Old/New Testament
ஆசாரியர்களும் லேவியர்களும்
12 யூதா நாட்டிற்குத் திரும்பி வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் இவர்கள். அவர்கள் செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும், யெசுவாவோடும் வந்தனர். இது தான் அவர்களின் பெயர் பட்டியல்:
செராயா, எரேமியா, எஸ்றா,
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3 செகனியா, ரெகூம், மெரேமோத்,
4 இத்தோ, கிநேதோ, அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர்.
இவர்கள் யெசுவாவின் காலத்தில் ஆசாரியருக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாயிருந்தார்கள்.
8 லேவியர்களானவர்கள்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள். மத்தனியாவின் உறவினர்கள் தேவனுக்குத் துதிப்பாடல்களைப் பாடும் பொறுப்புடையவர்களாக இருந்தார்கள். 9 பக்புக்கியா, உன்னியும், லேவியர்களின் உறவினர்கள். அவர்கள் இருவரும் பணியில் அவர்களுக்கு எதிராக நின்றார்கள். 10 யெசுவா யொயகீமின் தந்தை. யொயகீம் எலியாசிபின் தந்தை. எலியாசிப் யொயதாவின் தந்தை. 11 யொயதா யோனத்தானின் தந்தை. யோனத்தான் யதுவாவின் தந்தை.
12 யொயகீமின் காலத்திலே ஆசாரியர் குடும்பங்களின் தலைவர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர்.
செரோயாவின் குடும்பத்தில் மெராயா தலைவன்.
எரேமியாவின் குடும்பத்தில் அனனியா தலைவன்.
13 எஸ்றாவின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன்.
அமரியாவின் குடும்பத்தில் யோகனான் தலைவன்.
14 மெலிகுவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன்.
செபனியாவின் குடும்பத்தில் யோசேப்பு தலைவன்.
15 ஆரீமின் குடும்பத்தில் அத்னா தலைவன்.
மெராயோதின் குடும்பத்தில் எல்காய் தலைவன்.
16 இத்தோவின் குடும்பத்தில் சகரியா தலைவன்.
கிநெதோனின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன்.
17 அபியாவின் குடும்பத்தில் சிக்ரி தலைவன்.
மினியாமீன் மொவதியா என்பவர்களின் குடும்பங்களில் பில்தாய் தலைவன்.
18 பில்காவின் குடும்பத்தில் சம்முவா தலைவன்.
செமாயாவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன்.
19 யோயரிபின் குடும்பத்தில் மத்தனா தலைவன்.
யெதாயாவின் குடும்பத்தில் ஊசி தலைவன்.
20 சல்லாயின் குடும்பத்தில் கல்லாய் தலைவன்.
ஆமோக்கின் குடும்பத்தில் ஏபேர் தலைவன்.
21 இல்க்கியாவின் குடும்பத்தில் அசபியா தலைவன்.
யெதாயாவின் குடும்பத்தில் நெதனெயேல் தலைவன் ஆகியோர்.
22 எலியாசிப், யொயதா, யோகனான், யதுவா, ஆகியோரின் காலங்களிலுள்ள லேவியர், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களின் பெயர்கள், பெர்சியா அரசன் தரியுவின் ஆட்சியின்போது எழுதப்பட்டன. பெர்சியனாகிய தரியுவின் இராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டனர். 23 லேவியர்களாகிய சந்ததியின் தலைவன் எலியாசிபின் மகனாகிய யோகனானின் காலம் வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள். 24 இவர்கள் லேவியர்களின் தலைவர்கள். அசபியா, செரெபியா, கத்மியேலின் மகனான யெசுவாவும் அவர்களின் சகோதரர்களும், அவர்களின் சகோதரர்கள் துதிப்பாட அவர்களுக்கு முன்னால் நின்று தேவனுக்கு மகிமைச் செலுத்தினார்கள். ஒரு குழு இன்னொரு குழுவிற்குப் பதில் சொன்னது. அதுதான் தேவமனிதனான தாவீதால் கட்டளையிடப்பட்டது.
25 வாசல்களுக்கு அடுத்துள்ள சேமிப்பு அறைகளைக் காத்து நின்ற வாசல் காவலாளர்கள்: மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப். 26 அவ்வாசல் காவலாளர்கள் யொயகீமின் காலத்தில் பணிச்செய்தனர். யொயகீம் யெசுவாவின் மகன். யெசுவா யோத்சதாக்கின் மகன். அந்த வாசல் காவலர்களும் நெகேமியா ஆளுநராயிருந்த காலத்திலும் ஆசாரியனும், வேதபாரகனுமான எஸ்றாவின் காலத்திலும் பணிச்செய்தனர்.
எருசலேமின் சுவர் பிரதிஷ்டை
27 ஜனங்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் அனைத்து லேவியர்களையும் எருசலேமிற்குக் கொண்டுவந்தனர். லேவியர்கள் தாம் வாழ்ந்த பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கும், லேவியர்கள் தேவனுக்கு நன்றி சொல்லியும், துதித்தும் பாடல்களைப் பாட வந்தனர். அவர்கள் தமது கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்தனர்.
28-29 அனைத்துப் பாடகர்களும் எருசலேமிற்கு வந்தனர். அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள். பாடகர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்காக சிறு ஊர்களைக் கட்டியிருந்தனர்.
30 ஆசாரியரும் லேவியரும் தங்களை ஒரு சடங்கில் சுத்தம்பண்ணிக்கொண்டனர். பிறகு அவர்கள் ஜனங்கள், வாசல்கள், எருசலேமின் சுவர் ஆகியவற்றை சடங்கில் சுத்தம்பண்ணினார்கள்.
31 நான் யூதாவின் தலைவர்களிடம் மேலே ஏறி சுவரின் உச்சியில் நிற்கவேண்டும் என்று சொன்னேன். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பாடகர் குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு குழு சுவரின் உச்சிக்கு மேலே ஏறி வலது பக்கத்தில் சாம்பல் குவியல் வாயிலை நோக்கிப்போனார்கள். 32 ஒசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதி பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து போனார்கள். 33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம், 34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் பின்தொடர்ந்துச் சென்றனர். 35 ஆசாரியர்களில் சிலர் எக்காளங்களோடு சுவர் வரையிலும் பின்தொடர்ந்துச் சென்றனர். சகரியாவும் பின்தொடர்ந்து சென்றான். (சகரியா யோனத்தானின் மகன். அவன் செமாயாவின் மகன். அவன் மத்தனியாவின் மகன். அவன் மீகாயாவின் மகன். அவன் சக்கூரின் மகன். அவன் அஸ்பாவின் மகன்.) 36 அங்கே அஸ்பாவின் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் போனார்கள். அவர்களிடம் தேவமனிதனான தாவீது செய்த இசைக்கருவிகளும் இருந்தன. போதகனான எஸ்றா அந்த குழுவை நடத்திச் சென்று சுவரைப் பிரதிஷ்டை செய்யச் சென்றான். 37 அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர்.
38 இரண்டாவது இசைக்குழு அடுத்தத் திசையில் இடதுபுறமாகச் சென்றனர். நான் அவர்களை பின் தொடர்ந்தேன். அவர்கள் சுவரின் உச்சிக்குச் சென்றனர். ஜனங்களில் பாதிபேர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து அகல் சுவர் மட்டும் போனார்கள். 39 பிறகு அவர்கள் எப்பிராயீம் வாசல், பழைய வாசல், மீன் வாசல், அனானெயேல் கோபுரம், நூறு கோபுரம் மற்றும் ஆட்டு வாசல் மட்டும் புறப்பட்டு காவல் வீட்டு வாசலில் நின்றார்கள். 40 பிறகு இரு இசைக் குழுக்களும் தேவனுடைய ஆலயத்திலுள்ள தங்களது இடத்திற்குச் சென்றன. நான் எனது இடத்தில் நின்றேன். ஆலயத்தில் அதிகாரிகளில் பாதி பேர் தங்கள் இடங்களில் நின்றார்கள். 41 பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர். 42 பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர்.
பிறகு இரண்டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர். 43 எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது.
44 அந்த நாளில் சேமிப்பு அறைகளுக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜனங்கள் தங்களது முதல் பழங்களையும், விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும் கொண்டு வந்தனர். எனவே அதற்கு பொறுப்பானவர்கள் அப்பொருட்களை சேமிப்பு அறைகளில் வைத்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் கடமையில் சரியாக இருப்பதைப் பார்த்து யூத ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் சேமிப்பு அறைகளில் வைப்பதற்குப் பலவற்றைக் கொண்டுவந்தனர். 45 ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர். 46 (நீண்ட காலத்துக்கு முன்னால், தாவீதின் காலத்தில் ஆசாப் இயக்குநராக இருந்தான். அவனிடம் ஏராளமான துதிப் பாடல்கள் மற்றும் தேவனுக்கு நன்றி உரைக்கும் பாடல்களும் இருந்தன.)
47 எனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
நெகேமியாவின் இறுதி கட்டளைகள்
13 அந்த நாளில், மோசேயின் புத்தகம் உரக்க வாசிக்கப்பட்டது. எனவே, அனைத்து ஜனங்களாலும் கேட்கமுடிந்தது. அவர்கள், இந்தச் சட்டம் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை கண்டுக் கொண்டனர்: அம்மோனியரும், மோவாபியரும் தேவசபையில் ஒன்றுகூட அனுமதிக்கக் கூடாது. 2 அந்தச் சட்டம் எழுதப்பட்டது. ஏனென்றால், அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தண்ணீரும் உணவும் கொடுக்கவில்லை. அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி பிலேயாமுக்குப் பணம் கொடுத்தனர். ஆனால் நமது தேவன் அச்சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார். 3 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் இச்சட்டம் இருப்பதைக் கேட்டவுடன் அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் தம்மை அயலவர்களின் சந்ததிகளிடமிருந்து தனியே விலக்கிக் கொண்டனர்.
4-5 ஆனால் அது நிகழும் முன்னால், ஆலயத்தின் அறையை எலியாசிப், தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். தேவனுடைய ஆலயத்தில் எலியாசிப் சேமிப்பு அறைகளின் அதிகாரியாக இருந்தான். எலியாசிப். தொபியாவின் நெருங்கிய நண்பனாக இருந்தான். அந்த அறையானது தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆலயப் பாத்திரங்களையும் பொருட்களையும் வைக்கப் பயன்பட்டது. அவர்கள் பத்தில் ஒரு பங்காக வந்த தானியத்தையும் புதிய திராட்சைரசத்தையும் லேவியர் பாடகர் மற்றும் வாசல் காவலர்களுக்கான எண்ணெயையும் அந்த அறையில் வைத்திருந்தனர். அவர்கள் ஆசாரியர்களுக்கான அன்பளிப்புகளையும் அந்த அறையில் வைத்தனர். ஆனால் அந்த அறையை எலியாசிப் தொபியாவுக்கக் கொடுத்தான்.
6 இவை அனைத்தும் நிகழும்போது நான் எருசலேமில் இல்லை. நான் பாபிலோன் அரசனிடம் மறுபடியும் போயிருந்தேன். பாபிலோன் அரசனான அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் மறுபடியும் போனேன். பின்னர் நான் அரசனிடம் எருசலேமிற்குத் திரும்பிப் போக அனுமதி கேட்டேன். 7 எனவே நான் எருசலேமிற்குத் திரும்பி வந்தேன். எலியாசிப் செய்திருந்த வருத்தத்திற்குரிய செயலை நான் கேள்விப்பட்டேன். நமது தேவனுடைய ஆலயத்தில் உள்ள ஒரு அறையை எலியாசிப் தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். 8 எலியாசிப் செய்திருந்த செயலுக்காக நான் மிகவும் கோபமாக இருந்தேன். எனவே நான் அறையிலிருந்த தொபியாவின் பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே எறிந்தேன். 9 அந்த அறையைச் சுத்தமும் பரிசுத்தமும் செய்யும்படி நான் கட்டளையிட்டேன். பிறகு நான் ஆலயப் பாத்திரங்களையும், பொருட்களையும், தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும் மீண்டும் அந்த அறையில் வைத்தேன்.
10 ஜனங்கள் தங்களது பங்கை லேவியர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். எனவே லேவியர்களும், பாடகர்களும் தங்கள் வயல்களில் வேலை செய்ய திரும்பப் போயிருந்தனர். 11 எனவே நான் அதிகாரிகளிடம் அவர்கள் தவறு செய்தனர் என்று கூறினேன். நான் அவர்களிடம், “நீங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏன் கவனிக்கவில்லை?” என்று கேட்டேன். பிறகு நான் லேவியர்கள் அனைவரையும் கூட்டினேன். அவர்கள் ஆலயத்தில் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று தங்கள் பணியைச் செய்யுமாறு நான் சொன்னேன். 12 பிறகு யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் தானிய விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தையும் புதிய திராட்சைரசத்தையும், ஆலயத்துக்கான எண்ணெயையும் கொண்டு வந்தனர். அவை சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
13 நான் சேமிப்பு அறைகளின் பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை நியமித்தேன். ஆசாரியனாகிய செலேமியா, வேதபாரகனாகிய சாதோக், லேவியரில் பெதாயா, இவர்களுக்குத் துணையாக மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன் ஆனான் ஆகியோரை நியமித்தேன். இவர்களை நம்பமுடியும் என்று நான் அறிந்தேன். எனவே அவர்கள் உறவினர்களுக்குப் பங்கிட்டு வழங்குகிற பொறுப்பு அவர்களுடையது.
14 “தேவனே நான் செய்திருப்பவற்றை நினைத்துப் பாரும். தேவனுடைய ஆலயத்திற்கும் அதன் சேவைகளுக்கும் நான் உண்மையோடு செய்திருப்பதை மறக்கவேண்டாம்.”
15 யூதாவில் அந்தக் காலத்தில், ஜனங்கள் ஓய்வுநாளில் வேலை செய்வதை நான் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைரசத்தைச் செய்ய திராட்சைகளை மிதிப்பதைப் பார்த்தேன். ஜனங்கள் தானியங்களைக் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமை ஏற்றுவதைப் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் நகரத்தில் சுமந்து செல்வதைப் பார்த்தேன். ஓய்வுநாளில் அவர்கள் இவை எல்லாவற்றையும் எருசலேமிற்குள் கொண்டுவந்தனர். எனவே, நான் இதைப்பற்றி அவர்களை எச்சரித்தேன். நான் அவர்களிடம் ஓய்வுநாளில் உணவை விற்கக்கூடாது என்று சொன்னேன்.
16 எருசலேமில் தீரு நகரத்திலுள்ள சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வுநாளில் மீனையும் மற்றும் சில பொருட்களையும் எருசலேமிற்குள் கொண்டுவந்து விற்றனர். அவற்றை யூதர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். 17 யூதாவில் உள்ள முக்கியமான ஜனங்களிடம் நான் அவர்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் அந்த முக்கிய மனிதர்களிடம், “நீங்கள் மிக மோசமான செயலைச் செய்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போன்று ஆக்கிவிட்டீர்கள். 18 உங்கள் முற்பிதாக்கள் இதைப் போன்றே செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதனால்தான் நமது தேவன் எல்லாத் துன்பங்களையும் அழிவுகளையும் நமக்கும் இந்த நகருக்கும் கொண்டுவந்தார். இப்பொழுது அதையே நீங்கள் செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட அதிகமாக இஸ்ரவேலருக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் ஓய்வுநாளை அசுத்தம் செய்து, இது ஒரு முக்கியமான நாளல்ல என கருதுகிறீர்கள்” என்றேன்.
19 எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.
20 ஒன்று அல்லது இரண்டு தடவை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் எருசலேமிற்கு வெளியே இரவில் தங்கும்படி ஏற்பட்டது. 21 ஆனால் நான் அந்த வியாபாரிகளையும், விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.
22 பிறகு நான் லேவியர்களிடம் தங்களை பரிசுத்தமாக்க கட்டளையிட்டேன். அதனைச் செய்தபிறகு அவர்கள் வாயில்களைக் காக்கச் செல்லவேண்டும். ஓய்வுநாள் பரிசுத்தமான நாளாக அனுசரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்பட்டது. “தேவனே, நான் இவற்றையெல்லாம் செய்ததற்காக என்னை நினைத்துப்பாரும், என்னிடம் இரக்கமாக இரும். உமது பெரும் அன்பை என்னிடம் காட்டும்.”
23 அந்நாட்களில், சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய நாடுகளில் உள்ள பெண்களை மணந்துகொண்டதைக் கவனித்தேன். 24 அத்திருமணங்களால் வந்த குழந்தைகளில் பாதிபேருக்கு யூதமொழியை எப்படி பேசுவது என்று தெரியவில்லை. அக்குழந்தைகள் அஸ்தோத், அம்மோன் அல்லது மோவாப் மொழிகளைப் பேசின. 25 எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலைமயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், “நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது. 26 இது போன்ற திருமணங்கள் சாலொமோனைப் பாவம் செய்யும்படி செய்தது என்று உங்களுக்குத் தெரியும். அனைத்து நாடுகளிலும் சாலொமோனைப் போன்ற பேரரசன் இல்லை. தேவன் சாலொமோனை நேசித்தார். தேவன் சாலொமோனை இஸ்ரவேல் தேசத்தின் முழுவதற்கும் பேரரசனாகச் செய்தார். ஆனாலும் சாலொமோன் வெளிநாட்டுப் பெண்களால் பாவம் செய்யும்படி ஆயிற்று. 27 இப்பொழுது நீங்களும் இந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்வதாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
28 யொயதா, தலைமை ஆசாரியனாகிய எலியாசிபின் மகன். யொயதாவின் மகன்களில் ஒருவன் ஆரானிலுள்ள சன்பல்லாத்தின் மருமகனாக இருந்தான். நான் அவனை இந்த இடத்தை விட்டுப் போகும்படி வற்புறுத்தினேன். அவனை ஓடிவிடும்படி வற்புறுத்தினேன்.
29 “எனது தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். அவர்கள் ஆசாரிய பதவியை அசுத்தம் செய்கிறார்கள். அது முக்கியமில்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நீர் ஆசாரியர்களோடும், லேவியர்களோடும் செய்த உடன்படிக்கைக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள். 30 எனவே, நான் ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்தமாக்கினேன். வெளிநாட்டவர்களையும், அவர்களின் உபதேசங்களையும் எடுத்துப்போட்டேன். நான் லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் அவர்களது கடமைககளையும், பொறுப்புகளையும் கற்றுக் கொடுத்தேன். 31 சரியான காலத்தில் ஜனங்கள் அன்பளிப்பாக விறகையும் முதற்பலன்களையும் கொண்டு வருவதை உறுதிபடுத்தினேன்.
“எனது தேவனே, இத்தகைய நல்ல காரியங்களைச் செய்ததற்காக என்னை நினைவுக்கொள்ளும்.”
விசுவாசிகளின் பிரார்த்தனை
23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.
“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
அவர்கள் செய்வது வீணானது.
26 “‘பூமியின் அரசர்கள் போருக்குத் தயாராகின்றனர்.
தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ (A)
27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.
31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.
விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு
32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.
36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
2008 by World Bible Translation Center