Old/New Testament
கர்த்தருடைய முறையீடு
6 இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்.
உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல்.
அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும்.
2 கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார்.
மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள்
பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள்.
இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார்.
3 கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள்.
நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா?
நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா?
4 நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன்.
நான் உங்களிடம் மோசே, ஆரோன், மீரியாம் ஆகியோரை அனுப்பினேன்.
நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தேன்,
நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தேன்.
5 என் ஜனங்களே, மோவாபின் அரசனான பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள்.
பேயோரின் மகனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள்.
அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள்.
அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.”
நம்மிடமிருந்து தேவன் என்ன விரும்புகிறார்
6 நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும்.
நான் தேவனைப் பணியும்போது என்ன செய்ய வேண்டும்.
நான் கர்த்தருக்கு,
தகன பலியும் ஓராண்டு நிறைந்தக் கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா?
7 கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும்
10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்தி அடைவாரா?
நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான் பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
8 மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார்.
கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார்.
மற்றவர்களிடம் நியாயமாய் இரு.
கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு.
நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.
இஸ்ரவேலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்
9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது.
“ஞானவான் கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறான்.
எனவே தண்டனையின் தடியைக் கவனியுங்கள். தண்டனையின் தடியைப் பிடிப்பவரையும் கவனியுங்கள்.
10 தீயவர்கள் தாம் திருடிய சொத்துக்களை
இன்னும் மறைத்துவைப்பார்களா?
தீயவர்கள் வியாபாரத்தில் மிகச் சிறியக் கூடைகளை வைத்து
இன்னும் ஜனங்களை ஏமாற்றுவார்களா? ஆம் இந்த செயல்கலெல்லாம் இன்னும் நடக்கிறது.
11 இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவு கோல்களாலும்
ஜனங்களை ஏமாற்றுகிறவர்களை, நான் மன்னிப்பேனா?
கள்ளத் தராசும், கள்ளப் படிக்கற்களுள்ள பையும் வைத்து தவறாக அளக்கிறவர்களை நான் மன்னிப்பேனா? இல்லை.
12 செல்வந்தர்கள் நகரத்தில் இன்னும் கொடுமை செய்கிறார்கள்.
அந்நகர ஜனங்கள் இன்னும் பொய்ச் சொல்கிறார்கள்.
ஆமாம், அந்த ஜனங்கள் தம் பொய்களைச் சொல்கின்றனர்.
13 எனவே நான் உன்னைத் தண்டிக்கத் தொடங்கினேன்.
நான் உன்னுடைய பாவங்களினிமித்தம் உன்னை அழிப்பேன்.
14 நீ உண்பாய், ஆனால் உன் வயிறு நிறையாது.
நீ இன்னும் பசியாகவும் வெறுமையாகவும் இருப்பாய்.
நீ பாதுகாப்புக்காக ஜனங்களை அழைத்துவர முயற்சி செய்வாய்.
யாரைப் பாதுகாத்தாயோ, அவர்களையும் நான் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15 விதைகளை விதைப்பாய்,
ஆனால் உணவை அறுவடை செய்யமாட்டாய்.
நீ உனது ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் எடுக்க அவற்றை பிழிவாய்.
ஆனால் எண்ணெய் பெறமாட்டாய்.
நீ திராட்சைப் பழங்களை பிழிவாய்.
ஆனால் போதுமான திராட்சைரசம் குடிக்கக் கிடைக்காது.
16 ஏனென்றால் நீ ஓம்ரியின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவாய்.
நீ ஆகாப் குடும்பம் செய்தத் தீயவற்றைச் செய்வாய்.
நீ அவர்களின் உபதேசங்களைப் பின்பற்றுவாய்.
எனவே நான் உன்னை அழியும்படி விடுவேன்.
ஜனங்கள் உனது அழிந்த நகரங்களைக் காணும்போது பரிகசித்து ஆச்சரியப்படுவார்கள்.
அந்நிய நாட்டு ஜனங்களின் நிந்தையை நீங்கள் சுமப்பீர்கள்.”
மீகா ஜனங்கள் செய்த பாவங்களால் கலக்கமடைந்தான்
7 நான் கலக்கமடைந்தேன்.
ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன்.
பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன்.
உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும்.
நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.
2 நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள்.
நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை.
ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.
3 ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள்.
அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள்.
வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள்.
“முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
4 அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர்.
அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.
தண்டனை நாள் வருகிறது
இந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள்.
உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது.
இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்.
5 உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள்.
உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள்.
6 ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.
ஒரு மகன் அவனது தந்தையை மதிக்கமாட்டான்.
ஒரு மகள் தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள்.
ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள்.
கர்த்தரே இரட்சகர்
7 எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன்.
நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தேன்.
என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார்.
8 நான் விழுந்திருக்கிறேன்.
ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே, நான் மீண்டும் எழுந்திருப்பேன்.
நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார்.
கர்த்தர் மன்னிக்கிறார்
9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்.
எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார்.
ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார்.
அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார்.
பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வருவார்.
அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன்.
10 என் எதிரி என்னிடம்,
“உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள்.
ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள்.
அவள் அவமானம் அடைவாள்.
அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன்.
ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ள புழுதியைப் போன்று நடப்பார்கள்.
திரும்புகிற யூதர்கள்
11 காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும்.
அந்த நேரத்தில் நாடு வளரும்.
12 உனது ஜனங்கள் உன் நாட்டிற்க்குத் திரும்புவார்கள்.
அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள்.
உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும்
ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும் வருவார்கள்.
அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும்
கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள்.
13 அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின்
தீய செயல்களால் அழிக்கப்பட்டது.
14 எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய்.
உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீ ஆட்சிசெய்.
அக்கூட்டம் காடுகளிலும்,
கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது.
பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள்
முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக.
இஸ்ரவேல் பகைவர்களை வெல்லும்
15 நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பல அற்புதங்களைச் செய்தேன்.
நான் அவற்றைப் போன்று நீங்கள் பல அற்புதங்களைப் பார்க்கும்படிச் செய்வேன்.
16 அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும்.
அவர்கள் அவமானம் அடைவார்கள்.
அவர்களின் “வல்லமை” என்னோடு ஒப்பிட இயலாது
என்பதை அவர்கள் காண்பார்கள்.
அவர்கள் ஆச்சரியத்தோடு
தமது கைகளை வாயில் வைத்துக்கொள்வார்கள்.
அவர்கள் கவனிக்க மறுத்து
தங்கள் காதுகளை மூடிக்கொள்வார்கள்.
17 அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள்.
அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப் போன்று
வெளியேவந்து தேவனாகிய கர்த்தரை அடைவார்கள்.
தேவனே, அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள்.
கர்த்தருக்குத் துதி
18 உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை.
ஜனங்களின் குற்றங்களை நீர் அகற்றிவிடுகிறீர்.
தேவன் தமது சுதந்தரத்தில் மீதியானவர்களை மன்னிக்கிறார்.
தேவன் என்றென்றும் கோபத்தோடு இரார். ஏனென்றால் அவர் கருணையோடு இருப்பதில் மகிழ்கிறார்.
19 தேவன், மீண்டும் திரும்பி வருவார், நமக்கு ஆறுதல் தருவார்.
நமது பாவங்களை, குற்றங்களை நீக்கி (நசுக்கி) எல்லாவற்றையும் ஆழமான கடலுக்குள் எறிந்துவிடுவார்.
20 தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர்.
ஆபிரகாமிடம் உமது உண்மையையும், அன்பையும் காட்டுவீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி செய்யும்.
இரண்டு மிருகங்கள்
13 பின்பு கடலுக்குள் இருந்து ஒரு மிருகம் வெளிவருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கிரீடம் இருந்தது. அதன் ஒவ்வொரு தலைமீதும் ஒரு கெட்ட பெயர் எழுதப்பட்டிருந்தது. 2 அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது. 3 அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். 4 இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர்.
5 அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. 6 அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. 7 தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8 உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள்.
9 கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக.
10 எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ
அவன் சிறைபட்டுப் போவான்.
எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ
அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான்.
இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11 பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. 12 இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. 13 இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது.
14 அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். 15 முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. 16 இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. 17 எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
18 புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.
2008 by World Bible Translation Center