Old/New Testament
யோவாகாசின் ஆட்சி தொடக்கம்
13 சமாரியாவில் யெகூவின் மகனான யோவாகாஸ் இஸ்ரவேலின் புதிய அரசன் ஆனான். இது அகசியாவின் மகனான யோவாசின் 23வது ஆட்சியாண்டின்போது ஏற்பட்டது. யோவாகாஸ் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 கர்த்தருக்கு வேண்டாதவற்றையே யோவாகாஸ் செய்து வந்தான். இஸ்ரவேலரின் பாவத்துக்குக் காரணமாயிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவச்செயல்களை இவனும் பின்பற்றினான். அதனைச் செய்வதை நிறுத்தவில்லை. 3 அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் அரசன் ஆசகேலின் கையிலும், ஆசகேலின் மகனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் இரக்கம் காட்டுகிறார்
4 பிறகு தமக்கு உதவி செய்யும்படி யோவாகாஸ் கர்த்தரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தரும் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். ஆராம் அரசன் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்துவதைக் கவனித்தார்.
5 எனவே கர்த்தர் இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒருவனை அனுப்பினார். இஸ்ரவேலர்கள் ஆராமியர்களிடமிருந்து விடுதலை பெற்றனர். முன்பு போல, அவர்கள் தமது கூடாரங்களுக்கு (வீடுகள்) சென்றனர்.
6 எனினும் அவர்கள் தாம் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் பாவம் செய்வதற்குக் காரணமான யெரொபெயாமின் குடும்பத்தார் பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அவர்கள் சமாரியாவில் அஷெரா தூண்களையும் வைத்திருந்தனர்.
7 ஆராமின் அரசன் யோவாகாசின் படையைத் தோற்கடித்தான். படையில் பல வீரர்களைக் கொன்றான். 50 குதிரை வீரர்கள், 10 இரதங்கள், 10,000 காலாட் வீரர்களை மட்டுமே விட்டுவிட்டான். யோவாகாசின் வீரர்கள் காலடியில் மிதிபட்ட தூசியைப்போன்று ஆனார்கள்.
8 யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 9 யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.
யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டது
10 யோவாகாசின் மகன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் அரசன் ஆனான். இது யூதாவின் அரசனாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான். 11 யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த, பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான். 12 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் அரசனான அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 13 யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் அரசனாக அமர்ந்தான்.
யோவாஸ் எலிசாவை சந்திக்கிறான்
14 எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் அரசனான யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” [a] என்றான்.
15 எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான்.
யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான். 16 பிறகு எலிசா இஸ்ரவேல் அரசனிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை அரசனின் கையோடு வைத்தான். 17 எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான்.
யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான்.
18 எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் அரசனிடம் கூறினான்.
யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான். 19 அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.
எலிசாவின் கல்லறையில் நிகழ்ந்த அதிசயம்
20 எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். 21 சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!
ஆராமியர்களோடு போரிட்டு யோவாஸ் இஸ்ரவேலிய நகரங்களை மீட்டது
22 யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் அரசனான ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான். 23 ஆனால் கர்த்தர் இஸ்ரவேலர்கள் மேல் கருணையோடு இருந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக கர்த்தர் இஸ்ரவேலர்களை அழிப்பதில்லை. இன்னும் அவர்களை தூர எறியவில்லை.
24 ஆராமின் அரசனான ஆசகேல் மரித்தான், அவனது மகனான பெனாதாத் புதிய அரசன் ஆனான். 25 அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான். ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் மகனான பெனாதாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.
யூதாவில் அமத்சியா ஆட்சி செய்தல்
14 இஸ்ரவேலின் அரசனாகிய யோவாகாசின் மகன் யோவாசின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யூதாவின் அரசனாகிய யோவாசின் மகன் அமத்சியா அரசன் ஆனான். 2 அவன் தனது 25வது வயதில் அரசன் ஆனான். எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் எருசலேம் நகரத்தைச் சேர்ந்த யொவதானாள். 3 அவன் கர்த்தரால் சரியானவை என்று சொல்லப்பட்ட காரியங்களைச் செய்தான். ஆனால் தனது முற்பிதா தாவீதைப் போன்று முழுமையாக தேவனைப் பின்பற்றவில்லை. தந்தை யோவாஸ் செய்த பல செயல்களை இவனும் செய்தான். 4 இவனும் பொய் தெய்வங்களின் கோவில்களை அழிக்கவில்லை. ஜனங்கள் அங்கு தொழுதுக் கொள்ள பலிகள் இடுவதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.
5 அமத்சியா கையில் ஆட்சி உறுதியான போது, தனது தந்தையைக் கொன்ற வேலைக்காரர்களை (அதிகாரிகளைக்) கொன்றான். 6 ஆனால் அவன் மோசேயின் சட்டங்களின் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, கொலையாளிகளின் குழந்தைகளைக் கொல்லவில்லை. கர்த்தர் தன் ஆணைகளையே அந்த புத்தகத்தில் மோசே மூலம் எழுதியுள்ளார். மோசே, “குழந்தைகள் செய்த தவறுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் கொல்லப்படக் கூடாது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு மாத்திரமே மரணத்தை அடையவேண்டும்” என்று எழுதியுள்ளான்.
7 அவன் 10,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் கொன்றுபோட்டான். சேலாவைப் போர் மூலம் பிடித்து அவனை “யொக்தியேல்” என்று அழைத்தான். அந்த இடம் இன்றும் “யொக்தியேல்” என்று அழைக்கப்படுகிறது.
அமத்சியா யோவாசுக்கு எதிராகப் போர்செய்ய விரும்பியது
8 அமத்சியா தூதுவர்களை யெகூவின் மகனும் யோவாகாசின் மகனும், இஸ்ரவேலின் அரசனுமான யோவாசிடம் அனுப்பினான். அவன், “வா, நேரில் ஒருவரையொருவர் சந்தித்து போரிட்டுப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டான்.
9 இஸ்ரவேலரின் அரசனான யோவாஸ் அதற்குப் பதிலாக யூத அரசன் அமத்சியாவிற்கு, “லீபனோனிலுள்ள முட்செடியானது கேதுரு மரத்தை நோக்கி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக் கொடு’ என்று சொல்லச்சொன்னது. ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10 நீ ஏதோமியரைத் தோற்கடித்ததால் உன் மனம் உன்னைக் கர்வம் கொள்ளச்செய்தது. நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலேயே இரு! நீ இதனைச் செய்தால், நீ விழுவாய், யூதாவும் உன்னோடு விழும்” என்றான்.
11 ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் அரசனாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர். 12 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள். 13 பெத்ஷிமேஸ், என்னும் இடத்தில் இஸ்ரவேலின் அரசனான யோவாஸ், அகசியாவின் மகன் யூதாவின் அரசனான அமத்சியாவைச் சிறை பிடித்தான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோய், எருசலேமிலுள்ள சுவரை, 600 அடி நீளத்திற்கு எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல்மட்டும் இடித்துப்போட்டான். 14 பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.
15 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவன், அமத்சியாவிற்கு எதிராக எவ்வாறு போரிட்டான் என்ற விளக்கமும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 16 யோவாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் இஸ்ரவேல் அரசர்களோடு கூடவே சமாரியாவில் அடக்கமானான். யோவாசின் மகனான யெரொபெயாம் புதிய அரசன் ஆனான்.
அமத்சியாவின் மரணம்
17 இஸ்ரவேல் அரசனான யோவாசின் மகனான அமத்சியா, இஸ்ரவேலின் அரசனான யோவாகாசின் மகனான யோவாஸ் மரித்தபின், 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். 18 அமத்சியாவின் மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 19 எருசலேமில் அமத்சியாவிற்கு எதிராக ஜனங்கள் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஆனால் ஜனங்கள் லாகீசுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் அவனை அங்கே கொன்றனர். 20 ஜனங்கள் அமத்சியாவின் உடலைக் குதிரையில் வைத்துக் கொண்டுவந்தனர். அவனை தாவீதின் நகரத்தில் எருசலேமில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
யூதாவில் அசரியா தனது ஆட்சியைத் தொடங்குதல்
21 பிறகு யூதாவிலுள்ள அனைத்து ஜனங்கள், அமத்சியாவின் மகன் அசரியாவைப் புதிய அரசனாக்கினர். அப்போது அவனுக்கு 16 வயது. 22 ஆகையால் அமத்சியா அரசன் மரித்து அவனது முற்பிதாக்களோடு அடக்கமான பிறகு அசரியா மீண்டும் ஏலாதைக்கட்டி, அதனை யூதாவிற்குத் திரும்பக் கொடுத்தான்.
இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி தொடங்கியது
23 யோவாசின் மகனான பெரொபெயாம் இஸ்ரவேல் அரசனாக சமாரியாவில் ஆட்சியைத் தொடங்கி 41 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அப்போது யூதாவின் அரசனாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்தாம் ஆட்சியாண்டில் இருந்தான். 24 தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே யெரொபெயாம் செய்துவந்தான். இஸ்ரவேலுக்கு பாவத்தைக் கொண்டுவந்த நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவச்செயல்களை இவன் நிறுத்தவில்லை. 25 யெரொபெயாம் லெபொ ஆமாத்தின் எல்லை முதல் அரபா கடல் மட்டுமுள்ள இஸ்ரவேல் பகுதிகளைத் திரும்ப சேர்த்துக்கொண்டான். இது, இஸ்ரவேலின் கர்த்தர் தமது ஊழியக்காரனான அமித்தாயின் மகனான யோனாவான காத்தேப்பேரிலிருந்து வந்த தீர்க்கதரிசி மூலம் சொன்னபடி நிகழ்ந்தது. 26 இஸ்ரவேலில் ஒவ்வொருவரும், அவர்கள் அடிமைகளாகவோ அல்லது சுதந்திரமானவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் துன்பப்படுவதைக் கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர்களுக்கு உதவ ஒருவர் கூட மீதியாக இருக்கவில்லை 27 உலகத்திலிருந்து இஸ்ரவேலர்களின் பெயரை எடுத்து விடவேண்டுமென்று கர்த்தர் என்றும் சொன்னதில்லை. எனவே கர்த்தர் யோவாசின் மகனான யெரொபெயாம் மூலம் இஸ்ரவேல் ஜனங்களைக் காப்பாற்றினார்.
28 யெரொபெயாம் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவரது வலிமையும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் யெரொபெயாம் தமஸ்குவையையும் ஆமாத்தையும் போரிட்டு இஸ்ரவேலோடு சேர்த்துக் கொண்டதும் உள்ளது. (இந்நகரங்கள் யூதாவோடு சேர்ந்திருந்தது) 29 யெரொபெயாம் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். யெரொபெயாமின் மகனான சகரியா அடுத்த புதிய அரசன் ஆனான்.
கானாவூர் கல்யாணம்
2 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். 2 இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.
4 “அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.
5 “இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.
6 அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.
7 இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.
8 பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.
வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். 9 அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.
11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.
12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.
தேவாலாயத்தில் இயேசு(A)
13 அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14 தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15 இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார்.
17 இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.
“உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.” (B)
18 யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.
19 “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். இதனை மூன்று நாட்களுக்குள் நான் மீண்டும் கட்டி முடிப்பேன்” என்றார் இயேசு.
20 அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். 21 (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை. 22 இதனை அவரது சீஷர்கள், இயேசு மரித்தபின் மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தபோது அவர் சொன்னதை நினைவுபடுத்திப் புரிந்துக்கொண்டனர். ஆகையால் அவரது சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட வேதவாக்கியங்களையும், இயேசுவின் வார்த்தைகளையும் நம்பினர்.)
23 இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். 24 ஆனால் இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால் அவர்களது எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். 25 இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.
2008 by World Bible Translation Center