Old/New Testament
சிம்சோனின் பிறப்பு
13 மீண்டும் இஸ்ரவேலர்கள் தீயசெல்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். எனவே பெலிஸ்தியர் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆள்வதற்கு அனுமதித்தார்.
2 சோரா என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் மனோவா. அவன் தாண் கோத்திரத்தைச் சார்ந்தவன். மனோவாவின் மனைவி குழந்தைகளின்றி மலடியாக இருந்தாள். 3 கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவியின் முன் தோன்றி, “நீ பிள்ளை இல்லாதவளாயிருக்கிறாய், ஆனால் நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். 4 திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே. அசுத்தமான உணவு எதையும் உண்ணாதே. 5 ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான்.
6 அப்போது அப்பெண் தன் கணவனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள். அவள், “தேவனிடமிருந்து ஒரு மனிதன் என்னிடம் வந்தார். அவர் தேவன் அனுப்பிய தூதனைப் போன்றிருந்தார். அவர் என்னை பயமடையச் செய்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் விசாரிக்கவில்லை. அவர் தன் பெயரையும் எனக்குச் சொல்லவில்லை. 7 ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள்.
8 பின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற மகனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான்.
9 தேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள். 10 எனவே அவள் தன் கணவனிடம் ஓடி, “அந்த மனிதன் வந்திருக்கிறார்! அன்று என்னிடம் வந்த அதே மனிதன்!” என்றாள்.
11 மனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். தூதன், “நானே” என்றான்.
12 மனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான்.
13 கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 14 திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான்.
15 அப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, “நீர் சற்றுத் தங்கிச் செல்வதை விரும்புகிறோம். ஒரு வெள்ளாட்டுக் குட்டியை நீர் உண்பதற்காகச் சமைத்து வர விரும்புகிறோம்” என்றான்.
16 கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.) 17 பின் கர்த்தருடைய தூதனிடம் மனோவா, “உமது நாமமென்ன? நீர் சொன்னது உண்மையாகவே நடந்தால் நாங்கள் உம்மை எப்படி கௌரவிக்க முடியும்? இதற்காகவே உமது நாமத்தை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றான்.
18 கர்த்தருடைய தூதன், “என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்” என்றார்.
19 மனோவா ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஒரு பாறையின் மேல் பலியிட்டான். அவன் ஆட்டுக் குட்டியையும் தானியக் காணிக்கையையும் அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு அன்பளிப்பாகச் செலுத்தினான். 20 மனோவாவும் அவனது மனைவியும் நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை எழும்பிய போது கர்த்தருடைய தூதன் நெருப்பிலேயே விண்ணிற்கு எழுந்து சென்றார்.
மனோவாவும் அவனது மனைவியும் அதைக் கண்டு முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினார்கள். 21 அவர் கர்த்தருடைய தூதன் என்பதை மனோவா இறுதியில் கண்டுகொண்டான். கர்த்தருடைய தூதன் மீண்டும் மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் காட்சியளிக்கவில்லை.
22 மனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான்.
23 ஆனால் அவள் அவனை நோக்கி, “கர்த்தர் நம்மைக் கொல்ல விரும்பவில்லை. அவர் நம்மைக் கொல்ல விரும்பினால் நமது தகனபலியையும், தானியக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த அற்புதங்களையும் காட்டியிருக்கமாட்டார். இக்காரியங்களை அறிவித்திருக்கவும்மாட்டார்” என்றாள்.
24 அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். சிம்சோன் நன்றாக வளர்ந்தான். அவனை கர்த்தர் ஆசீர்வதித்தார். 25 கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.
சிம்சோனின் திருமணம்
14 சிம்சோன் திம்னாத் என்னும் நகரத்திற்குச் சென்றான், அங்கு ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான். 2 அவன் வீட்டிற்குத் திரும்பியதும் தன் தந்தையையும், தாயையும் நோக்கி, “ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திம்னாவில் நான் பார்த்தேன், அவளை நீங்கள் எனக்காக அழைத்து வரவேண்டும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
3 அவனது தந்தையும் தாயும், “இஸ்ரவேலில் உனக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயமாக ஒரு பெண் வாய்ப்பாள். பெலிஸ்தியரிலிருந்து ஒரு பெண்ணை நீ திருமணம்செய்ய வேண்டுமா? அந்த ஜனங்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல” என்றார்கள்.
ஆனால் சிம்சோன், “அப்பெண்ணை எனக்காக அழைத்து வாருங்கள்! அப்பெண்ணே எனக்கு வேண்டும்!” என்றான். 4 (சிம்சோனின் பெற்றோர் கர்த்தர் இவ்வாறு நிகழ வேண்டுமென விரும்பியதை அறியாதிருந்தார்கள். கர்த்தர் பெலிஸ்தியருக்கு எதிராகச் செயல்படும் வகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். பெலிஸ்தியர் அக்காலத்தில் இஸ்ரவேலரை ஆண்டுகொண்டிருந்தனர்.)
5 சிம்சோன் திம்னாத் நகரத்திற்கு தன் தந்தையோடும் தாயோடும் சென்றான். அவர்கள் அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்குகையில் ஒரு இளம் சிங்கம் திடீரென கெர்ச்சித்தபடி சிம்சோனை நோக்கி வந்தது. 6 கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோனின் மீது இறங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். இதை அவனால் எளிதாகச் செய்ய முடிந்தது. ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை.
7 பின்பு சிம்சோன் நகரத்திற்குச் சென்று அந்த பெலிஸ்தியப் பெண்ணைச் சந்தித்துப் பேசினான். அவனுக்குப் அவளை பிடித்திருந்தது. 8 பல நாட்களுக்குப் பின்பு அந்த பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சிம்சோன் திரும்பி வந்தான். வழியில் சிங்கத்தைப் பார்க்க சென்றான். மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டான். அவை தேனைச் சேகரித்திருந்தன. 9 சிம்சோன் தனது கைகளால் அதில் கொஞ்சம் தேனை எடுத்தான். அவன் தேனைச் சுவைத்துக் கொண்டே வழியில் நடத்தான். அவன் தன் பெற்றோரிடம் வந்தபோது அவர்களுக்கும் சிறிது தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை உண்டனர். ஆனால் மரித்த சிங்கத்திடமிருந்து எடுத்த தேன் அது என்று அவர்களிடம் சிம்சோன் கூறவில்லை.
10 சிம்சோனின் தந்தை பெலிஸ்திய பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றார். மணமகனுக்கான முறைமைப்படி சிம்சோன் ஒரு விருந்து கொடுத்தான். 11 பெலிஸ்தியர்கள் 30 பேரை விருந்துக்கு அனுப்பி வைத்தனர்.
12 அந்த 30 பேருக்கும் சிம்சோன், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல விரும்புகிறேன். இந்த விருந்து 7 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களுக்குள் அந்த விடுகதைக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அந்நாட்களுக்குள் உங்களால் விடுகதையை விடுவிக்கக் கூடுமாயின் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் கொடுப்பேன். 13 ஆனால் நீங்கள் பதில் தராவிட்டால் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் எனக்குத் தரவேண்டும்” என்றான். அந்த 30 பேரும், “உன் விடுகைதையைச் சொல். நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.
14 சிம்சோன் அவர்களிடம்,
“சாப்பிடுவோரிடமிருந்து சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கிடைத்தது.
பலமானவரிடமிருந்து இனிப்பும் கிடைத்தது.”
என்ற விடுகதையைச் சொன்னான்.
30 பேரும் 3 நாட்கள் இந்த விடுகதையை விடுவிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
15 நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம் வந்தனர். அவர்கள், “எங்களை வறியோராக்கும்படிக்கு அழைத்தீர்களா? விடுகதையின் பதிலை அறியும்படிக்கு நீ உனது கணவனைத் தந்திரமாய் வசப்படுத்த வேண்டும். நீ அதை எங்களுக்கு அறிவிக்காவிட்டால் உண்னையும் உன் தந்தையின் வீட்டார் எல்லோரையும் நெருப்பிட்டுக் கொல்லுவோம்” என்றார்கள். 16 சிம்சோனின் மனைவி அவனிடம் வந்து அழுதாள். அவள் சிம்சோனிடம், “உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை! நீங்கள் உண்மையில் என்மீது அன்பு செலுத்தவில்லை! எங்கள் ஆட்களுக்கு விடுகதை போட்டுள்ளீர்கள். ஆனால் என்னிடம் நீங்கள் பதிலைக் கூறவில்லை” என்றாள்.
17 விருந்தின் 7 நாட்களும் முடியும்வரை சிம்சோனின் மனைவி அழுதாள். அதனால் 7வது நாள் சிம்சோன் அவளுக்கு விடுகதையின் பதிலைக் கூறினான். அவள் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்ததினாலும் வற்புறுத்தியதாலும் அவளுக்குக் கூறினான். அவள் அந்தப் பதிலை தனது ஜனங்களுக்குக் கூறினாள்.
18 ஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம்,
“தேனைவிட சுவையானது எது?
சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?” என்றார்கள்.
அப்போது சிம்சோன் அவர்களிடம்,
“என் பசுவால் நீங்கள் உழாவிட்டால்
என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்” என்றான்.
19 சிம்சோன் மிகவும் கோபமாக இருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோன் மீது வல்லமையோடு வந்தார். அதினால் அவன் அஸ்கலோன் நகரத்திற்குச் சென்று அங்கு 30 பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களது ஆடைகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொண்டான். அந்த ஆடைகளைப் பதில் சொன்ன 30 பேருக்கும் கொடுத்தான். அதன் பின்பு தனது தந்தையின் வீட்டிற்கு வந்தான். 20 சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.
சிம்சோன் பெலிஸ்தியருக்குத் தொல்லை கொடுத்தல்
15 கோதுமை அறுவடையின்போது சிம்சோன் தன் மனைவியைச் சந்திக்கப் போனான். அவளுக்கு அன்பளிப்பாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். அவன், “என் மனைவி இருக்கும் அறைக்குச் செல்கிறேன்” என்றான்.
அவளது தந்தை சிம்சோனை உள்ளே விடவில்லை. 2 அவளது தந்தை சிம்சோனிடம், “நீ அவளை வெறுத்தாய் என நான் நினைத்தேன். எனவே மாபிள்ளைத் தோழனை அவள் திருமணம் செய்துகொள்ள நான் அனுமதித்து விட்டேன். அவள் தங்கை இன்னும் அழகானவள், அவளை மணந்துகொள்” என்றான்.
3 ஆனால் சிம்சோன் அவனிடம், “இப்போது பெலிஸ்தியராகிய உங்கள் அனைவரையும் துன்புறுத்துவதற்கு எனக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது. என்னை இப்போது யாரும் குறைச் சொல்ல முடியாது” என்றான்.
4 பின்பு சிம்சோன் வெளியே சென்று 300 நரிகளைப் பிடித்தான். அவற்றை இரண்டு இரண்டாகச் சேர்த்து அவற்றின் வாலைக் கட்டி, வால்களுக்கிடையில் நெருப்புப் பந்தத்தை வைத்தான்.
5 பின்பு சிம்சோன் அவற்றைக் கொளுத்தி வாலில் நெருப்பு வைக்கப்பட்ட அந்நரிகளைப் பெலிஸ்தியரின் தானியங்கள் விளையும் வயல்களுக்கிடையில் துரத்திவிட்டான். இவ்வாறு அவர்களின் வயல்களில் விளைந்துகொண்டிருந்த பயிர்களையும், அறுவடை செய்து தனியே குவித்து வைத்த கதிர்க்கட்டுகளையும் நெருப்பால் அழித்தான். மேலும் திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எரித்தான்.
6 பெலிஸ்தியர், “இதனைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள்.
திம்னாவிலுள்ள மனிதனின் மருமகனான சிம்சோன் அதனைச் செய்ததாகச் சிலர் கூறினார்கள். அவர்கள் “சிம்சோனின் மாமனார் தன் மகளை மாப்பிள்ளைத் தோழனுக்குத் திருமணம் செய்து வைத்ததால் அவன் அத்தகைய செயலைச் செய்தான்” என்றார்கள். அதனால் பெலிஸ்தியர் சிம்சோனின் மனைவியையும், அவளது தந்தையையும் எரித்துக் கொன்றனர்.
7 பின்பு சிம்சோன் அப்பெலிஸ்திய ஜனங்களிடம் “நீங்கள் தீமை செய்ததால் நானும் உங்களுக்குத் தீமை செய்வேன். நான் உங்கள் மேல் பழி சுமத்துகிறவரைக்கும் நிறுத்தமாட்டேன்!” என்றான்.
8 பின்பு சிம்சோன் பெலிஸ்தியரைத் தாக்கி அவர்களில் பலரைக் கொன்றான். பின்பு அவன் ஒரு குகையில் சென்று தங்கினான். அக்குகை ஏத்தாம் பாறையில் இருந்தது.
9 பின்பு பெலிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது. 10 யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர்.
11 பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர்.
அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான்.
12 பின்பு அவர்கள், “உன்னைக் கட்டி, பெலிஸ்தியரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளோம்” என்றனர்.
சிம்சோன் யூதா ஜனங்களிடம், “நீங்களாகவே என்னை காயப்படுத்தமாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்று கேட்டான்.
13 அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.
14 லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. 15 அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.
16 பின்பு சிம்சோன்,
“ஒரு கழுதையின் தாடையெலும்பால்
1,000 பேரைக் கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால்
ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.
17 இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது.
18 சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான்.
19 லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. 20 இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.
உங்கள் பகைவரை நேசியுங்கள்(A)
27 “என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள். 28 உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். 29 ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். 30 உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள். 31 உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள்.
32 “உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! 33 உங்களுக்கு நல்லதைச் செய்பவர்களுக்கு நீங்களும் நன்மை செய்தால், அவ்வாறு செய்வதற்காக உங்களைப் புகழ வேண்டுமா? இல்லை. பாவிகளும் அதைச் செய்கிறார்களே! 34 திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே!
35 “எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். 36 உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள்.
உங்களையே உற்றுப் பாருங்கள்(B)
37 “மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். 38 பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார்.
39 இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைக் கூறினார். “ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இல்லை. இருவரும் குழிக்குள் விழுவார்கள். 40 ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான்.
41 “உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்? 42 நீ உன் சகோதரனை நோக்கி, ‘சகோதரனே! உன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை எடுத்துப் போடட்டுமா?’ என்கிறாய். ஏன் இதைச் சொல்கிறாய்? நீ உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைப் பார்ப்பதில்லை. நீ வேஷமிடுகின்றாய். முதலில் உன் கண்ணில் இருக்கும் மரத்துண்டை எடுத்துவிடு. அப்போது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்துப்போடுவதற்கு நீ தெளிவாகப் பார்க்க முடியும்.
இருவகைப் பழங்கள்(C)
43 “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. 44 ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. 45 நல்ல மனிதனின் இதயத்தில் நல்ல காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் இதயத்தில் இருந்து நல்ல காரியங்களையே வெளிப்படுத்துவான். ஆனால், தீய மனிதனின் இதயத்தில் தீய காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் தீய காரியங்களை வெளிப்படுத்துவான். ஏனெனில் ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே ஆகும்.
இருவகை மனிதர்கள்(D)
46 “நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் அழைக்கிறீர்கள்? 47 என்னிடம் வந்து, என் போதனைகளைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும், 48 வீட்டைக் கட்டுகிற ஒரு மனிதனைப் போல் இருக்கிறான். அவன் ஆழமாகத் தோண்டி, உறுதியான பாறையின் மீது அவனுடைய வீட்டைக் கட்டுகிறான். வெள்ளப்பெருக்கின்போது, அவ்வீட்டை வெள்ளம் அடித்துச் செல்ல முற்படும். ஆனால் வெள்ளப்பெருக்கு அவ்வீட்டை அசைக்க முடியாது. ஏனெனில் அவ்வீடு உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது.
49 “ஆனால் என் வார்த்தையைக் கேட்டு, அவற்றின்படி செய்யாத ஒவ்வொரு மனிதனும் பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். வெள்ளப் பெருக்கின்போது அவ்வீடு எளிதில் இடிந்து போகும். அவ்வீடு முழுக்க நாசமாகிவிடும்” என்றார்.
2008 by World Bible Translation Center