Old/New Testament
ஒரு தீர்க்கதரிசியின் விதவை எலிசாவிடம் உதவி கேட்டல்
4 தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அந்த தீர்க்கதரிசி மரித்துப்போயிருந்தான். அவள் எலிசாவிடம் வந்து, “என் கணவன் உங்கள் ஊழியனாக இருந்தார். இப்போது மரித்துப்போனார். அவர் கர்த்தரை மதித்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருவனிடம் பணம் வாங்கியிருந்தார். அதற்காக இப்போது அந்த ஆள் என் இரண்டு பிள்ளைகளை அடிமையாக்கிக்கொள்ள வந்திருக்கிறான்!” என்று அழுதாள்.
2 அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான்.
அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி (ஒலிவ) எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.
3 உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு. 4 உன் வீட்டிற்குள் போய் கதவுகளை மூடிக்கொள். வீட்டிற்குள் நீயும் உன் பிள்ளைகளும் மட்டும் தான் இருக்கவேண்டும். ஒலிவ எண்ணெயை எல்லாக் கிண்ணங்களிலும் ஊற்றி நிரப்ப அது நிறைந்ததும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அப்புறம் வை” என்றான்.
5 எனவே அந்தப் பெண் எலிசாவிடமிருந்து கிளம்பிப்போய் வீட்டுக்கதவுகளை அடைத்துக்கொண்டாள். அவளும் அவள் பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவளது மகன்கள் அவளிடம் கிண்ணங்களைக் கொண்டுவந்தனர். அவற்றில் அவள் எண்ணெயை ஊற்றினாள். 6 அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், “இன்னொரு கிண்ணம் கொண்டு வா” என்றாள்.
ஆனால் அவன் அவளிடம், “கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை” என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று.
7 பின் அவள் வந்து தேவனுடைய மனுஷனுக்கு (எலிசா) அதைச் சொன்னாள். அவரோ, “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனை அடைத்துவிடு, மீதியுள்ள பணத்தில் நீயும் உன் பிள்ளைகளும் வாழுங்கள்” என்றான்.
சூனேமிலுள்ள ஒரு பெண் எலிசாவிற்கு அறைவீடு கொடுத்தது
8 ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றான். அங்கு ஒரு முக்கியமான பெண் இருந்தாள். அவள் எலிசாவை (தடுத்து) தன் வீட்டில் உணவு உண்ண அழைத்தாள். எனவே ஒவ்வொரு நேரமும் அவர் அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவன் உணவு உண்பதற்காக நிறுத்தப்பட்டான்.
9 அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார். 10 அவருக்காக நாம் கூரைமீது ஒரு சிறு அறை ஏற்பாடு செய்வோம். அதில் படுக்கையிட்டு, ஒரு மேஜை, நாற்காலி, விளக்குத் தண்டு ஆகியவற்றையும் வைத்துவிடுங்கள். அவர் இங்கு வரும்போது தன் உபயோகத்திற்காக இந்த அறையை வைத்துக்கொள்ளலாம்” என்றாள்.
11 ஒரு நாள் எலிசா அவளது வீட்டிற்கு வந்தான். அவன் அங்குள்ள அறைக்குச் சென்று அங்கே ஓய்வெடுத்தான். 12 எலிசா தனது வேலையாளான கேயாசிடம், “அந்த சூனேமியாளைக் கூப்பிடு” என்றான்.
அந்த வேலையாள் சூனேமியாளை அழைத்தான். அவளும் கிளம்பிவந்து எலிசாவின் முன்னிலையில் நின்றாள். 13 எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான்.
அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.
14 எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான்.
15 பிறகு எலிசா, “அவளைக் கூப்பிடு” என்றான்.
வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள். 16 எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான்.
அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள்.
சூனேமிய பெண் ஆண் மகனைப் பெறுதல்
17 ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.
18 அந்தப் பையன் வளர்ந்தான். ஒரு நாள், அவனது தந்தையும் ஆட்களும் வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த இடத்துக்கு போனான். 19 அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான்.
அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான்.
20 வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.
அப்பெண் எலிசாவைப் பார்க்கப் போகிறாள்
21 அப்பெண் மேலறையில் போய் தேவ மனிதனின் படுக்கையில் பையனைக் கிடத்தினாள். அந்த அறையின் கதவுகளை அடைத்துவிட்டு வெளியே போனாள். 22 அவள் கணவனை அழைத்து அவனிடம், “தயவுசெய்து என்னோடு ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் அனுப்புங்கள். நான் தீர்க்கதரிசியான எலிசாவை வேகமாக அழைத்துக் கொண்டு திரும்பி வரவேண்டும்” என்றாள்.
23 அதற்கு அவளுடைய கணவன், “இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை” என்றான்.
அதற்கு அவள், “கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்” என்றாள்.
24 பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். “வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்” என்றாள்.
25 அவள் தேவமனிதனைப் (எலிசாவைப்) பார்க்க கர்மேல் மலைக்குச் சென்றாள்.
எலிசாவும் சூனேமியப்பெண் வெகு தூரத்திலிருந்து வருவதைக் கவனித்தான். அவன் தன் வேலைக்காரனான கேயாசியிடம், “பார், அந்த சூனேமியப் பெண் வருகிறாள். 26 அவளிடம் ஓடிப்போ. ‘என்ன காரியம்? நன்றாக இருக்கிறாயா? கணவன் நலமா? குழந்தை நலமா?’ என்று கேள்” என்றான்.
கேயாசி அவளிடம் ஓடிப்போய் இத்தனையும் கேட்டான். அதற்கு அவள், “எல்லோரும் நலம் தான்” என்றாள்.
27 ஆனாலும் சூனேமியப்பெண் மலை மீது ஏறி எலிசாவிடம் வந்தாள். அவள் அவரது பாதத்தைப் (பணிந்து) பற்றினாள். கேயாசி நெருங்கி வந்து அவளை இழுத்து விலக்கினான். உடனே தேவ மனிதன் (எலிசா), “அவளைத் தனியாகவிடு! அவள் மிகவும் கலங்கிப்போயிருக்கிறாள். அவள் ஆத்துமா துடிக்கிறது. கர்த்தர் என்னிடம் இதைப்பற்றி எதையும் சொல்லவில்லை. கர்த்தர் என்னிடம் இதனை மறைத்துவிட்டார்” என்றான்.
28 அதற்கு அந்தப் பெண், “ஐயா! நான் உம்மிடம் மகனைக் கேட்கவில்லை. ‘என்னை ஏமாற்ற வேண்டாம்’ என்றுதானே சொன்னேன்” என்றாள்.
29 பிறகு எலிசா கேயாசியிடம், “புறப்படுவதற்குத் தயார்செய்! எனது கைத்தடியை எடுத்துக் கொண்டுபோ. பேசுவதற்காக யாரையும் நிறுத்தாதே. யாரையாவது சந்தித்தாலும் நீ அவர்களை நலம் கூடி விசாரிக்க வேண்டாம். யாராவது விசாரித்தாலும் பதில் சொல்லவேண்டாம்! எனது கைத் தடியை அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றான்.
30 ஆனால் அவள், “நீங்கள் இல்லாமல் நான் போகமாட்டேன்!” என்றாள்.
எனவே எலிசா எழுந்து அந்த சூனேமியப் பெண்ணோடு போனான்.
31 அவர்களுக்கு முன்னால் கேயாசி அப்பெண்ணின் வீட்டை அடைந்தான். அவன் கைத்தடியை பிள்ளையின் முகத்தில் வைத்தான். ஆனால் அந்தக் குழந்தை பேசவோ பேச்சுக்கு பதிலாக அசையவோ இல்லை. எனவே கேயாசி எலிசாவிடம் ஓடிவந்து, “குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை!” என்று கூறினான்.
சூனேமியப் பெண்ணின் மகன் மீண்டும் உயிரடைகிறான்
32 எலிசா வீட்டிற்கு வந்தான். அவனது படுக்கையில், பிள்ளை மரித்துக்கிடந்தது. 33 அவன் அறையுள் நுழைந்ததும் கதவுகளை அடைத்தான். அவ்வறையில் அவனும் பிள்ளையும் மட்டுமே இருந்தனர். எலிசா கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான். 34 அவன் படுக்கையருகில் சென்று அப்பிள்ளை மேல் படுத்து, தன் வாயை அப்பிள்ளையின் வாயோடு வைத்து, தன் கண்ணை அதன் கண்களோடு வைத்து, தன் கைகளை அதன் கைகளோடு வைத்து நீட்டிப்படுத்தான். அப்பிள்ளையின் உடல் சூடு அடைந்தது.
35 பிறகு எலிசா அறையைவிட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் நடந்தான். பிறகு (அறைக்குள்) போய் பிள்ளை மேல் குப்புறப்படுத்தான். உடனே பிள்ளை ஏழுமுறை தும்மி தன் கண்களை திறந்தான்.
36 பிறகு அவன் கேயாசியிடம், “சூனேமியப் பெண்ணை கூப்பிடு” என்றான்.
கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், “உன் மகனை எடுத்துக்கொள்” என்றான்.
37 பிறகு அந்த சூனேமியப்பெண் அறைக்குள் வந்து எலிசாவின் பாதத்தில் விழுந்து பணிந்தாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
எலிசாவும் விஷமுள்ள கூழும்?
38 எலிசா மீண்டும் கில்காலுக்கு வந்தான். அப்போது அந்நாட்டில் பஞ்சமாய் இருந்தது. தீர்க்கதரிசிகள் கூட்டமாக எலிசாவின் முன்னர் கூடினார்கள். எலிசா தனது வேலைக்காரனிடம், “பெரிய பாத்திரத்தை நெருப்பில் வை. இவர்களுக்கு கூழ் தயார் செய்” என்றான்.
39 மூலிகைத் தழைகளைச் சேகரிக்கும் பொருட்டு ஒருவன் வயல்வெளிக்குச் சென்றான். அங்கே விஷ திராட்சைக் கொடிகளைக் கண்டான். அக்கொடியில் இருந்து முதிர்ந்த பழங்களைச் சேகரித்துத் தன் மேலாடையின் பையில் நிரப்பிக்கொண்டான். திரும்பிவந்து, பானையில் வைத்து மூடினான். ஆனால் அங்கிருந்த தீர்க்கதரிசிகளுக்கு இவ்விஷயம் பற்றி எதுவும் தெரியாது.
40 பிறகு அதை குடிக்க ஊற்றினார்கள். அவர்கள் குடிக்கப்போகும்போது, “தேவ மனிதனே! இந்தப் பாத்திரத்தில் விஷம் இருக்கிறது” என்று சத்தமிட்டனர். அதனால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை.
41 ஆனால் எலிசாவோ, “சிறிது மாவு கொடுங்கள்” என்று கேட்க அவர்கள் கொடுத்தார்கள். அதனை அந்தப் பாத்திரத்தில் அவன் போட்டு, “இப்போது ஜனங்களுக்குச் கூழை ஊற்றுங்கள். அவர்கள் அதை குடிக்கலாம்” என்றான்.
பிறகு அந்தக் கூழில் எந்த குறையும் இல்லை!
தீர்க்கதரிசிகளுக்கு எலிசா உணவளித்தது
42 பாகால்சலீஷாவிலிருந்து ஒருவன் வந்தான். அவன் எலிசாவிற்கு முதல் அறுவடையின் வாற் கோதுமையின் 20 அப்பங்களையும் புதிய கதிர்களையும் தனது கோணிப்பையில் தேவமனிதனுக்கு (எலிசா) கொண்டுவந்தான். எலிசாவோ, “அவற்றை ஜனங்களுக்குக் கொடு. அவர்கள் உண்ணட்டும்” என்றான்.
43 அதற்கு எலிசாவின் வேலைக்காரன், “என்ன? இங்கே 100 பேர்கள் இருக்கிறார்கள். இந்த உணவை எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிக்க முடியும்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “இந்த உணவை ஜனங்களுக்குக் கொடு. கர்த்தர், ‘அவர்கள் உண்டபிறகும் உணவு மீதியாகும்’ என்று கூறியிருக்கிறார்” என்றான்.
44 பிறகு எலிசாவின் வேலைக்காரன் உணவை ஜனங்களுக்குக் கொடுத்தான். அத்தீர்க்கதரிசிகள் அவற்றை நன்கு உண்டனர். மேலும் உணவு மீதியானது! இவ்வாறு கர்த்தர் சொன்னபடியே நிறைவேறியது.
நாகமானின் பிரச்சனை
5 நாகமான் என்பவன் ஆராம் அரசனின் படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
2 ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். 3 அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
4 நாகமானும் அவனது எஜமானிடம் (அரசனிடம்) போய், இஸ்ரவேலியப் பெண் கூறியதைச் சொன்னான்.
5 ஆராமின் அரசனும், “இப்போதே செல், நானும் இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான்.
எனவே நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000 தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். 6 அதோடு அரசனின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ரவேல் அரசன் கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் அரசன் என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் அரசன் முயற்சி செய்கிறான்” என்றான்.
8 அரசன் வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டதைப்பற்றி தேவமனிதனான எலிசா அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள் ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், நாகமானை என்னிடம் அனுப்புங்கள். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான்.
9 ஆகவே, நாகமான் தனது குதிரைகளோடும் இரதங்களோடும், எலிசாவின் வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான். 10 எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.
11 நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன். 12 இஸ்ரவேலில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும் ஆகிய தமஸ்குவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.
13 ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! தீர்க்கதரிசி உம்மிடம் சில பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர் செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (தீர்க்கதரிசி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’ என்று கூறியிருக்கிறார்” என்றனர்.
14 எனவே நாகமான் தேவமனிதன் (தீர்க்கதரிசி எலிசா) சொன்னவாறு செய்தான். அவன் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல் குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று.
15 நாகமானும் அவனது குழுவும் தேவ மனிதனிடம் (எலிசாவிடம்) திரும்பி வந்தனர். நாகமான் எலிசாவின் முன் நின்று, “உலகம் முழுவதிலும் பாரும், இஸ்ரவேலைத் தவிர வேறெங்கும் தேவன் இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டேன்! இப்போது உமது வேலையாளான என்னிடமிருந்து அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றான்.
16 ஆனால் எலிசாவோ, “நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். நான் எவ்வித அன்பளிப்புகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்று கர்த்தர் மீது ஆணையிட்டுள்ளேன்” என்றான்.
நாகமான் எவ்வளவோ முயன்று பார்த்தான். எலிசாவோ அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 17 பிறகு நாகமான், “எனது அன்பளிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்காக இதைச் செய்யுங்கள். நான் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கும்படி இஸ்ரவேலிலிருந்து மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இனிமேல் நான் கர்த்தரைத் தவிர வேறு எந்த தெய்வங்களுக்கும் காணிக்கையும் பலிகளையும் தகன பலியையும் அளிக்கமாட்டேன்! 18 இதற்காக என்னை மன்னிக்கும்படி இப்போழுது கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன். என் எஜமான் (அரசன்) போலித் தெய்வமான ரிம்மோனின் ஆலயத்திற்குள் போய் தொழுகைச் செய்யும்போது நானும் அவனோடு போகவேண்டியதிருக்கும். என் மீது சாய்ந்துக்கொள்ள அரசன் விரும்புவான். எனவே அந்த ரிம்மோனின் ஆலயத்திற்குள் வணங்கிக் குனியவேண்டியதிருக்கும் அதற்காக இப்போதே கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
19 பிறகு எலிசா நாகமானிடம், “சமாதானமாகப் போ” என்றான். எனவே அவன் எலிசாவை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் போனான். 20 ஆனால் தேவமனிதனின் (எலிசாவின்) வேலைக்காரனான கேயாசி, “பாருங்கள் எனது எஜமானன் (எலிசா) ஆராமியனான, நாகமானிடமிருந்து அவன் கொண்டுவந்த எவ்வித அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல் போக அனுமதித்திருக்கிறார்! நான் அவன் பின்னால் ஓடிப்போய் கொஞ்சம் பெற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி, 21 நாகமானின் பின்னால் ஓடினான். இவன் வருவதைக் கவனித்த நாகமான். இரதத்திலிருந்து இறங்கி, “எல்லாம் சரியாய் உள்ளதா?” என்று கேட்டான்.
22 அதற்கு கேயாசி, “எல்லாம் சரியாக உள்ளது. எனது எஜமானர் அனுப்பினார். தீர்க்கதரிசிகளின் குழுவில் இருந்து இரண்டு இளைஞர்கள் எப்பிராயீம் மலைநாட்டிலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தயவுசெய்து 75 பவுண்டு வெள்ளியும் இரண்டு மாற்று ஆடைகளையும் கொடுக்கவேண்டும்” என்றான்.
23 அதற்கு நாகமான், “தயவு செய்து 150 பவுண்டு வெள்ளியை எடுத்துக்கொள்க” என்றான். பின் அவனை (எடுக்க) அவசரப்படுத்தி இரண்டு பைகளில் இரண்டு தாலந்த வெள்ளியையும் இரண்டு மாற்று ஆடைகளையும் கட்டினான். பிறகு நாகமான் இவற்றை அவனது இரண்டு வேலைக்காரர்களிடம் கேயாசிக்குத் தூக்கி வரும்படி கொடுத்தான். 24 கேயாசி குன்றுக்கருகில் வந்ததும் வேலைக்காரர்களிடம் இருந்து அவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டான். தன் வீட்டிற்குள் அவற்றை மறைத்தான்.
25 அவன் வந்து எஜமான் (எலிசாவின்) முன் நின்றதும் எலிசா அவனிடம், “எங்கே போயிருந்தாய் கேயாசி?” எனக் கேட்டான்.
அதற்கு கேயாசி, “எங்கும் போகவில்லையே!” என்றான்.
26 எலிசா அவனிடம், “இது உண்மை இல்லை! நாகமான் இரதத்திலிருந்து இறங்கி உன்னை எதிர்கொண்டபோதே என் மனம் உன்னோடு வந்துவிட்டதே. பணம், ஆடை, ஒலிவ எண்ணெய், திராட்சை, ஆடு, பசுக்கள், ஆண்கள் அல்லது பெண்கள் அடிமைகள் போன்றவற்றை அன்பளிப்பாகப் பெறும் காலம் இதுவல்ல. 27 இப்போது நீயும் உன் பிள்ளைகளும் நாகமானின் நோயைப் பெறுவீர்கள். உனக்கு இனி எப்போதும் தொழுநோய் இருக்கும்!” என்றான்.
கேயாசி எலிசாவை விட்டு விலகியதும் அவனது, தோல் பணியைப்போன்று வெளுத்தது! அவன் தொழுநோயாளியானான்.
எலிசாவும் கோடரியும்
6 தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், “நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது. 2 நாம் யோர்தான் ஆற்றுவெளிக்குப் போய் கொஞ்சம் மரங்களை வெட்டிவருவோம். ஒவ்வொருவரும் ஒரு மரத்தடி கொண்டுவந்தால் வசிப்பதற்கு ஒரு இடம் அமைக்கலாம்” என்றனர்.
எலிசாவும், “நல்லது, போய் செய்யுங்கள்” என்றான்.
3 அவர்களில் ஒருவன், “எங்களோடு வாரும்” என்று அழைத்தான்.
எலிசாவும், “நல்லது நான் உங்களோடு வருகிறேன்” என்றான்.
4 எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். 5 ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், “ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!” என்று கூறினான்.
6 தேவமனுஷனோ, (எலிசா) “எங்கே அது விழுந்தது?” என்று கேட்டான்.
அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது. 7 எலிசா, “கோடரியை எடுத்துக்கொள்” என்றான். பிறகு அவன் கை வைத்து அதனை எடுத்துக்கொண்டான்.
ஆராமின் அரசன் இஸ்ரவேல் அரசனைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்
8 ஆராமின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். அரசன், “இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, “எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!” என்று சொல்லச் செய்தான்.
10 உடனே அரசன் எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
11 இதை அறிந்ததும் ஆராமின் அரசன் மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் அரசனுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான்.
12 ஒரு அதிகாரி, “எங்கள் அரசனும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் அரசனிடம் சொல்ல முடியும்!” என்றான்.
13 அதற்கு அரசன், ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான்.
வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர்.
14 பிறகு அரசன் குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர். 15 தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
16 எலிசாவோ, “பயப்படவேண்டாம், ஆராம் அரசனுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்” என்றான்.
17 பிறகு அவன் ஜெபம் செய்து “கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்” என்று வேண்டிக்கொண்டான்.
அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்!
18 பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். 19 எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.
20 அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான்.
பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! 21 இஸ்ரவேலின் அரசன் ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான்.
23 ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் அரசன் நிறைய உணவைத் தயாரித்தான்.. ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் அரசன் ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.
சமாரியாவைப் பஞ்சம் தாக்கிய கொடிய காலம்
24 இதற்குப் பிறகு, ஆராமிய அரசனான பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான். 25 வீரர்கள் நகருக்குள் உணவு வராதபடி தடுத்து விட்டனர். எனவே சமாரியாவில் பஞ்சமும் பட்டினியும் அதிகரித்தது. அங்கு ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுகளுக்கும், புறாக்களுக்குப் போடும் கால்படி புறா-புழுக்கை ஐந்து வெள்ளி காசுகளுக்கும் மிக மோசமாக விற்கப்பட்டன.
26 ஒரு நாள் இஸ்ரவேல் அரசன் நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், “எனது அரசனாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!” என்று சத்தமிட்டாள்.
27 அதற்கு அரசன் அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான் 28 பிறகு அரசன் அவளிடம், “உனது பிரச்சனை என்ன?” என்றான்.
அதற்கு அவள், “நானும் அந்தப் பெண்ணும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என்னிடம் இவள், ‘நீ உன் மகனை தா. நாம் அவனைக் (கொன்று) தின்போம். பிறகு நான் என் மகனைத் தருவேன். அவனை நாளைத் தின்னலாம் என்றாள்.’ 29 அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் தன் மகனை ஒளித்து வைத்திருக்கிறாள்!” என்றாள்.
30 அரசன் அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். அரசன் சுவர் வழியாகச் செல்லும்பொழுது, அரசன் தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது அரசன் துக்கமாயிருப்பதைக் காண்பித்தது.
31 அரசன் எலிசாவின் மீது கோபங்கொண்டு, “சாப்பாத்தின் மகனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.
32 எலிசாவிடம் அரசன் ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் மகன் (இஸ்ரவேல் அரசன்) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக சென்று அவனை வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான்.
33 இவ்வாறு எலிசா மூப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே தூதுவன் வந்தான். அவன், “கர்த்தரிடமிருந்தே இந்த பிரச்சனை வந்துள்ளது. எதற்காக இனி கர்த்தருக்காக காத்திருக்கவேண்டும்?” எனக் கேட்டான்.
சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(A)
36 அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.
37 சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். 38 ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? 39 என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார்.
40 இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். 41 சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். 42 அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். 43 சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.
44 அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.
45 பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். 46 பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. 47-48 நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். 49 கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.
இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(B)
50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். 52 சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53 தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.
2008 by World Bible Translation Center