Old/New Testament
சமாரியாவின் தலைவர்களுக்கு யெகூ எழுதியது
10 ஆகாபின் 70 மகன்கள் (பேரன்கள்) சமாரியாவில் இருந்தனர். யெகூ, சமாரியாவில் அவர்களை வளர்க்கிறவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும், தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதி அனுப்பினான். 2-3 அதில் “இக்கடிதம் கண்டதும், உங்கள் எஜமானனுடைய பிள்ளைகளில் மிக நல்லவனும் மிகத் தகுதியானவனுமாகிய ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் இரதங்களும் குதிரைகளும் இருக்கின்றன. நீங்கள் பலப்படுத்தப்பட்ட நகரத்தில் இருக்கின்றீர்கள். உங்களிடம் ஆயுதங்களும் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுத்தவனை அவனுடைய தந்தையின் சிங்காசனத்தில் உட்கார வையுங்கள். பின் உங்கள் தந்தையின் குடும்பத்திற்காகப் போராட வாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
4 ஆனால் யெஸ்ரயேலில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் பயந்தனர். அவர்கள் “யெகூவை இரண்டு அரசர்களாலும் தடுக்க முடியவில்லை, எங்களாலும் முடியாது!” என்று சொன்னார்கள்.
5 ஆகாபின் வீட்டைப் பாதுகாத்தவர்களும் நகரத்தைப் பரிபாலித்தவர்களும் மூப்பர்களும் ஆகாபின் மகன்களைக் கவனிப்பவர்களும் யெகூவிற்குத் தூது அனுப்பி, “நாங்கள் உங்கள் சேவகர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்கிறோம். வேறு எவரையும் அரசனாக்கமாட்டோம். நீங்கள் நல்லதென நினைப்பதை செய்யுங்கள்” என்றனர்.
சமாரியாவின் தலைவர்கள் ஆகாபின் மகன்களைக் கொல்கிறார்கள்
6 பிறகு யெகூ அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினான். அதில், “நீங்கள் எனக்கு அடிபணிந்து உதவுவதாக இருந்தால், ஆகாப் மகன்களின் தலையை வெட்டிப்போடுங்கள். நாளை இந்நேரத்திற்குள் அவர்களை என் முன்னால் யெஸ்ரயேலுக்கு கொண்டு வாருங்கள்” என்றான்.
ஆகாபுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவர்கள் நகரத் தலைவர்களால் வளர்க்கப்பட்டனர். 7 அவர்கள் யெகூவின் கடிதத்தைக் கண்டதும், அந்த 70 மகன்களையும் கொன்றுபோட்டனர். தலைகளைக் கூடைகளுக்குள் போட்டு யெஸ்ரயேலிலுள்ள யெகூவிடம் அனுப்பினார்கள். 8 ஒரு தூதுவன் யெகூவிடம் வந்து, “அவர்கள் அரசனது மகன்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான்.
யெகூ, “விடியும்வரை நகர வாசலில் இரண்டு குவியலாக அத்தலைகளை வைத்திருங்கள்” என்று கட்டளையிட்டான்.
9 காலையில், யெகூ வெளியே வந்து ஜனங்கள் முன்பு நின்றான். அவன் ஜனங்களிடம், “நீங்கள் ஏதும் அறியாதவர்கள். நான் என் எஜமானனுக்கு எதிராகத் திட்டங்கள் பல வைத்திருந்தேன். நான் அவனைக் கொன்றேன். ஆனால் அவனது பிள்ளைகளைக் கொன்றது யார்? அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் தான்! 10 கர்த்தர் சொன்னபடி எல்லாம் நடக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். ஆகாபின் குடும்பத்தைப் பற்றி கர்த்தர் எலியாவின் மூலம் கூறியிருக்கிறார். இப்போது கர்த்தர் தான் செய்வதாகச் சொன்னவற்றைச் செய்து முடித்துள்ளார்” என்றான்.
11 இவ்வாறு யெகூ யெஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். அதோடு முக்கியமான மனிதர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஆசாரியர்களையும் கொன்றுப் போட்டான். ஆகாபின் ஆட்கள் யாருமே உயிரோடு விடப்படவில்லை.
அகசியாவின் உறவினர்களை யெகூ கொன்றது
12 யெகூ யெஸ்ரயேலை விட்டு சமாரியாவிற்குப் போனான். வழியில் மேய்ப்பனின் முகாம் என்று அழைக்கப்படும் இடத்தில் நின்றான். பெத்ஏகத்திற்குச் செல்லும் பாதையின் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றான். அங்கே மேய்ப்பர்கள் ஆட்டு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தார்கள். 13 யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்களை அங்கே சந்தித்தான். யெகூ அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?” என்றான்.
அதற்கு அவர்கள் “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். நாங்கள் அரசனின் மகன்களையும் ராஜ மாதாவின் (யேசபேல்) மகன்களையும் பார்ப்பதற்கு வந்திருக்கிறோம்” என்றனர்.
14 யெகூ (தன் ஆட்களிடம்) “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கூறினான்.
அவனது ஆட்கள் அவர்களை உயிரோடு பிடித்தனர். அவர்கள் மொத்தம் 42 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி பெத்ஏகத் கிணறுக்கு அருகில் அவர்களை கொன்றுபோட்டனர்.
யெகூ யோனதாபை சந்தித்தது
15 அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, “நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?” என்று கேட்டான்.
யோனதாபும், “ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்” என்றான்.
யெகூ, “அப்படியானால் உன் கையைக் கொடு” என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.
16 யெகூ, “என்னோடு வா, நான் கர்த்தரிடம் எவ்வளவு உறுதியான பக்தி வைத்திருக்கிறேன் என்று அறிந்துகொள்ளலாம்” என்றான்.
எனவே யோனதாப் யெகூவின் இரதத்தில் பயணம் செய்தான். 17 யெகூ சமாரியாவிற்கு வந்து அங்கு உயிரோடுள்ள ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றுபோட்டான். கர்த்தர் எலியாவிடம் சொன்னபடியே அவன் செய்து முடித்தான்.
பாகாலின் பக்தர்களை யெகூ அழைத்தது
18 பிறகு யெகூ அனைத்து ஜனங்களையும் சேர்த்துக் கூட்டினான். அவன் அவர்களிடம், “ஆகாப், பாகாலுக்குச் சிறிது சேவைசெய்தான். ஆனால் யெகூ அவனுக்கு மேல் இன்னும் கூடுதலாக சேவை செய்வான்! 19 இப்போது பாகாலின் பக்தர்களையும் ஆசாரியர்களையும் கூப்பிடுங்கள். இக்கூட்டத்திற்கு யாரையும் தவறவிடாதீர்கள். பாகாலுக்குக் கொடுக்க பெரும்பலி இருக்கிறது!. இக்கூட்டத்திற்கு வராதவர்களைக் கொல்வேன்!” என்று ஆணையிட்டான்.
இவ்வாறு யெகூ தந்திரம் செய்தான். அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதுதான் அவனது திட்டம். 20 யெகூ, அவர்களிடம், “பாகாலுக்காக ஒரு பரிசுத்த கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். ஆசாரியர்களும் அறிவித்தனர். 21 பிறகு யெகூ இஸ்ரவேல் நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பினான். பாகாலின் பக்தர்கள் அனைவரும் வந்தனர். எவரும் வீட்டிலே இல்லாமல் பாகாலின் ஆலயத்திற்கு வந்தனர். ஆலயம் ஜனங்களால் நிரம்பியது.
22 யெகூ மேலாடைகளை வைத்திருந்த வேலைக்காரனிடம், “பாகாலின் பக்தர்களுக்கெல்லாம் மேலாடைகளைக் கொண்டு வா” என்று சொன்னான். எனவே அந்த வேலைக்காரனும் பாகாலின் பக்தர்களுக்கு மேலாடைகளைக் கொண்டு வந்தான்.
23 பிறகு யெகூவும் ரேகாபின் மகனான யோனதாபும் பாகாலின் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். பாகாலின் தொண்டர்களிடம், “இங்கே பாகாலின் பக்தர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதை சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியர்கள் இருக்கக் கூடாது” என்று ஆணையிட்டான். 24 அதன்படி பாகாலின் பக்தர்கள் காணிக்கைகளையும் தகனபலிகளையும் செலுத்த ஆலயத்திற்குள் சென்றனர்.
வெளியே, யெகூவின் 80 ஆட்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “யாரையும் தப்பித்து போகும்படி விடாதீர்கள். எவனாவது எவனையாவது தப்பிக்கவிட்டால், அவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டும்” என்றான். 25 பிறகு யெகூ விரைவாகத் தகனபலி கொடுத்தபின், தனது அதிகாரிகளிடமும் தளபதிகளிடமும், “உள்ளே போய் அனைவரையும் கொல்லுங்கள், உயிரோடு எவனையும் வெளியே வரவிடாதீர்கள்” என்றான்.
எனவே தளபதிகள் தம் மெலிந்த வாள்களால் பாகாலின் பக்தர்களைக் கொன்று போட்டு பிணங்களை வெளியே எறிந்தனர். பின் ஆலயத்தின் உள்ளறைக்குள் சென்றனர். 26 ஞாபகக்கற்களை (தூண்கள்) பாகாலின் வீட்டைவிட்டு வெளியே எடுத்துப்போட்டு அவற்றை எரித்தனர். 27 பிறகு பாகாலின் நினைவுக் கற்களையும் பாகாலின் வீட்டினையும் நொறுக்கினார்கள். ஆலயத்தை ஓய்வறையாக ஒதுக்கினார்கள். எப்போதும் அசுத்தமாக வைத்திருந்தனர். ஜனங்கள் அந்த இடத்தை கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
28 இவ்வாறு யெகூ பாகால் ஆராதனையை இஸ்ரவேல் நாட்டில் அழித்தான். 29 ஆனால் யெகூ முழுவதுமாக நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களிலிருந்து திரும்பவில்லை. இஸ்ரவேலின் பாவத்துக்குக் காரணமான பெத்தேல், தாண் ஆகிய இடங்களில் உள்ள தங்கக் கன்றுக் குட்டிகளை அவன் அழிக்கவில்லை.
இஸ்ரவேல் மீது யெகூவின் ஆட்சி
30 கர்த்தர் யெகூவிடம், “நல்லது செய்தாய், நான் நல்லவை எனச் சொன்னதைச் செய்தாய். நீ ஆகாபின் குடும்பத்தினரை அழித்துவிட்டாய். எனவே இஸ்ரவேலை உனது சந்ததியார், நான்கு தலை முறைகளுக்கு ஆண்டு வருவார்கள்” என்றார்.
31 ஆனால் யெகூ முழுமனதோடு கர்த்தருடைய சட்டப்படி கவனமாக வாழவில்லை. அவன் யெரொபெயாமின் பாவங்களை விட்டுவிடவில்லை.
ஆசகேல் இஸ்ரவேலைத் தோற்கடித்தது
32 அப்போது கர்த்தர் இஸ்ரவேலின் பகுதிகள் குறைந்துபோகும்படி செய்தார். இஸ்ரவேலின் ஒவ்வொரு எல்லையையும் ஆராமின் அரசனான ஆசகேல் தாக்கி தோல்வியடையச் செய்தான். 33 ஆசகேல் யோர்தான் ஆற்று கிழக்குப் பகுதிகள் அது கீலேயாத்தின் அனைத்து பகுதிகளும் காதியர், ரூபேனியர், மனாசேயர் கோத்திரங்களின் பகுதிகளையும் வென்றான். அவன் ஆரோவேர் முதல் கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள பகுதிகள் முழுவதையும் வென்றான்.
யெகூவின் மரணம்
34 யெகூ செய்த பிற அருஞ்செயல்களை எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகம் கூறுகிறது. 35 இவன் மரித்ததும் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் சமாரியாவில் இவனுடைய முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். இவனுக்குப் பிறகு இவனது மகன் யோவாகாஸ் புதிய அரசன் ஆனான். 36 யெகூ சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை 28 ஆண்டுகள் ஆண்டு வந்தான்.
யூதா அரசனின் அனைத்து மகன்களையும் அத்தாலியாள் கொன்றது
11 அத்தாலியாள் என்பவள் அகசியாவின் தாயார் ஆவாள். தன் மகன் மரித்துப் போனதைப் பார்த்ததும், எழுந்து அரச குடும்பத்தினரையெல்லாம் கொன்றாள்.
2 அரசனான யோராமின் மகள் யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா அரசனின் மகன்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.
3 பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் யோவாசும் யோசேபாவும் ஆறு ஆண்டுகள் மறைந்து இருந்தனர். அத்தாலியா யூதாவை ஆண்டு வந்தாள்.
4 ஏழாவது ஆண்டில், தலைமை ஆசாரியனான யோய்தா 100 பேருக்கு அதிகாரிகளையும் தலைவர்களையும் காவலர்களையும் ஒருங்கே அழைத்தான். கர்த்தருடைய ஆலயத்தில் கூடச்செய்து அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். அவர்களை ஆலயத்தில் வாக்குறுதி கொடுக்கச் செய்து அரசனின் மகனைக் காட்டினான்.
5 பின் அவன் அவர்களுக்கு ஆணையிட்டு, “நீங்கள் செய்யவேண்டிய காரியம் இதுதான். உங்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு ஓய்வு நாளில் முறைப்படி வரவேண்டும். அரசனின் வீட்டை கவனித்து வரவேண்டும். 6 இன்னொரு மூன்றில் ஒரு பங்கினர் சூர் வாசலில் இருக்க வேண்டும். மூன்றில் மற்றொரு பங்கினர் காவலர்களுக்குப் பின்னாலுள்ள வாசலில் இருக்க வேண்டும். இவ்வாறு நீ அரசனின் வீட்டைச் சுற்றி சுவர்போல இருக்க வேண்டும. 7 ஒவ்வொரு ஓய்வுநாளும் முடியும்போது, மூன்றில் இரண்டு பங்கினர் கர்த்தருடைய ஆலயத்தையும் அரசன் யோவாசையும் பாதுகாத்து நிற்பார்கள். 8 நீங்கள் அரசன் யோவாசோடு தங்கி அவன் எங்கு போனாலும் போகவேண்டும். அவர்கள் எப்போதும் அவனைச் சுற்றியே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் ஆயுதம் வைத்திருக்கவேண்டும். உங்களை நெருங்குகிற எவரையும் கொன்று விடவேண்டும்” என்றான்.
9 ஆசாரியன் யோய்தாவின் ஆணைப்படி தளபதிகள் செயல்பட்டார்கள். ஒவ்வொரு வரும் தம் ஆட்களை அழைத்தனர். சனிக்கிழமை ஒரு குழு யோவாசை பாதுகாத்தது. மற்ற குழுக்கள் மற்ற நாட்களில் காவல் காத்துவந்தனர். எல்லோரும் ஆசாரியன் யோய்தாவிடம் வந்தனர். 10 ஆசாரியனோ தளபதிகளுக்கு ஈட்டி கேடயம் போன்றவற்றைக் கொடுத்தான். இவை அனைத்தும் அரசன் தாவீதால் ஒரு காலத்தில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 11 இக்காவலர்கள் ஆயுதங்களோடு வலது மூலையிலிருந்து ஆலயத்தின் இடது மூலைவரை நின்றனர். பலிபீடம், ஆலயம் போன்றவற்றைச் சுற்றிலும் நின்றனர். அரசன் ஆலயத்திற்குப் போகும்போதும் அவனைச் சுற்றி நின்றனர். 12 அவன் (யோய்தா) யோவாசை வெளியே அழைத்து வந்தான். அவன் தலையில் மகுடத்தைச் சூடி அரசனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒப்பந்தத்தை கொடுத்தனர். அவனுக்கு அபிஷேகம் செய்து புதிய அரசனாக நியமித்தனர். அவர்கள் கைகளைத் தட்டி, ஓசையெழுப்பி “அரசன் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
13 அரசி அத்தாலியாள் காவலர்களிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் எழுந்த இச்சத்தத்தை கேட்டாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போனாள். 14 அரசன் வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அரசனுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் “துரோகம்! துரோகம்!” என்று கத்தினாள்.
15 படைவீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிகளுக்கு ஆசாரியன் யோய்தா கட்டளையிட்டான். யோய்தா, “ஆலயத்தை விட்டு வெளியே அத்தாலியாளைக் கொண்டு வாருங்கள். அவளைச் சார்ந்தவர்களைக் கொல்லுங்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.
16 எனவே அவளை ஆலயத்தைவிட்டு வெளியே “குதிரை வாசலுக்கு” இழுத்து வந்து அங்கே அவளைக் கொன்றனர்.
17 பிறகு கர்த்தருக்கும் அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி அரசனும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி அரசன் ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.
18 பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர்.
கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான். 19 ஆசாரியன் ஜனங்களை வழிநடத்தினான். அவர்கள் கர்த்தரின் ஆலயத்திலிருந்து அரசனின் வீட்டிற்குச் சென்றனர். அரசனோடு சிறப்பு காவலர்களும் அதிகாரிகளும் சென்றனர். அவன் அரசனது வீட்டின் வாசலுக்குச் சென்றான். பிறகு (அரசன் யோவாஸ்) அவன் சிங்காசனத்தில் அமர்ந்தான். 20 ஜனங்கள் அனைவரும் மகிழ்ந்தனர். நகரம் சமாதானமாயிருந்தது. வாளால் கொல்லப்பட்ட அரசி அத்தாலியாள் அரண்மனைக்கருகில் கொல்லப்பட்டாள்.
21 யோவாஸ் அரசனாகும்போது அவனுக்கு ஏழு வயது.
யோவாஸ் தன் ஆட்சியைத் தொடங்கியது
12 இஸ்ரவேலில் யெகூ தன் ஆட்சியை ஏழாம் ஆண்டில் நடத்திக்கொண்டிருக்கும்போது, யோவாஸ் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். பெயெர்செபாவிலுள்ள சிபியாள் என்பவள்தான் யோவாசின் தாயார். 2 கர்த்தர் சொன்ன நல்ல செயல்களை மட்டுமே யோவாஸ் செய்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு அடிபணிந்து வந்தான். யோய்தா எனும் ஆசாரியன் அவனுக்கு கற்றுத் தந்ததையே கடைபிடித்தான். 3 ஆனால் அவன் மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் பொய்த் தெய்வங்களை தொழுதுக்கொள்ளும் இடங்களில் பலிகொடுப்பதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.
ஆலயத்தைச் செப்பனிட யோவாஸ் ஆணையிட்டான்
4-5 யோவாஸ் ஆசாரியர்களிடம், “கர்த்தருடைய ஆலயத்தில் அதிக பணம் இருக்கிறது. ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு பரிசுத்தக் காணிக்கையாகப் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆலயவரி மற்றும் தம் விருப்பம்போல் கணக்குப் பார்க்கப்படும்பொழுதெல்லாம் அவர்கள் அதை செலுத்தியுள்ளார்கள். மற்றும் தம் விருப்பம்போலவும் பணம் தருகின்றனர். ஆசாரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு அறிமுகமான ஒவ்வொருவரிடமிருந்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பணத்தைக் கொண்டுத் தேவையான இடத்தில் ஆலயப்பணி செய்யவேண்டும்” என்றான்.
6 ஆனால் ஆசாரியர்கள் பழுது பார்க்கவில்லை. யோவாஸ் தனது 23வது ஆட்சியாண்டில் கூட அவர்கள் ஆலயப்பணி செய்யவில்லை. 7 எனவே யோவாஸ் அரசன் யோய்தா ஆசாரியனையும் மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, “ஏன் நீங்கள் ஆலயத் திருப்பணிகள் செய்யவில்லை? ஜனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள். ஜனங்களின் பணம் ஆலயத் திருப்பணிக்கே பயன்பட வேண்டும்” என்றான்.
8 ஜனங்களிடமிருந்து பணம் பெறுவதை நிறுத்திவிடுவதாக ஆசாரியர்கள் ஒப்புக்கொண்டனர். அதோடு ஆலயத்தைச் செப்பனிடும் பணியைச் செய்வதில்லை என்றும் முடிவுச்செய்தனர். 9 எனவே, ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மேல் பகுதியில் துவாரமிட்டான். அதனைப் பலிபீடத்தின் தென்பகுதியில் வைத்தான். அப்பெட்டி கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் கதவுக்கருகில் இருந்தது. சில ஆசாரியர்கள் வாசலைக் காவல் செய்தனர். அவர்கள் கர்த்தருக்காக ஜனங்கள் தரும் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டனர்.
10 பிறகு ஜனங்களே ஆலயத்திற்குப் போகும்போதெல்லாம் பணத்தைப் பெட்டிக்குள் போட ஆரம்பித்தனர். பெட்டியில் ஏராளமான பணம் இருப்பதை அரசனின் எழுத்தரும் (செயலாளர்) தலைமை ஆசாரியரும் பார்த்தால் அவர்கள் வந்து பெட்டியைத் திறந்து பணத்தை எடுப்பார்கள். அவர்கள் அப்பணத்தை பைகளில் போட்டு எண்ணினார்கள். 11 அப்பணம் எடை போடப்பட்டவுடன் அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்தனர். ஆலயத்தில் பணியாற்றும் தச்சர்கள், கட்டிட வேலைக்காரர்கள் போன்றோருக்கு அப்பணத்தைக் கொடுத்தனர். 12 அப்பணத்தைக் கல்வேலை செய்பவர்களும் பெற்றனர். இப்பணத்தின் மூலம் மரங்கள், கற்கள், கர்த்தருடைய ஆலய கட்டிடத்திற்கு பழுதுபார்க்கத் தேவையான மற்ற பொருட்களையும் வாங்கினார்கள்.
13-14 ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காகப் பணத்தைக் கொடுத்தனர். வெள்ளிக் கிண்ணங்கள், இசைக்கருவிகள், எக்காளங்கள், பொன் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய ஆசாரியர்களால் அப்பணத்தை உபயோகிக்க முடியாமல் போனது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே இப்பணம் உபயோகமானது. அந்த வேலைக்காரர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள். 15 எவரும் பணமுழுவதையும் எண்ணிப் பார்க்கவில்லை. பணத்தை என்ன செய்தார்கள் என வேலைக்காரர்களை வற்புறுத்தவும் இல்லை. ஏனெனில் அவ்வேலைக்காரர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்!
16 குற்றப்பரிகாரப் பலியாகவும், பாவப்பரிகாரப் பலியாகவும் ஜனங்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் அப்பணத்தை ஆலயத் திருப்பணி செய்யும் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் தர பயன்படுத்தவில்லை. அது ஆசாரியர்களுக்கு உரியதாக இருந்தது.
ஆசகேலிடமிருந்து எருசலேமை யோவாஸ் காப்பாற்றுகிறான்
17 ஆசகேல் ஆராம் நாட்டு மன்னன். அவன் காத்தூர் நகரத்தோடு போரிடச் சென்றான். அதனைத் தோற்கடித்த பின் எருசலேமோடு போரிடத் திட்டமிட்டான்.
18 யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் முன்பு யூதாவை ஆண்டனர். இவர்கள் யோவாசின் முற்பிதாக்கள். அவர்கள் கர்த்தருக்கு நிறைய பொருட்களைக் கொடுத்திருந்தனர். அவை ஆலயத்தில் இருந்தன. யோவாசும் ஆலயத்திற்குப் பொருட்களைக் கொடுத்திருந்தான். யோவாஸ் தன் அரண்மனை வீட்டிலும் ஆலயத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் சேர்த்து ஆராம் (சீரியா) அரசன் ஆசகேலுக்குக் கொடுத்தனுப்பினான். ஆசகேல் எருசலேமுக்கு எதிராகப் போரிடவில்லை. அவன் வெளியேப் போனான்.
யோவாசின் மரணம்
19 யோவாஸ் செய்த பெருமைக்குரிய செயல்களெல்லாம் யூதா அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
20 யோவாசின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) அவனுக்கெதிராகச் சதி செய்தனர். அவர்கள் அவனை சில்லாவுக்குப் போகும் வழியில் உள்ள மில்லோ வீட்டிலே கொன்றனர். 21 சிமியாதின் மகனான யோசகாரும் சோமேரின் மகனான யோசபாத்தும் யோவாசின் அதிகாரிகள். இவர்களே யோவாசைக் கொன்றனர்.
தாவீது நகரத்தில் ஜனங்கள் யோவாசை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். யோவாசின் மகனான அமத்சியா அடுத்த புதிய அரசன் ஆனான்.
இயேசு, தேவ ஆட்டுக்குட்டி
29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’ 31 இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும்.
32-33 “கிறிஸ்து யாரென்று நானும் அறியாமல்தான் இருந்தேன். ஆனால் தேவன் என்னைத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். ‘நீ யார் மீது பரிசுத்த ஆவியானர் இறங்கி அமர்வதைக் காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்’ என்று தேவன் என்னிடம் கூறினார்” என்றான். “நான் அவ்வாறு நிகழ்வதைப் பார்த்தேன். ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அந்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் இறங்கி இயேசுவின் மீது அமர்ந்தார். 34 நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ‘இயேசுதான் தேவனின் குமாரன்’” என்று யோவான் சொன்னான்.
இயேசுவின் முதல் சீஷர்கள்
35 மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். 36 இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.
37 அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். 38 “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார்.
அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
39 “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி.
40 இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான்.
42 பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய மகனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)
43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 44 பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”
46 ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான்.
“வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.
47 நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார்.
48 “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான்.
பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.
49 பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் அரசன்” என்று நாத்தான்வேல் கூறினான்.
50 “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். 51 அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” [a] என்றார்.
2008 by World Bible Translation Center