Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 1-2

நல்ல மனிதனாகிய யோபு

ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்னும் பெயருள்ள மனிதன் வாழ்ந்து வந்தான். யோபு நல்லவனும் உண்மையுள்ள மனிதனுமாக இருந்தான். தேவனுக்கு பயந்து தீயக் காரியங்களைச்செய்ய மறுத்தான். யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். யோபுவுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 1,000 காளைகளும், 500 பெண் கழுதைகளும் இருந்தன. அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். கிழக்குப் பகுதியில் யோபுவே பெரிய செல்வந்தனாக இருந்தான்.

யோபுவின் மகன்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம். அவனது பிள்ளைகளின் விருந்து முடிந்தப்பின் யோபு அதிகாலையில் எழுந்தான். ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அவன் தகனபலியை அளித்தான். அவன், “என் பிள்ளைகள் கவலையீனமாக இருந்து, விருந்தின்போது தேவனுக்கெதிராக தங்கள் இருதயங்களில் தூஷிப்பதினால் பாவம் செய்திருக்கக் கூடும்” என்று எண்ணினான். அவனது பிள்ளைகள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியாக யோபு எப்போதும் இவ்வாறு செய்தான்.

தேவதூதர்கள் [a] கர்த்தரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் தேவதூதர்களோடு வந்தான்.

கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தரை நோக்கி, “நான் பூமியைச் சுற்றிப் பார்த்து வந்தேன்” என்றான்.

அப்போது கர்த்தர் சாத்தானிடம், “நீ எனது தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. யோபு உத்தமனும் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றை விட்டு விலகியிருக்கிறான்” என்றார்.

சாத்தான், “ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! 10 நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். 11 ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 கர்த்தர் சாத்தானிடம், “அப்படியே ஆகட்டும். யோபுக்குச் சொந்தமான பொருள்களின் மேல் உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உடம்மைத் துன்புறுத்தாதே” என்றார். பின்பு சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுச் சென்றுவிட்டான்.

யோபு எல்லாவற்றையும் இழக்கிறான்

13 ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் மகன்களும், மகள்களும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள். 14 அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, “காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன. 15 ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!” எனச் செய்தியைக் கூறினான்.

16 அவன் இதனைக் கூறிக்கொண்டிருக்கும்போது மற்றொருவன் யோபுவிடம் வந்தான். இரண்டாம் ஆள், “வானிலிருந்து மின்னல் மின்னி உமது ஆடுகளையும் வேலையாட்களையும் எரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பினேன். உமக்கு அந்தச் செய்தியை கூறும்படியாக வந்தேன்!” எனக் கூறினான்.

17 அந்த ஆள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவன் வந்தான். இந்த மூன்றாவது ஆள், “கல்தேயர் மூன்று குழுக்களை அனுப்பி, எங்களைத் தாக்கி, ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்! அவர்கள் வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன் இந்தச் செய்தியை உமக்குச் சொல்லும்படியாக வந்தேன்!” என்றுச் சொன்னான்.

18 மூன்றாம் ஆள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றும் ஒருவன் வந்தான். நான்காவது ஆள், “உமது மகன்களும் மகள்களும் மூத்த சகோதரனின் வீட்டில் உண்டு, திராட்சைரசம் பருகிக்கொண்டிருந்தார்கள். 19 அப்போது ஒரு பலத்தக் காற்று பாலைவனத்திலிருந்து வீசி, வீட்டை அழித்தது, உமது மகன்களின் மீதும், மகள்களின் மீதும் வீடு வீழ்ந்ததால், அவர்கள் மரித்துப்போனார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பித்தேன். எனவே உம்மிடம் இந்த செய்தியை தெரிவிக்க வந்தேன்!” என்றான்.

20 யோபு இதைக் கேட்டபோது, அவனது துக்கத்தை வெளிப்படுத்தும்பொருட்டு ஆடைகளைக் கிழித்துக்கொண்டான், தலையை மழித்துவிட்டான். பின்பு யோபு தரையில் விழுந்து, தேவனை ஆராதித்தான்.

21 “நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை.
    நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார்.
    கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான்.

22 இவையெல்லாம் நிகழ்ந்தாலும், யோபு பாவம் செய்யவில்லை. தேவன் தவறு செய்திருந்தார் என்று யோபு குறை சொல்லவுமில்லை.

சாத்தான் யோபுவுக்கு மீண்டும் தொல்லைத் தருகிறான்

மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான்.

கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான்.

அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார்.

சாத்தான், “தோலுக்குத் தோல்! [b] என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான்.

அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார்.

பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்.

யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள்.

10 பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.

யோபுவின் மூன்று நண்பர்கள் அவனைக் காண வருகிறார்கள்

11 தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்).

12 ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

13 பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை.

அப்போஸ்தலர் 7:22-43

22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

23 “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். 24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். 25 தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

26 “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். 27 ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. 28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ [a] என்றான். 29 அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

30 “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். 31 அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. 32 தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’ [b] என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார்.

33 “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. 34 எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’ [c] என்றார்.

35 “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. 36 அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார்.

37 “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’ [d] என்று கூறிய அதே மோசேதான் அவர். 38 வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார்.

39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். 40 நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ [e] என்றனர். 41 எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! 42 ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார்,

“‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை.
43 உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள்.
    இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள்.
எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’ (A)

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center