Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 5-7

“யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்!
    நீ எந்த தேவதூதனிடம் திரும்பி பார்ப்பீர்?
ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும்,
    ஒரு மூடனின் வலிய உணர்வுகள் அவனைக் கொல்லும்.
தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன்.
    ஆனால் திடீரென அவன் மாண்டான்.
யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை.
    நியாயச் சபையில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் எவருமில்லை.
அவர்களின் பயிர்களையெல்லாம் பசித்தோர் உண்டனர்.
    முட்களின் நடுவே வளரும் தானியங்களையும் கூட பசியுள்ள அந்த ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்.
தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை.
    பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.
ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ
    அவ்வாறே, தொல்லையனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால்,
    தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன்.
தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது.
    தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை.
10 தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார்.
    அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார்.
11 எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார்,
    அவர் துயரமுள்ளவனை மகிழ்ச்சியாக்குகிறார்.
12 புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை,
    அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார்.
13 ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து
    புத்திசாலித்தனமான அத்திட்டங்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் செய்கிறார்.
14 அத்தகைய திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள்.
    இருளில் தன் பாதையைக் காணத் தடுமாறுகின்றவனைப்போல, அவர்கள் நண்பகலிலும் காணப்படுகிறார்கள்.
15 தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார்.
    திறமைசாலிகளின் கைக்கும் அவர் ஏழைகளை கப்பாற்றுகிறார்.
16 எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள்.
    நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார்.

17 “தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னைத் தண்டிக்கும்போது முறையிடாதே.
18 தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார்.
    அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.
19 ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார்.
    ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!
20 பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.
    போர்க் காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து பாதுகாப்பார்!
21 தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம்.
    ஆனால் தேவன் உன்னைப் பாதுகாப்பார்.
    தீயன நிகழும்போது நீ அஞ்சத் தேவையில்லை!
22 அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய்.
    காட்டு மிருகங்களைக் கண்டும் நீ அஞ்சமாட்டாய்.
23 உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும்.
    காட்டு மிருகங்களும் கூட உன்னோடு சமாதானம் செய்துக்கொள்ளும்.
24 உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய்.
    உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய்.
25 உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள்.
    அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள்.
26 அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர்.
    ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர்.

27 “யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம்.
    எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்” என்று கூறினான்.

யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்

அப்போது யோபு,

“என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால்,
    நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது.
    அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன.
    அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது!
    தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன.
எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது).
    காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது.
    பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது.
உப்பற்ற உணவு சுவைக்காது.
    முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.
நான் அதைத் தொட மறுக்கிறேன்;
    அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது!
    உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.

“நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.
    நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.
தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன்.
    அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம்.
10 அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன்.
    நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்.
    இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.

11 “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    எனக்கு என்ன நேருமென அறியேன்.
    எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை.
12 நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா?
    என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?
13 எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை.
    ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

14 “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும்.
    ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.
15 ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை.
    நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது.
    சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள்.
16 பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள்.
17 உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது,
    நீரூற்றும் மறைந்துவிடுகிறது.
18 வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து,
    காணாமல்போய்விடுகிறார்கள்.
19 தேமாவின் வியாபாரிகள் தண்ணீரைத் தேடுகிறார்கள்.
    சேபாவின் பிரயாணிகள் (பயணிகள்) நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.
20 அவர்கள் தண்ணீரைக் கண்டடைவதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்,
    ஆனால் ஏமாற்றமடைகிறார்கள்.
21 இப்போது, நீங்கள் அந்த நீருற்றுகளைப் போல் இருக்கிறீர்கள்.
    என் தொல்லைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.
22 நான் உங்களிடம் உதவியை நாடினேனா?
    எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா?
23 ‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!
    கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’
    என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?

24 “எனவே இப்போது எனக்குக் கற்பியுங்கள், நான் அமைதியாக இருப்பேன்.
    நான் செய்தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.
25 நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை.
    ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
26 என்னை விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?
    மேலும் சோர்வு தரும் வார்த்தைகளைச் சொல்லப் போகிறீர்களா?
27 தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள்.
    உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள்.
28 ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள்.
    நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன்.
29 எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள்.
    அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
    நான் தவறேதும் செய்யவில்லை.
30 நான் பொய் கூறவில்லை.
    நான் சரியானவற்றை தவறுகளிலிருந்து பிரித்தறிவேன்” என்றான்.

யோபு மீண்டும், “பூமியில் மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களுண்டு
    வேலைக்கென வாங்கப்பட்ட பணியாளின் நாட்களைப் போன்றது அவன் நாட்கள்.
வெப்ப நாளில் மிகுந்த உழைப்பிற்குப்பின் குளிர்ந்த நிழலை நாடும் அடிமையைப் போன்றவன் மனிதன்.
    சம்பள நாளுக்காகக் காத்திருக்கும் அப்பணியாளைப் போன்றிருக்கிறான்.
ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன.
    துன்பந்தரும் இரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்தேன்.
நான் படுக்கும்போது, ‘எழுவதற்கு எத்தனை சமயம் இருக்கிறது?’ என்று எண்ணுகிறேன்.
    ஆனால் இரவு நீண்டுக் கொண்டேபோகிறது.
    நான் திரும்பியும் புரண்டும் சூரியன் உதிக்கும்வரை படுத்திருக்கிறேன்.
என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன.
    என் தோல் உரிந்து புண்களால் நிரம்பியிருக்கின்றன.

“நெய்பவனின் நாடாவைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
    என் வாழ்க்கை நம்பிக்கையின்றி முடிவடைகிறது.
தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும்.
    நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை.
நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை.
    என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன்.
மேகம் மறைந்து காணாமற்போகிறது.
    அதைப் போன்று, ஒருவன் மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறான், அவன் மீண்டும் வருவதில்லை.
10 அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை.
    அவன் வீடு அவனை இனி ஒருபோதும் அறியாது.

11 “எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்!
    என் ஆவி துன்புறுகிறது!
    என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன்.
12 தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்?
    நான் கடலா, கடல் அரக்கனா?
13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பிக்கொண்டிருந்தேன்.
    என் கட்டில் எனக்கு ஓய்வையும் நிம்மதியையும் தருமென்று எதிர்ப்பார்த்தேன்.
14 ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர்,
    என்னைத் தரிசனங்களால் அச்சுறுத்துகிறீர்.
15 எனவே நான் வாழ்வதைக் காட்டிலும்
    மூச்சடைத்து மரிப்பதை விரும்புகிறேன்.
16 நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்.
    நான் என்றென்றும் வாழ விரும்பமாட்டேன்.
என்னைத் தனிமையாக விட்டுவிடுங்கள்!
    ஏனெனில் என் வாழ்க்கை பொருளற்றது. (அர்த்தமற்றது)
17 தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்?
    ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்?
    ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்?
18 ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து,
    ஒவ்வொரு விநாடியும் சோதிக்கிறீர்?
19 தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை.
    என்னைவிட்டு ஒருகணமும் நீர் விலகுவதில்லை.
20 தேவனே, நீர் ஜனங்களை கவனித்து காப்பாற்றுகிறீர்.
    நான் பாவம் செய்திருந்தால், நான் என்ன செய்ய முடியும்.
நீர் என்னை உமது இலக்காக ஏன் பயன்படுத்துகிறீர்?
    நான் உமக்குத் தொல்லையாகி போனேனா?
21 ஏன் நீர் என் தவறை மன்னிக்கக் கூடாது?
    என் பாவங்களை நீர் ஏன் மன்னிக்கக்கூடாது?
நான் விரைவில் மடிந்து கல்லறைக்குள் வைக்கப்படுவேன்.
    அப்போது என்னைத் தேடுவீர்கள், நான் அழிந்துப்போயிருப்பேன்” என்றான்.

அப்போஸ்தலர் 8:1-25

ஸ்தேவானின் கொலை ஒரு நல்ல நிகழ்ச்சியே என்று சவுல் அச்சமயம் ஒப்புக்கொண்டான்.

விசுவாசிகளுக்கு உபத்திரவம்

2-3 சில நல்ல மனிதர்கள் ஸ்தேவானைப் புதைத்தனர். அவர்கள் அவனுக்காகச் சத்தமிட்டு அழுதனர். எருசலேமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்திற்கு அன்றிலிருந்து யூதர்கள் தீங்கிழைக்க ஆரம்பித்தனர். அவர்களை அதிகமாகத் துன்புறுமாறு யூதர்கள் செய்தனர். அக்கூட்டத்தை அழிப்பதற்கு சவுலும் முயன்றுகொண்டிருந்தான். சவுல் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தான். அவர்களில் ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து வந்து சிறைக்குள் தள்ளினான். எல்லா விசுவாசிகளும் எருசலேமைவிட்டு அகன்றனர். அப்போஸ்தலர்கள் மட்டுமே அங்குத் தங்கினர். யூதேயா, மற்றும் சமாரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்.

சமாரியாவில் பிலிப்பு

பிலிப்பு சமாரியாவிலுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றான். அவன் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான். அங்குள்ள மக்கள் பிலிப்பு கூறியதைக் கேட்டனர். அவன் செய்துகொண்டிருந்த அதிசயங்களைக் கண்டனர். பிலிப்பு கூறிய செய்திகளைக் கவனமாகக் கேட்டனர். அம்மக்களில் பலரினுள்ளும் அசுத்த ஆவிகள் இருந்தன. அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் போகும்படியாக பிலிப்பு கட்டளையிட்டான். அவை வெளியே வந்தபோது, ஆவிகள் மிகுந்த சத்தமிட்டன. பாரிச வியாதிக்காரர்கள் பலரும், ஊனமுற்றவர்கள் பலரும் அங்கிருந்தனர். பிலிப்பு அவர்களையும் குணப்படுத்தினான். இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

ஆனால் அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். பிலிப்பு அங்கு வருமுன்னர், சீமோன் மந்திர தந்திரங்களைச் செய்தான். சமாரியா மக்களைத் தனது தந்திரங்களால் வியப்புறச் செய்தான். 10 முக்கியமான, மற்றும் முக்கியமற்ற மக்கள் அனைவரும் சீமோன் கூறியவற்றை நம்பினர். மக்கள், “‘மகத்தான வல்லமை’ எனப்படும் தேவனுடைய வல்லமை இம்மனிதனுக்கு உள்ளது!” என்றனர். 11 சீமோன் தனது மந்திர தந்திரங்களால் மக்களை நீண்ட நாட்களாக வியக்க வைத்தான். மக்கள் அவனைப் பின்பற்றுவோராயினர். 12 ஆனால் பிலிப்பு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறஸ்துவின் வல்லமையையும் மக்களுக்கு எடுத்துக் கூறினான். ஆண்களும் பெண்களும் பிலிப்புவை நம்பினர். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர். 13 சீமோனும் கூட நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெற்றான். சீமோன் பிலிப்புவோடு இருந்து வந்தான். பிலிப்பு செய்த அற்புதங்களையும், வல்லமைமிக்க காரியங்களையும் கண்ட சீமோன் வியப்படைந்தான்.

14 அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள். 15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். 16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர். 17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.

18 அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து 19 “நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.

20 பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய். 21 இந்த வேலையில் நீ பங்கைப் பெறமுடியாது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் நேர்மையாக இல்லை. 22 உனது மனதை மாற்று! நீ செய்த இந்தத் தீய காரியத்திலிருந்து விலகி விடு. கர்த்தரை நோக்கி பிரார்த்தனை செய். நீ இவ்வாறு நினைத்ததை அவர் மன்னிக்கக் கூடும். 23 நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.

24 சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.

25 தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center