Old/New Testament
சோப்பார் பதிலளிக்கிறான்
20 அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக:
2 “யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன.
எனவே நான் உனக்குப் பதில் கூறவேண்டும்.
நான் நினைத்துக்கொண்டிருப்பதை விரைந்து உனக்குக் கூறவேண்டும்.
3 நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்!
ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன்.
4-5 “தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய்.
ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது.
தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும்.
6 தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம்.
அவன் தலை மேகங்களைத் தொடலாம்.
7 அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான்.
அவனை அறிந்த ஜனங்கள் ‘அவன் எங்கே?’ என்பார்கள்.
8 கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான்.
ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது.
அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான்.
9 அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள்.
அவன் குடும்பத்தினர் அவனை மீண்டும் பார்ப்பதில்லை.
10 அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள்.
தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்.
11 அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன.
ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும்.
12 “கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும்.
அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான்.
13 கெட்ட மனிதன் தீமையில் களிப்பான்.
அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான்.
அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும்.
14 ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும்.
பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும்.
15 தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான்.
ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான்.
தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார்.
16 பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும்.
பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும்.
17 அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான்.
18 தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான்.
தன்னுடைய உழைப்பின் பலனை அவன் அனுபவிக்க அனுமதிக்கப்படமாட்டான்.
19 அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான்.
20 “தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது.
21 அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை.
அவன் வெற்றி தொடராது.
22 தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான்.
அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்!
23 தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு,
அவனுக்கெதிராக தேவன் அவரது எரியும் கோபத்தை வீசுவார்.
தீயவன் மேல் தேவன் தண்டனையைப் பொழிவார்.
24 தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம்,
ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும்.
25 அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும்.
அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும்.
அவன் பயங்கர பீதி அடைவான்.
26 அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும்.
எந்த மனிதனும் பற்றவைக்காத ஒரு நெருப்பு அவனை அழிக்கும்.
அவன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் அந்த நெருப்பு அழிக்கும்.
27 தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்)
பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும்.
28 தேவனுடைய கோப வெள்ளத்தில்
அவன் வீட்டிலுள்ளவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும்.
29 தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்.
அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான்.
யோபு பதில் கூறுகிறான்
21 அப்போது யோபு பதிலாக:
2 “நான் சொல்வதற்குச் செவிகொடும்.
அதுவே, நீர் எனக்கு ஆறுதல் கூறும் வகையாயிருக்கும்.
3 நான் பேசும்போது பொறுமையாயிரும்.
நான் பேசி முடித்தபின்பு, நீங்கள் என்னைக் கேலிச்செய்யலாம்.
4 “நான் ஜனங்களைப்பற்றிக் குறை கூறவில்லை.
நான் பொறுமையாயிராததற்குத் தக்க காரணம் இருக்கிறது.
5 என்னைக் கண்டு அதிர்ச்சியடையும்,
உம் கையை வாயில் வைத்து, அதிர்ச்சியால் என்னைப் பாரும்!
6 எனக்கு நேர்ந்ததைப்பற்றி நான் எண்ணும் போது,
நான் அஞ்சுகிறேன், என் உடம்பு நடுங்குகிறது!
7 தீயோர் ஏன் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்?
அவர்கள் ஏன் நீண்ட ஆயுளுடையவர்களாகவும் வெற்றிபெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்?
8 அவர்கள் பிள்ளைகள் தங்களோடு வளர்வதைத் தீயோர் பார்க்கிறார்கள்.
அவர்களின் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும்படித் தீயோர் வாழ்கிறார்கள்.
9 அவர்கள் வீடுகள் பாதுகாப்பாக உள்ளது, அவர்கள் பயப்படுவதில்லை.
தீயோரைத் தண்டிப்பதற்கு தேவன் ஒரு கோலையும் பயன்படுத்துவதில்லை.
10 அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை.
அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.
11 ஆட்டுக்குட்டிகளைப்போல் விளையாடுவதற்குத் தீயோர் அவர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
அவர்கள் குழந்தைகள் சுற்றிலும் நடனமாடுகிறார்கள்.
12 தம்புறா, யாழ், குழல் ஆகியவற்றின் ஓசைக் கேற்ப அவர்கள் பாடி, நடனமாடுகிறார்கள்.
13 தீயோர் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக் காண்கிறார்கள்.
பின்பு, அவர்கள் மடிந்து துன்பமின்றி அவர்களின் கல்லறைக்குப் போகிறார்கள்.
14 ஆனால் தீயோர் தேவனை நோக்கி, ‘எங்களை விட்டுவிடும்!
நாங்கள் செய்வதற்கென நீர் விரும்புவதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை!’ என்கிறார்கள்.
15 தீயோர், ‘சர்வ வல்லமையுள்ள தேவன் யார்?
நாம் அவருக்கு சேவை செய்யத் தேவையில்லை!
அவரிடம் ஜெபிப்பது உதவாது,’ என்கிறார்கள்!
16 “அது உண்மையே, தீயோர் அவர்களாக வெற்றிக் காண்பதில்லை.
அவர்கள் அறிவுரையை நான் பின்பற்ற முடியாது.
17 ஆனால், தேவன் தீயோரின் ஒளியை எத்தனை முறை அணைக்கிறார்?
எத்தனை முறை தீயோருக்குத் துன்பம் நேர்கிறது?
எப்போது தேவன் அவர்களிடம் கோபங்கொண்டு அவர்களைத் தண்டித்தார்?
18 காற்று புல்லைப் பறக்கடிப்பதைப் போலவும்,
பெருங்காற்று தானியத்தின் உமியைப் பறக்கடிப்பதைப்போலவும், தேவன் தீயோரைப் பறக்கடிக்கிறாரா?
19 ஆனால் நீங்கள், ‘தந்தையின் பாவத்திற்கென்று தேவன் ஒரு பிள்ளையைத் தண்டிக்கிறார்’ என்கிறீர்கள்.
இல்லை! தேவன் தாமே தீயோனைத் தண்டிக்கட்டும். அப்போது அத்தீயோன், அவன் செய்த பாவங்களுக்குத் தண்டனை பெற்றதை அறிவான்!
20 பாவம் செய்தவன் தான் பெற்ற தண்டனையைப் பார்க்கட்டும்.
சர்வ வல்லமையுள்ள தேவனின் கோபத்தை அவன் உணரட்டும்.
21 தீயவனின் வாழ்க்கை முடியும்போது, அவன் மடிகிறான்,
அவன் தன் பின்னே விட்டுச் செல்லும் குடும்பத்தைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
22 “ஒருவனும் தேவனுக்கு அறிவைப் போதிக்க முடியாது.
உயர்ந்த இடங்களிலிருக்கிற ஜனங்களையும் கூட தேவன் நியாயந்தீர்க்கிறார்.
23 ஒரு முழுமையும் வெற்றிகரமுமான வாழ்க்கைக்குப் பின் ஒருவன் மரிக்கிறான்.
அவன் முழுக்க பாதுகாப்பான, சுகமான வாழ்க்கை வாழ்கிறான்.
24 அவன் உடல் போஷாக்குடையதாக உள்ளது.
அவன் எலும்புகள் இன்னும் வலிவோடு காணப்படுகின்றன.
25 ஆனால், மற்றொருவன் கடின வாழ்க்கை வாழ்ந்து, கசப்பான ஆன்மாவோடு மரிக்கிறான்.
அவன் நல்லவற்றில் களிப்படைந்ததில்லை.
26 இறுதியில், இருவரும் ஒருமித்து மண்ணில் கிடப்பார்கள்.
அவர்கள் இருவரையும் பூச்சிகள் சூழ்ந்துக்கொள்ளும்.
27 “ஆனால், நீங்கள் நினைப்பதை நான் அறிவேன்,
என்னைத் துன்புறுத்த நீங்கள் விரும்புகிறீர்கள் என அறிவேன்.
28 நீங்கள், ‘நல்லவன் ஒருவனின் வீட்டை எனக்குக் காட்டுங்கள்’
இப்போது, தீயோர் வாழுமிடத்தை எனக்குக் காட்டுங்கள் என்கிறீர்கள்.
29 “நீங்கள் நிச்சயமாக பயணிகளிடம் பேசியிருக்கலாம்.
நிச்சயமாக நீங்கள் அவர்களின் கதைகளை ஏற்கலாம்.
30 அழிவு வரும்போது தீயோர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.
தேவன் தமது கோபத்தைக் காட்டும்போது, அவர்கள் அதற்குத் தப்பியிருக்கிறார்கள்.
31 யாரும் தீயவனை அவன் செய்த தவறுகளுக்காக அவனெதிரே விமர்சிக்கிறதில்லை.
அவன் செய்த தீமைகளுக்காக ஒருவரும் அவனைத் தண்டிக்கிறதில்லை.
32 அத்தீயவனைக் கல்லறைக்குச் சுமந்துச் செல்லும்போது,
அவன் கல்லறையருகே ஒரு காவலாளி நிற்கிறான்.
33 எனவே பள்ளத்தாக்கின் மண்ணும் அத்தீயவனுக்கு இன்பமாயிருக்கும்.
அவன் கல்லறையின் அடக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் செல்வார்கள்.
34 “நீங்கள் உங்கள் வெறுமையான வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் கூறமுடியாது.
உங்கள் பதில்கள் எனக்கு உதவமாட்டாது!” என்றான்.
24 அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.
25 பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். 26 ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். 27 பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
28 பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். 29 அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான்.
30 கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். 31 அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 32 எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். 33 எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
34 பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். 35 சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். 36 தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார்.
37 “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. 38 நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று.
39 “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். 40 ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். 41 ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.
42 “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். 43 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி
44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். 45 பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். 46 ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு 47 “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். 48 கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center