Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 43-45

43 எனவே எரேமியா ஜனங்களுக்கு அவர்களது தேவனாகிய கர்த்தர் சொன்ன வார்த்தையைச் சொல்லி முடித்தான். கர்த்தர் ஜனங்களுக்குச் சொல்லும்படி எரேமியாவை அனுப்பியவாறு எல்லாவற்றையும் சொன்னான்.

ஓசாயாவின் மகனாகிய அசரியாவும் கரேயாவின் மகனான யோகனானும் மற்றும் சிலரும் இறுமாப்போடும் பிடிவாதமானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எரேமியாவிடம் கோபம் கொண்டனர். அவர்கள் எரேமியாவிடம், “எரேமியா, நீ பொய் சொல்லுகிறாய். எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை, ‘நீங்கள் எகிப்துக்கு வாழ போகவேண்டாம்’ என்று எங்களிடம் சொல்ல அனுப்பவில்லை. எரேமியா, நேரியாவின் மகனான பாருக் எங்களுக்கு எதிராக உன்னை ஏவியிருக்கிறான் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களை பாபிலோனிய ஜனங்களிடம் கொடுக்குமாறு அவன் விரும்புகிறான். நீ இதனைச் செய்யுமாறு அவன் விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கொல்ல முடியும். அல்லது நீ இதனைச் செய்யுமாறு விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கைதிகளாக்கி பாபிலோனுக்குக் கொண்டுபோகமுடியும்” என்று சொன்னார்கள்.

எனவே யோகனான், படை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஜனங்களும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. கர்த்தர் அவர்களுக்கு யூதாவில் தங்கும்படி கட்டளையிட்டிருந்தார். ஆனால் கர்த்தருக்கு அடிபணிவதற்குப் பதிலாக, யோகனான் மற்றும் படை அதிகாரிகளும் தப்பியவர்களை யூதாவில் இருந்து எகிப்துக்குக் கொண்டு சென்றனர். கடந்த காலத்தில் பகைவர் பிற நாடுகளுக்கு அவர்களை எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் யூதாவிற்குத் திரும்பினார்கள். இப்பொழுது யோகனான் மற்றும் அனைத்து படையதிகாரிகளும் எல்லா ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை எகிப்துக்கு வழி நடத்திக் கொண்டு சென்றனர். அந்த ஜனங்களுடன் அரசனின் மகள்களும் இருந்தனர். (நேபுசராதான் அவர்களை கவனித்துக்கொள்ளும்படி கெதலியாவை நியமித்தான். நேபுசராதான் பாபிலோனிய அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதியாக இருந்தான்.) யோகனான் தீர்க்கதரிசி எரேமியாவையும் நேரியாவின் மகனான பாருக்கையும் அழைத்துப் போனான். அந்த ஜனங்கள் கர்த்தர் சொன்னவற்றைக் கேட்கவில்லை. எனவே அனைத்து ஜனங்களும் எகிப்துக்குச் சென்றனர். அவர்கள் தக்பானேஸ் எனும் நகரத்திற்குச் சென்றனர்.

தக்பானேஸ் நகரத்தில், கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான். “எரேமியா, சில பெரிய கற்களை எடுத்து தக்பானேஸ் நகரத்தில், அவற்றைப் பார்வோனுடைய அரண்மனைக்கு முன்னால் ஒலிமுக வாசலில் செங்கல் நடைபாதையில் களிமண்ணுக்குள் புதைத்துவை. யூதாவின் ஆட்கள் எல்லோரும் பார்க்கும்போதே நீ இவற்றைச் செய். 10 பிறகு, உன்னை கவனித்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஆட்களிடம் கூறு: ‘இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது. நான் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரை இங்கே வர அனுப்புவேன். அவன் எனது வேலைக்காரன். நான் புதைத்து வைத்த இக்கல்லின் மேல் அவனது சிங்காசனத்தை வைக்கச் செய்வேன். அவன் தனது இராஜ கூடாரத்தை அதன் மேல் விரிப்பான். 11 நேபுகாத் நேச்சார் இங்கே வந்து எகிப்தைத் தாக்குவான். மரிக்க வேண்டியவர்களுக்கு அவன் மரணத்தைக் கொண்டுவருவான். அவன் அடிமைத்தனத்திற்கு ஏதுவானவர்களை சிறையிருக்கச் செய்வான். வாளால் கொல்லப்படத்தக்கவர்களைக் கொல்ல வாளை அவன் கொண்டு வருவான். 12 நேபுகாத்நேச்சார் எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களின் கோயிலில் நெருப்பை மூட்டுவான். அவன் அக்கோயில்களை எரிப்பான். அவன் அந்த விக்கிரகங்களை வெளியே எடுத்துப் போடுவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடையைச் சுத்தப்படுத்துவதற்கு அதில் உள்ள மூட்டைப்பூச்சிகளையும் ஓட்டுப்பூச்சிகளையும் எடுப்பான். அதே வழியில் நேபுகாத்நேச்சார் எகிப்தைச் சுத்தப்படுத்துவான். பிறகு அவன் பத்திரமாக எகிப்தை விடுவான். 13 நேபுகாத்நேச்சார் எகிப்தின் சூரியத்தேவன் ஆலயத்திலுள்ள நினைவுக் கற்களை அழிப்பான். எகிப்தில் உள்ள பொய்த் தெய்வங்களின் ஆலயங்களை அவன் எரித்துப்போடுவான்.’” என்றான்.

எகிப்திலுள்ள யூதா ஜனங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை

44 கர்த்தரிடமிருந்து எரேமியா ஒரு வார்த்தையைப் பெற்றான். எகிப்தில் வாழுகிற அனைத்து யூதா ஜனங்களுக்கும் இந்த வார்த்தை உரிதானது. இந்த வார்த்தை மிக்தோல், தக்பானேஸ், நோப்பில், பத்ரோன் போன்ற இடங்களில் வாழும் யூதாவின் ஜனங்களுக்கானது. இதுதான் செய்தி: “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவதாவது, ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவின் நகரங்களிலும் எருசலேமிலும் நான் ஏற்படுத்திய பயங்கரமானவற்றைப் பார்த்தீர்கள். அந்த நகரங்கள் எல்லாம் இன்று காலியான கற்தூண்களாக உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. ஏனென்றால், அதில் வாழ்ந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர். அது எனக்குக் கோபத்தைத் தந்தது. கடந்த காலத்தில் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் எனது தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்களாக இருந்தனர். அத்தீர்க்கதரிசிகள் எனது செய்திகளைப் பேசினார்கள். அந்த ஜனங்களிடம், “இப்பயங்கரமானவற்றைச் செய்யாதீர்கள். விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதை நான் வெறுக்கிறேன்” என்றனர். ஆனால் அந்த ஜனங்கள் தீர்க்கதரிசிகள் சொன்னதைக் கேட்கவில்லை. அவர்கள் அத்தீர்க்கதரிசிகளிடம் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. அந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதை நிறுத்தவில்லை. எனவே நான் அந்த ஜனங்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டினேன். நான் யூதாவின் பட்டணங்களையும் எருசலேமின் தெருக்களையும் தண்டித்தேன். எனது கோபம், எருசலேமையும் யூதாவின் பட்டணங்களையும் இன்றைக்குள்ள வெறுமையான கற்குவியல்களாக்கிவிட்டது.’”

எனவே, “இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘தொடர்ந்து விக்கிரகங்களைத் தொழுதுக்கொண்டு நீங்கள் உங்களையே ஏன் காயப்படுத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் யூதாவின் வம்சத்திலிருந்து பிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஒன்றுமில்லாதவர்களைபோல ஆக்க நீங்களே காரணமாகுகிறீர்கள். ஜனங்களாகிய நீங்கள் விக்கிரகங்களைச் செய்து எனக்கு ஏன் கோபத்தை உண்டுப்பண்ணுகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் எகிப்தில் வாழ்கிறீர்கள். எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதன் மூலம் இப்போது நீங்கள் என்னைக் கோபமூட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே அழிப்பீர்கள். இது உங்களுடைய தவறு. நீங்கள் எல்லா ஜாதிகள் மத்தியிலும் ஒரு சாபச் சொல்லாகவும், அவமானப்பட்டவர்களாகவும் ஆவீர்கள். அடுத்த நாட்டு ஜனங்கள் அதைக் கெட்டதாகப் பேசுவார்கள். பூமியில் உள்ள மற்ற நாட்டினர் உங்களை கேலி செய்வார்கள். உங்கள் முற்பிதாக்கள் செய்த பொல்லாப்புகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? யூதாவின் அரசர்களும் அரசிகளும் செய்த பொல்லாப்புகளை மறந்து விட்டீர்களா? யூதாவிலும் எருசலேம் வீதிகளிலும் நீங்களும் உங்கள் மனைவியரும் செய்த பொல்லாப்புகளை மறந்துவிட்டீர்களா? 10 இந்த நாளிலும் கூட யூதாவின் ஜனங்கள் தங்களைத் தாங்கள் தாழ்த்திக்கொள்ளவில்லை. அவர்கள் எனக்கு எவ்வித மரியாதையும் செய்யவில்லை. அந்த ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றவில்லை. நான் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’

11 “எனவே, இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘உங்களுக்கு பயங்கரமானவை நிகழவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். யூதாவின் வம்சம் முழுவதையும் நான் அழிப்பேன். 12 உயிர் பிழைத்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அந்த ஜனங்களும் எகிப்துக்கு வந்தனர். யூதாவின் வம்சத்திலுள்ள அந்த சிலரையும் நான் அழிப்பேன். அவர்கள் வாளால் கொல்லப்படுவார்கள் அல்லது பசியால் மரிப்பார்கள். அவர்களுக்கு நடப்பதைக் கேள்விப்பட்டு மற்ற நாடுகள் அஞ்சும். மற்றவர்கள் அவரை சபித்து நிந்தனைக்குள்ளாக்கிடுவார்கள். அந்த யூதா ஜனங்களை அவர்கள் அவமதிப்பார்கள். 13 எகிப்தில் வாழ்வதற்குப் போன அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். நான் வாள்கள், பசி மற்றும் பயங்கரமான நோய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தண்டிப்பேன். நான் எருசலேம் நகரத்தைத் தண்டித்ததுபோன்று அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். 14 யூதாவிலிருந்து தப்பிப் பிழைத்து எகிப்திற்கு வாழப் போனவர்களில் ஒருவர் கூட எனது தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அந்த ஜனங்கள் யூதாவிற்குத் திரும்பி வந்து அங்கே வாழ விரும்புகின்றனர். ஆனால் ஒருவரும் யூதாவுக்குத் திரும்பிப் போகமாட்டார்கள். ஒருவேளை சிலர் மட்டும் தப்பித்துக்கொள்ளலாம்.’”

15 யூதாவின் பெண்களில் பலர் எகிப்தில் வாழும்போது அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களது கணவர்களுக்கு இது தெரியும். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. யூதாவின் ஜனங்களில் பெரிய கூட்டத்தினர் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் எகிப்தின் தென்பகுதியில் வாழுகின்ற யூதா ஜனங்களாவார்கள். மற்ற தெய்வங்களுக்கு பலிகள் கொடுத்துக்கொண்டிருக்கிற அப்பெண்களின் கணவர்கள் எரேமியாவிடம், 16 “நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம். 17 வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் அரசர்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் அரசியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை. 18 ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.

19 பிறகு பெண்கள் பேசினார்கள். அவர்கள் எரேமியாவிடம், “நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்கள் அறிவார்கள். வானராக்கினிக்கு பலிகள் கொடுக்க எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளுக்குப் பானங்களின் காணிக்கை ஊற்ற எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளைப் போன்ற அப்பங்களை நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்களும் அறிவார்கள்” என்றனர்.

20 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான். 21 எரேமியா அந்த ஜனங்களிடம், “யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் நீங்கள், பலிகள் செய்ததை கர்த்தர் நினைவுப்படுத்தினார். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், தேசத்தின் ஜனங்களும் இதனைச் செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கர்த்தர் நினைவுப்படுத்தினார். அதைப்பற்றி நினைத்தார். 22 பிறகு கர்த்தருக்கு உங்களோடு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்த பயங்கரமான காரியங்களை கர்த்தர் வெறுத்தார். எனவே கர்த்தர் தேசத்தைக் காலியான வனாந்தரமாக்கினார். இப்பொழுது அங்கே எவரும் வாழவில்லை. மற்றவர்கள் அத்தேசத்தைப் பற்றி அருவருப்பாகப் பேசுகிறார்கள். 23 அந்த தீமையெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டன. ஏனென்றால், நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்தீர்கள். கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள். நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரது போதனைகளையும் அவர் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் பின்பற்றவில்லை. உங்கள் உடன்படிக்கையின் பகுதியை நீங்கள் பாதுகாக்கவில்லை” என்று பதிலளித்தான்.

24 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடமும் பேசினான். எரேமியா சொன்னான், “யூதா ஜனங்களாகிய நீங்கள், இப்பொழுது எகிப்தில் இருக்கிறீர்கள். கர்த்தருடைய வார்த்தையை கவனியுங்கள்: 25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘பெண்களாகிய நீங்கள் சொன்னதையே செய்தீர்கள். நீங்கள், “நாங்கள் செய்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். பலிகள் கொடுப்பதாகவும் பானபலி ஊற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தோம்” என்றீர்கள். எனவே அவ்வாறே செய்யுங்கள். நீங்கள் செய்வதாக வாக்குறுதி கொடுத்தவற்றைச் செய்துவிடுங்கள். உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.’ 26 ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள். 27 நான் யூதாவின் ஜனங்கள் மேல் கவனமாயிருக்கிறேன். ஆனால் நான் அவர்களின் மேல் நன்மைக்காக கவனித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அவர்கள் மேல் தீமை செய்வதற்காகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் வாழ்கிற யூதாவின் ஜனங்கள் பசியால் மரிப்பார்கள், அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் முடிந்து போகும்வரை தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள். 28 யூதா ஜனங்களில் சிலர் வாளால் கொல்லப்படுவதிலிருந்து தப்புவார்கள். அவர்கள் எகிப்திலிருந்து யூதாவிற்குத் திரும்பி வருவார்கள். ஆனால் தப்பி வருகிற யூதாவின் ஜனங்கள் மிகச் சிலராக இருப்பார்கள். பிறகு தப்பிப்பிழைத்த அந்த யூதா ஜனங்கள், எகிப்தில் வாழ்பவர்கள், யாருடைய வார்த்தை உண்மையாகிறது என்பதை அறிந்துக்கொள்வார்கள். எனது வார்த்தையா? அல்லது அவர்களின் வார்த்தையா? எது உண்மையானது என்பதை அவர்கள் அறிவார்கள். 29 நான் உங்களுக்கு அடையாளத்தைத் தருவேன்’ இது கர்த்தருடைய வார்த்தை, ‘எகிப்தில் நான் உங்களைத் தண்டிப்பேன். பிறகு நான் உங்களைத் தண்டிப்பேன் என்ற எனது வாக்கு உண்மையாக நடப்பதை நீங்கள் அறிவீர்கள். 30 நான் என்ன சொன்னேனோ அதைச் செய்வேன் என்பதற்கு இதுவே உங்களது சான்றாகும்’ கர்த்தர் சொல்லுவது என்னவெனில், ‘பார்வோன் ஒப்பிரா எகிப்தின் அரசன். அவனது பகைவர்கள் அவனைக் கொல்ல விரும்புகின்றனர். நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவர்களிடம் கொடுப்பேன். யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்தான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் பகைவனாக இருந்தான். நான் சிதேக்கியாவை அவனது பகைவனிடம் கொடுத்தேன். அதே வழியில் நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவரிடம் கொடுப்பேன்’” என்று சொன்னான்.

பாருக்குக்கு ஒரு செய்தி

45 யோயாக்கீம் யோசியாவின் மகன். யூதாவில் யோயாக்கீமின் நான்காவது ஆட்சியாண்டில் தீர்க்கதரிசியான எரேமியா நேரியாவின் மகனான பாருக்கிடம் இவற்றைச் சொன்னான். பாருக் ஒரு புத்தகச்சுருளில் இவற்றை எழுதினான். எரேமியா பாருக்கிடம் சொன்னது இதுதான்: “இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொல்வது: ‘பாருக், நீ, “இது எனக்கு மிகவும் கொடூரமானது. கர்த்தர் எனக்குத் துக்கத்தை வேதனையோடு கொடுத்திருக்கிறார் நான் மிகவும் களைத்துப் போனேன். எனது கஷ்டத்தால் நான் தோய்ந்து போனேன். நான் இளைப்பாற முடியவில்லை”’” என்று சொன்னாய். கர்த்தர் சென்னார்: “எரேமியா, பாருக்கிடம் இதனைச் சொல். இதுதான் கர்த்தர் கூறுகிறது: ‘நான் கட்டியவற்றை இடித்துப்போடுவேன். நான் நாட்டியிருக்கின்றவற்றையே பிடுங்கிப் போடுவேன். யூதாவின் எல்லா இடங்களிலும் நான் இதனைச் செய்வேன். பாருக், நீ உனக்காக பெருஞ் செயலுக்காக எதிர்பார்த்திருக்கிறாய். ஆனால் அவற்றை எதிர்பார்க்காதே. ஏனென்றால், அனைத்து ஜனங்களுக்கும் பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’ கர்த்தர், ‘பல இடங்களுக்கு நீ போக வேண்டியிருக்கும். ஆனால், நீ எங்கே போனாலும் உன்னை உயிரோடு தப்பிக்கும்படி நான் செய்வேன்’” என்று கூறினார்.

எபிரேயர் 5

ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். அறியாமை உடையவர்களிடமும், தவறு செய்கிறவர்களிடமும் அந்தப் பிராதான ஆசாரியனால் மென்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில் அவனும் பலவீனத்துக்குட்பட்டவனே ஆவான். இதனால் தான், மற்றவர்களுக்காகக் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்னால், தன் சொந்தப் பாவங்களுக்காக அவன் காணிக்கை செலுத்த வேண்டும்.

பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத் [a] தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம்,

“நீர் எனது மகன்.
    இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார். (A)

இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்,

“நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப்
    போன்று ஆசாரியராக இருப்பீர்” (B)

கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார். அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார். 10 இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விழாதிருக்க எச்சரிக்கை

11 இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். 12 இப்போதைக்கு, நீங்கள் போதகராக ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேவனுடைய போதனைகள் என்னும் அடிப்படைப் பாடங்களை உங்களுக்கே யாராவது போதிக்கத் தேவையாய் இருக்கிறது. இன்னும் உங்களுக்குப் பால் உணவே தேவைப்படுகிறது. திட உணவுக்கு நீங்கள் தயாராயில்லை. (அதாவது இன்னும் கடினமான போதனைகள் அல்ல, எளிய போதனைகளே உங்களுக்குத் தேவைப்படுகிறது). 13 இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே! 14 திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center