Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 137-139

137 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து
    சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள்
    கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள்.
    அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
    சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய
    பாடல்களைப் பாட முடியவில்லை!
எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
    நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
    நான் என்றும் பாடேன்.
    நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.

ஆண்டவரே ஏதோமியர்களை நினையும்.
    எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்”
    என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்!
    நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
உனது குழந்தைகளை இழுத்துச்சென்று,
    அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

தாவீதின் ஒரு பாடல்

138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
    எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
    நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
    உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
    நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
    பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
    ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
தேவன் மிக முக்கியமானவர்.
    ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
    பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
    என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
    கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
    கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று

139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
    என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
    வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
    நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
    என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
    நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
    நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
    கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
    மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
    நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
    என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
    பகல் இரவாக மாறிப்போயிற்று.
    “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
    இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
    இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
    என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
    நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
    நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
    என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
    உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
    நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
    முக்கியமானவை.
    தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
    நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.

19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.
    அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
    அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.
    உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.
    உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.
    என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
24 என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும்.
    நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.

1 கொரி 13

அன்பே சிறந்த வரம்

13 நான் இப்போது மிகச் சிறந்த வழியைக் காட்டுவேன். மனிதர்களுடையதும், தேவ தூதர்களுடையதுமான வெவ்வேறு மொழிகளை நான் பேசக்கூடும். ஆனால் என்னிடம் அன்பு இல்லையானால் நான் சப்தமிடும் மணியைப் போலவும், தாளமிடும் கருவியைப் போலவும் இருப்பேன். தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் எனக்கு இருக்கலாம். தேவனுடைய இரகசியமான காரியங்களை நான் உணர்ந்துகொள்ளக் கூடும். எல்லாம் அறிந்திருக்கக்கூடும். மலைகளை அசைக்க வல்ல அரிய விசுவாசம் எனக்கு இருக்கக் கூடும். ஆனால் இவையிருந்தும் என்னிடம் அன்பு இல்லையானால் மேற்கண்ட செய்கைகளைச் செய்வதால் எனக்கு எவ்வித பயனுமில்லை. மக்களுக்கு உணவுகொடுக்க என்னிடமிருக்கிற ஒவ்வொன்றையும் நான் கொடுக்கலாம். என் சரீரத்தையே கூட காணிக்கைப் பொருளாகக் கொடுக்கலாம். ஆனால் என்னிடம் அன்பு இல்லையென்றால் இக்காரியங்களைச் செய்வதன் மூலம் எனக்கு எவ்வித லாபமும் இல்லை.

அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.

அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால் அதுவும் முடிவு கொண்டது. நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. 10 முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும்.

11 நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். 12 அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன். 13 எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center