Old/New Testament
கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராக இருக்கிறார்
12 எப்பிராயீம் தனது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். இஸ்ரவேல் நாள் முழுவதும் “காற்றைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.” ஜனங்கள் மேலும் மேலும் பொய்களைச் சொல்கிறார்கள். அவர்கள் மேலும் மேலும் களவு செய்கிறார்கள். அவர்கள் அசீரியாவோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஒலிவ எண்ணெயை எகிப்துக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
2 கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு வாக்குவாதம் உண்டு. யாக்கோபு தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்படவேண்டும். அவன் செய்த தீயவற்றுக்காக அவன் தண்டிக்கப்படவேண்டும். 3 யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான். 4 யாக்கோபு தேவனுடைய தூதனோடு போராடி வென்றான். அவன் உதவி கேட்டுக் கதறினான். அது பெத்தேலில் நடந்தது. அந்த இடத்தில் அவன் நம்மோடு பேசினான். 5 ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்). 6 எனவே, உனது தேவனிடம் திரும்பி வா. அவருக்கு விசுவாசமாக இரு. நல்லவற்றைச் செய்! நீ எப்பொழுதும் உன் தேவனிடம் நம்பிக்கையாய் இரு!
7 “யாக்கோபு ஓர் உண்மையான வியாபாரி. அவன் தன் நண்பனைக்கூட ஏமாற்றுகிறான். அவனது தராசும் கள்ளத்தராசு. 8 எப்பிராயீம் சொன்னான் ‘நான் செல்வந்தன்! நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்துள்ளேன்! எனது குற்றங்களை யாரும் கண்டுகொள்ள முடியாது. யாரும் எனது பாவங்களைத் தெரிந்து கொள்ளமாட்டான்.’
9 “ஆனால் நீ எகிப்து தேசத்திலிருந்த நாள் முதல், நான் உன் தேவனாகிய கர்த்தராயிருந்திருக்கிறேன், நான் உன்னைப் பண்டிகை நாட்களைப் போன்று (ஆசாரிப்பு கூடார நாட்களைப் போல்) கூடாரங்களில் தங்கச் செய்வேன். 10 நான் தீர்க்கதரிசிகளோடு பேசினேன். நான் அவர்களுக்குப் பல தரிசனங்களைக் கொடுத்தேன். எனது பாடங்களை உனக்குக் கற்பிக்கப் பல வழிகளைத் தீர்க்கதரிசிகளுக்குக் கொடுத்தேன். 11 ஆனால் கீலேயாத் ஜனங்கள் பாவம் செய்தார்கள். அந்த இடத்தில் ஏராளமான பயங்கர விக்கிரகங்கள் இருக்கின்றன. ஜனங்கள் கில்காலில் காளைகளுக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏராளமான பலிபீடங்கள் இருக்கின்றன. வயல் வரப்புகளில் உள்ள கல் குவியல்களைப் போன்று வரிசை வரிசையாகப் பலிபீடங்கள் இருக்கின்றன.
12 “யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப்போனான். அந்த இடத்தில் இஸ்ரவேல் ஒரு மனைவிக்காக வேலை செய்தான். இன்னொரு மனைவிக்காக அவன் ஆடு மேய்த்தான். 13 ஆனால் கர்த்தர் தீர்க்கதரிசியை உபயோகித்து இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி இஸ்ரவேலைப் பத்திரமாகப் பாதுகாத்தார். 14 ஆனால் எப்பிராயீம் கர்த்தருடைய மிகுந்த கோபத்துக்குக் காரணமாக இருந்தான். எப்பிராயீம் பலரைக் கொன்றான். எனவே அவன் தன் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவான். அவனது ஆண்டவர் (கர்த்தர்) அவன் அவமானம் அடையும்படிச் செய்வார்.”
இஸ்ரவேல் தன்னைத்தானே அழித்திருக்கிறான்
13 “எப்பிராயீம் இஸ்ரவேலில் தன்னைத் தானே முக்கிமானவனாகச் செய்துக் கொண்டான். எப்பிராயீம் பேசினான். ஜனங்கள் பயந்து நடுங்கினார்கள். ஆனால் எப்பிராயீம் பாவம் செய்தான். பாகாலை தொழத் தொடங்கினான். 2 இப்பொழுது இஸ்ரவேலர்கள் மேலும் மேலும் பாவம் செய்கிறார்கள். அவர்கள் தாங்களாகவே விக்கிரகங்களைச் செய்துக்கொள்கிறார்கள். வேலைக்காரர்கள் வெள்ளியால் அந்த அழகான சிலைகளைச் செய்கிறார்கள். பிறகு அவர்கள் தம் சிலைகளோடு அடிக்கடி பேசுகிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளுக்குப் பலி கொடுக்கிறார்கள். அவர்கள் அந்தத் தங்கக் கன்றுகுட்டிச் சிலைகளை முத்தமிடுகிறார்கள். 3 அதனால்தான் அந்த ஜனங்கள் விரைவில் மறைந்துவிடுகிறார்கள். அவர்கள் காலையில் காணும் மூடுபனியைப் போன்றும், விரைவில் மறையும் பனியைப் போன்றும் மறைவார்கள். இஸ்ரவேலர் காற்று வீசும்போது களத்திலிருந்து பறக்கிற பதரைப் போன்றும், ஒரு புகைக் கூண்டிலிருந்து எழும்பி மறைந்து போகும் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
4 “நீங்கள் எகிப்து தேசத்திலிருந்த நாள் முதலாக நான் உன் தேவனாகிய கர்த்தராக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தவிர வேறு தெய்வங்களை அறியவில்லை. நானே உங்களை இரட்சித்தவர். 5 நான் உங்களை வனாந்தரத்திலேயே அறிவேன். நான் உங்களை வறண்ட நிலத்திலும் அறிவேன். 6 நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!
7 “அதனால்தான் நான் அவர்களுக்கு ஒரு சிங்கத்தைப் போலிருப்பேன். நான் சாலையில் காத்திருக்கிற சிறுத்தையைப் போன்று இருப்பேன். 8 நான் தன் குட்டிகளை இழந்த கரடியைப் போன்று அவர்களைத் தாக்குவேன். நான் அவர்களின் நெஞ்சைப் பிளப்பேன். நான் ஒரு சிங்கம் அல்லதுவேறொரு காட்டுமிருகம் தன் வேட்டையின் உணவைக் கிழித்துத் தின்பதுபோல் இருப்பேன்.”
தேவ கோபத்திலிருந்து இஸ்ரவேலை எவராலும் காப்பாற்ற முடியாது
9 “இஸ்ரவேலே, நான் உனக்கு உதவினேன். ஆனால் நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, இப்போது நான் உண்னை அழிப்பேன். 10 உங்களது அரசன் எங்கே? அவன் உங்களது நகரங்கள் எதிலும் உங்களைக் காப்பாற்றமுடியாது. உங்களது நீதிபதிகள் எங்கே? நீ அவர்களுக்காக, ‘ஒரு அரசனையும் தலைவர்களையும் தாரும்’ என்று கேட்டாய். 11 நான் என் கோபத்திலே உங்களுக்கு ஒரு ராஜவைக் கொடுத்தேன். மிகவும் கோபமடைந்தபோது அவனை எடுத்துக்கொண்டேன்.
12 “எப்பிராயீம் தனது குற்றங்களை மறைக்க முயன்றான்.
அவன் தனது பாவங்கள் இரகசியமானவை என்று எண்ணினான்.
ஆனால் அவற்றுக்காகத் தண்டிக்கப்படுவான்.
13 அவனது தண்டனை ஒரு பெண் பிரசவ காலத்தில் உணரும் வலியைப் போன்றது.
அவன் அறிவுள்ள மகனாக இருக்கமாட்டான்.
அவனது பிறப்புக்கான காலம் வரும்.
அவன் பிழைக்கமாட்டான்.
14 “நான் அவர்களைக் கல்லறையிலிருந்து காப்பாற்றுவேன்.
நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவேன்.
மரணமே, உனது நோய்கள் எங்கே?
கல்லறையே, உனது வல்லமை எங்கே?
நான் பழிவாங்கப் பார்க்கவில்லை.
15 இஸ்ரவேல் தனது சகோதரர்களுக்கிடையில் வளர்கிறான்.
ஆனால் வல்லமை மிக்க கிழக்குக் காற்று வரும்.
கர்த்தருடைய காற்று வனாந்தரத்திலிருந்து வீசும்.
பிறகு இஸ்ரவேலின் கிணறுகள் வறண்டுபோகும்.
அதன் நீரூற்றுகள் வற்றிப்போகும்.
இஸ்ரவேலின் விலைமதிப்புள்ள எல்லாவற்றையும்
காற்று அடித்துக்கொண்டு போகும்.
16 சமாரியா தண்டிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், அவள் தன் தேவனுக்கு எதிராகத் திரும்பினாள்.
இஸ்ரவேலர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களது பிள்ளைகள் துண்டுகளாகக் கிழிக்கப்படுவார்கள்.
அவர்களது கர்ப்பமுற்ற பெண்கள் கீறி கிழிக்கப்படுவார்கள்.”
கர்த்தரிடம் திரும்பு
14 இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. 2 நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம்,
“எங்கள் பாவங்களை எடுத்துவிடும்.
நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும்.
நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம்.
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.
நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம்.
நாங்கள் மீண்டும் ஒருபோதும்
‘எங்கள் தேவன்’
என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம்.
ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.”
கர்த்தர் இஸ்ரவேலை மன்னிப்பார்
4 கர்த்தர் கூறுகிறார்:
“என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன்.
நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன்.
ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.
5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்.
இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான்.
6 அவனது கிளைகள் வளரும்.
அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும்
இனிய மணத்தைப் போன்று இருப்பான்.
7 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள்.
அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள்.
அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள்.
அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்.”
கர்த்தர் விக்கிரகங்களைப் பற்றி இஸ்ரவேலை எச்சரிக்கிறார்
8 “எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன்.
நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர்.
நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர்.
உன் கனி என்னிடமிருந்து வருகிறது.”
இறுதி அறிவுரை
9 அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான்.
விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன.
அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.
யோவான் பரலோகத்தைப் பார்த்தல்
4 பிறகு நான் பார்த்தேன். அங்கே எனக்கு முன்னே பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. என்னிடம் முன்பு பேசிய அதே குரலை அங்கு கேட்டேன். அக்குரல் எக்காளத்தைப்போன்று ஒலித்தது. “இங்கே ஏறிவா. இதற்கப்புறம் என்ன நிகழவேண்டும் என்பதை உனக்குக் காட்டுகிறேன்” என்றது அக்குரல். 2 பின்னர் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டேன். பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் எனக்கு முன்பாக இருந்தது. அதன் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3 அவர் பார்ப்பதற்கு வைரக்கல்லும், பதுமராகக் கல்லும்போல இருந்தார். அந்த சிம்மாசனத்தைச் சுற்றி மரகதம் போன்ற ஒரு வானவில் இருந்தது.
4 சிம்மாசனத்தைச் சுற்றி இருபத்தி நான்கு சிறிய சிம்மாசனங்கள் இருந்தன. அந்த இருபத்துநான்கு சிறிய சிம்மாசனங்களில் இருபத்து நான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். மூப்பர்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் தலையில் தங்கக் கிரீடங்கள் இருந்தன. 5 சிம்மாசனத்திலிருந்து மின்னல்கள் ஒளிர்ந்தன. இடியோசை கேட்டது. சிம்மாசனத்திற்கு முன்பு ஏழு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அந்த ஏழு விளக்குகள் தேவனுடைய ஏழு ஆவிகளாகும். 6 அந்தச் சிம்மாசனத்துக்கு முன்பாகப் பார்ப்பதற்கு கண்ணாடிக் கடல்போல ஒன்றிருந்தது.
அக்கடல் பளிங்குபோல் தெளிவாகவும் இருந்தது. அந்தச் சிம்மாசனத்தின் முன்னாலும் பக்கங்களிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன. அவற்றிற்கு முன்புறமும் பின்புறமும் கண்கள் நிறைந்திருந்தன. 7 அந்த முதல் ஜீவன் சிங்கத்தைப் போன்றிருந்தது. இரண்டாவது ஜீவன் காளையைப்போல இருந்தது. மூன்றாவது ஜீவனுக்கு மனிதனைப்போல முகமிருந்தது. நான்காவது ஜீவன் பறக்கும் கழுகைப் போன்றிருந்தது. 8 இந்த நான்கு ஜீவன்களுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. இவற்றுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்கள் இருந்தன. இரவும், பகலும் அவை நிறுத்தாமல் கீழ்க்கண்டவற்றைக் கூறிக்கொண்டிருந்தன:
“சகல வல்லமையும் உள்ளவராகிய கர்த்தராகிய தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,
அவர் எப்போதும் இருந்தார், இருக்கிறார், இனிமேல் வரப்போகிறார்.”
9 அந்த உயிர்வாழும் ஜீவன்கள் சிம்மாசனத்தின் மேல் வீற்றிருப்பவருக்கு மகிமையையும், பெருமையையும் நன்றியையும் செலுத்துகின்றன. அவரே எல்லாக் காலங்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். எப்பொழுதும் அந்த உயிர் வாழும் ஜீவன்கள் இப்புகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கின்றன. 10 அந்த இருபத்துநான்கு மூப்பர்களும் தேவனுக்கு முன் குனிந்து வணங்குகின்றனர். எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றவரை மூப்பர்கள் வணங்குகின்றனர். அவர்கள் தங்கள் கிரீடங்களைக் கழற்றி சிம்மாசனத்தின் முன் வைத்து விட்டு கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்:
11 “எங்கள் கர்த்தரும் தேவனுமானவரே!
மகிமைக்கும், கனத்திற்கும், வல்லமைக்கும் தகுதியானவர் நீர் அதிகாரமும் உள்ளவர்.
எல்லாவற்றையும் படைத்தவர் நீர்.
உம் விருப்பத்தாலேயே யாவும் படைக்கப்பட்டு நிலைத்திருக்கவும் செய்கின்றன.”
2008 by World Bible Translation Center