Old/New Testament
தேவன் இஸ்ரவேலின் காவல்காரனாக எசேக்கியேலைத் தெரிந்தெடுக்கிறார்
33 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம் கூறு, ‘நான் இந்த நாட்டிற்கு விரோதமாகப் போரிட பகைவரைக் கொண்டுவருவேன். அது நிகழும்போது, ஜனங்கள் ஒரு மனிதனைத் தங்கள் காவல்காரனாகத் தேர்ந்தெடுத்தனர். 3 இந்தக் காவல்காரன், பகை வீரர்கள் வருவதைப் பார்க்கும்போதும் எக்காளத்தை ஊதி ஜனங்களை எச்சரிப்பான். 4 ஜனங்கள் எச்சரிக்கையைக் கேட்டாலும் அதனைப் புறக்கணித்தால் எதிரிகள் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வார்கள். அவனது சொந்த மரணத்திற்கு அவனே பொறுப்பாவன். 5 அவன் எக்காளத்தைக் கேட்டான், ஆனால் எச்சரிக்கையைப் புறக்கணித்தான். எனவே அவனது மரணத்திற்கு அவனே காரணமாகிறான். அவன் எச்சரிக்கையில் கவனம் செலுத்தியிருந்தால், பிறகு அவன் தன் சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்க முடியும்.
6 “‘ஆனால் காவல்காரன் பகை வீரர்கள் வருவதைக் கண்டும் அவன் எக்காளம் ஊதவில்லை என்றால், அவன் ஜனங்களை எச்சரிக்கவில்லை, பகைவன் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வான். அந்த மனிதன் கொல்லப்படலாம். ஏனென்றால், அவன் பாவம் செய்திருக்கிறான். ஆனால் காவல்காரனும் அந்த ஆளின் மரணத்திற்குப் பொறுப்பாளி ஆவான்.’
7 “இப்பொழுது, மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னைக் காவல்காரனாக நான் தேர்ந்தெடுக்கிறேன். எனது வாயிலிருந்து செய்தியை நீ கேட்டால், எனக்காக ஜனங்களை எச்சரிக்க வேண்டும். 8 நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். 9 ஆனால் நீ அந்தப் பாவியைத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படியும், பாவம் செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை செய்தும் அவன் பாவம் செய்வதை நிறுத்த மறுத்துவிட்டால், பின் அவன் மரிப்பான். ஏனென்றால், அவன் பாவம் செய்தவன். ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறாய்.
ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை
10 “எனவே, மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் வம்சத்தாரிடம் பேசு. அந்த ஜனங்கள் சொல்லலாம்: ‘நாங்கள் பாவம் செய்து சட்டங்களை மீறினோம். எங்கள் பாவங்கள் தாங்கமுடியாத அளவிற்குப் பாரமானவை. அந்தப் பாவங்களால் நாங்கள் கெட்டுப்போனோம். நாங்கள் உயிர் வாழ என்ன செய்யவேண்டும்?’
11 “நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என் உயிரின் மேல் ஆணையிடுகிறேன், நான் ஜனங்கள் மரிப்பதை, பாவிகள் கூட மரிப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை. அவர்கள் மரிப்பதை நான் விரும்புவதில்லை. அந்தப் பாவி ஜனங்களும் என்னிடம் திரும்பி வருவதையே நான் விரும்புகிறேன். நான், அவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு உண்மையான வாழ்க்கை வாழ்வதை விரும்புகிறேன். எனவே என்னிடம் திரும்பி வா. தீமை செய்வதை நிறுத்து. இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’
12 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் சொல்: ‘ஒருவன் தீயவனாக மாறிப் பாவம் செய்யத் தொடங்குவானேயானால் அவன் முன்பு செய்த நன்மைகள் எல்லாம் அவனைக் காப்பாற்றாது. ஒருவன் தீமையிலிருந்து மாறிவிடுவானேயானால் அவன் முன்பு செய்த தீமைகள் அவனை அழிக்காது. எனவே, ஒருவன் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் முன்பு செய்த நன்மைகள் அவனைக் காப்பாற்றாது என்பதை நினைவில் வைத்துக்கொள்.’
13 “நான் ஒரு நல்லவனிடம் நீ வாழ வேண்டும் என்று சொல்லலாம். ஒருவேளை அவன் தான் முன்பு செய்த நன்மைகள் தன்னைக் காப்பாற்றும் என்று நினைக்கலாம். எனவே, அவன் தீமைகள் செய்யத் தொடங்கலாம். நான் அவன் முன்பு செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கமாட்டேன்! இல்லை, அவன் தான் செய்யத் தொடங்கிவிட்ட பாவத்தால் மரிப்பான்.
14 “அல்லது நான் ஒரு தீயவனிடம் அவன் மரிப்பான் என்று சொல்லலாம். ஆனால், அவன் தன் வாழ்க்கையை மாற்றலாம். அவன் பாவம் செய்வதை நிறுத்தி, சரியான வழியில் வாழத் தொடங்கலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 15 அவன் கடன் கொடுத்தபோது பெற்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அவன் திருடிய பொருளையும் திருப்பிக் கொடுக்கலாம். அவன் வாழ்வைத் தருகிற நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றத் தொடங்கலாம். அவன் தீமை செய்வதை நிறுத்திவிடுகிறான். பிறகு அவன் நிச்சயம் வாழ்வான். அவன் மரிக்கமாட்டான். 16 அவன் முன்பு செய்த தீமைகளை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அவன் இப்பொழுது நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறான். எனவே அவன் வாழ்வான்!
17 “ஆனால் உங்கள் ஜனங்கள், ‘அது சரியன்று! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்க முடியாது!’ என்கிறார்கள்.
“ஆனால் அவர்களோ நேர்மையில்லாத ஜனங்களாய் இருக்கிறார்கள். அவர்களே மாறவேண்டிய ஜனங்களாக இருக்கிறார்கள். 18 ஒரு நல்லவன் தான் செய்யும் நன்மைகளை நிறுத்திப் பாவம் செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தன் பாவத்தாலேயே மரிப்பான். 19 ஒரு பாவி தான் செய்யும் தீமைகளை நிறுத்தி நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் வாழத்தொடங்கினால் பிறகு அவன் வாழ்வான். 20 ஆனாலும் நீங்கள் நான் நேர்மையாக இல்லை என்று இன்னும் சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இஸ்ரவேல் குடும்பத்தாரே, ஒவ்வொருவனும் தான் செய்த காரியங்களுக்காகவே நியாயந்தீர்க்கப்படுவான்!”
எருசலேம் எடுத்துக்கொள்ளப்பட்டது
21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டு பத்தாம் மாதம் (ஜனவரி) ஐந்தாம் நாளில் எருசலேமிலிருந்து ஒருவன் என்னிடம் வந்தான். அங்குள்ள போரிலிருந்து அவன் தப்பித்து வந்தான். அவன், “அந்நகரம் (எருசலேம்) எடுக்கப்பட்டது!” என்றான்.
22 இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவரின் வல்லமை, அந்த ஆள் என்னிடம் வருவதற்கு முன் மாலையில், என் மேல் வந்திருந்தது, தேவன் என்னை பேச முடியாதவாறு செய்திருந்தார். அந்த ஆள் என்னிடம் வந்தபோது, கர்த்தர் என் வாயைத் திறந்து மீண்டும் என்னைப் பேசும்படிச் செய்தார். 23 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார், 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் அழிந்த நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்கின்றனர். அந்த ஜனங்கள், ‘ஆபிரகாம் ஒருவனாயிருந்தான். தேவன் அவனிடம் இந்த நாடு முழுவதையும் கொடுத்தார். இப்பொழுது நாங்கள் பலராக இருக்கிறோம். எனவே உறுதியாக இந்நாடு எங்களுக்குச் சொந்தம்! இது எங்கள் நாடு!’ என்கிறார்கள்.
25 “கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும்: ‘நீ இன்னும் இரத்தம் நீக்கப்படாத இறைச்சியைத் தின்கிறாய். உதவிக்காக நீ விக்கிரகங்களை நோக்கிப் பார்க்கிறாய். நீ ஜனங்களைக் கொன்றாய். எனவே, நான் உனக்கு இந்நாட்டை ஏன் கொடுக்கவேண்டும்? 26 நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். நீங்கள் ஒவ்வொருவரும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியோடு பாலின உறவு பாவத்தைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு இந்நாடு கிடைக்காது!’
27 “‘கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: “என் உயிரின்மேல் ஆணை, அழிந்துபோன நகரங்களில் வாழும் அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள் என்று நான் வாக்களித்தேன். எவனாவது நாட்டைவிட்டு வெளியே இருந்தால்,நான் அவனை மிருகங்கள் கொன்று தின்னச் செய்வேன். ஜனங்கள் கோட்டைகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் மறைந்திருந்தால். அவர்கள் நோயால் மரிப்பார்கள். 28 நான் அந்நாட்டை வெறுமையானதாகவும் பயனற்றதாகவும் செய்வேன். அந்த நாடு தான் பெருமைப்பட்டுக் கொண்டவற்றையெல்லாம் இழக்கும். இஸ்ரவேல் மலைகள் எல்லாம் காலியாகும். அந்த இடத்தின் வாழியாக எவரும் கடந்து செல்லமாட்டார்கள். 29 அந்த ஜனங்கள் பல அருவருப்பானக் காரியங்களைச் செய்திருக்கின்றனர். எனவே நான் அந்நாட்டை வெறுமையான நாடாகச் செய்வேன். பிறகு இந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
30 “‘இப்பொழுது, மனுபுத்திரனே, உன்னைப்பற்றிக் கூறுகிறேன். உன் ஜனங்கள் சுவர் ஓரங்களிலும் வீட்டு வாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “வாருங்கள். கர்த்தரிடமிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம்” என்கிறார்கள். 31 எனவே அவர்கள் உன்னிடம் எனது ஜனங்களைப்போல வருகிறார்கள். அவர்கள் எனது ஜனங்களைப்போன்று உன் முன்னால் அமருகிறார்கள். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் நீ சொல்வதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தாம் நல்லதென்று எதை உணருகின்றார்களோ அவற்றையே செய்கிறார்கள். அவர்கள் பிற ஜனங்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கமட்டுமே விரும்புகிறார்கள்.
32 “‘இந்த ஜனங்களுக்கு நீ ஒன்றுமில்லை. ஆனால் நீ அவர்களுக்கு இன்பப் பாட்டு பாடுகிற பாடகனாய் இருக்கிறாய். உன்னிடம் இனிய குரல் உள்ளது. நீ உனது கருவிகளை நன்றாக இசைக்கிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொன்னபடி அவர்கள் நடக்கமாட்டார்கள். 33 ஆனால் நீ பாடுவதெல்லாம் உண்மையாக நடக்கும். பிறகு ஜனங்கள் உண்மையில் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்தான் என்று அறிவார்கள்!’”
இஸ்ரவேல் ஒரு ஆட்டு மந்தைப் போன்றது
34 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்கள்) விரோதமாகப் பேசு. எனக்காக நீ அவர்களிடம் பேசு. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: ‘இஸ்ரவேலின் மேய்ப்பர்களாகிய நீங்கள் உங்களுக்கு மட்டுமே உணவு ஊட்டுகிறீர்கள். இது உங்களுக்கு மிகத் தீமையாகும்! நீங்கள் ஏன் உங்கள் மந்தையை மேய்க்கவில்லை? 3 நீங்கள் கொழுத்த ஆடுகளைத் தின்றுவிட்டு அதன் மயிரால் உங்களுக்குக் கம்பளி செய்துகொள்கிறீர்கள். நீங்கள் கொழுத்த ஆடுகளைக் கொன்று உண்கிறீர்கள். நீங்கள் மந்தைக்கு உணவளிப்பதில்லை. 4 நீங்கள் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவதில்லை. நீங்கள் நோயுற்ற ஆடுகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் காயம்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவதில்லை. சில ஆடுகள் எங்கோ அலைந்து காணாமல் போகும். அவற்றைத் தேடிப்போய் நீங்கள் திரும்பக்கொண்டு வருவதில்லை. காணாமல் போன ஆடுகளைத் தேடி நீங்கள் போகவில்லை. இல்லை. நீங்கள் கொடூரமானவர்களாகவும் கடுமையானவர்களாகவும் இருந்தீர்கள். இவ்வாறுதான் நீங்கள் உங்கள் ஆடுகளை வழி நடத்தினீர்கள்!
5 “‘இப்பொழுது மேய்ப்பன் இல்லாததால் ஆடுகள் சிதறிப் போய்விட்டன. அவை ஒவ்வொரு காட்டு மிருகங்களுக்கும் உணவாயின. எனவே அவை சிதறிப்போயின. 6 என் மந்தை எல்லா மலைகளிலும் உயரமான குன்றுகளிலும் அலைந்து திரிகின்றது, பூமியின் எல்லாப் பாகங்களிலும் எனது மந்தை சிதறிப்போயிற்று. அவற்றைத் தேடிப் போவதற்கும் கவனித்துக்கொள்ளவும் யாருமில்லை.’”
7 ஆகையால், மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், 8 “என் உயிரைக்கொண்டு, நான் உனக்கு இந்த வாக்கையளிக்கிறேன். காட்டு மிருகங்கள் என் மந்தையைப் பிடித்தது. ஆம், எனது மந்தை காட்டு மிருகங்களுக்கு உணவாகியது. ஏனென்றால், அவற்றுக்கு உண்மையான மேய்ப்பன் இல்லை. எனது மேய்ப்பர்கள் எனது மந்தையை கவனிக்கவில்லை. இல்லை, அம்மேய்ப்பர்கள் ஆடுகளைத் தின்று தமக்கு உணவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் என் மந்தையை மேய்க்கவில்லை”.
9 எனவே, மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்! 10 கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.”
11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான், நானே, அவர்களின் மேய்ப்பன் ஆவேன். நான் என் ஆடுகளைத் தேடுவேன். நான் அவர்களைக் கவனிப்பேன். 12 மேய்ப்பன் தன் ஆடுகளோடு இருக்கும்போது ஆடுகள் வழிதவறிப் போனால் அவன் அவற்றைத் தேடி அலைவான். அதைப்போன்று நானும் என் ஆடுகளைத் தேடுவேன். நான் என் ஆடுகளைக் காப்பாற்றுவேன். அந்த இருளான, மங்கலான நாட்களில் அவர்கள் சிதறிப்போன எல்லா இடங்களிலிருந்தும் அவர்களை நான் திரும்பக் கொண்டுவருவேன். 13 நான் அவற்றை அந்நாடுகளிலிருந்து கொண்டுவருவேன். நான் அந்நாடுகளிலிருந்து அவற்றை ஒன்று சேர்ப்பேன். நான் அவற்றைத் தம் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். நான் அவற்றை இஸ்ரவேல் மலைகளிலும், ஓடைக் கரைகளிலும், ஜனங்கள் வாழ்கிற இடங்களிலும் மேய்ப்பேன். 14 நான் அவற்றைப் புல்வெளிகளுக்கு வழிநடத்துவேன். அவை இஸ்ரவேல் மலைகளின் உச்சிக்குப் போகும். அங்கே அவை தரையில் படுத்துக்கிடந்து புல்லை மேயும். அவை இஸ்ரவேல் மலைகளில் உள்ள வளமான புல்லை மேயும். 15 ஆம், நான் என் மந்தையை நன்றாக மேய்த்து ஓய்விடங்களுக்கு நடத்திச்செல்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
16 “நான் காணாமல்போன ஆடுகளைத் தேடுவேன். நான் சிதறிப்போன ஆடுகளைத் திரும்பக் கொண்டுவருவேன். நான் புண்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவேன். நான் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவேன். ஆனால் நான் கொழுத்த ஆற்றலுடைய மேய்ப்பர்களை அழிப்பேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பேன்.”
17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “என் மந்தையே, நான் ஒரு ஆட்டுக்கும் இன்னொரு ஆட்டுக்கும் நியாயந்தீர்ப்பேன். நான் ஒரு ஆட்டுக்கடாவுக்கும் வெள்ளாட்டுக்கடாவுக்கும் நியாயம்தீர்ப்பேன். 18 நீங்கள் நல்ல நிலத்தில் வளர்ந்த புல்லை உண்ணலாம். ஆனால் நீங்கள் எதற்காக இன்னொரு ஆடு உண்ண விரும்புகிற புல்லை மிதித்துத் துவைக்கிறீர்கள். நீங்கள் ஏராளமான தெளிந்த தண்ணீரைக் குடிக்கலாம். ஆனால், நீங்கள் எதற்காக மற்ற ஆடுகள் குடிக்கிற தண்ணீரைக் கலக்குகிறீர்கள்? 19 எனது ஆடுகள் உங்களால் மிதித்து துவைக்கப்பட்டப் புல்லை மேயவேண்டும். அவை உங்களால் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும்!”
20 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றிடம் கூறுகிறார்: “நான், நானே கொழுத்த ஆட்டிற்கும் மெலிந்த ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்! 21 நீங்கள் பக்கவாட்டினாலும் தோள்களாலும் தள்ளுகிறீர்கள். நீங்கள் உங்கள் கொம்புகளால் பலவீனமான ஆடுகளை முட்டித் தள்ளுகிறீர்கள். நீங்கள் அவை வெளியேறும்வரை தள்ளுகிறீர்கள். 22 எனவே நான் எனது மந்தையைக் காப்பேன். அவை இனி காட்டு மிருகங்களால் கைப்பற்றப்படாது, நான் ஒரு ஆட்டிற்கும் இன்னொரு ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன். 23 பிறகு நான் அவற்றுக்கு மேலாக ஒரு மேய்ப்பனை நியமிப்பேன். அவனே என் தாசனாகிய தாவீது. அவன் அவற்றுக்கு உணவளித்து அவர்கள் மேய்ப்பனாக இருப்பான். 24 பிறகு கர்த்தரும் ஆண்டவருமான நான் அவர்களின் தேவனாயிருப்பேன். என் தாசனாகிய தாவீது அவர்களிடையில் வாழ்கிற அதிபதியாவன். கர்த்தராகிய நான் பேசினேன்.
25 “நான் எனது ஆடுகளோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்வேன். நான் தீமை தருகிற மிருகங்களை அந்த இடத்தை விட்டு அகற்றுவேன். பிறகு அந்த ஆடுகள் வனாந்தரத்தில் பாதுகாப்பாக இருக்கும், காடுகளில் நன்றாகத் தூங்கும். 26 நான் ஆடுகளை ஆசீர்வதிப்பேன். எனது மலையைச் (எருசலேம்) சுற்றியுள்ள இடங்களையும் ஆசீர்வதிப்பேன். சரியான நேரத்தில் நான் மழையைப் பொழியச் செய்வேன். அவை அவர்கள்மேல் ஆசீர்வாதத்தைப் பொழியும். 27 வயல்களில் வளர்ந்த மரங்கள் கனிகளைத் தரும். பூமி தன் விளைச்சலைத் தரும். எனவே ஆடுகள் தன் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கும். நான் அவற்றின் நுகத்தை உடைப்பேன். நான் அவற்றை அடிமையாக்கிய ஜனங்களின் வல்லமையிலிருந்து காப்பேன். பின் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். 28 அவர்கள் எந்த நாடுகளாலும் மிருகங்களைப்போன்று பிடிக்கப்படமாட்டார்கள். அந்த மிருகங்கள் இனி இவற்றை உண்ணாது. ஆனால் அவை பாதுகாப்பாக வாழும். எவரும் அவற்றைப் பயப்படுத்த முடியாது. 29 நான் அவர்களுக்குத் தோட்டம் இடத்தக்க நல்ல நிலத்தைக் கொடுப்பேன். பிறகு அவர்கள் பசியால் துன்பப்படவேண்டாம். பிற நாட்டினர் செய்யும் நிந்தனைகளை இனி அவர்கள் தாங்கவேண்டாம். 30 பின் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும் அறிவார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் எனது ஜனங்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்!
31 “நீங்கள் எனது ஆடுகள். என் புல்வெளியில் மேய்கிற ஆடுகள். நீங்கள் மனிதர்கள். நான் உங்கள் தேவன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
தேவனுடைய மந்தை
5 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். 2 ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். 3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். 4 அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும்.
5 இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும்.
“அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர்.
ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.” (A)
6 எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார். 7 அவர் உங்களைக் கவனிப்பதால் உங்கள் கவலைகளை அவரிடம் விட்டு விடுங்கள்.
8 உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள். 9 உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே துன்பங்களை உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள உங்கள் சகோதரரும் சகோதரிகளும் அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
10 ஆம், குறுகிய காலம் நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு, தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் உங்களை பலப்படுத்துவார். அவர் உங்களைத் தாங்கிக்கொண்டு, நீங்கள் விழாதபடி பாதுகாப்பார். எல்லா கிருபையையும் அருளுகின்ற தேவன் அவரே. கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்படி அவர் உங்களை அழைத்தார். அம்மகிமை என்றென்றும் தொடரும். 11 எல்லா வல்லமையும் என்றென்றும் அவருக்குரியது. ஆமென்.
இறுதி வாழ்த்துக்கள்
12 சில்வானுவின் உதவியோடு இந்தச் சிறிய நிருபத்தை உங்களுக்கு எழுதினேன். அவன் நம்பிக்கைக்குத் தகுதியான கிறிஸ்தவ சகோதரன் என்பதை நான் அறிவேன். உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு உறுதிப்படுத்தவும், இதுவே தேவனுடைய உண்மையான கிருபை என்பதை எழுதி இருக்கிறேன். அந்தக் கிருபையில் உறுதியாக நில்லுங்கள்.
13 பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது மகனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான். 14 நீங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் அன்பினால் முத்தமிடுங்கள்.
கிறிஸ்துவிலுள்ள உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாகட்டும்.
2008 by World Bible Translation Center