Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 45-46

பரிசுத்த பயன்பாட்டிற்காக நிலம் பிரிக்கப்படுதல்

45 “நீங்கள் சீட்டுப்போட்டு இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நிலங்களைப் பங்கு வைத்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும். இது கர்த்தருக்குரிய பரிசுத்தமான பகுதியாகும். அந்நிலம் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். இந்நிலம் முழுவதும் பரிசுத்தமானதாக இருக்கும். 500 முழம் (875’) சதுரமுள்ள இடம் ஆலயத்துக்குரியது, 50 முழம் (875’) அகலமுடைய திறந்த வெளி இடம் ஆலயத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். பரிசுத்தமான இடத்தில் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் கொண்ட இடம் அளந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும். ஆலயப் பகுதி மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கும்.

“நிலத்தின் பரிசுத்தமான பகுதியானது, ஆசாரியர்களுக்கும் கர்த்தருக்கு அருகில் போய் ஆராதனை செய்யும் ஆலயப் பணியாளர்களுக்கும் உரியது. இது ஆசாரியர்களின் வீடுகளுக்கும் ஆலயத்திற்கும் உரியது. இன்னொரு பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையதாக ஆலயத்தில் பணிபுரியும் லேவியர்களுக்காக இருக்கவேண்டும். இந்த நிலமும் லேவியர்கள் வாழ்வதற்குரிய இடமாக இருக்கும்.

“நீங்கள் நகரத்துக்கென்று 5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட இடம் தரவேண்டும். இது பரிசுத்தமான பகுதிக்கு அருகிலேயே இருக்கவேண்டும். இது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் உரியதாக இருக்கும். அதிபதி பரிசுத்தமான பகுதியின் இருபக்கங்களிலுள்ள நிலத்தையும் நகரத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பெறுவான். இது பரிசுத்தமான பகுதிக்கும் நகரப்பகுதிக்கும் இடையில் இருக்கும். இது வம்சத்தாருக்குரிய பகுதியின் பரப்பைப் போன்ற அளவுடையதாக இருக்க வேண்டும். இதன் நீளம் மேல் எல்லை தொடங்கி கீழ் எல்லை மட்டும் இருக்கும். இது இஸ்ரவேலில் அதிபதியின் சொத்தாக இருக்கும். எனவே அதிபதி எனது ஜனங்களை என்றைக்கும் துன்பப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களின் கோத்திரங்களுக்குத் தக்கதாகக் கொடுப்பார்கள்!”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “போதும் இஸ்ரவேல் அதிபதிகளே! கொடூரமாக இருப்பதை நிறுத்துங்கள்! ஜனங்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்! நேர்மையாக இருங்கள். நன்மையைச் செய்யுங்கள். என் ஜனங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தாதீர்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

10 “ஜனங்களை ஏமாற்றுவதை விடுங்கள். சரியான படிக்கற்களையும் அளவு கோல்களையும் பயன்படுத்துங்கள்! 11 மரக்காலும் அளவு குடமும் ஒரே அளவாய் இருக்கட்டும். மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுக்குடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கட்டும். கலத்தின்படியே அதன் அளவு நிர்ணயிக்கப்படட்டும். 12 ஒரு சேக்கல் இருபது கேரா, ஒரு மினா 60 சேக்கலுக்கு இணையாக வேண்டும். 20 சேக்கலுடன் 25 சேக்கலைச் சேர்த்து, அதோடு 15 சேக்கலைச் சேர்த்தால், அதற்கு இணையாக வேண்டும்.

13 “இது நீங்கள் கொடுக்கவேண்டிய சிறப்புக் காணிக்கை.

ஒரு கலம் (6 சேக்கல்) கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கையும் (14 கோப்பைகள்),

ஒரு கலம் (6 சேக்கல்) வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கைப் (14 கோப்பைகள்) படைக்க வேண்டும்:

14 அளவு குடத்தால் அளக்கவேண்டிய எண்ணெயின் கட்டளை:

பத்து குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி (55 கேலன்) எண்ணெயில் 1/10 பங்கை (1/2 கேலன்) படைக்க வேண்டும்.

15 இஸ்ரவேல் நாட்டிலே நல்ல மேய்ச்சல் மேய்கிற மந்தையிலே 200 ஆடுகளில் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.

“இச்சிறப்பு காணிக்கை தானிய காணிக்கைக்காகவும் தகனபலியாகவும் சமாதான பலியாகவும் அமையும். இக்காணிக்கைகள் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த உதவும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறினார்.

16 “நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் அதிபதிக்கு இக்காணிக்கைகளைக் கொடுக்கவேண்டும். 17 ஆனால் அதிபதி சிறப்பான பரிசுத்த விடுமுறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதிபதி தகனபலிகள், தானியக் காணிக்கைகள், பானங்களின் காணிக்கைகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். இவற்றைப் பண்டிகை நாட்களிலும் அமாவாசை (மாதப் பிறப்பு) நாட்களிலும், ஓய்வு நாட்களிலும், இஸ்ரவேல் குடும்பத்தாரின் மற்ற எல்லாச் சிறப்புப் பண்டிகை நாட்களிலும் கொடுக்கவேண்டும். அதிபதி பாவப்பரிகாரக் பலிகளையும், தானியக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் இஸ்ரவேல் வம்சத்தாரை பரிசுத்தப்படுத்துவதற்காகக் கொடுக்கவேண்டும்.”

18 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “முதல் மாதத்தின், முதல் நாளில், பழுதற்ற ஒரு இளங்காளையை எடுக்கவேண்டும். நீங்கள் அதனை ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தவேண்டும். 19 ஆசாரியன் பாவப் பரிகார இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆலயத்தின் வாசல் தூண்களிலும் பலிபீடத்தின் சட்டத்து நான்கு மூலைகளிலும் உட்பிரகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். 20 நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்காகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.

பஸ்கா பண்டிகையின்போது கொடுக்கவேண்டிய காணிக்கைகள்

21 “முதல் மாதத்தின் 14வது நாளன்று நீங்கள் பஸ்காவைக் கொண்டாடவேண்டும். இந்த நேரத்தில் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தொடங்கும். அப்பண்டிகை ஏழுநாட்கள் தொடரும். 22 அந்த நேரத்தில் அதிபதி தானே ஒரு இளங்காளையை அவனுக்காகவும், எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் பாவப்பரிகாரம் செய்வதற்காகக் கொடுப்பான். 23 ஏழு நாள் பண்டிகையின்போது அதிபதி ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பழுதற்றதாகக் கொடுக்க வேண்டும். அவை கர்த்தருக்குரிய தகனபலியாக அமையும். ஏழு நாள் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒரு இளங்காளையைக் கொடுப்பான். அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஆட்டுக்கடாவை பாவப் பரிகார பலியாக கொடுப்பான். 24 ஒவ்வொரு காளையோடும் ஒரு மரக்கால் மாவையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடு ஒரு எப்பா வாற் கோதுமை மாவையும் கொடுப்பான். அதிபதி ஒருபடி (1 கேலன்) எண்ணெயையும் கொடுப்பான். 25 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் தொடங்குகிற கூடாரப் பண்டிகையிலே அவன் அப்படியே ஏழு நாளும் அதற்குச் சரியானபடிச் செய்ய வேண்டும். அப்பலிகள் பாவப்பரிகாரப் பலியாகவும் தகனபலியாகவும் தானியக் காணிக்கையாகவும் எண்ணெய் காணிக்கையாகவும் அமைய வேண்டும்.”

அதிபதியும் பண்டிகைகளும்

46 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “உட்பிரகாரத்தின் கிழக்கு வாசல் ஆறு வேலை நாட்களிலும் பூட்டப்பட்டிருக்கும், அது ஓய்வு நாளிலும், அமாவாசை நாளிலும் திறக்கப்படும். அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து வாசலருகில் நிற்பான். பிறகு ஆசாரியர்கள் அதிபதியுடைய தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைப்பார்கள். அதிபதி வாசல் படியிலேயே தொழுகை செய்வான். பிறகு அவன் வெளியேறுவான். அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருக்கும். பொது ஜனங்கள் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் தொழுகை நடத்துவார்கள்.

“அதிபதி ஓய்வு நாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலியைத் தருவான். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக் கடாவுமே தருவான். ஆட்டுக் கடாவோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவைக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளோடே தானியக் காணிக்கையாக தன்னால் முடிந்தவரை கொடுக்க வேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.

“அமாவாசை நாளிலோ, பழுதற்ற இளங்காளையை அவன் கொடுக்கவேண்டும். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலிகொடுக்கவேண்டும். தானியக் காணிக்கையாக இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவைக் கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக் குட்டிகளோடு தானியக்காணிக்கையை தனக்கு முடிந்தவரை கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.”

அதிபதி வருகிறபோது, “கிழக்கு வாசலின் மண்டபத்தின் வழியாய் நுழைந்து அதன் வழியாகத் திரும்பிப்போக வேண்டும்.

“பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும். 10 அவர்கள் நுழையும்போது அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடு கூட நுழைய வேண்டும். அவர்கள் புறப்படும்போது அவனும் அவர்களோடு கூடப் புறப்பட்டு போகவேண்டும்.

11 “பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.

12 “அதிபதி சுயவிருப்பக் காணிக்கையை கர்த்தருக்குச் செலுத்தும்போது அது தகன பலியாயிருக்கலாம், அல்லது சமாதான பலியாயிருக்கலாம். அல்லது சுயவிருப்பக் காணிக்கையாயிருக்கலாம். அவனுக்குக் கிழக்கு வாசல் திறக்கப்படவேண்டும். அப்பொழுது அவன் ஓய்வு நாட்களில் செய்கிறதுபோல தன் தகனபலியையும் சமாதான பலியையும் செலுத்தி பின்பு புறப்படவேண்டும். அவன் புறப்பட்ட பின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.

தினசரி காணிக்கை

13 “நீ ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆட்டுக் குட்டியைக் கொடுப்பாய். இது ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குத் தகன பலியாக இருக்கும். நீ இதனை ஒவ்வொரு நாள் காலையிலும் கொடுப்பாய். 14 அதோடு ஒவ்வொரு நாள் காலையிலும் நீ ஆட்டுக் குட்டியோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவிலே 1/6 பங்கு (14 கோப்பை) ஒரு படி எண்ணெயிலே 1/3 பங்கு (1/3 கேலன்) எண்ணெயை மாவைப் பிசைவதற்காகவும் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்குத் தினந்தோறும் கொடுக்க வேண்டிய தானியக் காணிக்கையாகும். 15 எனவே அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தகன பலியாக ஆட்டுக்குட்டியையும் எண்ணெயையும் தானியக் காணிக்கையையும் செலுத்த வேண்டும்.”

அதிபதிக்குரிய வாரிசுச் சட்டங்கள்

16 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஒரு அதிபதி தனது நிலத்திலுள்ள ஒரு பங்கைத் தன் மகன்களில் ஒருவனுக்குக் கொடுத்தால் அது அம்மகனுக்குரியதாகும். அது அவனுடைய சொத்தாகும். 17 ஆனால் அவன் தன் அடிமைகளில் ஒருவனுக்குத் தன் நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது விடுதலையடையும் ஆண்டுவரை (யூபிலிவரை) அவனுடையதாக இருக்கும். பிறகு, அது திரும்பவும் அதிபதியின் உடமையாகும். அதிபதி மகன்களுக்கு மட்டுமே அது உரியதாகும். அது அவர்களுடையதாக இருக்கும். 18 அதிபதி தன் ஜனங்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அல்லது அவன் அவர்களைப் பலவந்தமாக நிலத்தைவிட்டு வெளியேற்ற முடியாது. அவன் தன் சொந்த நிலத்தையே தன் மகன்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு எனது ஜனங்கள் தம் நிலத்தை இழக்கும்படி பலவந்தப்படுத்தப்படமாட்டார்கள்.”

சிறப்பான சமயலறைகள்

19 அம்மனிதன் வாசலின் பக்கத்தில் இருந்த நடை வழியாய் என்னை அழைத்துப் போனான். அவன் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்தமான அறைகளுக்கு அழைத்துப்போனான். அங்கே பாதைக்கு மேற்புறக் கடைசியில் ஒரு இடம் இருப்பதைப் பார்த்தேன். 20 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இந்த இடம்தான் ஆசாரியர்கள் குற்றநிவாரணப் பலியையும் பாவப்பரிகார பலியையும், தானியக் காணிக்கையையும் சமைக்கிற இடம். ஏனென்றால், வெளிப்பிரகாரத்திலே கொண்டுபோய் இந்த காணிக்கைகளை ஜனங்களிடம் காட்ட வேண்டிய தேவையில்லை. எனவே, அவர்கள் பரிசுத்தமான இப்பொருட்களைப் பொது ஜனங்கள் இருக்கிற இடத்திற்குக் கொண்டுவரமாட்டார்கள்.”

21 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். என்னைப் பிரகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்து போகச் செய்தான். பெரிய முற்றத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய முற்றங்கள் இருப்பதைக் கண்டேன். 22 பிரகாரத்தின் நாலு மூலைகளிலும் வேலியடைக்கப்பட்ட சிறுபகுதி இருந்தது. ஒவ்வொரு முற்றமும் 40 முழம் (70’) நீளமும் 30 முழம் (52’6”) அகலமும் உடையது. நான்கு மூலைகளும் ஒரே அளவுடையதாக இருந்தன. 23 உள்ளே இந்த நாலு சிறு முற்றங்களைச் சுற்றிலும் செங்கல் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்களுக்குள் சமைப்பதற்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன. 24 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இவை, ஜனங்கள் தரும் பலிகளை ஆலயத்தின் வேலைக்காரர்கள் சமைக்கிற சமையலறைகள்.”

1 யோவான் 2

இயேசு நமது உதவியாளர்

எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படிக்கு நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் ஒருவன் பாவம் செய்தால் இயேசு கிறிஸ்து நமக்கு உதவுகிறார். அவர் நீதியுள்ளவர். பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இயேசு நமக்காகப் பரிந்து பேசுவார். நமது பாவங்கள் நம்மிலிருந்து நீக்கப்படும் வழி இயேசுவே. எல்லா மக்களின் பாவங்களும் நீக்கப்படும் வழி இயேசுவே.

நாம் செய்யும்படியாக தேவன் கூறியவற்றிற்கு நாம் கீழ்ப்படிந்தால், நாம் தேவனை உண்மையாக அறிந்திருக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஒருவன், “நான் தேவனை அறிவேன்!” என்கிறான். ஆனால் அவன் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவன் ஒரு பொய்யன். அவனில் உண்மை இல்லை. ஆனால் ஒருவன் தேவனின் போதனைக்குக் கீழ்ப்படியும்போது, அம்மனிதனில் தேவனின் அன்பு முழுமை பெற்றிருக்கும். நாம் தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை இவ்வாறே அறிந்துகொள்கிறோம். ஒரு மனிதன் தான் தேவனில் வாழ்வதாகக் கூறினால், அவன் இயேசு வாழ்ந்ததைப் போன்று வாழ வேண்டும்.

பிற மக்களை நேசிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டார்

எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும். 10 தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை. 11 ஆனால் சகோதரனை வெறுக்கிற ஒருவன் இருளில் இருக்கிறான். அவன் இருளில் வாழ்கிறான். அவன் எங்கு போய்க்கொண்டிருக்கிறான் என்பது அம்மனிதனுக்குத் தெரியாது. ஏன்? இருள் அவனைக் குருடனாக்கியிருக்கின்றது.

12 அன்பான பிள்ளைகளே, இயேசுவின் மூலமாக உங்கள் பாவங்கள்
    மன்னிக்கப்பட்டதால் உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
13 தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள்
    அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயவனை நீங்கள் வென்றதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14 பிள்ளைகளே, பிதாவை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
    தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே, நீங்கள் பலமானவர்களாக இருப்பதால் உங்களுக்கு எழுதுகிறேன்.
    ஏனெனில் வார்த்தை உங்களில் உள்ளது.
தீயவனை வெற்றி கொண்டீர்கள்.
    எனவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

15 உலகத்தையோ, உலகத்தின் பொருள்களையோ நேசிக்காதீர்கள். ஒருவன் உலகை நேசித்தால், பிதாவின் அன்பு அம்மனிதனில் இருப்பதில்லை. 16 இவை உலகின் தீய காரியங்களாகும். பாவமிக்க சுயத்தை திருப்திப்படுத்தும் பொருள்களை விரும்புதல், நாம் பார்க்கிற பாவமிக்க பொருள்களை விரும்புதல், நம்மிடம் உள்ள பொருள்களால் மிகவும் கர்வமாக உணர்தல், இவற்றில் ஒன்றேனும் பிதாவினிடமிருந்து வருவதில்லை. இவை அனைத்தும் உலகிலிருந்து வருவன. 17 உலகம் மறைந்துபோகிறது. மனிதர்கள் விரும்பும் உலகத்தின் எல்லாப் பொருள்களும் அழிந்துபோகின்றன. தேவன் விரும்புவதைச் செய்யும் மனிதனோ என்றென்றும் வாழ்கிறான்.

கிறிஸ்துவின் பகைவரைப் பின்பற்றாதீர்கள்

18 எனது அன்பான பிள்ளைகளே, முடிவு நெருங்குகிறது. போலிக் கிறிஸ்து வந்துகொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் பகைவர்கள் பலர் இங்கு ஏற்கெனவே உள்ளனர். எனவே முடிவு நெருங்குகிறது என்பதை நாம் அறிவோம். 19 நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.

20 புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும். 21 ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார்.

24 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்ட போதனையைப் பின்பற்றுவதைத் தொடருங்கள். அப்போதனையைத் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.

26 உங்களைத் தவறான வழிக்குள் நடத்த முயன்றுகொண்டிருக்கிற மக்களைக் குறித்தே இக்கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். 27 கிறிஸ்து உங்களுக்குக் கொடுத்த சிறப்பான அபிஷேகம் உங்களிடையே நிலைத்திருக்கிறது. எனவே உங்களுக்குப் போதிப்பதற்கு எந்த மனிதனும் தேவையில்லை. அவர் உங்களுக்குக் கொடுத்த அந்த அபிஷேகமானது எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிக்கிறது. அந்த அபிஷேகம் உண்மையானது. அது பொய்யானதன்று. எனவே அவரது அபிஷேகம் போதித்ததைப் போல கிறிஸ்துவில் வாழ்வதைத் தொடருங்கள்.

28 ஆம், எனது அன்பான பிள்ளைகளே, அவரில் வாழுங்கள். நாம் இதைச் செய்தால் கிறிஸ்து மீண்டும் வரும் நாளில் அச்சமற்றவர்களாக இருக்க முடியும். அவர் வரும் போது நாம் மறைந்துகொள்ளவோ, வெட்கமடையவோ தேவையில்லை. 29 கிறிஸ்து நீதியுள்ளவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் நீதியைச் செய்கின்ற எல்லா மக்களும் தேவனின் பிள்ளைகளே என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center