Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உன்னதப்பாட்டு 4-5

அவன் அவளோடு பேசுகிறான்

என் அன்பே! நீ அழகானவள்.
    ஓ நீ அழகானவள்.
உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள்
    புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன.
உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில்
    நடனமாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தைபோல அசைந்துகொண்டிருக்கிறது.
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன.
    அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன.
உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன.
    உனது வாய் அழகானது.
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே
    வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன.
உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது.
    அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும்
    வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன.
பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும்,
    நான் வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி மலைக்கும் போவேன்.
என் அன்பே, முழுவதும் நீ அழகானவள்
    உனக்கு எதிலும் குறைவில்லை.
என்னோடு வா, என் மணமகளே
    லீபனோனிலிருந்து என்னோடு வா.
அமனா மலையின் உச்சியிலிருந்து வா.
    சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும்,
    சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா.
என் அன்பே! என் மணமகளே!
    என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால்,
    உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய்.
10 என் அன்பே, என் மணமகளே,
    உன் அன்பு மிக அழகானது.
உன் அன்பு திராட்சைரசத்தைவிடச் சிறந்தது.
    உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது.
11 என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது.
    உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது.
உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது.
12 என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள்.
    நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும்,
பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும்,
    அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய்.
13 உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும்
    மற்ற பழமரங்களாலும் நிறைந்துள்ளதுபோல் உள்ளன, நளதம்.

14 குங்குமம், வசம்பு, லவங்கம்,

    தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச் செடிகளும் சந்தன
    மரங்களும் சகலவித மணப்பொருள் செடிகளும் உள்ள தோட்டம் போலுள்ளன.
15 நீ தோட்டத்து நீரூற்று போன்றவள்
    சுத்தமான தண்ணீருள்ள கிணறும்,
    லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.

அவள் பேசுகிறாள்

16 வாடைக் காற்றே எழும்பு.
    தென்றலே வா.
என் தோட்டத்தில் வீசு.
    உன் இனிய மணத்தைப் பரப்பு.
என் அன்பரைத் தன் தோட்டத்திற்குள் நுழையவிடு.
    அவர் இனிய பழங்களைச் சாப்பிடட்டும்.

அவன் பேசுகிறான்

என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.
    நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன்.
நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன்.
    நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன்.

பெண்கள் அன்பர்களிடம் பேசுகிறார்கள்

அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின்
    போதை நிறைந்தவர்களாய் இருங்கள்.

அவள் பேசுகிறாள்

நான் தூங்குகிறேன்
    ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது.
என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன்.
    “எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே,
    என் மாசற்ற அழகியே!
என் தலை பனியால் நனைந்துவிட்டது.
    என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.”
“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன்.
    நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை.
நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன்.
    அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை”
ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார்.
    நான் அவருக்காக வருத்தப்பட்டேன்.
என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.
    என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து
    வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது.
என் நேசருக்காகத் திறந்தேன்
    ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை.
அவர் வந்துபோனபோது
    நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன்.
நான் அவரைத் தேடினேன்
    ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
நான் அவரை அழைத்தேன்
    ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை.
நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள்.
    அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர்.
அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள்
    என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர்.
எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக்
    கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.

எருசலேமின் பெண்கள் அவளுக்குப் பதில் கூறுகிறார்கள்

அழகான பெண்ணே,
    உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?
உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா?
    எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?

எருசலேம் பெண்களுக்கு அவள் பதில் கூறுகிறாள்

10 என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர்.
    பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர்.
11 அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும்.
    அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும்.
    அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும்.
12 அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும்.
    பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும்,
    பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும்.
13 அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும்.
    அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும்.
    அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.
14 அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும்.
    அவரது உடல் மென்மையான தந்தம்.
    இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும்.
15 அவரது கால்கள் பளிங்குத் தூண்கள்
    பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும்.
அவர் நின்றால்
    லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும்.
16 ஆம், எருசலேமின் பெண்களே!
    என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர்.
    அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது.
இப்படிப்பட்டவரே என் நேசர்
    இத்தகையவரே என் நேசர்.

கலாத்தியர் 3

விசுவாசத்தின் மூலமே தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத் தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள். இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள். ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்? பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான்.

ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.” [a] ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்” [b] என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது. ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர்.

10 ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” [c] என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது. 11 ஆகவே எவனும், சட்டத்தின் மூலம் தேவனுக்கு வேண்டியவனாவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனெனில் வேதவாக்கிவங்களில், “விசுவாசத்தினாலே தேவனுக்கு வேண்டியவனாக இருக்கிறவன் எப்போதும் வாழ்வான்” [d] என்று சொல்லி இருப்பதே இதன் காரணம்.

12 விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும். 13 நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க [e] விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்” [f] என்று எழுதப்பட்டிருக்கிறது. 14 கிறிஸ்து இதனைச் செய்தார். அதனால் தேவனுடைய ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. தேவன் ஆபிரகாமையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த்தான் வருகிறது. இயேசு மரித்தார். அதனால் தேவனுடைய வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றோம். விசுவாசத்தின் மூலம், நாம் அவ்வாக்குறுதிகளைப் பெறுகிறோம்.

சட்டமும் வாக்குறுதியும்

15 சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். மனிதர்களுக்குரிய உடன்படிக்கையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இவ்வாறு மனிதர்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, யாரும் அதில் உள்ளவற்றைத் தள்ளுவதும் இல்லை. புதிதாகச் சேர்த்துக்கொள்ளுவதும் இல்லை, எவரொருவரும் அவற்றை ஒதுக்குவதும் இல்லை. 16 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததிக்கும் தேவன் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார். அவர் “உன் சந்ததிகளுக்கு” என்று பன்மையில் சொல்லாமல் “உன் சந்ததிக்கு” என்று ஒருமையில் சொல்லி இருக்கிறார். எனவே இது கிறிஸ்துவையே குறிக்கும். 17 எனவே நான் சொல்வது என்னவென்றால் சட்டங்கள் வருவதற்கு முன்பே ஆபிரகாமிடம் தேவன் ஓர் உடன்படிக்கையை அதிகாரப் பூர்வமாகச் செய்திருக்கிறார். சட்டங்களோ 430 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. எனவே அது அந்த உடன்படிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது. தேவன் ஆபிரகாமுக்குச் செய்துகொடுத்த வாக்குத்தத்தமும் தவறாதது.

18 தேவனுடைய வாக்குறுதியை நாம் சட்டங்களைப் பின்பற்றி வருவதன் மூலம் அடைய முடியுமா? முடியாது. அப்படியானால் தேவன் கொடுத்தது வாக்குறுதி ஆகாது. ஆனால் தேவனோ தன் ஆசீர்வாதங்களைத் தன் வாக்குத்தத்ததின் மூலம் இலவசமாய் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.

19 அப்படியென்றால் சட்டங்களின் நோக்கம் என்ன? அவை மனிதர் செய்யும் தீமைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டின. ஆபிரகாமின் சிறப்பான வாரிசு வரும்வரை இச்சட்டம் தொடர்ந்து பயன்பட்டது. தேவன் இந்த வாரிசைப் பற்றியே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இச்சட்டங்கள் தேவ தூதர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டது. தேவ தூதர்கள் மோசேயை மத்தியஸ்தராகப் பயன்படுத்தி சட்டங்களை மனிதர்களுக்கு வழங்கினர். 20 மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.

மோசேயின் சட்டங்களுடைய நோக்கம்

21 இதனால் சட்டம் தேவனுடைய வாக்குறுதிக்கு எதிரானவை என்று பொருள் கொள்ள முடியுமா? முடியாது. மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு சட்டம் இருந்தால் பிறகு நாம் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலமே தேவனுக்கு வேண்டியவராக முடியும். 22 ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும்.

23 இந்த விசுவாசம் வருவதற்கு முன்னால் நாம் எல்லாரும் சட்டத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தோம். தேவன் நமக்கு விசுவாசத்திற்குரிய வழியை வெளிப்படுத்தும்வரை நமக்கு விடுதலை இல்லாதிருந்தது. 24 எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம். 25 இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.

26-27 நீங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விசுவாசத்தின் வழியில் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள் என்பதை இது காட்டும். 28 இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான். 29 நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center