Old/New Testament
யூதரல்லாதவர்களுடன் செய்த திருமணங்கள்
9 இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களை மணந்துக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இப்போது தம்மோடு வாழும் மற்றவர்களோடு கலந்துவிட்டனர். இந்த வகையில் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் ஒரு மோசமான உதாரணமாக இருந்தனர்” என்றனர். 3 நான் இதைப்பற்றி கேள்விப்பட்டதும், நான் கலக்கமடைந்ததைக் காட்ட எனது ஆடைகளையும் சால்வைகளையும் கிழித்துக்கொண்டேன். என் தலையிலும் தாடியிலும் உள்ள முடியைப் பிடுங்கிக்கொண்டேன். அதிர்ச்சியடைந்தும் கலக்கமடைந்தும் நான் உட்கார்ந்துவிட்டேன். 4 பிறகு, தேவனுடைய சட்டங்கள் மீது மரியாதைக் கொண்ட ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். அவர்கள், அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேலர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல என்பதை அறிந்ததால் பயந்தார்கள். நான் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தேன். பலிக்கான மாலை நேரம்வரை நான் உட்கார்ந்திருந்தேன். அந்த ஜனங்கள் என்னைச் சுற்றிக் கூடினார்கள்.
5 பிறகு பலிக்குரிய மாலை நேரம் வந்ததும் நான் எழுந்தேன். அங்கே அமர்ந்திருந்தபொழுது, பார்ப்பதற்கு வெட்கப்படும்படியாக என்னை நானே ஆக்கிக் கொண்டேன். எனது ஆடையும் சால்வையும் கிழிந்திருந்தன. நான் முழங்காலிட்டு, என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக கைகளை விரித்திருந்தேன். 6 பிறகு நான் இந்த ஜெபத்தைச் செய்தேன்.
“எனது தேவனே, உம்மைப் பார்ப்பதற்கு நான் மிகவும் வெட்கமும் குழப்பமும் அடைகிறேன். எங்கள் தலைகளைவிட எங்கள் பாவங்கள் உயரமாகிவிட்டதை அறிந்து வெட்கப்படுகிறேன். எங்கள் குற்றங்கள் பரலோகம்வரை எட்டியது. 7 எங்கள் முற்பிதாக்களின் காலமுதல் இன்றுவரை நாங்கள் பலவகையான பாவங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் பாவம் செய்ததினால் எங்களுடைய அரசர்களும் ஆசாரியர்களும் தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு அரசர்கள் எங்களைத் தாக்கி, எங்கள் ஜனங்களை இழுத்துச் சென்றனர். எங்களுக்குரிய செல்வங்களையும் எடுத்துக்கொண்டு எங்களை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டார்கள். இன்றும் கூட அதே நிலைதான் உள்ளது.
8 “ஆனால் இப்போது, முடிவாக நீர் எங்கள் மீது இரக்கத்துடன் இருக்கிறீர். அடிமைத்தனத்திலிருந்த எங்களில் சிலரை விடுதலை செய்து, இந்தப் பரிசுத்தமான இடத்திற்கு அழைத்து வந்தீர், கர்த்தாவே எங்களுக்குப் புதிய வாழ்வும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் தந்தீர். 9 ஆமாம், நாங்கள் அடிமைகளாய் இருந்தோம். ஆனால் நீர் எங்களை எப்போதும் அடிமைகளாய் இருக்கவிடவில்லை. எங்களோடு நீர் இரக்கமாய் இருக்கிறீர். பெர்சியா அரசர்களையும் எங்கள் மீது கருணை காட்டுமாறு செய்தீர். உமது ஆலயம் அழிக்கப்பட்டது. ஆனால் நீர் எங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்தீர். எனவே, நாங்கள் உமது ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட முடிந்தது. தேவனே, யூதாவையும் எருசலேமையும் காப்பாற்ற ஒரு சுவர் கட்ட நீர் உதவிச்செய்தீர்.
10 “இப்போது, தேவனே உமக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மீண்டும் நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திக் கொண்டோம். 11 தேவனே, நீர் உம்முடைய ஊழியக்காரர்களையும், தீர்க்கதரிசிகளையும் பயன்படுத்தி உமது கட்டளைகளைக் கொடுத்தீர். நீர், ‘நீங்கள் வாழப் போகிற நாடு அழிந்துபோன நாடு. அது, அங்குள்ள ஜனங்களின் தீயச் செயல்களால் அழிந்து போனது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஜனங்கள் பாவம் செய்தனர். அவர்கள் இந்தத் தேசத்தைத் தங்கள் பாவங்களால் அசிங்கப்படுத்திவிட்டனர். 12 எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று சொன்னீர்.
13 “எங்களுடைய சொந்தத் தவறுகளால்தான் எங்களுக்கு தீமைகள் ஏற்பட்டன. நாங்கள் கெட்டவற்றைச் செய்திருக்கிறோம், எங்களிடம் நிறைய குற்றங்கள் உள்ளன. ஆனால், எங்கள் தேவனாகிய நீர் எங்களுக்குரிய தண்டனைகளைவிடக் குறைவாகவே தண்டித்தீர். நாங்கள் பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறோம். நாங்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நீர் எங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டிருக்கின்றீர். 14 எனவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளை மீறக்கூடாது என்று தெரிந்துக்கொண்டோம். அவர்களை நாங்கள் மணந்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் தீய பாவங்களை செய்தனர். தேவனே, நாங்கள் அவர்களைத் தொடர்ந்து மணந்துக்கொண்டிருந்தால், எங்களை நீர் முழுவதும் அழித்துவிடுவீர் என்பதை அறிவோம்! பிறகு, இஸ்ரவேலர் எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள்.
15 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நல்லவர்! நீர் இன்னும் எங்களில் சிலரை வாழ விட்டிருக்கிறீர். ஆமாம், நாங்கள் குற்றவாளிகளே! எங்கள் குற்றமனப்பான்மையால் எங்களில் ஒருவரும் உமது முன்னிலையில் நிற்க அனுமதிக்கப்படக்கூடாது.”
ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளுதல்
10 எஸ்றா ஜெபம் செய்து அறிக்கையிட்டான். அழுதுக்கொண்டே அவன் தேவனுடைய ஆலயத்திற்கு முன்பு விழுந்தான். எஸ்றா இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களில் ஆண், பெண், குழந்தைகள் என ஒரு பெரிய கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. அவர்களும் அவரோடு சேர்ந்து மிகப் பலமாக அழுதார்கள். 2 அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது. 3 இப்போது நாம் தேவனுக்கு முன்னால் ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்வோம். அதன்படி அப்படிப்பட்ட நமது பெண்களையும் குழந்தைகளையும் அகற்றிவிடுவோம். எஸ்றா மற்றும் நமது தேவனுடைய சட்டங்களை மதிக்கும் ஜனங்களின் அறிவுரையைப் பின்பற்றுவதற்காக நாம் அதைச் செய்வோம். நாம் தேவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவோம். 4 எஸ்றா, எழுந்திரும், இது உங்கள் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களை ஆதரிப்போம். எனவே தைரியமாக செயல்படும்” என்றான்.
5 எனவே எஸ்றா எழுந்தான். தலைமை ஆசாரியர்களையும், லேவியர்களையும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தன் சொல்லுக்குக் கட்டுப்படும்படி வாக்குறுதி பண்ணச்செய்தான். 6 பிறகு, எஸ்றா தேவனுடைய ஆலயத்தில் இருந்து வெளியேப் போனான். எலியாசிபின் மகனான யோகனானின் அறைக்குப் போனான். அங்கே, அவன் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட ஜனங்களுக்காக உணவு உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தான். காரணம் அவன் இன்னும் சோகமாக இருந்தான். எருசலேமிற்குத் திரும்பி வந்த ஜனங்களைப் பற்றி மிகவும் சோகமாயிருந்தான். 7 யூதா மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான். அச்செய்தி, அடிமைத்தனத்திலிருந்து மீண்டு எருசலேமிற்கு வந்த இஸ்ரவேலர்கள் அனைவரையும் எருசலேமில் கூடும்படிச் சொன்னது. 8 மூன்று நாட்களுக்குள் எந்த இஸ்ரவேலனும் எருசலேமிற்கு வராவிட்டால், தம் சொத்துக்களை இழக்க வேண்டியதிருக்கும். இந்த முடிவை முக்கிய அதிகாரிகளும், மூப்பர்களும் எடுத்தனர். கூட்டத்திற்கு வராதவர்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாமல் போவார்கள்.
9 எனவே, எருசலேமில் மூன்று நாட்களுக்குள், யூதா மற்றும் பென்யமீனில் உள்ள அனைவரும் வந்து கூடினார்கள். 9வது மாதத்தின் 20வது நாளில் ஆலய பிரகாரத்தில் அனைவரும் கூடினார்கள். இக்கூட்டத்தாலும் அப்போது பெய்த பெரு மழையால் ஜனங்கள் மிகவும் கலக்கமடைந்தார்கள். 10 பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். “நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள். 11 இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான்.
12 பிறகு அங்கு கூடியுள்ள கூட்டம் முழுவதும் எஸ்றாவிற்குப் பதில் சொன்னது. அவர்கள் உரத்த குரலில், “எஸ்றா, நீர் சொல்வது சரி! நீர் சொல்லும் காரியங்களை நாங்கள் செய்யவேண்டும். 13 ஆனால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இது மழை காலமாகவும் இருக்கிறது. எனவே எங்களால் வெளியே தங்கமுடியாது. நாங்கள் மிக மோசமான பாவங்களைச் செய்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்சினையை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்க்க முடியாது. 14 இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.
15 மிகச் சிலரே இந்தத் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். அவர்கள் ஆசகேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகனான யக்சியாவும் ஆவார்கள். லேவியர்களில் மெகல்லாவும், சப்பேதாவும் இதற்கு எதிராக இருந்தனர்.
16 எனவே எருசலேமிற்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆசாரியனாகிய எஸ்றா, குடும்பத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவன் ஒவ்வொரு கோத்திரங்களிலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேரால் அழைக்கப்பட்டனர். பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அவர்கள் கூடியமர்ந்து, ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்தனர். 17 அடுத்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில், அவர்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டவர்களைப் பற்றி விசாரித்து முடித்தனர்.
அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்களின் பட்டியல்
18 அயல்நாட்டுப் பெண்களை மணந்துக் கொண்ட ஆசாரியர் சந்ததியினரின் பெயர்கள்:
யோசதாக்கின் மகனாகிய யெசுவா என்பவனின் சந்ததியிலும் யெசுவாவின் சகோதரர்களும்; மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா ஆகியோர். 19 இவர்கள் அனைவரும் தம் மனைவியரை விவாகரத்து செய்வதாக வாக்களித்தனர். தங்கள் ஒவ்வொருவரும் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் குற்ற மனப்பான்மையால் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
20 இம்மேர் என்பவனின் சந்ததியில், அனானியும் செபதியாவும்.
21 ஆரீம் என்பவனின் சந்ததியில், மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா ஆகியோர்.
22 பஸ்கூர் என்பவனின் சந்ததியில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா ஆகியோர்.
23 லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா (இவனுக்கு கெலாயா என்ற பேருமுண்டு), பெத்தகீயா, யூதா, எலியேசர் ஆகியோர்
அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
24 பாடகரில் எலியாசிபும்,
வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி ஆகியோர்
அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே கீழ்க்கண்டவர்கள் அனைவரும் அயல்தேசப் பெண்களை மணந்துக் கொண்டவர்கள்.
பாரோஷின் சந்ததியில்: ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா ஆகியோர்.
26 ஏலாமின் சந்ததியில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா ஆகியோர்.
27 சத்தூவின் சந்ததியில்: எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா ஆகியோர்.
28 பெபாய் என்பவனின் சந்ததியில்: யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி ஆகியோர்.
29 பானி என்பவனின் சந்ததியில்: மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் ஆகியோர்.
30 பாகாத்மோவாப் என்பவனின் சந்ததியில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே ஆகியோர்.
31 ஆரீம் என்பவனின் சந்ததியில்: எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன். 32 பென்யமீன், மல்லூக், செமரியா ஆகியோர்.
33 ஆசும் என்பவனின் சந்ததியில்: மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி ஆகியோர்.
34 பானி என்பவனின் சந்ததியில்: மாதாயி, அம்ராம், ஊவேல், 35 பெனாயா, பெதியா, கெல்லூ, 36 வனியா, மெரெமோத், எலெயாசீப், 37 மத்தனியா, மதனாய், யாசாய்,
38 பானிபின்னூயி என்பவனின் சந்ததியில்: சிமெயி, 39 செலேமியா, நாத்தான், அதாயா, 40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, 41 அசரெயேல், செலேமியா, செமரியா, 42 சல்லூம், அமரியா, யோசேப் ஆகியோர்.
43 நேபோ என்பவனின் சந்ததியில்: ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44 இவர்கள் அனைவரும் அயல்நாட்டுப் பெண்களை மணந்திருந்தனர். சிலருக்கு அவர்களோடு குழந்தைகளும் இருந்தனர்.
லூக்காவின் இரண்டாவது புத்தகம்
1 அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2 நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். 3 இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். 4 ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். 5 யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.
இயேசுவின் பரமேறுதல்
6 அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.
7 இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. 8 ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.
9 இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. 10 இயேசு மேலே போய்க்கொண்டிருந்தார். அப்போஸ்தலர்கள் வானையே நோக்கிக்கொண்டிருந்தனர். திடீரென வெண்ணிற ஆடை அணிந்த இருவர் அவர்களுக்கு அருகே நின்றனர். 11 அவ்விருவரும் அப்போஸ்தலர்களை நோக்கி, “கலிலேயாவிலிருந்து வந்துள்ள மனிதர்களே, ஏன் நீங்கள் வானத்தைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் பார்த்தபோது சென்றதைப் போலவே அவர் திரும்பவும் வருவார்” என்று கூறினர்.
புதிய அப்போஸ்தலர்
12 பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது) 13 அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.
14 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.
15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.
18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)
20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
யாரும் அங்கு வாழலாகாது.’ (A)
மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’ (B)
21-22 “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.
23 அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன். 24-25 அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 26 பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.
2008 by World Bible Translation Center