Old/New Testament
16 பிறகு கர்த்தர் ஆனானியின் மகனான யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: 2 “நான் உன்னை ஒரு முக்கியமான மனிதனாகச் செய்தேன். உன்னை இஸ்ரவேலின் அரசனாக்கினேன். ஆனால் நீ யெரொபெயாமின் வழியில் என் ஜனங்களை பாவத்துக்குள்ளாக்குகிறாய். இது எனக்குப் பெரும்கோபத்தை உண்டாக்கிற்று. 3 எனவே நான் பாஷாவையும் அவனது குடும்பத்தையும் அழிப்பேன். நான் நாபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோலவே செய்வேன். 4 இந்நகரத் தெருக்களில் நாய்கள் உண்ணும்படி உன் குடும்பத்தினர் சிலர் மரிப்பார்கள். இன்னும் சிலர் வயல்வெளிகளில் மரிப்பார்கள். அவர்கள் பிணங்களைப் பறவைகள் தின்னும்.”
5 பாஷாவைப்பற்றிய அவன் செய்த பெருஞ் செயல்களைப்பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 6 பாஷா மரித்ததும் திர்சா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனது மகனான ஏலா அடுத்த அரசனானான்.
7 எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் மகனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.
இஸ்ரவேலின் அரசனான ஏலா
8 யூதாவின் அரசனான ஆசா 26ஆம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் அரசனானான். பாஷாவின் மகனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான்.
9 சிம்ரி ஏலாவின் அதிகாரிகளுள் ஒருவன். இரதப் படையின் பாதிக்குத் தளபதி. இவன் ஏலாவிற்கு எதிராகக் திட்டமிட்டான். அரசன் திர்சாவில் அர்சாவின் வீட்டில் குடித்தும் குடிக்க வைத்துக்கொண்டும் இருந்தான். அர்சா அரண்மனை பொறுப்பாளி. 10 சிம்ரி அந்த வீட்டிற்குப்போய் அரசனைக் கொன்றுவிட்டான். இது யூதாவின் அரசனாக ஆசா 27ஆம் ஆண்டில் இருந்தபோது நடந்தது. பின்னர் சிம்ரி அடுத்து அரசனானான்.
இஸ்ரவேலின் அரசனான சிம்ரி
11 சிம்ரி அரசனானதும், பாஷாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. பாஷாவின் நண்பர்களையும் கொன்றான். 12 இது பாஷாவிக்கு எதிராக யெகூ தீர்க்கதரிசியிடம் கர்த்தர் சொன்னதுபோலவே ஆயிற்று. 13 இது, பாஷாவும் அவனது மகன் ஏலாவும் செய்த பாவத்தால் ஆயிற்று. அவர்கள் தாம் பாவம் செய்ததோடு இஸ்ரவேல் ஜனங்களும் பாவம் செய்ய காரணமானார்கள். அவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து தொழுதுகொண்டதால் கர்த்தரால் கோபம்கொள்ளக் காரணமானார்கள்.
14 ஏலா செய்த பிறசெயல்கள் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
15 யூதாவின் அரசனாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி அரசனானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள். 16 சிம்ரி அரசனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் அரசனைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான். 17 ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள். 18 சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான். 19 தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான்.
20 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது.
இஸ்ரவேலின் அரசனான உம்ரி
21 இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் மகனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் அரசனாக்க விரும்பினார்கள். 22 ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி அரசனானான்.
23 யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் அரசனாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். 24 உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.
25 உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். 26 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான்.
27 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. 28 உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது மகன் ஆகாப் புதிய அரசனானான்.
இஸ்ரவேலின் அரசனான ஆகாப்
29 யூதாவின் அரசனான ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய அரசனானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் அரசனான ஏத்பாகாலின் மகள் யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் அரசனாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தமகனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய மகன் செகூப் மரித்தான். நூனின் மகனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
எலியாவும் மழையற்ற காலமும்
17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் அரசனான ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.
2 பிறகு கர்த்தர் எலியாவிடம், 3 “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். 5 எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். 6 ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.
7 மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. 8 கர்த்தர் எலியாவிடம், 9 “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.
10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.
12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் மகனும் மரிக்கவேண்டும்” என்றாள்.
13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.
15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் மகனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.
17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் மகன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் மகனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
19 எலியா அவளிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? மகன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.
22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் மகன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.
எலியாவும் பாகாலின் தீர்க்கதரிசிகளும்
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம், “போய் ஆகாப் அரசனைப் பார். நான் மழையை அனுப்புவேன்” என்றார். 2 எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான்.
அப்போது, சமாரியாவில் உணவே இல்லை. 3 எனவே அரசன் அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன். 4 ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.) 5 அரசன் ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான். 6 நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள். 7 ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், “எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா?” என்று கேட்டான்.
8 அதற்கு எலியா, “ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் அரசனிடம் கூறு” என்றான்.
9 பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் அரசனிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? 10 தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். அரசன் உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு அரசனிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்! 11 நான் அரசனிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால் 12 பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, அரசன் உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன். 13 நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன். 14 இப்போது நீர் இங்கிருப்பதாக அரசனிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான்.
15 எலியாவோ, “சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் அரசன் முன்பு நிற்பேன்” என்றான்.
16 எனவே ஒபதியா அரசனிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். அரசனும் எலியாவைப் பார்க்க வந்தான்.
17 அரசன் எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான்.
18 அதற்கு எலியா, “இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள். 19 இப்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் என்னை கர்மேல் மலையில் சந்திக்கும்படி கூறுங்கள். பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் வரட்டும். ஆஷரா பொய்த்தேவதை அரசியின் ஆதரவு பெற்ற 400 தீர்க்கதரிசிகளும் வரட்டும். இந்த தீர்க்கதரிசிகள் அரசி யேசபேலின் உதவிபெற்றவர்கள்” என்றான்.
20 எனவே ஆகாப் அனைத்து இஸ்ரவேலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தான். 21 எலியா அங்கு வந்து, “யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!” என்றான்.
ஜனங்கள் எதுவும் கூறவில்லை. 22 எனவே எலியா, “நான் இங்கு கர்த்தருடைய ஒரே தீர்க்கதரிசி. நான் தனியாக இருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு 450 தீர்க்கதரிசிகள் உள்ளனர். 23 எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம், பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன். 24 பாகால் தீர்க்கதரிசிகளே, நீங்கள் உங்கள் தெய்வத்தை நோக்கி ஜெபியுங்கள். நான் என் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன். அந்த ஜெபத்திற்கு செவிசாய்த்து விறகுகளைத்தானாக எரிய வைக்கிறவரே உண்மையான தேவன்” என்றான்.
இது நல்ல திட்டம் என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
25 எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்” என்றான்.
26 அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். “பாகால் எங்களுக்கு பதில் கூறும்!” என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை.
27 எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான். 28 அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர். 29 மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை!
30 இப்போது எலியா ஜனங்களிடம், “இப்போது என்னிடம் வாருங்கள்” என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான். 31 எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 மகன்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார். 32 எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதைச்சுற்றிலும் குழி அமைத்தான். 7 கலன் தண்ணீர் பிடிக்குமாறு அக்குழி இருந்தது. 33 பின் பலிபீடத்தில் விறகை வைத்து, காளையைத் துண்டுகளாக்கி மேலே வைத்தான். 34 எலியா, “ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்” என்று சொன்னான். அவன், “மீண்டும் செய்க” என்றான். பிறகு அவன், “மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்” என்று சொன்னான். 35 அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது.
36 இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். “கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும். 37 கர்த்தாவே! என் ஜெபத்திற்கு பதில் சொல்லும். பிறகு அவர்கள் கர்த்தாவே நீர்தான் தேவன், என்று அறிவார்கள். நீர் அவர்களது இதயங்களை மீண்டும் திருப்பிக்கொண்டிருக்கிறீர்” என்றான்.
38 எனவே கர்த்தர் நெருப்பை அனுப்பினார். மாமிசம், விறகு, பலிபீடம், பலீபீடத்தைச் சுற்றிய இடமும் பற்றி எரிந்தது. தண்ணீரும் வற்றியது. 39 அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, “கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்” என்றனர்.
40 பிறகு எலியா, “பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தப்பிவிடாதபடி பிடியுங்கள்!” என்றான். ஜனங்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் கீசோன் என்ற இடத்தில் கொன்றனர்.
மழை மீண்டும் வந்தது
41 எலியா ஆகாப் அரசனிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான். 42 எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து, 43 தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான்.
வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல, 44 ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான்.
எலியா அவனிடம், “ஆகாப் அரசனிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான்.
45 சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். 46 கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு அரசனுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.
இயேசு கைது செய்யப்படுதல்(A)
47 இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான்.
48 ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். 49 இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். 50 சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான்.
51 இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.
52 இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 53 ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை.? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார்.
பேதுருவின் மறுதலிப்பு(B)
54 அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. 55 வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். 56 ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள்.
57 ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். 58 சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான்.
ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான்.
59 ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான்.
60 ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான்.
பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. 61 அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். 62 பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்.
இயேசுவைப் பரிகசித்தல்(C)
63-64 சில மனிதர்கள் இயேசுவைக் காவல்புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பலவாறு கேலிசெய்தார்கள். அவர் பார்க்க முடியாதபடி அவரது கண்களை மறைத்தார்கள். பின்பு அவரை அடித்து விட்டு “நீ தீர்க்கதரிசியானால் யார் உன்னை அடித்தார்கள் என்று கூறு” என்றார்கள். 65 அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.
யூத அதிகாரிகள் முன் இயேசு(D)
66 மறுநாள் காலையில், மக்களின் முதிய அதிகாரிகள், தலைமை ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் தம் உயர்ந்த நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள். 67 அவர்கள், “நீ கிறிஸ்துவானால் அப்படியே எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
இயேசு அவர்களுக்கு, “நான் கிறிஸ்து என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். 68 நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள். 69 ஆனால் இப்பொழுதிலிருந்து தேவனுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் மனித குமாரன் உட்கார்ந்திருப்பார்” என்றார்.
70 அவர்கள் எல்லாரும், “அப்படியானால் நீ தேவனுடைய குமாரனா?” என்றார்கள். இயேசு அவர்களுக்கு “ஆம், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் சொல்வது சரியே” என்றார்.
71 அவர்கள், “ஏன் நமக்கு இப்போது சாட்சிகள் தேவை? அவன் இவ்வாறு சொல்வதை நாமே கேட்டோமே!” என்றனர்.
2008 by World Bible Translation Center