Old/New Testament
எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்
30 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு எசேக்கியா அரசன் செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான். 2 எசேக்கியா அரசன் தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான். 3 அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும். 4 இந்த ஒப்பந்தம் எசேக்கியா அரசனையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது, 5 எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை. 6 எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் அரசனின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்:
இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா அரசர்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார். 7 உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம். 8 உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும். 9 நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார்.
10 தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர். 11 ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர். 12 மேலும், யூதாவில் ஜனங்கள் அரசனுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
13 எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது. 14 அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள். 15 பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர். 16 தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 17 அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
18-19 எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான். 20 எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார். 21 இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர். 22 எசேக்கியா அரசன், எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள்.
23 அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். 24 எசேக்கியா அரசன் 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர். 25 யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர். 26 எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் அரசனான தாவீதின் மகனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை. 27 ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது.
எசேக்கியா அரசன் செய்த முன்னேற்றங்கள்
31 பஸ்கா பண்டிகை முடிவடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலிருந்து பஸ்கா முடிந்ததும் யூதாவின் ஊர்களுக்கு வெளியேறினார்கள். அந்த நகரங்களில் இருந்த பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களை நொறுக்கினார்கள். அவை பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதற்கான இடங்களாயிருந்தன. அவர்கள் விக்கிரகத் தோப்புகளை அழித்தனர். அதோடு மேடைகளையும் பலிபீடங்களையும் அழித்தனர். யூதா மற்றும் பென்யமீன் நாட்டில் தொழுகை இடங்களையும் பலி பீடங்களையும் அழித்தனர். ஜனங்கள் இல்லத்திலேயே எப்பிராயீம் மற்றும் மனாசே நாடுகளிலும் பொய்யான தெய்வங்களை தொழுதுகொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழிக்கும்வரைக்கும் ஜனங்கள் இவற்றைச் செய்தார்கள். பின்னர் எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் ஊர்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
2 ஆசாரியர்களும், லேவியர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பான பணி இருந்தது. எனவே எசேக்கியா அரசன் இக்குழுவினர்களிடம் தம் வேலைகளை மீண்டும் செய்யுமாறு கூறினான். எனவே லேவியர்களும், ஆசாரியர்களும் தகனபலிகள் மற்றும் சமாதானப் பலிகள் கொடுக்கும் வேலையைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தின் வாசலில் தேவனைத் துதித்துப் பாடுவது என்றும் ஆலயத்தில் சேவைசெய்வது என்றும் நியமித்தான் அரசன். 3 எசேக்கியா தனது சொந்த மிருகங்களையும் தகனபலி இடுவதற்காகத் தந்தான். இம்மிருகங்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் செலுத்தப்படும் தகன பலிகளுக்குப் பயன்பட்டன. இம்மிருகங்கள் ஓய்வு நாட்களிலும் பிறைச் சந்திரநாள் பண்டிகைகளிலும் மற்ற சிறப்புக் கூட்டங்களிலும் சர்வாங்க தகன பலிகள் செலுத்த பயன்பட்டன. இவை கர்த்தருடைய சட்டத்தில் எழுதப்பட்டபடியே நடந்தேறின.
4 ஜனங்கள் தம் அறுவடையிலும் மற்ற பொருட்களிலும் ஒரு பகுதியை ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. எனவே எசேக்கியா அரசன் எருசலேம் நகர ஜனங்களிடம் தம் பங்கை அளிக்குமாறு கட்டளையிட்டான். இவ்வாறு ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சட்ட நெறிகளின்படி விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவு செய்தனர். 5 நாடு முழுவதிலும் உள்ள ஜனங்கள் இந்த கட்டளையைக் கேள்விப்பட்டார்கள். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் முதல் பஸ்காவுக்காக தமது அறுவடை, திராட்சை, எண்ணெய், தேன், வயலில் விளைந்த மற்றபொருட்கள் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தனர். 6 யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.
7 இக்குவியல்களை அவர்கள் மூன்றாம் மாதத்தில் (மே/ஜுன்) தொடங்கி ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) முடித்தனர். 8 எசேக்கியாவும் தலைவர்களும் வந்த போது தொகுக்கப்பட்ட குவியல்களைக் கண்டனர். அவர்கள் கர்த்தரையும் அவரது ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களையும் போற்றினார்கள்.
9 பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான். 10 சாதோக்கின் குடும்பத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனாகிய அசரியா என்பவன் எசேக்கியா அரசனிடம், “ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் காணிக்கை பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கு உணவு ஏராளமாய் உள்ளது. நாங்கள் எவ்வளவுதான் அதிகமாக தின்றாலும் ஏராளமாக மிகுதியாக உள்ளது. கர்த்தர் உண்மையாகவே தம் ஜனங்களை ஆசீர்வதித்துள்ளார். அதனால் தான் இவ்வளவு மீதியாக உள்ளது.” என்று பதில் சொன்னான்.
11 பின்னர் எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்காக பண்டகச்சாலைகளை அமைக்க கட்டளையிட்டான். அவ்வாறே ஆயிற்று. 12 பிறகு ஆசாரியர்கள் காணிக்கைகளையும், பத்தில் ஒரு பாகத்தையும் கர்த்தருக்கு மட்டுமே கொடுப்பதற்கென்று இருந்த மற்றப் பொருட்களையும் எடுத்து வைத்தார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்தும் ஆலயத்தின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டது. இவற்றிற்கு பொறுப்பாளனாக கொனனியா என்ற லேவியன் இருந்தான். அவனது தம்பியாகிய சிமேயு இரண்டாவது நிலை பொறுப்பாளனாக இருந்தான். 13 கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா அரசனும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
14 தேவனுக்கு ஜனங்கள் தாராளமாய்க் கொடுக்கப்பட்ட காணிக்கைகளுக்குக் கோரே பொறுப்பாளியாக இருந்தான். கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட காணிக்கைகளைத் திருப்பி விநியோகிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. கோரே கிழக்கு வாசலுக்குக் காவல்காரனாக இருந்தான். லேவியனாகிய இம்னா என்பவன் அவனது தந்தை ஆவான். 15 ஏதோன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் கோரேவுக்கு உதவியாக இருந்தனர். ஆசாரியர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நகரங்களில் இவர்கள் உண்மையுடன் சேவைசெய்தனர். இவர்கள் வசூலித்த பொருட்களைத் தம் உறவினர்களுக்கும், ஒவ்வொரு ஆசாரியர் குழுவுக்கும் கொடுத்தார்கள். அதே அளவு பொருட்களை அவன் முக்கியம் உள்ளவர்களுக்கும், முக்கியம் இல்லாதவர்களுக்கும் கொடுத்தான்.
16 இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன. 17 வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது. 18 லேவியர்களின் குழந்தைகள், மனைவியர், மகன்கள், மகள்கள் ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெற்றனர். இது அனைத்து லேவியர்களுக்கும் அவர் தம் குடும்ப வரலாற்று பட்டியலின்படியே கொடுக்கப்பட்டது. ஏனென்றால் லேவியர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எப்பொழுதும் தம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்பவர்களாகவும் சேவைக்குத் தயாரானவர்களாகவும் இருந்தனர்.
19 ஆசாரியர்களாகிய ஆரோனின் சந்ததியினர்களில் சிலர் லேவியர்கள் குடியிருக்கிற நகரங்களின் அருகில் வயல்களை வைத்திருந்தனர். நகரங்களில் ஆரோனின் சந்ததியினர் மேலும் சிலர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆரோனின் சந்ததியினருக்கும் அவர்களுக்குரிய பங்குப் பொருள்கள் கொடுக்கப்பட்டது. லேவியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் அட்டவணையில் எழுதப்பட்டவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.
20 யூதா முழுவதிலும் இத்தகைய நல்லச் செயல்களை எசேக்கியா அரசன் செய்தான். அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு முன் எது நல்லதோ, எது சரியானதோ, எது உண்மையுள்ளதோ அவற்றைச் செய்தான். 21 அவன் தொடங்கிய அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். தேவனுடைய ஆலய சேவையிலும் சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிற செயலிலும் தேவனைப் பின்பற்றும் முறையிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். எசேக்கியா இவற்றையெல்லாம் தன் முழு இருதயத்தோடு செய்தான்.
இயேசு கைது செய்யப்படுதல்(A)
18 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.
2 யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். 3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.
4 இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
5 அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.
இயேசுவோ, “நானே இயேசு” என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.) 6 இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
7 இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.
8 இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். 9 “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.
10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்) 11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.
அன்னாவின் முன் இயேசு(B)
12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர். இவன் காய்பாவின் மாமனார். காய்பா அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். 14 இந்தக் காய்பாதான் ஏற்கெனவே யூதர்களிடம், “எல்லா மக்களுக்காகவும் ஒரு மனிதன் மரிப்பது நல்லது” என்று சொன்னவன்.
பேதுருவின் மறுதலிப்பு(C)
15 சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான். 16 ஆனால் பேதுரு வாசலுக்கு வெளியே காத்திருந்தான். தலைமை ஆசாரியனைத் தெரிந்த சீஷன் வெளியே வந்தான். அவன் கதவைத் திறந்த பெண்ணோடு பேசினான். பிறகு அவன் பேதுருவையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனான். 17 வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் “நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே?” என்று கேட்டாள்.
அதற்குப் பேதுரு “இல்லை. நான் அல்ல” என்றான்.
18 அது குளிர்காலம். எனவே வேலைக்காரர்களும், சேவகர்களும் நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு குளிர் காய்ந்தனர். பேதுருவும் அவர்களோடு குளிர்காய நின்றுகொண்டான்.
2008 by World Bible Translation Center