Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
பிரசங்கி 10-12

10 மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும்.

ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும். ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான்.

எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான் என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீ அமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரிய தவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம்.

இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள். முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக்கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர். பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன்.

ஒவ்வொரு வேலையும் அதற்குரிய ஆபத்துகளைக்கொண்டவை

குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான். பெருங்கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம்.

10 ஆனால் ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான்.

11 ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான்.

12 ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப் பெற்றுத்தரும்.
    ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக்கொண்டுவரும்.

13 முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான். 14 ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.

15 முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான்.
    எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான்.

உழைப்பின் மதிப்பு

16 ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். அரசன் தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான். 17 அரசன் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல.

18 ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும்.
    வீட்டுக்கூரை விழுந்துவிடும்.

19 ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.

வீண் பேச்சு

20 அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.

எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்

11 நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.

உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக்கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.

நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேகம் மழையால் நிறைந்திருந்தால், அது பூமியில் தண்ணீரை ஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.

ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.

காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.

உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.

இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்

இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். 10 உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும்படி விடாதீர்கள். உங்கள் உடல் உங்களைப் பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள், இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையே செய்வார்கள்.

முதுமையின் பிரச்சனைகள்

12 நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.

நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும் மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.

அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது. உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.

நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.

மரணம்

நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,
    கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.
உன் உடல் பூமியிலிருந்து வந்தது.
    நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும்.
ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.
    நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.

இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார்.

முடிவுரை

பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். 10 சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார்.

11 ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. 12 என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும்.

13-14 இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

கலாத்தியர் 1

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதாவது: நான் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. நான் மனிதர்களிடமிருந்து அனுப்பப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும் என்னை அப்போஸ்தலனாக ஆக்கினார்கள். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழும்படி செய்தவர். இந்த நிருபம் என்னோடு இருக்கிற என் சகோதரர்கள் அனைவரும் கலாத்தியா [a] நாட்டில் உள்ள சபைகளுக்கு அனுப்புவது,

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.

ஒரே ஒரு உண்மையான நற்செய்தி

கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.

10 என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நான் மக்களிடம் முயற்சி செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்? அவ்வாறு நான் மனிதர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தால் இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக நான் இருக்க முடியாது.

பவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது

11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.

13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.

15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.

18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் [b] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.

22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center