Old/New Testament
செம்மறியாட்டுக்கடா மற்றும் வெள்ளாடு பற்றிய தானியேலின் கனவு
8 பெல்ஷாத்சாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இது முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப் பிறகு உள்ளது. 2 இந்த தரிசனத்தில் நான் சூசான் என்ற நகரத்தில் இருந்தேன். சூசான் என்பது ஏலாம் என்னும் மாநிலத்தின் தலைநகரம். நான் ஊலாய் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். 3 நான் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன். ஒரு செம்மறியாட்டுக்கடா ஊலாய் ஆற்றின் கரையில் நிற்பதை நான் பார்த்தேன். அந்த ஆட்டுக்கடாவிற்கு இரண்டு நீண்ட கொம்புகள் இருந்தன. ஒன்று இன்னொன்றைவிட நீளமானது. ஒரு கொம்பு இன்னொன்றைவிட பின்னாலிருந்தது. 4 அந்த செம்மறியாட்டுக்கடா தனது கொம்புகளோடு பாய்ந்ததைப் பார்த்தேன். அந்த ஆட்டுக் கடா மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடியதை நான் கவனித்தேன். எந்த மிருகத்தினாலும் இதனைத் தடுக்க முடியவில்லை. மற்ற மிருகங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆட்டுக்கடாவால் தன் விருப்பம்போல் செய்ய முடிந்தது. எனவே ஆட்டுக்கடா வல்லமை பெற்றது.
5 நான் செம்மறியாட்டுக்கடாவைப்பற்றி நினைத்தேன். நான் நினைத்துகொண்டிருக்கும்போது மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வருவதைப் பார்த்தேன். வெள்ளாட்டுக்கடாவிற்கு எளிதில் பார்க்கும் வகையில் ஒரு பெரிய கொம்பு இருந்தது. அந்த வெள்ளாடு பூமி முழுவதும் ஓடியது. இந்த வெள்ளாட்டுக்கடாவின் கால்கள் தரையில்படவேயில்லை.
6 அந்த வெள்ளாட்டுக்கடா 2 கொம்புகளையுடைய செம்மறியாட்டுக்கடாவிடம் வந்தது. இந்த ஆட்டுகடாதான் நான் ஊலாய் ஆற்றின் கரையில் பார்த்தது. வெள்ளாட்டுக் கடா கோபமாக இருந்தது. இது செம்மறி ஆட்டுக்கடாவை நோக்கி ஓடியது. 7 வெள்ளாட்டுக்கடா கோபமாக இருந்தது. இது செம்மறியாட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளையும் ஒடித்தது. செம்மறியாட்டுக்கடாவால் வெள்ளாட்டுக் கடாவைத் தடுக்கமுடியவில்லை. வெள்ளாட்டுக்கடா, செம்மறியாட்டுக்கடாவைத் தரையில் வீழ்த்தியது. பிறகு வெள்ளாட்டுக்கடா செம்மறியாட்டுக்கடாவின்மேல் மிதித்தது. வெள்ளாட்டுக் கடாவிடமிருந்து செம்மறியாட்டுக்கடாவைக் காப்பாற்ற அங்கே யாருமில்லை.
8 எனவே வெள்ளாட்டுக்கடா மிகவும் வல்லமை பெற்றது. ஆனால் அது வல்லமை உடையதாக இருக்கும்போதே அதன் ஒரு பெரிய கொம்பு உடைந்தது. அந்த ஒரு கொம்பிருந்த இடத்தில் நான்கு கொம்புகள் வளர்ந்தன. அந்த நான்கு கொம்புகளும் எளிதில் பார்க்கும்படியாக இருந்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு வெவ்வேறு திசைகளையும் பார்ப்பதாக இருந்தன.
9 பிறகு நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து ஒரு சிறியக் கொம்பு முளைத்தது. அந்தச் சிறியக் கொம்பு வளர்ந்து பெரிய கொம்பாக மாறியது. இது தென் கிழக்கை நோக்கி வளர்ந்தது. இது அழகான தேசத்தை நோக்கி வளர்ந்தது. 10 அந்தச் சிறியக் கொம்பு மிகப் பெரியதாயிற்று. அது வானத்தை தொடும்வரை வளர்ந்தது. இந்த சிறியக் கொம்பு வானத்தின் நட்சத்திரங்கள் சிலவற்றையும் தரையிலே வீழ்த்தியது. இது அந்த நட்சத்திரங்கள் மீது மிதித்து நடந்தது. 11 அந்தச் சிறியக் கொம்பு மிகவும் வல்லமை உடையதாகியது. பிறகு இது நட்சத்திரங்களை ஆள்பவருக்கு (தேவன்) எதிராகத் திரும்பியது. இந்த சிறியக் கொம்பு ஆளுபவருக்கு (தேவன்) அளிக்கப்படும் தினப்பலியைத் தடுத்தது. ஆளுபவரை தொழுவதற்கு ஜனங்கள் கூடும் இடம் இடித்துத் தள்ளப்பட்டது. 12 சிறியக் கொம்பு பாவம் செய்து தினப்பலியை நிறுத்தியது. இது சத்தியத்தை தரையிலே வீசியது. சிறியக் கொம்பு இவற்றைச் செய்து வெற்றிகரமாக விளங்கியது.
13 பிறகு நான் பரிசுத்தமான ஒருவர் பேசுவதைக் கேட்டேன். பிறகு இன்னொரு பரிசுத்தமானவர் முதலாமவருக்குப் பதில் சொல்வதைக் கேட்டேன். முதலாம் பரிசுத்தமானவர்: “இந்தத் தரிசனமானது தினபலி எவ்வாறு ஆகும் என்பதைக் காட்டுகிறது. இது அழிவுக்குண்டான பயங்கரமான பாவத்தைப் பற்றியது. இது, ஆளுபவரை தொழுதுகொள்ளும் இடத்தை அழித்தால் என்ன ஏற்படும் என்பதையும் காட்டுகிறது. அந்த ஜனங்கள் அந்த இடம் முழுவதையும், அந்த நட்சத்திரங்களையும் மிதிக்கும்போது என்ன நிகழும் என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நடக்கும்?” என்றார்.
14 இன்னொரு பரிசுத்தமானவர்: “இது 2,300 நாட்களுக்கு நடக்கும் பிறகு பரிசுத்தமான இடமானது சுத்திகரிக்கப்படும்” என்றார்.
தானியேலிடம் தரிசனம் விளக்கப்படுகிறது
15 தானியேலாகிய நான், இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இதன் பொருள் என்னவென்று புரிந்துகொள்ள முயன்றேன். நான் தரிசனத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது, மனிதனைப்போன்று தோன்றியவர் திடீரென்று என் முன் எழுந்து நின்றார். 16 பிறகு நான் மனிதனின் குரலைக் கேட்டேன். இந்தக் குரல் ஊலாய் ஆற்றுக்கு மேலிருந்து வந்தது. இந்தக் குரல், “காபிரியேலே, இந்த மனிதனிடம் தரிசனத்தை விளக்கு” என்றது.
17 எனவே மனிதனைப்போன்று தோன்றிய காபிரியேல் தேவதூதன், என்னிடம் வந்தான். நான் மிகவும் பயந்து தரையில் விழுந்தேன். ஆனால் காபிரியேல் என்னிடம், “மனிதனே, இந்த தரிசனமானது முடிவு காலத்தைக் குறித்தது” என்றான்.
18 காபிரியேல் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தரையில் விழுந்து தூங்கிவிட்டேன். அது ஆழ்ந்த உறக்கம். பிறகு காபிரியேல் என்னைத் தொட்டு நிற்கும்படியாகத் தூக்கிவிட்டான். 19 காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது.
20 “நீ இரண்டு கொம்புள்ள செம்மறியாட்டுக்கடாவைப் பார்த்தாய். அக்கொம்புகள் மேதியா, பெர்சியா எனும் தேசங்களாகும். 21 வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் அரசன். இரண்டு கண்களுக்கு மத்தியில் முளைத்த கொம்பானது முதல் அரசனாகும். 22 அந்தக் கொம்பு உடைந்தது. அந்த இடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு இராஜ்யங்களாகும். அந்த நான்கு இராஜ்யங்களும் முதல் அரசனின் தேசத்திலிருந்து வரும். ஆனால் அந்த நான்கு தேசங்களும் முதல் அரசனைப் போன்று அவ்வளவு பலமுடையதாக இல்லை.
23 “அந்த இராஜ்யங்களுக்கு முடிவு நெருங்கும்போது, அங்கு தைரியமும் கொடுமையும் வாய்ந்த ஒரு அரசன் தோன்றுவான். இந்த அரசன் மிகவும் தந்திரசாலியாக இருப்பான். ஏராளமாக மேலும் மேலும் ஜனங்கள் பாவம் செய்யும்போது இது நிகழும். 24 இந்த அரசன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான். ஆனால் இந்த வல்லமை இவனிடத்திலிருந்து வருவதாக இருக்காது. இந்த அரசன் பயங்கரமான அழிவுக்குக் காரணமாக இருப்பான். அவன் செய்கிற எல்லாவற்றிலும் வெற்றிகரமாக விளங்குவான். அவன் வல்லமைமிக்க ஜனங்களையும் தேவனுடைய விசேஷ ஜனங்களையும் அழிப்பான்.
25 “இந்த அரசன் மிகவும் உபாயமும் தந்திரமும் உடையவனாக இருப்பான். அவன் வெற்றி பெறுவதற்காகத் தனது ஞானத்தையும், பொய்களையும் பயன்படுத்துவான். அவன் தன்னை மிகவும் முக்கியமானவன் என்று நினைப்பான். அவன் பல ஜனங்களை அவர்கள் எதிர்பார்திராத நேரத்தில் அழிப்பான். அவன் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியானவரோடு (தேவன்) போரிட முயற்சி செய்வான். ஆனால் கொடுமையான அரசனின் வல்லமை அழிக்கப்படும். அவனை அழிக்கப்போவது மனிதக் கைகளாக இருக்காது.
26 “அந்தக் காலங்களைப்பற்றிய தரிசனமும் நான் சொன்னவையும் உண்மையானவை. ஆனால் தரிசனத்தை நீ முத்திரையிட்டு வை. அதற்கு இன்னும் அநேக காலம் ஆகும்.” என்றான்.
27 தானியேலாகிய நான் மிகவும் பலவீனனாகிவிட்டேன். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு பல நாட்கள் நான் நோயுற்றேன். பிறகு நான் எழுந்து அரசனுக்காக வேலை செய்யப்போனேன். ஆனால் நான் அந்தத் தரிசனத்தால் கலங்கிக்கொண்டிருந்தேன். தரிசனத்தின் பொருள் என்னவென்று நான் புரியாமல் இருந்தேன்.
தானியேலின் ஜெபம்
9 தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெயருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந்தவன். அவன் பாபிலோனின் அரசனானான். 2 தரியு அரசனாக இருந்த முதலாம் ஆண்டில் தானியேலான நான், சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புத்தகங்களில், கர்த்தர் எரேமியா தீரிக்கதரிசியிடம் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு முன் எத்தனை வருடங்கள் கடந்து செல்லும் என்று சொல்லியிருந்ததை நான் பார்த்தேன். கர்த்தர் 70 ஆண்டுகள் கடந்து செல்லும் என்று கூறினார்.
3 பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன்.
4 நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன்.
நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர்.
5 “ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். 6 நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் அரசர்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை.
7 “கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக.
8 “கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா அரசர்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம்.
9 “ஆனாலும் கர்த்தாவே, நீர் தயவுடையவர் நீர் ஜனங்கள் செய்த தீமைகளை மன்னித்துவிடுகிறீர். நாங்கள் உண்மையில் உமக்கு எதிராகத் திரும்பினோம். 10 நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை. கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளை அனுப்பி எங்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. 11 இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12 “தேவன், எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இவை ஏற்படும் என்று சொன்னார். அவர் அவை எங்களுக்கு ஏற்படும்படிச் செய்தார். அவர், எங்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும்படிச் செய்தார். எருசலேம் துன்பப்பட்டது போன்று வேறெந்த நகரமும் துன்பப்பட்டதில்லை. 13 அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை. 14 கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம்.
15 “கர்த்தாவே, எங்கள் தேவனே, உமது வல்லமையைப் பயன்படுத்தி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். நாங்கள் உமது ஜனங்கள். இதன் மூலம் இன்றும் நீர் புகழ்பெற்று விளங்குகிறீர். கர்த்தாவே நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறோம். 16 கர்த்தாவே, எருசலேம் மீது கொண்ட கோபத்தை நிறுத்தும். எருசலேம் உமது பரிசுத்தமான மலையின் மீது இருக்கிறது. நீர் சரியானவற்றையே செய்கிறீர். எனவே எருசலேம் மீதுள்ள கோபத்தை நிறுத்தும். எங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் உமது ஜனங்களைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
17 “இப்பொழுதும், கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது ஊழியன். உதவிக்கான என்னுடைய ஜெபத்தைக் கேளும். உமது பரிசுத்தமான இடத்திற்கு நன்மையைச் செய்யும். அந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டவரே, உமது பரிசுத்தமான இடத்தினிமித்தம் இந்நன்மையைச் செய்யும். 18 என் தேவனே, என்னைக் கவனித்துக் கேளும்! உமது கண்களைத் திறந்து, எங்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களைப் பாரும். உமது நாமத்தால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு என்ன நேரிட்டது என்று பாரும்! நாங்கள் நல்ல ஜனங்கள் என்று நான் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. நான் இவற்றைக் கேட்கிறேன். ஏனென்றால் நான் உமது இரக்கத்தை அறிவேன். 19 கர்த்தாவே, என்னைக் கவனித்துக் கேளும். கர்த்தாவே எங்களை மன்னியும். கர்த்தாவே கவனித்து, ஏதாவது செய்யும். காத்திருக்கவேண்டாம். இப்பொழுது ஏதாவது செய்யும். இதனை உமது மகிமைக்காகச் செய்யும். என் தேவனே, இப்பொழுது உமது நாமத்தால் அழைக்கப்படுகிற உமது நகரத்துக்காகவும், உமது ஜனங்களுக்காகவும் ஏதாவது செய்யும்” என்றேன்.
70 வாரங்கள் பற்றிய தரிசனம்
20 நான் எனது ஜெபத்தில் தேவனிடம் இவற்றைச் சொன்னேன். நான் எனது பாவங்களைப் பற்றியும், இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் தேவனுடைய பரிசுத்தமான மலைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். 21 நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, காபிரியேல் என்ற தூதன் என்னிடம் வந்தான். காபிரியேல் நான் தரிசனத்தில் பார்த்த மனிதன். காபிரியேல் விரைவாக என்னிடம் பறந்துவந்தான். அவன் மாலைப் பலி நேரத்தில் வந்தான். 22 காபிரியேல், நான் அறிய விரும்பியவற்றை நான் புரிந்துகொள்ள உதவினான். காபிரியேல் என்னிடம், “தானியேலே, நான் உனக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்க வந்திருக்கிறேன். 23 நீ முதலில் ஜெபிக்க ஆரம்பித்தபோதே எனக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. நான் உன்னிடம் சொல்ல வந்தேன். தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். இந்தக் கட்டளையை நீ புரிந்துகொள்வாய். நீ இந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்வாய்.
24 “தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.
25 “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும். 26 62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.
27 “பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.
இதெக்கேல் நதிக்கரையில் தானியேலின் தரிசனம்
10 கோரேசு பெர்சியாவின் அரசன். கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது.
2 தானியேல் சொல்கிறதாவது, “அந்தக் காலத்தில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களுக்குத் துக்கமாக இருந்தேன். 3 அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை.
4 அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். 5 நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஏறிட்டுப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய சணல் ஆடை அணிந்திருந்தார். அவரது இடுப்பில் சுத்தமான தங்கக் கச்சையைக் கட்டியிருந்தார். 6 அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.
7 தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர். 8 எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப்போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன். 9 பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன்.
10 பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன். 11 தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன். 12 பிறகு அந்த மனிதன் தரிசனத்தில் மீண்டும் பேசத்தொடங்கினான். அவன், “தானியேலே, பயப்படாதே. முதல் நாளிலேயே நீ ஞானம்பெற முடிவுச் செய்தாய். தேவனுக்கு முன்னால் பணிவாக இருக்க முடிவுசெய்தாய். அவர் உனது ஜெபங்களைக் கேட்டிருக்கிறார். நான் உன்னிடம் வந்தேன். ஏனென்றால் நீ ஜெபம் செய்திருக்கிறாய். 13 ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா அரசனிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன். 14 இப்பொழுதும் தானியேலே, உன்னிடம் வருங்காலத்தில் உன் ஜனங்களுக்கு என்ன ஏற்படும் என்று சொல்ல நான் உன்னிடம் வந்திருக்கிறேன். தரிசனமானது நிறைவேற இன்னும் நாளாகும்” என்றான்.
15 அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை. 16 பிறகு மனிதனைப்போன்று தோற்றமளித்த ஒருவன் என் உதடுகளைத் தொட்டான். நான் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனிடம் நான், “ஐயா, நான் கலக்கமடைந்தேன், பயப்படுகிறேன். ஏனென்றால், நான் பார்த்த தரிசனம் இத்தகையது. நான் உதவியற்றவனாக உணருகிறேன். 17 ஐயா, நான் உமது ஊழியனான தானியேல். நான் உம்மோடு எப்படிப் பேசமுடியும்? எனது பலம் போய்விட்டது. எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது” என்றேன்.
18 மனிதனைப் போன்று தோற்றமளித்தவன் என்னை மீண்டும் தொட்டான். அவன் என்னைத் தொட்ட பின் நான் திடமாக உணர்ந்தேன். 19 பிறகு அவன் என்னிடம், “தானியேலே, பயப்படாதே தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். சமாதானம் உன்னுடன் இருப்பதாக. இப்போதும் திடங்கொள்” என்றான்.
அவன் என்னோடு பேசியபோது நான் பலமடைந்தேன். பிறகு நான் “ஐயா, நீர் எனக்குப் பலத்தைக் கொடுத்தீர். இப்பொழுது நீர் பேசலாம்” என்றேன்.
20 அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான். 21 ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான்.
1 மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது,
2 எனது அன்பான நண்பனே, உனது ஆன்மா நலமாயிருக்கும் வண்ணம் ஒவ்வொரு வகையிலும் நீ நலமாயிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். 3 உனது வாழ்க்கையில் உள்ள உண்மையைக் குறித்துச் சில சகோதரர்கள் என்னிடம் வந்து கூறினர். உண்மையின் வழியை நீ தொடர்ந்து பின்பற்றுவதை அவர்கள் எனக்குக் கூறினர். இது எனக்கு சந்தோஷம் கொடுத்தது. 4 உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது.
5 எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்! 6 இச்சகோதரர்கள் உனது அன்பைக் குறித்து சபைக்கு கூறினர். அவர்கள் பயணத்தைத் தொடருவதற்குத் தயவு செய்து நீ உதவு, தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் வழியில் அவர்களுக்கு உதவு. 7 கிறிஸ்துவின் சேவைக்காக இச்சகோதரர்கள் பயணம் மேற்கொண்டனர். தேவனில் விசுவாசமற்றோரிடமிருந்து அவர்கள் எந்தவித உதவியையும் ஏற்கவில்லை. 8 எனவே இச்சகோதரருக்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களுக்கு உதவும்போது, உண்மைக்கான அவர்கள் வேலையில் நாமும் பங்கு கொள்வோம்.
9 நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான். 10 தியோத்திரேப்பு செய்வது தவறு என்பதை நான் வரும்போது பேசுவேன். அவன் எங்களைக் குறித்துப் பொய் கூறி, தீயன பேசுகிறான். அவன் செய்வது இது மட்டுமல்ல. கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டுள்ள சகோதரருக்கு உதவவும் மறுக்கிறான். சகோதரருக்கு உதவ விரும்பும் மக்களையும் தியோத்திரேப்பு தடுக்கிறான். அவர்கள் சபையினின்று விலகும்படியாகச் செய்கிறான்.
11 எனது அன்பான நண்பனே, தீயவற்றைப் பின்பற்றாதே. நல்லவற்றைப் பின்பற்று. நல்லவற்றைச் செய்கிற மனிதன் தேவனிடமிருந்து வந்தவன். தீயவை செய்யும் மனிதனோ, தேவனை அறியாதவன்.
12 தெமெத்திரியுவைப் பற்றி எல்லா மக்களும் நல்லபடியாகப் பேசுகிறார்கள். அவர்கள் கூறுவதோடு உண்மையும் ஒத்துப்போகிறது. அவனைக் குறித்து நாங்களும் நல்லவற்றையே சொல்கிறோம். நாங்கள் கூறுவது உண்மையென்பதும் உனக்குத் தெரியும்.
13 உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. 14 நான் உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அப்போது நாம் ஒருமித்துக் கூடிப் பேசலாம். 15 உனக்கு சமாதானம் உண்டாகட்டும். என்னோடிருக்கும் நண்பர்கள் உனக்குத் தங்கள் அன்பைத் தெரிவிக்கிறார்கள். அங்குள்ள நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பைத் தெரியப்படுத்து.
2008 by World Bible Translation Center