Old/New Testament
11 மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன்.
2 “இப்பொழுதும், தானியேலே, நான் உண்மையைச் சொல்கிறேன். பெர்சியாவில் மேலும் மூன்று அரசர்கள் ஆளூகைச் செய்வார்கள். பிறகு நாலாவது அரசன் ஒருவன் வருவான். அந்த நாலாவது அரசன் பெர்சியாவை இதற்கு முன் ஆண்ட எல்லா அரசர்களைவிட செல்வந்தனாக இருப்பான். அந்த நாலாவது அரசன் வல்லமையைப் பெறுவதற்கு தனது செல்வத்தைப் பயன்படுத்துவான். அவன், எல்லோரும் கிரேக்க இராஜ்யத்திற்கு எதிராக இருக்கக் காரணமாவான். 3 பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட அரசன் வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான். 4 அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
5 “தெற்கிலுள்ள அரசன் பலமுள்ளவனாவான். ஆனால் அவனது தளபதிகளில் ஒருவன் தெற்கிலுள்ள அரசனைத் தோற்கடிப்பான். அந்தத் தளபதி ஆளத்தொடங்குவான். அவன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான்.
6 “பிறகு சில ஆண்டுகள் கழிந்ததும் தென் பகுதி அரசனும் அந்தத் தளபதியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். தென் பகுதி அரசனின் மகள், வடபகுதி அரசனை மணந்துகொள்வாள். அவள் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதனைச் செய்வாள். ஆனால் அவளும், தென் பகுதி அரசனும் போதுமான வல்லமையுடைவர்களாக இருக்கமாட்டார்கள். ஜனங்கள் அவளுக்கு எதிராகவும், அவளை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். அந்த ஜனங்கள் அவளது குழந்தைக்கு எதிராகவும், அவளுக்கு உதவியவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள்.
7 “ஆனால் அவளது குடும்பத்திலிருந்து ஒருவன் வந்து தென்பகுதி அரசனின் இடத்தைப் பிடிக்க வருவான். அவன் வடபகுதி அரசனின் படையைத் தாக்கி, அவனது பலம்வாய்ந்த கோட்டைக்குள் நுழைவான். அவன் போர் செய்து வெல்வான். 8 அவன் அவர்கள் தெய்வங்களின் விக்கிரகங்களை எடுப்பான். அவன் அவர்களின் உலோக விக்கிரகங்களை எடுப்பான். வெள்ளியாலும், பொன்னாலுமான விலைமதிப்புள்ளவற்றையும் எடுப்பான். அவன் அவற்றை எகிப்துக்கு எடுத்துச்செல்வான். அவன் சில ஆண்டுகள் வடபகுதி அரசனுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான். 9 வடபகுதி அரசன், தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான்.
10 “வடபகுதி அரசனின் மகன்கள் போருக்குத் தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு பெரும் படையைச் சேர்ப்பார்கள். அந்தப் படை நாட்டை வெள்ளம்போல் வேகமாகக் கடக்கும். அந்தப் படை தெற்கத்தி அரசனின் பலமான கோட்டை வரை தாக்கும். 11 பிறகு தென்பகுதி அரசன் மிகவும் கோபங்கொள்வான். அவன் வடபகுதி அரசனோடு போரிட படையை நடத்திச் செல்வான். வடபகுதி அரசனுக்குப் பெரும்படை இருக்கும். ஆனால் அவன் போரில் தோல்வியடைவான். 12 வடபகுதி படை தோற்கடிக்கப்படும். அவ்வீரர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். தென்பகுதி அரசன் மிகவும் பெருமைகொள்வான். அவன் வடபகுதிப் படையில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வான். ஆனால் அவன் தொடர்ந்து வெற்றி பெறமாட்டான். 13 வடபகுதி அரசன் இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும்.
14 “அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி அரசனுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி அரசனுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள். 15 பிறகு வடபகுதி அரசன் வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள்.
16 “வடபகுதி அரசன் தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான். 17 வடபகுதி அரசன் தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி அரசனோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி அரசன் தனது மகள்களுள் ஒருத்தியைத் தென்பகுதி அரசனை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி அரசன் தென்பகுதி அரசனைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது.
18 “பிறகு வடபகுதி அரசன் தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி அரசன் வெட்கமடையும்படிச் செய்வான்.
19 “அது நடந்தபிறகு, வடபகுதி அரசன் பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான்.
20 “அந்த வடபகுதி அரசனுக்குப்பிறகு ஒரு புதிய அரசன் வருவான். அந்த அரசன் ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த அரசன் தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த அரசன் அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான்.
21 “அந்த அரசனைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் அரசன் ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான். 22 அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான். 23 பல நாடுகள் இந்தக் கொடூரமான வெறுக்கதக்க அரசனோடு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள். ஆனால் அவன் அவர்களிடம் பொய் பேசி ஏமாற்றிவிடுவான். அவன் பெரும் பலத்தைப் பெறுவான். ஆனால் வெகு சிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
24 “வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும்போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த அரசன் போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான்.
25 “அந்த கொடூரமான வெறுக்கத்தக்க அரசனுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி அரசனைத் தாக்குவான். தென் பகுதி அரசன் மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி அரசன் தோற்கடிக்கப்படுவான். 26 தென்பகுதி அரசனுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள். 27 அந்த இரண்டு அரசர்களும் ஒருவருக்கு ஒருவர் தீமைச் செய்ய நினைப்பார்கள். அவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்வார்கள். அதனால் இருவருக்கும் எந்த நன்மையும் விளைவதில்லை. ஏனென்றால் தேவன் அவர்களது முடிவுகாலத்தைக் குறித்திருக்கிறார்.
28 “வடபகுதி அரசன் பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.
29 “ஏற்ற காலத்தில் வடபகுதி அரசன் தென் பகுதி அரசனை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான். 30 கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி அரசனுக்கு எதிராகப் போரிடும். அக்கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான். 31 வடபகுதி அரசன் தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள்.
32 “வடபகுதி அரசன் பொய்களையும் இச்சகப் பேச்சையும் பயன்படுத்தி பரிசுத்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதை யூதர்கள் கைவிடும்படி செய்வான். அந்த யூதர்கள் மீண்டும் மிக மோசமான பாவங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனை அறிந்த, அவருக்குக் கீழ்ப்படிகிற யூதர்கள் பலம் பெறுவார்கள். அவர்கள் திரும்பி எதிர்த்து போரிடுவார்கள்.
33 “அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும். 34 அறிவுமிக்க யூதர்கள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கொஞ்சம் உதவியும் பெறுவார்கள். ஆனால் அவர்களோடு சேரும் அநேக யூதர்கள் போலிகளாக இருப்பார்கள். 35 அறிவுமிக்க யூதர்களில் சிலர் தவறுகள் செய்து விழுவார்கள். ஆனாலும் கொடுமைக் காலம் வர வேண்டும். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் பலமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் ஆகமுடியும். இது முடிவுகாலம் வரும்வரை இருக்கும். பிறகு, சரியான நேரத்தில் முடிவு காலம் வரும்.
தன்னையே புகழும் அரசன்
36 “வடபகுதி அரசன் தான் விரும்புகிறதையெல்லாம் செய்வான். அவன் தன்னைப் பற்றியே பேசுவான். அவன் தன்னையே புகழுவான். தன்னைத் தேவனை விட பெரியவனாக நினைப்பான். அவன் இதுவரை எவரும் கேட்காதவற்றையெல்லாம் பேசுவான். அவன் தெய்வங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பவருக்கெதிராக அவ்வாறு பேசுவான். அனைத்து தீமைகளும் ஏற்படும்வரை அவன் வெற்றிபெறுவான். தேவன் என்ன திட்டமிட்டிருக்கிறாரோ அது நடைபெறும்.
37 “அந்த வடபகுதி அரசன் தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகை செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான். 38 வடபகுதி அரசன் எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான்.
39 “அந்த வடபகுதி அரசன் பலம் வாய்ந்த கோட்டைகளை அந்நிய தெய்வங்களின் உதவியுடன் தாக்குவான். அவன் தன்னோடு சேர்ந்த அயல்நாட்டு அரசர்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பான். அந்த அரசர்களுக்குக் கீழே அவன் பல ஜனங்களை வைப்பான். அவர்கள் ஆளும் நாடுகளுக்காக வரி வசூலிப்பான்.
40 “முடிவின் காலத்தில் தென்பகுதி அரசன் வடபகுதி அரசனோடு போர் செய்வான். வட பகுதி அரசன் அவனைத் தாக்குவான். இரதங்களோடும், குதிரைப்படை வீரர்களோடும், பல பெரிய கப்பல்களோடும் வந்து தாக்குவான். வடபகுதி அரசன் நாட்டை விட்டு வெள்ளத்தைப் போன்று வேகமாக ஓடுவான். 41 வடபகுதி அரசன் அழகான தேசத்தைத் தாக்குவான். வடபகுதி அரசனால் பல நாடுகள் தோற்கடிக்கப்படும். ஆனால் ஏதோம், மோவாப், அம்மோன் தலைவர்கள் அவனிடமிருந்து காப்பாற்றப்படுவர். 42 வடபகுதி அரசன் பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும். 43 அவன் எகிப்திலுள்ள பொன்னும் வெள்ளியுமான எல்லாச் செல்வங்களையும் பெறுவான். லீபியரும், எத்தியோப்பியரும் அவனுக்கு அடிபணிவார்கள். 44 ஆனால் வடக்கத்தி அரசன் கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான். 45 கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய அரசன் சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”
12 “தரிசனத்தில் அந்த ஆள், தானியேலே, அந்த நேரத்தில், பெரிய அதிபதியாகிய மிகாவேல் தூதன் எழுந்து நிற்பான். மிகாவேல் உனது யூத ஜனங்களுக்கு பொறுப்பானவன். மிகத் துன்பமான ஒரு காலம் வரும். பூமியில் தேசங்கள் தோன்றிய நாள் முதலாக இதுபோன்ற துன்பகாலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தானியேலே, அந்த நேரத்தில், உன் ஜனங்களில் எவருடைய பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். 2 பூமியில் உள்ள ஜனங்களில் செத்துப் புதைக்கப்பட்டவர்கள் எல்லாரும் எழும்புவார்கள். அவர்களில் சிலர் என்றென்றும் வாழ்வதற்காக எழுந்திருப்பார்கள். ஆனால் சிலர் என்றென்றும் வெட்கமும் வெறுப்பும் அடைவதற்காக எழும்புவார்கள். 3 ஞானமுள்ள ஜனங்கள் வானத்து ஒளியைப்போன்று பிரகாசிப்பார்கள். ஜனங்களை நல்ல வழியில் வாழக் கற்றுத்தந்த ஞானிகள் என்றென்றைக்கும் வானத்து நட்சத்திரங்களைப் போன்று ஒளி வீசுவார்கள்.
4 “ஆனால் தானியேலாகிய நீ, இச்செய்தியை இரகசியமாக வைத்துக்கொள். நீ இந்தப் புத்தகத்தை மூடிவை. நீ முடிவு காலம்வரை இந்த இரகசியத்தைக் காக்க வேண்டும். அநேக ஜனங்கள் உண்மையான அறிவைத் தேடி அங்கும் இங்கும் அலைவார்கள். அவர்களுக்கு உண்மையான அறிவு வளரும்.”
5 பிறகு தானியேலாகிய நான் வேறு இரண்டு பேரைப் பார்த்தேன். ஒருவன் ஆற்றங்கரையில் எனது பக்கம் நின்றுகொண்டிருந்தான். இன்னொருவன் ஆற்றின் இன்னொரு கரையில் நின்றுகொண்டிருந்தான். 6 சணல் துணி அணிந்திருந்த ஒருவன், ஆற்றின் தண்ணீரின் மேல் நின்றுகொண்டிருந்தான். இருவரில் ஒருவன் அவனிடம் சொன்னான், “இந்த அதிசயங்களெல்லாம் உண்மையாவதற்கு எவ்வளவு காலமாகும்?”
7 சணல் ஆடை அணிந்து ஆற்றுத் தண்ணீரின்மேல் நின்றவன் தனது வலது கையையும், இடது கையையும் வானத்தை நோக்கி நீட்டினான். அவன் என்றென்றும் ஜீவித்திருக்கிற தேவனுடைய நாமத்தால் ஆணையிட்டதை நான் கேட்டேன். அவன் சொன்னான்: “இது மூன்றும், அரை ஆண்டு காலமும் இருக்கும். பரிசுத்த ஜனங்களின் வல்லமை உடையும். இவை அனைத்தும் இறுதியில் உண்மையாகும்.”
8 நான் பதிலைக் கேட்டேன். ஆனால் உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே நான் கேட்டேன், “ஐயா, இவை எல்லாம் உண்மையானதும் என்ன நிகழும்?” என்று கேட்டேன்.
9 அவன், என்னிடம், “தானியேலே, உன் வாழ்க்கையை நீ தொடர்ந்து நடத்து. இந்த வார்த்தைகள் முடிவுகாலம் வரை இரகசியமாகவும் மறைக்கப்பட்டும் இருக்கும். 10 பலர் சுத்தமாக்கப்படுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே சுத்தப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் தீயவர்கள் தீமையில் தொடருவார்கள். அக்கெட்டவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் ஞானமுள்ளவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள்.
11 “தினபலிகள் நிறுத்தப்படும். அக்காலம் முதல் அழிவை உண்டாக்கும் பயங்கரம் ஏற்படுத்தப்பட்ட நாள்வரை 1,290 நாள் செல்லும். 12 1,335 நாள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
13 “தானியேலே நீயோவென்றால் முடிவு வருமட்டும் சென்று வாழ்ந்திரு. உனது இளைப்பாறுதலை முடிவில் நீ பெறுவாய். மரணத்திலிருந்து எழும்பி, உனது பங்கைப் பெறுவாய்” என்றான்.
1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து,
தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
2 எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக.
தவறு செய்கிற மக்களை தேவன் தண்டிப்பார்
3 அன்பான நண்பர்களே, நாம் எல்லோரும் ஒருமித்துப் பங்குகொள்கிற மீட்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் மிகவும் விரும்பினேன். ஆனால் வேறு சிலவற்றைக் குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதன் தேவையை நான் உணர்ந்தேன். தேவன் தம் பரிசுத்தமான மக்களுக்கு எல்லா காலத்திற்குமாகக் கொடுத்த விசுவாசத்திற்காகப் போராடுமாறு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். 4 சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள்.
5 நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார். 6 தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார். 7 சோதோம், கொமோரா, நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும்கூட நினைவுகூருங்கள். அந்த தேவதூதர்களைப் போன்றே அவையும் பாலியல் நீதிகளை இழந்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் மூழ்கின. நித்திய அக்கினியாகிய தண்டனையில் இப்பொழுது அவை துன்புறுகின்றன. நாம் பார்த்தறிவதற்கு தேவனுடைய தண்டனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன.
8 உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். 9 ஆனால் பிரதான தேவதூதனாகிய மிகாவேல் மோசேயின் உடலுக்காகப் பிசாசோடு விவாதித்தபொழுது, பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க வேண்டுமென மிகாவேல் முடிவு கட்டவில்லை. (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல் கோரிக்கை விடுத்தான்.) “கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்” என்று மட்டும் அவன் சொன்னான்.
10 ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். 11 அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.
12 உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள். 13 அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
14 ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார். 15 எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.
16 இம்மக்கள் எப்போதும் குறை கூறிக் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் செய்யவிரும்பும் தீய காரியங்களை அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாய் பேசுகிறார்கள். தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் பிறரைக் குறித்து நல்லவை கூறுவர்.
ஓர் எச்சரிக்கையும் செய்யவேண்டிய காரியங்களும்
17 அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள். 18 சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர். 19 அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.
20 ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள். 21 தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள்.
22 பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம் கொள்ளுங்கள். 23 நெருப்பிலிருந்து விடுவிப்பதன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள். சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம் காட்டவேண்டிய சிலர் இருக்கிறார்கள். பாவத்தினால் அழுக்கேறிய அவர்களது ஆடைகளையும் கூட வெறுத்துவிடுங்கள்.
தேவனை வாழ்த்துங்கள்
24 நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும். 25 அவர் ஒருவரே தேவன். அவரே நம் மீட்பர். அவருக்கே மகிமை, வல்லமை, அதிகாரம் அனைத்தும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கடந்தகாலம் முழுக்கவும், நிகழ்காலத்துக்கும், என்றென்றைக்குமாக உண்டாவதாக ஆமென்.
2008 by World Bible Translation Center