Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஓசியா 1-4

ஓசியாவின் மூலமாக தேவனாகிய கர்த்தருடைய செய்தி

பெயேரியின் மகனாகிய ஓசியாவுக்கு வந்த கர்த்தருடைய செய்தி இதுதான். இந்த வார்த்தை யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் இருந்தபோது வந்தது. இது, இஸ்ரவேலின் அரசனான யோவாசின் மகனான யெரொபெயாம் என்பவனின் காலத்தில் நடந்தது.

இது கர்த்தருடைய முதல் செய்தியாக ஓசியாவிற்கு வந்தது. கர்த்தர், “நீ போய் தன் வேசித்தனத்தினால் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு வேசியை மணந்துகொள். ஏனென்றால் இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் எல்லோரும் வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்ளாக இருந்திருக்கிறார்கள்” என்றார்.

யெஸ்ரயேலின் பிறப்பு

எனவே ஓசியா திப்லாயிமின் மகளான கோமேரைத் திருமணம் செய்தான். கோமேர் கர்ப்பமடைந்து ஓசியாவிற்கு ஒரு ஆண்மகனைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம் “அவனுக்கு யெஸ்ரயேல். என்று பெயரிடு. ஏனென்றால் இன்னும் கொஞ்சக்காலததில் நான் ஏகூவின் வம்சத்தாரை அவன் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் சிந்திய இரத்தத்திற்காகத் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலின் இராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன். அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்” என்றார்.

லோருகாமாவின் பிறப்பு

பின்னர் கோமேர் மீண்டும் கர்ப்பமடைந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம், “அவளுக்கு லோருகாமா என்று பெயரிடு. ஏனென்றால் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் காட்டமாட்டேன். நான் அவர்களை மன்னிக்கமாட்டேன். ஆனால் நான் யூதா நாட்டின் மீது இரக்கம் காட்டுவேன். நான் யூதா நாட்டைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் காப்பாற்ற எனது வில்லையோ வாளையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களைக் காப்பாற்ற போர் குதிரைகளையோ, வீரர்களையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களை எனது சொந்த பலத்தால் காப்பாற்றுவேன்” என்றார்.

லோகம்மியின் பிறப்பு

கோமேர் லோருகாமாவை பால்மறக்க செய்த பிறகு அவள் மீண்டும் கர்ப்பம் அடைந்தாள். அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். பிறகு கர்த்தர், “அவனுக்கு லோகம்மீ என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.

The Lord Speaks to the Nation of Israel கர்த்தர் இஸ்ரவேல் தேசத்துடன் பேசுகிறார்

10 “எதிர்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கை கடற்கரையிலுள்ள மணலைப் போன்றிருக்கும். உங்களால் அம்மணலை அளக்கவோ, எண்ணவோ இயலாது. ‘நீங்கள் என் ஜனங்களல்ல’ என்று அவர்களுக்கு சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

11 “பிறகு யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒன்று கூட்டப்படுவார்கள், அவர்களுக்கு ஓர் ஆட்சியாளனை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களது இராஜ்யம் பூமியில் மிகப் பெரியதாக இருக்கும். யெஸ்ரயேலின் நாள் உண்மையில் மிகப் பெரியதாயிருக்கும்.”

“பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்’ என்பீர்கள்.”

“உங்கள் தாயோடு வழக்காடுங்கள். ஏனென்றால் அவள் எனது மனைவியல்ல. நான் அவளது கணவனும் அல்ல. அவளிடம் ஒரு வேசியைப் போன்று நடந்துக் கொள்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லுங்கள், அவளது மார்பகங்களில் இருந்து தனது நேசர்களை விலக்கும்படி அவளுக்குச் சொல்லுங்கள். அவள் தனது சோரத்தை நிறுத்தாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்குவேன். நான் அவளைத் தனது பிறந்தநாளில் இருந்ததைப் போலாக்குவேன். நான் அவளது ஜனங்களை வெளியேற்றுவேன். அவள் காலியான வறண்ட பாலைவனம் போலாவாள். அவளை நான் தாகத்தால் மரிக்கச் செய்வேன். நான் அவளது பிள்ளைகள் மேல் இரக்கப்படமாட்டேன். ஏனென்றால் அவர்கள் வேசிப் பிள்ளைகள். அவர்களின் தாய் ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொண்டாள். அவர்களது தாய் தனது செயல்களுக்காக அவமானம் அடையவேண்டும். அவள், ‘நான் என் நேசர்களிடம் செல்வேன். என்னுடைய நேசர்கள் எனக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பார்கள். அவர்கள் எனக்குக் கம்பளியும் ஆடையும் தருவார்கள். அவர்கள் எனக்குத் திராட்சைரசத்தையும் ஒலிவ எண்ணெயையும் தருவார்கள்’ என்றாள்.

“எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள். அவள் தனது நேசர்களின் பின்னால் ஓடுவாள். ஆனால் அவளால் அவர்களைப் பிடிக்க முடியாது. அவள் தன் நேசர்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பாள். ஆனால் அவளால் அவர்களைக் கண்டுக்கொள்ள முடியாது. பிறகு அவள், ‘நான் எனது முதல் கணவனிடம் (தேவன்) திரும்பிப்போவேன். நான் அவரோடு இருந்தபோது எனது வாழ்க்கை நன்றாக இருந்தது. இப்பொழுது இருக்கிறதை விட அன்று வாழ்க்கை நன்றாக இருந்தது’ என்பாள்.

“அவள் (இஸ்ரவேல்), நான் (கர்த்தர்) ஒருவர்தான் அவளுக்குத் தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதை அறியவில்லை. நான் அவளுக்கு மேலும் மேலும் வெள்ளியும் பொன்னும் கொடுத்துவந்தேன். ஆனால் இஸ்ரவேலர்கள் அந்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்தி பாகாலுக்கான உருவச் சிலைகளைச் செய்தனர். எனவே நான் (கர்த்தர்) திரும்பி வருவேன். நான், என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்தில் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் திராட்சை பழங்கள் தயாராக இருக்கும்போது எனது திராட்சைரசத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் எனது கம்பளியையும், சணலையும் திரும்ப எடுத்துக்கொள்வேன். இவற்றையெல்லாம் நான் அவளது நிர்வாணத்தை மறைப்பதற்காகக் கொடுத்தேன். 10 இப்பொழுது நான் அவளது ஆடைகளை நீக்குவேன். அவள் நிர்வாணமாவாள். எனவே அவளது நேசர்கள் அவளைப் பார்க்க முடியும். எவராலும் எனது அதிகாரத்திலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. 11 நான் (தேவன்) அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும் எடுத்துக் கொள்வேன். நான் அவளது பண்டிகைகளையும், மாத பிறப்பு நாட்களையும், ஓய்வு நாட்களையும் சபை கூடுகிற எல்லா ஆசரிப்புகளையும் நிறுத்துவேன். 12 நான் அவளது திராட்சைத்தோட்டங்களையும் அத்திமரங்களையும் அழிப்பேன். அவள், ‘எனது நேசர்கள் இவற்றை எனக்குக் கொடுத்தனர்’ என்பாள். ஆனால் நான் அவளது தோட்டத்தைக் காடாக்கும்படி செய்வேன். காட்டுமிருகங்கள் வந்து அவற்றைக் தின்னும்.

13 “அவள் பாகால்களுக்குச் சேவைசெய்தாள். எனவே நான் அவளைத் தண்டிப்பேன். அவள் பாகலுக்கு நறுமணப்பொருட்களை எரித்தாள். அவள் ஆடை அணிவித்தாள், அவள் தனது நகைகளையும், மூக்குத்தியையும் அணிவித்தாள். பிறகு அவள் தனது நேசர்களிடம் போய் என்னை மறந்துவிட்டாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.

18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மனமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய். 21 அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“நான் வானங்களோடு பேசுவேன்
    அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
22 பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
    அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.
23 நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன்.
    நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன்,
நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன்.
    அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்.”

ஓசியா கோமேரை அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வாங்குகிறான்

பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம், “கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்” என்றார்.

எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன், பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன்.

இவ்வாறே, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு அரசனோ தலைவரோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பலி இல்லாமலும், நினைவுக் கற்கள் இல்லாமலும் இருப்பார்கள். அவர்கள் ஏபோத் ஆடை இல்லாமலும் வீட்டுத் தெய்வங்கள் இல்லாமலும் இருப்பார்கள். இதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பி வருவார்கள். பிறகு அவர்கள் தம் தேவனாகிய கர்த்தரையும் அரசனாகிய தாவீதையும்காண வருவார்கள். இறுதி நாட்களில் அவர்கள் கர்த்தரையும் அவரது நன்மைகளையும் பெருமைப்படுத்த வருவார்கள்.

கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாயிருக்கிறார்

இஸ்ரவேல் ஜனங்களே கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள். கர்த்தர் இந்த நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்கு எதிராகத் தன் வாதங்களைச் சொல்லுவார். “இந்நாட்டிலுள்ள ஜனங்கள் உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவில்லை. தேவனுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இல்லை. ஜனங்கள் பொய்யாணையும், பொய்யும், கொலையும், திருட்டும் செய்கின்றார்கள். அவர்கள் விபச்சாரமும் செய்கின்றனர். அதனால் குழந்தைகளையும் வைத்திருக்கின்றார்கள். ஜனங்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்கின்றனர். எனவே. அந்த நாடானது ஒரு மனிதன் செத்தவர்களுக்காக புலம்புவதுபோல் இருக்கிறது, அதன் ஜனங்கள் அனைவரும் பலவீனமுடையவர்களாக இருக்கின்றனர். காடுகளில் உள்ள மிருகங்களும் வானத்து பறவைகளும்கடலிலுள்ள மீன்களும் மரித்துக்கொண்டிருக்கின்றன. எவனொருவனும் இன்னொருவனோடு வாதம் செய்வதோ அல்லது பழி சொல்லவோ கூடாது, ஆசாரியரே, எனது வாதம் உங்களோடு உள்ளது, நீங்கள் (ஆசாரியர்கள்) பகல் நேரத்தில் இடறி விழுவீர்கள். இரவில் தீர்க்கதரிசியும் உங்கேளாடு விழுவான். நான் உங்கள் தாயை அழிப்பேன்.

“எனது ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறிவில்லை. நீ கற்றுக்கொள்ள மறுத்திருக்கிறாய். எனவே, நீ எனக்கு ஆசாரியனாக இருக்கிறதை நான் மறப்பேன். நீ உனது தேவனுடைய சட்டங்களை மறந்திருக்கிறாய். எனவே நான் உன் பிள்ளைகளை மறப்பேன். அவர்கள் தற்பெருமை கொண்டார்கள். அவர்கள் எனக்கு எதிராக மேலும் மேலும் பாவங்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களது மகிமையை அவமானமாக்குவேன்.

“ஆசாரியர்கள் ஜனங்களின் பாவத்தில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அப்பாவங்களை மேலும் மேலும் விரும்பினார்கள். எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன். 10 அவர்கள் உண்பார்கள். ஆனால் அது அவர்களுக்குத் திருப்தியைத் தராது. அவர்கள் பாலினஉறவு பாவத்தை செய்வார்கள். ஆனால் குழந்தைகள் பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரை விட்டு விலகி விபச்சாரிகளைப் போன்று ஆகிவிட்டார்கள்.

11 “வேசித்தனமும், பலமான குடியும். புதிய திராட்சைரசமும் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும், 12 எனது ஜனங்கள் மரக்கட்டைகளிடம் ஆலோசனை கேட்கின்றார்கள், அவர்கள் அக்கட்டைகள் பதில் சொல்லும் என்று எண்ணுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வேசிகளைப்போன்று அந்நியத் தெய்வங்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்கள், அவர்கள் தமது தேவனை விட்டு விட்டு வேசிகளைப் போன்று ஆனார்கள். 13 அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள்.

14 “நான் உங்கள் மகள்கள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள்.

இஸ்ரவேலர்களின் அவமானத்துக்குரிய பாவங்கள்

15 “இஸ்ரவேலே, நீ ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறாய். ஆனால் யூதாவை அக்குற்றத்துக்கு ஆளாக்காதே. கில்காலுக்குப் போகாதே. பெத்தாவேனுக்கும் போகாதே. ஆணையிடுவதற்குக் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தாதே. ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு...’ என்று ஆணையிடாதே. 16 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஏராளமானவற்றைக் கொடுத்திருக்கிறார். அவர் தம் ஆடுகளை ஏராளம் புல்லுள்ள சமவெளிக்குக் கூட்டிப்போகும் நல்ல மேய்ப்பனைப் போன்றவர். ஆனால் இஸ்ரவேல் பிடிவாதமாக இருக்கிறது. இஸ்ரவேல் அடங்காமல் மீண்டும் மீண்டும் ஓடும் கன்றுக் குட்டியைப் போன்றிருக்கிறது.

17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எனவே அவனைத் தனியே விட்டுவிடு. 18 “எப்பிராயீம் குடித்தவர்களோடு சேர்ந்துகொண்டு விபசாரிகளைப்போல செயல்படுகிறான். அவர்கள் தங்கள் நேசர்களுடன் இருக்கட்டும். 19 அவர்கள் அத்தேவர்களிடம் பாதுகாப்புக்காகச் சென்றார்கள். அவர்கள் தம் சிந்தனையின் வலிமையை இழந்துவிட்டார்கள். அவர்களது பலிகள் அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வருகின்றன”.

வெளி 1

இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். [a] விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார். கிறிஸ்து தன் தேவதூதனை அனுப்பி தன் ஊழியனாகிய யோவான் இதனைத் தெரிந்துகொள்ளுமாறு செய்தார். தான் பார்த்த எல்லாவற்றையும் யோவான் சொல்லி இருக்கிறான். தேவனிடமிருந்து வருகிற செய்தியாகிய இவ்வுண்மையையே இயேசு அவனிடம் சொன்னார். தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது.

இயேசுவின் செய்திகளை சபைகளுக்கு யோவான் எழுதுகிறார்

ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது:

எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார்.

பூமியில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு. இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.

பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.

கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் [b] இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”

நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு [c] என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன். 10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது. 11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.

12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். 13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. 14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. 15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. 16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.

17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். 18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. 19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. 20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center