Old/New Testament
யோபு தான் பிறந்தநாளை சபிக்கிறான்
3 பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த
நாளை சபித்தான்.
2-3 அவன், “நான் பிறந்தநாள் என்றென்றும் இராதபடி அழிக்கப்படட்டும் என நான் விரும்புகிறேன்.
‘அது ஒரு ஆண்’ என அவர்கள் கூறிய இரவு, என்றும் இருந்திருக்கக் கூடாதென நான் விரும்புகிறேன்!
4 அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன்.
அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன்.
அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன்.
5 மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன்.
6 இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும்.
நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும்.
எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம்.
7 அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும்.
அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும்.
8 சில மந்திரவாதிகள் லிவியாதானை [a] எழுப்ப விரும்புகிறார்கள்.
அவர்கள் சாபங்கள் இடட்டும்.
நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும்.
9 அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும்.
அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும்.
சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும்.
10 ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை.
இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை.
11 நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை?
நான் ஏன் பிறப்பில் மடியவில்லை?
12 ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்?
ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின?
13 நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன்.
14 முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த அரசர்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன்.
இப்போது அழிக்கப்பட்டுக் காணாமற்போன இடங்களைத் தங்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
15 அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர்,
அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
16 பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை?
பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன்.
17 கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள்.
சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள்.
18 சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள்.
அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை,
19 முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள்.
அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான்.
20 “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்?
கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் கசந்து வாழவேண்டும்?
21 அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை.
துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான்.
22 அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள்.
23 ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார்.
அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார்.
24 சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன்.
மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன.
25 ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன்.
அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது!
நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது!
26 நான் அமைதியுற முடியவில்லை.
என்னால் இளைப்பாற முடியவில்லை.
நான் ஓய்வெடுக்க இயலவில்லை.
நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.
எலிப்பாஸ் பேசுகிறான்
4 தேமானிலுள்ள எலிப்பாஸ்,
“யாராவது உன்னுடன் பேச முயன்றால் உன்னைக் கலக்கமுறச் செய்யுமா?
ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ள யாரால் கூடும்?
3 யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய்.
நீ பெலவீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய்.
4 வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின.
தாமாக நிற்க முடியாதவர்களுக்கு நீ பெலனளித்தாய்.
5 ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன,
நீ துணிவிழக்கிறாய்.
தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன,
நீ கலங்கிப்போகிறாய்!
6 நீ தேவனை கனம்பண்ணுகிறாய்.
அவரை நம்புகிறாய்.
நீ நல்லவன்.
எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா?
7 யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்:
களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை.
8 நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன்.
அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்!
9 தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது.
தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது.
10 தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள்.
தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார்.
11 ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள்.
12 “இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது.
என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன.
13 இரவின் கெட்ட கனவாய்,
அது என் தூக்கத்தைக் கெடுத்தது.
14 நான் பயந்து நடுங்கினேன்.
என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.
15 ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது.
என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன.
16 ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை.
என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது.
அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்:
17 ‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா?
தன்னை உண்டாக்கினவரைக் காட்டிலும் மனிதன் தூய்மையாக இருக்க முடியுமா?
18 பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை.
தேவன் தனது தேவதூதர்களிடமும் குற்றங்களைக் காண்கிறார்.
19 எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்!
அவர்கள் களிமண் வீடுகளில் [b] வசிக்கிறார்கள்.
இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும்.
பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.
20 ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை.
அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள்,
21 அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன.
அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’
44 “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம் [a] நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். 45 பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். 46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். 47 ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.
48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.
49 “கர்த்தர் கூறுகிறார்,
‘வானம் எனது சிம்மாசனம்.
பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம்.
எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்?
ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை.
50 நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’” (A)
என்றான்.
51 பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! 52 உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். 53 மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான்.
ஸ்தேவான் கொல்லப்படுதல்
54 இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர். 55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். 56 ஸ்தேவான், “பாருங்கள்! பரலோகம் திறந்திருப்பதை நான் பார்க்கிறேன். தேவனுடைய வலபக்கத்தில் மனித குமாரன் நிற்பதை நான் காண்கிறேன்!” என்றான்.
57 பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர். 58 அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியில் கொண்டு சென்று அவன் சாகும்வரை அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஸ்தேவானுக்கு எதிராகப் பொய் கூறியவர்கள் தங்களது மேலாடைகளை சவுல் என்னும் இளைஞனிடம் கொடுத்தார்கள். 59 பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான். 60 அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.
2008 by World Bible Translation Center