Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 22-23

யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது

22 யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் மகள் ஆவாள். கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை.

யோசியா ஆலயத்தைப் பழுது பார்க்க கட்டளையிட்டது

தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான். அவனிடம், “நீ தலைமை ஆசாரியனாகிய இல்க்கியாவினிடம் போ. கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் கொண்டு வந்த பணம் அவனிடம் இருக்கும். அது வாயில் காவலர்கள் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சேகரித்துக் கொடுத்த பணம். அதனை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலை செய்கிறவர்களைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அக்கண்காணிப்பாளர்கள் அப்பணத்தை ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும். வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான்.

சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல்

செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.

செயலாளராகிய சாப்பான் அரசனான யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்” என்றான். 10 பிறகு சாப்பான் அரசனிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி அரசனுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.

11 அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 12 பிறகு ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனான அகீக்காமுக்கும், மிகாயாவின் மகனான அக்போருக்கும் செயலாளரான சாப்பானுக்கும் அரசனின் வேலைக்காரனான அசாயாவுக்கும் அரசன் ஆணைகள் இட்டான். 13 அரசன் இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான்.

யோசியாவும் உல்தாள் எனும் பெண் தீர்க்கதரிசியும்

14 எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.

15 பிறகு உல்தாள் அவர்களிடம், “என்னிடம் உங்களை அனுப்பியவனிடம் போய், இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: 16 ‘இந்த இடத்திற்குத் துன்பத்தைக் கொண்டு வருவேன். இங்குள்ள ஜனங்களுக்கும் துன்பத்தைக் கொண்டு வருவேன். யூத அரசனால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள துன்பங்கள் இவையே. 17 யூத ஜனங்கள் என்னை விட்டுவிட்டு அந்நியத் தெய்வங்களுக்கு நறுமணப்பொருட்களை எரிக்கின்றனர். அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஏராளமான விக்கிரகங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் இவர்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டுகிறேன். என் கோபம் தடுக்க முடியாத நெருப்பைப் போன்று விளங்கும்!’

18-19 “யூதாவின் அரசனாகிய யோசியா, உங்களை அனுப்பி கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்கிறான். அவனிடம் இவற்றைக் கூறுங்கள்: ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறுகிறார். இந்த நாட்டைப் பற்றியும், இங்கு வசிப்பவர்களைப்பற்றியும் நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் இதயம் மென்மையாக ஆயிற்று. எனவே, அதைக் கேட்டதும் நீங்கள் மிகவும் வருத்தம் கொண்டீர்கள். இந்த இடத்தில் (எருசலேமில்) பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று சொல்லி இருக்கிறேன். உன் துக்கத்தைப் புலப்படுத்த உன் ஆடையைக் கிழித்துக்கொண்டு அழத்தொடங்கினாய். அதற்காகத் தான் நீ சொன்னதைக் கேட்டேன்’. கர்த்தர் இதைச் சொன்னார். 20 ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள்.

பிறகு இதனை அரசனிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.

சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்

23 தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் அரசன் யோசியா அழைத்தான். பிறகு அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு அரசன் உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. அரசன் அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது.

அரசன் (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள்.

பிறகு அரசன் தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.

யூத அரசன் ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான்.

பின் அரசனான யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். 8-9 அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் அரசன் (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்).

10 தோப்பேத் இன்னோமின் மகனது பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடம். அங்கே ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பலிபீடத்தில் எரித்து மோளேகு என்ற பொய்த்தெய்வத்தை மகிமைப்படுத்தி வந்தனர். அரசன் இந்த இடத்தையும் ஜனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அழித்துப்போட்டான். 11 முன்பு, யூத அரசன் கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அரசன் குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான்.

12 முன்பு, யூத அரசர்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான்.

13 முன்பு, சாலொமோன் அரசன் எருசலேம் அருகிலுள்ள நாசமலையின் அருகில் பொய்த் தெய்வங்களுக்கான மேடைகளை அமைத்தான். அவை மலையின் தென்புறத்தில் இருந்தன. சீதோனியர்களால் தொழுதுகொள்ளப்பட்ட அருவருப்புமிக்க அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவெருப்பு தெய்வமான காமோசிற்கும், அம்மோனியரின் அருவெருப்பு தெய்வமான மில்கோமுக்கும் மேடைகளை சாலொமோன் அரசன் அமைத்திருந்தான். ஆனால் யோசியா அவையனைத்தையும் அழித்துப் போட்டான். 14 அதோடு யோசியா அரசன் ஞாபகக் கற்களையும் அசெரா என்னும் பெண் தேவதையின் விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கினான். பின் மரித்துப்போனவர்களின் எலும்புகளை அவற்றின் மீது தூவினான்.

15 இவன் பெத்தேலில் உள்ள பலிபீடத்தையும் மேடையையும் உடைத்தெறிந்தான். இப்பலிபீடத்தை நேபாத்தின் மகனான யெரொபெயாம் என்பவன் ஏற்படுத்தியிருந்தான். இவனே இஸ்ரவேலர்களின் பாவத்திற்கு காரணமாக இருந்தான். இவன் அமைத்த பலிபீடம், மேடை ஆகிய இரண்டையும் யோசியா அழித்தான். அவன் பலிபீடக் கல்லை துண்டுத் துண்டாக உடைத்தெறிந்தான். பின் அவற்றைத் தூளாக்கினான். அசேரா விக்கிரகத் தூணையும் எரித்தான். 16 யோசிய திரும்பிபார்த்தபோது மலையின் மீது கல்லறைகளை கண்டான். அவன் ஆட்களை அனுப்பி அவற்றிலுள்ள எலும்புகளை எடுத்துவரச் செய்தான். இப்படி நடக்கும் என்று தீர்க்கதரிசி சொன்னபடியே அவைகளை அந்தப் பலிபீடத்தின் மேல் எரித்தான்.

பின் யோசியா சுற்றிப்பார்த்து தேவமனிதனின் கல்லறையைக் கண்டான்.

17 யோசியா, “நான் பார்க்கும் அந்த நினைவு சின்னம் என்ன?” என்று கேட்டான்.

நகர ஜனங்கள் அவனிடம், “இது யூதாவிலிருந்து வந்த ஒரு தேவமனிதரின் (தீர்க்கதரிசியின்) கல்லறை. பெத்தேல் என்னும் பலிபீடத்தில் நீ செய்தவற்றைப் பற்றி இவர் முன்னரே கூறியுள்ளார்” என்றனர்.

18 யோசியா, “அவரது கல்லறையை விட்டுவிடுங்கள். அவரது எலும்புகளை எடுக்கவேண்டாம்” என்று கூறினான். எனவே அவனது எலும்புகளை சமாரியாவிலிருந்து வெளியே வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு அவர்கள் விட்டுவிட்டனர்.

19 யோசியா சமாரியாவிலுள்ள பொய்த் தெய்வங்களின் மேடைகளையும் அழித்துப்போட்டான். இஸ்ரவேல் அரசர்கள் அவற்றைக் கட்டியிருந்தனர். இதனால் கர்த்தருக்குப் பெருங்கோபம் உண்டாகி இருந்தது. பெத்தேலில் உள்ளவற்றை அழித்தது போலவே, யோசியா இவற்றையும் அழித்துவிட்டான்.

20 சமாரியாவின் பொய்த் தெய்வங்களுக்குத் தொழுகைச்செய்த ஆசாரியர்கள் அனைவரையும் யோசியா கொன்றான். பலிபீடங்களைக் கவனித்த ஆசாரியர்களையும் கொன்றான். மனித எலும்புகளை பலி பீடத்தின் மேல் எரித்தான். இவ்வாறு தொழுகைக்குரிய இடங்கள் எல்லாவற்றையும் கறைப்படுத்தினான். பின் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றான்.

யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது

21 யோசியா அரசன் ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான்.

22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் அரசர்களோ யூத அரசர்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. 23 யோசியாவின் 18வது ஆட்சியாண்டில் அவர்கள் எருசலேமில் கர்த்தருக்காக பஸ்கா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

24 யோசியா, இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஜனங்களால் தொழுதுகொண்டு வந்த சிறு தெய்வங்களையும் மற்ற மந்திரவாதிகளையும் குறிச்சொல்லுகிறவர்களையும் விக்கிரகங்களையும் அழித்துவிட்டான். இவன், அதனை இல்க்கியாவால் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படியவே இவ்வாறு நடந்துக்கொண்டான்.

25 யோசியாவைப்போன்ற ஒரு அரசன் இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த அரசனும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை.

26 ஆனாலும் கர்த்தர் யூத ஜனங்கள் மீது தான் கொண்டக் கோபத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. மனாசே செய்த அனைத்து செயல்களுக்காக கர்த்தர் அவர்கள் மீது இன்னமும் கோபங்கொண்டிருந்தார். 27 கர்த்தர், “நான் இந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலர்களை அகற்றிவிட்டேன். இதையே யூதர்களுக்கும் செய்வேன். அவர்களை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவேன். என்னால் எருசலேமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்குள்ள ஆலயத்தை நான் அழிப்பேன். ‘என் பெயர் அங்கு இருக்கவேண்டும்’ என்று நான் சொன்ன போது குறிபிட்டது இந்த இடத்தை தான்” என்றார்.

28 யோசியா செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

யோசியாவின் மரணம்

29 யோசியாவின் காலத்தில், எகிப்திய அரசனான பார்வோன்நேகோ ஐபிராத்து ஆற்றுக்கு அசீரியாவின் அரசனுக்கு எதிராக போரிடச்சென்றான். யோசியா பார்வோனுக்கு எதிராகப் போரிடப்போனான். ஆனால் மெகிதோ என்ற இடத்தில் யோசியாவை பார்வோன்நேகோ கண்டதும் கொன்றுவிட்டான். 30 மரித்துப்போன யோசியாவின் உடலை அவனது வேலைக்காரர்கள் மெகிதோவிலிருந்து எருசலேமிற்குத் இரதத்தில் எடுத்துச் சென்றனர். அவனது சொந்தக் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.

பிறகு பொது ஜனங்கள் யோசியாவின் மகனான யோவாகாசை அரசனாக அபிஷேகம் செய்து அவனைப் புதிய அரசனாக்கினர்.

யோவாகாஸ் யூதாவின் அரசனாகிறான்

31 யோவாகாஸ் அரசனானபோது, அவனுக்கு 23 வயது. இவன் எருசலேமை மூன்று மாதங்கள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள் ஆவாள். 32 தவறானவை என்று கர்த்தரால் சொல்லப்பட்டக் காரியங்களையே யோவாகாஸ் செய்துவந்தான். தன் முற்பிதாக்கள் செய்த அதேப் பாவங்களையே அவனும் செய்து வந்தான்.

33 பார்வோன் நேகோ, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் யோவாகாசைப் பிடித்துக்கட்டினான். இதனால் அவனால் எருசலேமை ஆள முடியவில்லை. பார்வோன் நேகோ யூதாவை வற்புறுத்தி 100 தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாக பெற்றான்.

34 பார்வோன் நேகோ யோவாகாசின் மகனான எலியாக்கீமை புதிய அரசனாக்கினான். எலியாக்கீம் தன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். பார்வோன் நேகோ எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். பார்வோன் யோவாகாசை எகிப்துக்கு கொண்டுபோனான். அங்கேயே அவன் மரணமடைந்தான். 35 யோயாக்கீம் பார்வோன் நேகோவிற்கு வெள்ளியும் பொன்னும் அபராதமாக செலுத்தி வந்தான். இவன் இந்த அபராதத்தை ஜனங்கள் மீது வரியாகச் சுமத்தினான். எனவே நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் பொன்னும் வெள்ளியும் கொடுக்க வேண்டிவந்தது. இவற்றைத் தொகுத்து அதை அவன் பார்வோன் நேகோவிற்கு செலுத்தினான்.

36 யோயாக்கீம் அரசனானபோது அவனுக்கு 25 வயது. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் செபுதாள் ஆகும். அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாமின் மகள் ஆவாள். 37 தவறானவையென்று கர்த்தரால் குறிக்கப்பட்ட காரியங்களையே அவனும் செய்து வந்தான். தன் முற்பிதாக்களைப் போலவே அதே செயல்களைச் செய்தான்.

யோவான் 4:31-54

31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.

32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.

33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.

39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.

42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.

அதிகாரியின் மகன் குணப்படுதல்(A)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் மகன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center