும் வெறுக்கின்றனர். அவர்கள் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் கொலைசெய்யப் பார்க்கிறார்கள்.
11 ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான்.
12 ஆள்பவன் பொய்யைக் கேட்டுக்கொள்வானேயானால், அவனது அதிகாரிகளும் தீயவர்களாகிவிடுகின்றனர்.
13 ஏழையும் ஏழையிடம் திருடுபவனும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். இருவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.
14 அரசன் ஏழைகளிடம் நேர்மையாக இருந்தால் அவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான்.
15 பிள்ளைகளுக்கு அடியும், போதனையும் நல்லது. தம் பிள்ளைகளை எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று பெற்றோர் விட்டுவிட்டால், அப்பிள்ளைகள் தம் தாய்க்கு அவமானத்தையே தருவார்கள்.
16 தீயவர்கள் நாட்டை ஆண்டால், எங்கும் பாவமே நிறைந்திருக்கும். இறுதியில் நல்லவர்களே வெல்வார்கள்.
17 உன் மகன் தவறு செய்யும்போது அவனைத் தண்டித்துவிடு. பிறகு அவனைப்பற்றி நீ பெருமைப்படலாம். அவன் உன்னை அவமானப்படுத்தமாட்டான்.
18 ஒரு நாடு தேவனால் வழி நடத்தப்படாவிட்டால், அந்நாட்டில் சமாதானம் இருக்காது. ஆனால், தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் நாடு மகிழ்ச்சி அடையும்.
19 நீ வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் வேலைக்காரன் பாடம் கற்றுக்கொள்ளமாட்டான். அவன் உன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் கீழ்ப்படியமாட்டான்.
20 சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு.
21 நீ உனது வேலைக்காரனின் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுப்பாயானால், இறுதியில் அவன் நல்ல வேலைக்காரனாக இருக்கமாட்டான்.
22 கோபமுள்ளவன் துன்பத்திற்குக் காரணமாகிறான். விரைவில் கோபம்கொள்கிறவன் பல பாவங்களுக்குப் பொறுப்பாகிறான்.
23 மற்றவர்களைவிடத் தன்னைப் பெரியவனாக ஒருவன் நினைத்துக்கொண்டால், அந்த எண்ணமே அவனை அழித்துவிடும். ஆனால் ஒருவன் பணிவாக இருக்கும்போது, மற்றவர்கள் அவனை மதிப்பார்கள்.
24 சேர்ந்து வேலைசெய்யும் இரண்டு திருடர்கள் பகைவர்களாக இருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவனை பயமுறுத்தி மிரட்டுவான். எனவே வழக்கு மன்றத்தில் உண்மையைச் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டால் அவன் வாயைத் திறந்து பேசவே பயப்படுவான்.
25 அச்சம் என்பது வலையைப் போன்றது. ஆனால் நீ கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தால் பாதுகாப்பாக இருப்பாய்.
26 ஆள்வோரோடு நட்புக்கொள்ள பலர் விரும்புவார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே ஜனங்களைச் சரியாக நியாயந்தீர்க்கிறார்.
27 நேர்மையற்றவர்களை நல்லவர்கள் வெறுக்கின்றனர். தீயவர்களோ உண்மையுள்ளவர்களை வெறுக்கின்றனர்.
பவுலும்-தேவசபையும்
10 நான் பவுல். உங்களை வேண்டிக்கொள்கிறேன். கிறிஸ்துவின் கருணையோடும், சாந்தத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களோடு இருக்கும்போது தாழ்மையுடையவனாகவும் உங்களைவிட்டுத் தூரமாயிருக்கும்போது உங்கள் மேல் கண்டிப்புடனும் இருப்பதாகச் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். 2 நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன். 3 நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை. 4 உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். 5 தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். 6 அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.
7 உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 8 கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. 9 இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். 11 “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
12 தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.
13 எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 14 அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். 15 மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். 16 உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். 17 ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” [a] 18 தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.
2008 by World Bible Translation Center