Old/New Testament
யோய்தா ஆசாரியனும் யோவாஸ் அரசனும்
23 ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, ஆதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள். 2 அவர்கள் யூதா முழுவதும் சுற்றி யூதாவின் நகரங்களில் இருந்த லேவியர்களைக் கூட்டினார்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களையும் கூட்டினார்கள். பிறகு அவர்கள் எருசலேமிற்குச் சென்றனர். 3 அனைத்து ஜனங்களும் கூடி, தேவனுடைய ஆலயத்தில் அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
யோய்தா அவர்களிடம், “அரசனது மகன் ஆட்சி செய்வான். இதுதான் தாவீதின் சந்ததியினரைக் குறித்துக் கர்த்தர் வாக்களித்தது. 4 இப்போது, நீங்களும் செய்ய வேண்டியது இதுதான். ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு நாளில் கடமையாற்றச் செல்லும்பொழுது கதவுகளைக் காவல் காக்க வேண்டும். 5 அடுத்த மூன்றில் ஒரு பங்கினர் அரசனின் இருப்பிடத்தைக் காவல் காக்கவேண்டும். மேலும் மூன்றில் ஒரு பங்கினர் அஸ்திபார வாசலைக் காவல் காக்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களில் இருக்கவேண்டும். 6 ஒருவரையும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவைச்செய்பவர்கள். அதோடு பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்களாக. 7 லேவியர்கள் அரசனுக்கு அருகில் தங்கயிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாளைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும். மற்றவர்கள் எவராவது ஆலயத்திற்குள் நுழைய முயன்றால் அவர்களைக் கொல்லவேண்டும். அரசன் எங்கே சென்றாலும் அவனோடு நீங்கள் செல்ல வேண்டும்” என்றான்.
8 லேவியர்களும் யூதா ஜனங்களனைவரும் யோய்தா ஆசாரியன் சொன்னவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்தனர். யோய்தா ஆசாரியக் குழுவிலுள்ள எவரையும் விட்டுவைக்கவில்லை. எனவே ஒவ்வொரு தளபதிகளும் தங்கள் ஆட்களோடு முறைப்படி ஓய்வு நாளில் வந்து முறைப்படி ஓய்வு நாளில் போய்க்கொண்டு இருந்தனர். 9 தாவீது அரசனுக்குரிய ஈட்டிகளையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் யோய்தா ஆசாரியன் அதிகாரிகளுக்குக் கொடுத்தான். இந்த ஆயுதங்கள் எல்லாம் தேவனுடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 10 பிறகு யோய்தா ஆட்களிடம் எங்கெங்கே நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தனர். ஆலயத்தின் வலது பக்கத்தில் இருந்து ஆலயத்தின் இடது பக்கம் வரை வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பலிபீடத்தின் அருகிலும் ஆலயத்திலும், அரசன் அருகிலும் நின்றனர். 11 அவர்கள் அரசனின் மகனை வெளியே அழைத்து வந்து அவனுக்கு முடிச்சூட்டினார்கள். அவனுக்குச் சட்டப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தனர். பிறகு அவர்கள் யோவாசை அரசனாக்கினார்கள். யோய்தாவும் அவனது மகன்களும் அவனுக்கு அபிஷேகம் செய்தனர். அவர்கள், “அரசன் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
12 ஜனங்கள் ஆலயத்தை நோக்கி ஓடுவதையும் அங்கே அவர்கள் அரசனை வாழ்த்துவதையும் அத்தாலியாள் கேட்டாள். அவளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடையே வந்தாள். 13 அவள் அரசனைக் கண்டாள், முன்வாயிலுக்கு முன்னால் உள்ள தூணுக்கருகில் அரசன் நின்றுகொண்டிருந்தான். அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனுக்கருகில் நின்றுகொண்டிருந்தனர். அந்த நாட்டு ஜனங்கள் மகிழ்ச்சியோடு எக்காளம் ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளை இயக்கினார்கள். அவர்கள் ஜனங்களையும் துதித்துப் பாடும்படிச் செய்தனர். அத்தாலியாள் இதனைப் பார்த்து தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள்.
14 யோய்தா ஆசாரியன் படைத்தளபதிகளை அழைத்தான். அவன் அவர்களிடம், “அத்தாலியாளை பிடித்து வெளியே கொண்டுபோங்கள். அவளை யாராவது பின்பற்றினால், அவர்களைக் கொல்ல உங்கள் வாள்களைப் பயன்படுத்துங்கள்” என்றான். அதோடு ஆசாரியர் வீரர்களிடம், “அத்தாலியாளைக் கர்த்தருடைய ஆலயத்தில் கொன்றுவிடாதீர்கள்” என்று எச்சரித்தான். 15 அத்தாலியாள் அரசனின் வீட்டுக் குதிரை வாயிலுக்குள் நுழைய முயன்றபோது வீரர்கள் அவளைப் பிடித்தார்கள். பிறகு அவளை அங்கேயே கொன்றனர்.
16 பிறகு யோய்தா அரசனோடும், அனைத்து ஜனங்களோடும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஜனங்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். 17 ஜனங்கள் அனைவரும் பாகால் ஆலயத்திற்குப்போய் அதை இடித்தனர். அவர்கள் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் நொறுக்கினார்கள். பாகாலின் பூசாரியான மாத்தானைப் பலிபீடத்துக்கு முன்பாகவே கொன்றுபோட்டனர்.
18 பிறகு கர்த்தருடைய ஆலயப் பொறுப்புக்கான ஆசாரியர்களை யோய்தா தேர்ந்தெடுத்தான். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். தாவீதே அவர்களுக்கு கர்த்தருடைய ஆலயப் பொறுப்பினைக் கொடுத்துள்ளார். மோசேயின் சட்டத்தின்படியே அவர்கள் கர்த்தருக்குத் தகனபலிகளைத் தந்தனர். தாவீதின் கட்டளைபடியே அவர்கள் மகிழ்ச்சியோடு பாடியவண்ணம் காணிக்கைகளைத் தந்தனர். 19 யோய்தா கர்த்தருடைய ஆலயத்திலுள்ள அனைத்து வாசல்களிலும் காவலர்களை நியமித்தான். அதனால் சுத்தமில்லாதவர்களும் ஆலயத்திற்குள் நுழையாதபடி செய்தான்.
20 யோய்தா படைத்தளபதிகளையும், பெரியவர்களையும், ஆட்சியாளர்களையும், அந்த நாட்டில் வசித்த அனைவரையும் ஒன்றாய்த் திரட்டினான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அரசனை வெளியே அழைத்து வந்து உயர்ந்த வாசல்வழியாக அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அங்கே அவனைச் சிங்காசனத்தின் மேல் அமரவைத்தனர். 21 யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். எருசலேம் நகரம் சமாதானமடைந்தது. ஏனென்றால் அத்தாலியாள் வாளால் கொல்லப்பட்டாள்.
யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான்
24 யோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள். 2 யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். 3 யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
4 பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான். 5 யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.
6 எனவே, அரசன் தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் அரசன், “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.
7 முற்காலத்தில் அத்தாலியாளின் மகன்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண்.
8 ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் அரசன் கட்டளையிட்டான். 9 பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும். 10 அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர். 11 பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள். 12 பிறகு யோவாஸ் அரசனும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திறமைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.
13 வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள். 14 எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை அரசனிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.
15 யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது. 16 யோய்தாவை தாவீதின் நகரத்திலே அரசர்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.
17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை அரசன் கவனித்தான். 18 அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். 19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.
20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான்.
21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி அரசன் கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். 22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் அரசன் நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் மகனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.
23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு அரசனுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். 24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான். 25 ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் மகனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.
26 யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள். 27 யோவாசின் மகன்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் அரசர்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய அரசனானான். அமத்சியா யோவாசின் மகன்.
திராட்சைச் செடியின் உவமை
15 “நானே உண்மையான திராட்சைச் செடி, எனது பிதாவே தோட்டக்காரர். 2 அவர், கனிகொடுக்காத எனது கிளைகள் எவையோ அவற்றை வெட்டிப் போடுகிறார். கனிகொடுக்கிற கிளைகளை மேலும் கனி கொடுக்கும்படி அவர் சுத்தம் பண்ணுகிறார். 3 நான் உங்களுக்குச் செய்த உபதேசங்களால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள். 4 நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தனியாகக் கனிகொடுக்க இயலாது. அது செடியிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். இதுபோலத்தான் நீங்களும். நீங்கள் தனியாக இருந்து கனிதர முடியாது. என்னோடு சேர்ந்தே இருக்கவேண்டும்.
5 “நான்தான் திராட்சைச் செடி. நீங்கள் கிளைகள். எவனொருவன் என்னிடம் நிரந்தரமாக இருக்கிறானோ, எவனொருவனிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேனோ, அவன் கனிதரும் கிளையாக இருப்பான். ஆனால் அவன் நான் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. 6 என்னோடு இல்லாத எவனும் செடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கிளைபோல் ஆகிவிடுகிறான். அது காய்ந்துபோகும். மக்கள் அவற்றைப் பொறுக்கி நெருப்பிலே போட்டு எரித்துவிடுகிறார்கள். 7 என்னில் நிரந்தரமாக இருங்கள், என் உபதேசங்களைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் விரும்புகிற எவற்றையும் என்னிடம் கேட்கலாம். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும். 8 நீங்கள் அதிகக் கனிகளைத் தந்து, நீங்களே என் சீஷர்கள் என்பதைக் காட்ட வேண்டும். இது என் பிதாவுக்கும் மகிமையைக் கொண்டுவரும்.
9 “பிதா என்னை நேசிப்பதுபோன்று நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது எனது அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11 நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 இதைத்தான் நான் உங்களுக்குக் கட்டளை இடுகிறேன்: நான் உங்களை நேசிப்பது போல் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 13 ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்பு வேறு எதுவுமில்லை. 14 நான் சொன்னபடி செய்தால் நீங்களும் எனது சிறந்த நண்பர்களாவீர்கள். 15 இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
16 “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார். 17 இதுவே எனது கட்டளை. ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள்.
சீஷர்களை எச்சரித்தல்
18 “இந்த உலகம் உங்களைப் பகைத்தால், அது என்னைத்தான் முதலில் பகைக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள். 19 நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது.
20 “ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள். 21 மக்கள் இவற்றையெல்லாம் என்பொருட்டே உங்களுக்குச் செய்வார்கள். அவர்கள் என்னை அனுப்பியவரைப்பற்றி அறியமாட்டார்கள். 22 நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது.
23 “என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான். 24 நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். 25 ‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது.
26 “நான் என் பிதாவிடமிருந்து அந்த உதவியாளரை உங்களிடம் அனுப்புவேன். என் பிதாவிடமிருந்து வருகிற அவர் உண்மையின் ஆவியாக இருப்பார். அவர் வரும்போது என்னைப்பற்றிக் கூறுவார். 27 நீங்கள் தொடக்கக்கால முதலே என்னோடு இருப்பதால் நீங்களும் என்னைப்பற்றி மக்களிடம் சாட்சி கூறுவீர்கள்.”
2008 by World Bible Translation Center