Old/New Testament
நாபோத்தின் திராட்சை தோட்டம்
21 சமாரியாவில் ஆகாப்பின் அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். 2 ஒரு நாள் அரசன் அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக்கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான்.
3 அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான்.
4 எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை அரசன் விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான்.
5 ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
6 அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான்.
7 அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் அரசன்! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள்.
8 பிறகு அவள் சில கடிதங்களை எழுதி அரசனின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். 9 அக்கடிதத்தில்,
“நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். 10 அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் அரசனுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது.
11 எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். 12 தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். 13 பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் அரசனுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். 14 அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர்.
15 அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 16 அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான்.
17 அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், 18 “அரசனிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். 19 அவனிடம், ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும்’ என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார்.
20 எனவே எலியா ஆகாபிடம் சென்றான். அரசனோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான்.
அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். 21 எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். 22 உனது குடும்பமானது நேபாத்தின் மகனான அரசன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். 23 கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். 24 உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான்.
25 ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். 26 அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார்.
27 எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான்.
28 கர்த்தர் எலியாவிடம், 29 “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.
மிகாயா ஆகாபை எச்சரித்தது
22 அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது. 2 மூன்றாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேலின் அரசனான ஆகாபைப் பார்க்கப் போனான்.
3 அப்போது, ஆகாப் அதிகாரிகளிடம், “சீரியாவின் அரசன் கீலேயாத்திலுள்ள ராமோத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டான். அதைத் திரும்பப்பெற ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை? அது நமக்குச் சொந்தமாக வேண்டும்” என்றான். 4 எனவே யோசபாத்திடம், “நீ என்னோடு சேர்ந்து ராமோத்துக்காகப் போரிட வருகிறாயா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “சரி, உன்னோடு சேர்ந்துகொள்கிறேன். எனது படை வீரர்களும் குதிரைகளும் உன் படையோடு சேர்ந்துகொள்ளத் தயார். 5 ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான்.
6 எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.
7 யோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான்.
8 அதற்கு ஆகாப், “மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் மூலம் கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெறலாம். அவரது பெயர் இம்லாவின் மகனான மிகாயா. எனக்கு எதிராகவே அவன் பேசுவதால் அவனை வெறுக்கிறேன். எப்போதும் எனக்கு விருப்பம் இல்லாததையே அவன் கூறுவான்” என்றான்.
யோசாபாத், “நீ அவ்வாறு சொல்லக்கூடாது!” என்றான்.
9 எனவே, ஆகாப் ஒரு அதிகாரியை அனுப்பி மிகாயாவை அழைத்து வரச்சொன்னான்.
10 அப்போது இரு அரசர்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர். 11 அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் மகன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான். 12 மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர்.
13 இது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான்.
14 ஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான்.
15 பிறகு அவன் அரசனிடம் வந்து நின்றான். அரசனும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான்.
16 ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான்.
17 அதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான்.
18 ஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான்.
19 ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர். 20 கர்த்தர், ‘உங்களில் யாரேனும் அரசன் ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. 21 இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’ 22 கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான்.
23 மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான்.
24 பிறகு சிதேக்கியா மிகாயாவிடம் வந்து முகத்தில் அடித்தான். அவன் “கர்த்தருடைய சக்தி என்னை விட்டுவிலகி எந்த வழியாய் உன்னிடம் வந்தது?” என்று கேட்டான்.
25 அதற்கு மிகாயா, “விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!” என்றான்.
26 மிகாயாவைக் கைது செய்யும்படி ஆகாப், அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகாப் அரசன், “இவனைக் கைது செய்து நகர ஆளுநரான ஆமோனிடத்திலும் பிறகு இளவரசனான யோவாசிடமும் அழைத்துக் கொண்டு போங்கள். 27 நான் சமாதானத்தோடு வரும்வரை இவனைச் சிறையில் அவர்களிடம் அடைக்கச்சொல். அதுவரை அப்பமும், தண்ணீரும் கொடுங்கள்” என்றான்.
28 அதற்கு மிகாயா, “நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை” என்று சத்தமாகச் சொன்னான்.
ராமோத் கீலேயாத்தில் போர்
29 பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது. 30 ஆகாப் யோசபாத்திடம், “நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் அரசன் என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்” என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான்.
31 சீரியா அரசனுக்கு 32 இரதப்படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரவேல் அரசனைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டான். அரசனைக் கொன்றுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். 32 போரின்போது, அவர்கள் யோசபாத்தைக் கண்டு இஸ்ரவேலின் அரசன் என்று எண்ணித் தாக்கினர். அவன் சத்தமிட்டான். 33 ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்துகொல்லாமல் விட்டுவிட்டனர்.
34 ஆனால் ஒருவன் குறிவைக்காமல் ஒரு அம்பை எய்தான். எனினும், அது ஆகாப் மீதுபட்டு கவசம் மூடாத உடலில் நுழைந்தது. அவன் இரத ஓட்டியிடம், “ஒரு அம்பு என்னைத் தாக்கியுள்ளது! இரதத்தை களத்தைவிட்டு வெளியே கொண்டு செல்” என்றான்.
35 படைகள் தொடர்ந்து போரிட்டன. அரசன் தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே, 36 படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர்.
37 இவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர். 38 அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி மகள்கள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது.
39 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ஆகாப் செய்த அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவன் தன் அரண்மனையைத் தந்தத்தால் அலங்கரித்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் உருவாக்கிய நகரைப்பற்றியும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. 40 ஆகாப் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்கு அடுத்து அவன் மகன் அகசியா, அரசன் ஆனான்.
யூதாவின் அரசனான யோசபாத்
41 இஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன். 42 யோசபாத் அரசனாகும்போது அவனுக்கு 35 வயது. இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாய் அசுபாள். இவள் சில்கியின் மகள். 43 யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர்.
44 யோசபாத் இஸ்ரவேல் அரசனோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான். 45 இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
46 தன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள்.
47 அப்போது, ஏதோமில் அரசன் இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா அரசனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
யோசபாத்தின் கடற்படை
48 இவன் கப்பல்களைச் செய்தான். பொன் வாங்க ஓப்பீருக்குச் செல்ல விரும்பினான். ஆனால் அவை போகமுடியாதபடி எசியோன் கேபேரிலே உடைந்து போயின. 49 இஸ்ரவேலின் அரசனாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை.
50 யோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது மகன் யோராம் அரசன் ஆனான்.
இஸ்ரவேலின் அரசனான அகசியா
51 ஆகாபின் அரசனான அகசியா இஸ்ரவேலுக்கு சமாரியாவில் அரசன் ஆனான். அப்போது யூதாவில் யோசபாத் 17ஆம் ஆண்டில் ஆண்டுகொண்டிருந்தான். அகசியா இரண்டு ஆண்டுகள் ஆண்டான். 52 அகசியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். அவன் தந்தை ஆகாப் மற்றும் தாய் யேசபேலைப் போன்றும், நேபாத்தின் மகனான யெரொபெயாம் போன்றும் பாவம் செய்து வந்தான். இவர்கள் நாட்டு ஜனங்களையும் பாவத்திற்குட்படுத்தினர். 53 அகசியா பாகால் தெய்வத்தை வழிபட்டான். இதனால் கர்த்தருக்கு கோபம் வந்தது. அவனது தந்தையிடம் போலவே அவனிடமும் கோபம்கொண்டார்.
சிலுவையில் இயேசு(A)
26 இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.
27 பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். 28 ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். 29 ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். 30 அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள். [a] 31 வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?” [b] என்றார்.
32 கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். 33 இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.
34 இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்.
இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 35 இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள்.
36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.
39 சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.
40 ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். 41 நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். 42 பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான்.
43 இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.
இயேசு மரித்தல்(B)
44 அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. 45 சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. 46 இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.
47 அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.
48 இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். 49 இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
அரிமத்தியா ஊரின் யோசேப்பு(C)
50-51 அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 52 இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். 53 எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 54 அப்பொழுது ஆயத்த நாளின் [c] இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும்.
55 கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். 56 இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள்.
ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.
2008 by World Bible Translation Center