Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
புலம்பல் 3-5

துன்பங்களின் அர்த்தம்

நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன்.
கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார்.
    நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல
    இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார்.
கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார்.
    அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார்.
    அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார்.
    அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.
அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார்.
    நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.
கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார்.
என்னால் வெளியே வரமுடியவில்லை.
    அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.
நான் கதறினாலும் உதவி கேட்டாலும்
    கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார்.
    அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.
10 கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார்.
    அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார்.
11 கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார்.
    அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார்.
    அவர் என்னை பாழாக்கினார்.
12 அவர் தனது வில்லை தயார் செய்தார்.
    அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
13 அவர் தனது அம்பை என்னுடைய
    வயிற்றில் எய்தார்.
14 நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன்.
    நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள்.
15 கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
    அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார்.
16 கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார்.
    அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.
17 நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன்.
    நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.
18 நான் எனக்குள், “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை
    நான் இழந்து விட்டேன்” என்றேன்.
19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.
    எனக்கு வீடு இல்லை.
    நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
    நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.
    பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன்.
    நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
    கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
    கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
    ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
    கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள
    கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
27 ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது.
    ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.
28 கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது,
    அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
29 அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும்.
    அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம்.
30 அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும்.
    அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
31 கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை
    அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும்.
32 கர்த்தர் தண்டிக்கும்போது
    அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார்.
அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும்
    அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.

33 கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை.
    அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
34 கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை.
    யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை.
35 யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை.
    ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள்.
36 கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை.
    கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை.
37 ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது,
    நிகழச் செய்யவும் முடியாது.
38 உன்னதமான தேவனே
    நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
39 ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது
    உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.
40 நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம்.
    பிறகு கர்த்தரிடம் திரும்புவோம்.

41 பரலோகத்தின் தேவனிடம்
    நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.
42 நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம்.
    இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43 நீர் கோபத்தால் மூடப்பட்டு
    எங்களைத் துரத்தினீர்.
    நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
44 ஜெபம் எதுவும் வந்து சேராதபடி
    நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45 மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும்
    அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
46 எங்களது பகைவர்கள் எல்லாம்
    எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள்.
47 நாங்கள் பயந்திருக்கிறோம்.
    நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம்.
நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
    நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.
48 எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது!
    எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
49 எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன!
    நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
50 கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை,
    நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை
    நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
51 எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது
    என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
52 அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள்.
    ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.
53 நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள்.
    அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.
54 என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது.
    “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன்.
    நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
56 நீர் எனது சத்தத்தைக் கேட்டீர்.
    நீர் உமது காதுகளை மூடவில்லை.
    நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை.
57 நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர்.
    “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர்.
58 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர்.
    நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
59 கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர்.
    இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.
60 எனது பகைவர்கள் எவ்வாறு
    என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர்.
அவர்கள் எனக்கு எதிராகச் செய்த
    அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.
61 கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர்.
    அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.
62 எல்லா நேரத்திலும்
    எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.
63     கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும்,
    என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!
64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்!
    அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
65 அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்!
    பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
66 அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்!
    கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!

எருசலேம் மீதான தாக்குதலின் பயங்கரங்கள்

தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார்.
    நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார்.
எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன.
    ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன.
சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள்.
    அவர்கள் தங்கத்தின் எடைக்குச் சமமான எடையுள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் இப்பொழுது பகைவர்கள் அந்த ஜனங்களை பழைய மண்பாத்திரங்களைப்போன்று கருதுகின்றனர்.
    பகைவர்கள், குயவனால் செய்யப்பட்ட மண்பாத்திரங்களைப்போன்று இவர்களைக் கருதுகிறார்கள்.
காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன.
    ஓநாய் கூடத் தன் குட்டிகள் மார்பில் பால் குடிக்கும்படிவிடும்.
ஆனால் எனது ஜனங்களின் குமாரத்தியோ கொடூரமானவள்.
    அவள் வனாந்தரத்தில் வாழும் நெருப்புக் கோழியைப் போன்றவள்.
சிறு குழந்தைகளின் நாக்கானது,
    தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது.
சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள்.
    ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை.
ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது,
    வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர்.
மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள்
    இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள்.
எனது ஜனங்களின் மகள் [a]
    செய்த பாவம் மிகப்பெரியது.
அவளின் பாவம் சோதோமும் கொமோராவும் [b]
    செய்த பாவத்தை விடப் பெரியது.
சோதோமும் கொமோராவும் திடீரென அழிக்கப்பட்டது.
    எந்த மனிதனின் கையும் அழிவுக்கு காரணமாயிருக்க முடியவில்லை.
யூதாவிலுள்ள சில புருஷர்கள்
    விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர்.
அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள்.
    அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள்.
    அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள்.
அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை.
    அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன.
ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின.
    வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது.
    அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது.
வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள்.
    பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள்.
அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர்.
10 அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத்
    தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர்.
அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று.
    என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.
11 கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார்.
    அவர் தனது கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார்.
அவர் சீயோனில் ஒரு நெருப்பை உண்டாக்கினார்.
    அந்த நெருப்பு சீயோனை அதன் அஸ்திபாரம்வரைக்கும் எரித்துபோட்டது.
12 பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது
    என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை.
உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை
    நம்ப முடியவில்லை.
பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக
    நுழைய முடியும் என்பதை அவர்களால்
    நம்ப முடியவில்லை.
13 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த
    பாவத்தால் இது நிகழ்ந்தது.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த
    தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது.
எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள்.
    நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள்.
14 தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில்
    குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள்.
    அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர்.
15 “வெளியே போ! வெளியே போ!
    எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர்.
அவர்களுக்கு வீடு இல்லை.
    மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
16 கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார்.
    அதற்குப் பிறகு அவர்களை அவர் பாதுகாக்கவில்லை.
அவர் ஆசாரியர்களை மதிக்கவில்லை.
    யூதாவிலுள்ள மூப்பர்களுடன் அவர் சிநேகம் வைக்கவில்லை.
17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று.
    ஆனால் எந்த உதவியும் வரவில்லை.
எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.
    நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
    ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.
18 எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள்.
    எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை.
எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது.
    எங்கள் முடிவு வந்தது!
19 எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர்.
    அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள்.
எங்களைப் பிடிப்பதற்காக
    அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர்.
20 அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான்.
எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான்.
    ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான்.
இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
    அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம்.
    அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம்.
21 ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
    ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும்.
நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய்.
    உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய்.
22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது.
    நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய்.
ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார்.
    அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.

கர்த்தருக்கு ஒரு ஜெபம்

கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும்.
    எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று.
    எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம்.
    எங்களுக்குத் தந்தை இல்லை.
    எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது.
    நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம்.
    நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
    நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர்.
இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள்.
    இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர்.
    அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
    வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
10 எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது.
    எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
11 பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர்.
    யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
12 பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர்.
    எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
13 பகைவர்கள் எங்கள் இளைஞர்களை
    எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர்.
எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால்
    கீழே இடறி விழுந்தார்கள்.
14 மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை.
    இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
15 எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை.
    எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது.
    எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
17 இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது.
    எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
18 சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது.
    சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
19 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர்,
    உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
20 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர்.
    எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
21 கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும்.
    நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம்.
    எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
22 நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே.
    எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?

எபிரேயர் 10:19-39

தேவனிடம் நெருங்கி வாருங்கள்

19 ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. 20 இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். 21 தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 22 நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். 23 மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.

உறுதிபெற ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்

24 நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும்.

25 சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும்.

கிறிஸ்துவிடமிருந்து விலகாதீர்கள்

26 நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. 27 நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். 28 மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். 29 ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். 30 “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” [a]என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்” [b]என்றும் சொன்னார். 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும்.

உனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் விட்டுவிடாதே

32 நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். 33 சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். 34 ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள்.

35 எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். 36 நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். 37 கொஞ்ச காலத்தில்,

“வரவேண்டியவர் வருவார்,
    அவர் தாமதிக்கமாட்டார்.
38 விசுவாசத்தினாலே நீதிமானாக
    இருக்கிறவன் பிழைப்பான்.
அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால்
    நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.” (A)

39 ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center