Old/New Testament
3 என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள். 2 நான் போதிக்கும் பாடங்கள் உனக்கு நீண்ட, மகிழ்ச்சியான, அதிக சமாதானமுள்ள வாழ்வைத் தரும்.
3 அன்பு செலுத்துவதை விட்டுவிடாதே. எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு. நீ இவற்றை உன்னில் ஒரு பகுதியாக வைத்துக்கொள். இவற்றை உன் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். இதனை உன் இதயத்தில் எழுதிக்கொள். 4 தேவனும், ஜனங்களும் உன்னை ஞானவான் என்று எண்ணுவார்கள். தேவனுக்கும், மனிதருக்கும் நீ நல்லவனாக இருப்பாய்.
5 கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. 6 நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். 7 உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. 8 நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது.
9 உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. 10 அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும்.
11 என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாக கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய். 12 ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் மகனைத் தண்டிக்கிறார்.
13 ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான். 14 ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது. 15 ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது.
16 ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும். 17 ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். 18 ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
19 இப்பூமியை உருவாக்க கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். 20 கடலையும் மழையைக்கொடுக்கும் மேகத்தையும் உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். ஞானத்தின் மூலம் வானம் மழையைப் பொழிந்தது.
21 என் மகனே, எப்போதும் உனது ஞானத்தையும், புரிந்துகொள்ளும் சக்தியையும் பாதுகாத்துக்கொள். உனது சிந்தனையையும், ஆற்றலையும், அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள். 22 ஞானமும், அறிவும் உனக்கு வாழ்க்கையைக்கொடுத்து அதனை அழகுள்ளதாக்கும்.
23 அதனால் நீ பாதுகாப்பாக வாழலாம். நீ விழாமல் இருக்கலாம். 24 நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும். 25-26 திடீரென உனக்கு ஏற்படுகின்ற அழிவுக்கு பயப்படாதே. தீய ஜனங்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படாதே. ஏனென்றால் கர்த்தர் உனக்குப் பெலன் தந்து கண்ணியிலிருந்து உன்னை விலக்கிக் காப்பார்.
27 உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய். 28 உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே.
29 உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள்.
30 சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே.
31 சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே. 32 ஏனென்றால் கெட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார்.
33 தீயவர்களின் குடும்பங்களுக்கு கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார்.
34 ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார்.
35 ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக்கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக்கொண்டுவரும்.
4 பிள்ளைகளே, உங்கள் தந்தையின் போதனைகளைக் கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். 2 ஏனென்றால் நான் உங்களுக்குப் போதிப்பவையெல்லாம் மிக முக்கியமானவை, நல்லவை. எனவே எனது போதனைகளை எக்காலத்திலும் மறக்கவேண்டாம்.
3 ஒரு காலத்தில் நானும் இளமையாக இருந்தேன். நான் என் தந்தையின் சிறிய பையனாகவும், என் தாயின் ஒரே மகனாகவும் இருந்தேன். 4 என் தந்தை இவற்றை எனக்குக் கற்றுத்தந்தார். அவர், “நான் சொல்லுகின்றவற்றை நினைவில் வைத்துக்கொள். எனது கட்டளைகளுக்கு அடிபணி. அப்போது நீ வாழ்வாய். 5 ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள். என் வார்த்தைகளை மறக்காதே. எப்பொழுதும் என் அறிவுரைகளைப் பின்பற்று. 6 ஞானத்திலிருந்து விலகாதே. பிறகு ஞானம் உன்னைக் காப்பாற்றும். ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பாதுகாக்கும்” என்றார்.
7 நீ ஞானத்தைப் பெற விரும்பும்போதே உன்னில் ஞானம் துவங்கும். எனவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. பின்னர் நீ ஞானத்தைப் பெறுவாய். 8 ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பெரியவனாக்கும். ஞானத்தை முக்கியமுள்ளதாக்கு. ஞானம் உனக்கு மதிப்பைக்கொண்டுவரும். 9 உன் வாழ்வில் நிகழும் அனைத்திலும் ஞானமே மிக உயர்ந்ததாக இருக்கும்.
10 மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். 11 நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். 12 இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். 13 எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும்.
14 தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். 15 பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். 16 தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. 17 அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது.
18 நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. 19 ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள்.
20 என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள். 21 என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள். 22 என்னைக் கவனிக்கின்றவர்களுக்கு எனது போதனைகள் வாழ்வைத் தரும். எனது வார்த்தைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். 23 உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.
24 உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே. 25 நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே. 26 நீ செய்கின்றவற்றில் எச்சரிக்கையாக இரு. நல்ல வாழ்க்கையை நடத்து. 27 நேரான பாதையில் இருந்து விலகாதே. அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும். ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.
விபச்சாரத்தை விட்டு விலக்கும் ஞானம்
5 என் மகனே, எனது ஞானமுள்ள போதனையைக் கவனமுடன் கேள். அறிவைப்பற்றிய என் வார்த்தைகளில் கவனம் செலுத்து. 2 பிறகு ஞானத்தோடு வாழ்வதற்கு நினைவுகொள்வாய். நீ என்ன சொல்வாயோ அதில் கவனமாக இருப்பாய். 3 அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம். 4 ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும். 5 அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள். 6 அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல்.
7 என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள். 8 விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்கின்ற பெண்ணிடமிருந்து விலகி நில். அவளது வீட்டுக் கதவின் அருகில் போகாதே. 9 நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள். 10 உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள். 11 உன் வாழ்வின் முடிவில் நீ உனது செயலைக்குறித்து வருத்தப்படுவாய். உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கொள்கிறாய். ஆரோக்கியமும் உனக்குச் சொந்தமான அனைத்தும் அழியும். 12-13 பிறகு நீ, “நான் ஏன் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்காமல் போனேன். என் போதகர்கள் சொன்னதை ஏன் கேட்காமல் போனேன். நான் ஒழுக்கமாய் இருக்க மறுத்தேன். நான் திருத்தப்படமறுத்தேன். 14 இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.
15-16 உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே. 17 உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே. 18 எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. 19 அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும். 20 ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.
21 நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார். 22 கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும். 23 அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, நான் அப்போஸ்தலன் ஆனேன். ஏனென்றால் நான் அவ்விதம் ஆவதையே தேவன் விரும்பினார். கிறிஸ்துவில் நமது சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்தும்
கொரிந்து நகரின் தேவனுடைய சபைக்கும் அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது,
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்
3 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான். 4 நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும். 5 கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும். 6 நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும். 7 உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.
8 சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம். 9 உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். 10 இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். 11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.
பவுலின் திட்டங்களில் மாற்றம்
12 இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை. 13 உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம். 14 எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும்.
15 நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள். 16 மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன். 17 நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் “ஆமாம், ஆமாம்” என்றும் அதே நேரத்தில் “இல்லை, இல்லை” என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?
18 ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் “ஆமாம் என்றும்” “இல்லை என்றும்” இருக்காது என நம்பமுடியும். 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் “ஆமாம்” மற்றும் “இல்லை” போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் “ஆமாம்” மட்டும்தான். 20 தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது “ஆமென்” [a] என்கிறோம். 21 நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே. 22 நாம் அவரைச் சார்ந்தவர் என்பதைக் காட்ட அவரே முத்திரையிட்டார். அவர் தம்முடைய ஆவியை நம் இதயத்தில் நிரப்பினார். அது அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கான உறுதிப்பத்திரமும் நிரூபணமுமாயிற்று.
23 நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான். 24 நாங்கள் உங்கள் விசுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு பணிபுரிபவர்களாக இருக்கிறோம்.
2008 by World Bible Translation Center