Old/New Testament
கர்த்தர் நேபுகாத்நேச்சாரை ஆளுபவனாக ஏற்படுத்தினார்
27 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது. யூதாவின் அரசனாக சிதேக்கியா ஆன நான்காம் ஆட்சி ஆண்டில் இது வந்தது. சிதேக்கியா, யோசியா அரசனின் மகன். 2 இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, நீ பட்டையான வார் மற்றும் கம்பங்களையும்கொண்டு ஒரு நுகத்தடி செய். அதை உன் கழுத்தின் பின்னால் பூட்டிக்கொள். 3 பிறகு நீ ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய அரசர்களுக்குச் செய்தியை (அதுபோன்று நுகத்தை) அனுப்பு. எருசலேமுக்கு வந்துள்ள இந்த அரசர்களின் தூதுவர்களிடம் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பார்க்கும்படி செய்திகள் அனுப்பு. 4 அந்தத் தூதுவர்களிடம் அவர்களது எஜமானர்களிடம் செய்தியைக் கூறுமாறுச் சொல். அவர்களிடம் சொல்: சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் தேவன் சொல்கிறார்: ‘நான் பூமியையும் அதன் மேல் ஜனங்களையும் உண்டாக்கினேன் என்று சொல். 5 நான் பூமியின் மேல் அனைத்து மிருகங்களையும் உண்டாக்கினேன். நான் இவற்றை எனது பெரும் வல்லமையாலும் பலமான கையாலும் செய்தேன். இந்தப் பூமியை நான் விரும்புகிற யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன். 6 நான் இப்பொழுது பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் உங்கள் நாடுகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அவன் எனது வேலையாள். அவனுக்குக் காட்டு மிருகங்கள்கூட பணியும்படிச் செய்வேன். 7 அனைத்து நாடுகளும் நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்யும். அவனது மகனுக்கும் பேரனுக்கும் சேவைசெய்யும். பிறகு பாபிலோன் தோற்கடிக்கப்படக் கூடிய காலம் வரும். பல நாடுகளும் பெரும் அரசர்களும் பாபிலோனைத் தம் வேலையாளாக வைப்பார்கள்.
8 “‘ஆனால், இப்பொழுது சில நாடுகளும் இராஜ்யங்களும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்ய மறுக்கிறது. அவர்கள் நுகங்களைத் தம் கழுத்தில் மாட்டிக்கொள்ள மறுக்கலாம். அது நிகழந்தால், நான் செய்வது இதுதான். அந்த நாட்டை நான் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயால் தண்டிப்பேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அந்த நாட்டை அழித்து முடிக்கும்வரை இதனைச் செய்வேன். நேபுகாத்நேச்சாருக்கு எதிராகச் சண்டையிட்ட நாடுகளை அழிக்க நான் அவனைப் பயன்படுத்துவேன். 9 எனவே, உங்கள் தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல மந்திரத்தைப் பயன்படுத்தும் ஆட்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். தங்கள் கனவுகளுக்கு விளக்கங்கள் கூறுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். மரித்தவர்களோடும் மந்திரம் பயிற்சி செய்வோர்களோடும் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அந்த ஜனங்கள் எல்லாம் உங்களிடம், ‘பாபிலோன் அரசனுக்கு அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள். 10 ஆனால் அந்த ஜனங்கள் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் தாய் நாட்டிலிருந்து தூர நாட்டிற்குக் கொண்டுப்போகப்பட அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். நான் உங்களை வீட்டிலிருந்து போகும்படி வற்புறுத்துவேன். நீங்கள் வேறு நாட்டில் மரிப்பீர்கள்.
11 “‘ஆனால் பாபிலோன் அரசனின் நுகத்திற்குள் தங்கள் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிபவர்களாக வாழ்வர். நான் அந்நாட்டாரைத் தங்கள் சொந்த நாட்டிலேயே இருந்து பாபிலோன் அரசனுக்கு சேவைசெய்யச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘அந்நாடுகளில் உள்ள ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்ந்து பயிர் செய்வார்கள்.’”
12 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு அதே செய்தியைக் கொடுத்தேன். நான், “சிதேக்கியா, நீ பாபிலோன் அரசனது நுகத்திற்குள் உன் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து போக வேண்டும். நீ பாபிலோன் அரசனுக்கும் அவனது ஜனங்களுக்கும் சேவைசெய்தால், பிறகு நீ வாழ்வாய். 13 பாபிலோன் அரசனுக்கு சேவை செய்ய மறுக்கும் ஜனங்கள் பகைவரின் வாள், பசி, பயங்கரமான நோய் ஆகியவற்றால் மரிப்பார்கள். பாபிலோனிய அரசனுக்குப் பணிபுரிய மறுக்கும் ஜனங்களுக்கு இவை எல்லாம் நிகழும். கர்த்தர் இக்காரியங்கள் நடக்கும் என்று கூறினார். 14 ஆனால் கள்ளத்தீர்க்கதரிசிகளோ, ‘பாபிலோன் அரசனுக்கு நீங்கள் என்றென்றும் அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள்.
“அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரச்சாரம் செய்கின்றனர். 15 ‘நான் அத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை!’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது ‘அவர்கள் பொய்களைப் போதிக்கிறார்கள். இது என்னிடமிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, யூதாவின் ஜனங்களாகிய உங்களை வெளியே அனுப்புவேன். நீங்களும் மரிப்பீர்கள். உங்களிடம் கள்ள தீர்க்கதரிசனம் உரைத்த அத்தீர்க்கதரிசிகளும் மரிப்பார்கள்.’”
16 பிறகு, நான் (எரேமியா) ஆசாரியர்களிடமும் அனைத்து ஜனங்களிடமும் சொன்னேன். “கர்த்தர் சொல்கிறார்: அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பலப் பொருட்களை எடுத்தனர். அப்பொருட்கள் மீண்டும் விரைவில் திரும்பக் கொண்டுவரப்படும்.’ அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். 17 அத்தீர்க்கதரிசிகளை கவனிக்காதீர்கள். பாபிலோன் அரசனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வீர்கள். எருசலேம் நகரம் அழிக்கப்பட நீங்கள் காரணமாக இராதீர்கள். 18 அம்மனிதர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தால், கர்த்தரிடமிருந்து வார்த்தையைப் பெற்றிருந்தால், அவர்களை ஜெபிக்க விடுங்கள். கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். அரசனது அரண்மனையில் இன்னும் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்க விடுங்கள். எருசலேமில் இன்னும் இருக்கின்ற பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். இவ்வனைத்து பொருட்களும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லாமல் இருக்கும்படி அத்தீர்க்கதரிசிகளை ஜெபிக்கவிடுங்கள்.
19 “சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமில் இன்னும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றிக் கூறுகிறார். ஆலயத்தில் தூண்களும் கடல் தொட்டியும் ஆதாரங்களும் மற்ற பணிமுட்டுகளும் உள்ளன. பாபிலோனின் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமில் இவற்றை விட்டுவைத்தான். 20 நேபுகாத்நேச்சார், அரசன் யோயாக்கீமை சிறைக்கைதியாக வெளியே கொண்டு சென்றபோது, இப்பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. யோயாக்கீம் அரசனின் மகன் எகொனியாவையும் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் சில முக்கியமான ஜனங்களையும் நேபுகாத்நேச்சார் கொண்டு சென்றான். 21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன், கர்த்தருடைய ஆலயத்திலும் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றி கூறுகிறார்: ‘அப்பொருட்கள் அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லப்படும். 22 அவற்றைப் பெறுவதற்காக நான் போகும் காலத்தில் அப்பொருட்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பிறகு நான் அப்பொருட்களைத் திரும்ப கொண்டுவருவேன். இந்த இடத்தில் அப்பொருட்களை மீண்டும் வைப்பேன்.’”
பொய்த் தீர்க்கதரிசி அனனியா
28 யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவின் ஆட்சியாண்டான நாலாம் வருஷம் ஐந்தாம் மாதம், அனனியா என்னும் தீர்க்கதரிசி என்னிடம் பேசினான். அனனியா அசூர் என்பவனின் மகன். அனனியா கிபியோன் என்னும் நகரத்தினன். அனனியா என்னிடம் பேசும்போது, அவன் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். ஆசாரியர்களும் மற்ற ஜனங்களும் அங்கு இருந்தனர். அனனியா சொன்னது இதுதான்: 2 “சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் சொல்கிறார்: ‘யூதா ஜனங்களின் மேல் பாபிலோன் அரசனால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன். 3 இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னால், பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்ற எல்லாப் பொருட்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். ஆனால் நான் அப்பொருட்களை இங்கே எருசலேமிற்குக் கொண்டு வருவேன். 4 நான் யூதாவின் அரசனான எகொனியாவையும் இந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவேன். எகொனியா யோயாக்கீமின் மகன், நேபுகாத்நேச்சார் பலவந்தப்படுத்தி வீட்டைவிட்டு அழைத்து பாபிலோனுக்குச் சென்ற ஜனங்கள் அனைவரையும் திரும்பக் கொண்டுவருவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘எனவே யூதாவின் ஜனங்கள் மீது பாபிலோன் அரசனால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன்!’”
5 பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசிக்கு பதில் சொன்னான். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நின்று கொண்டிருந்தனர். எரேமியாவின் பதிலை ஆசாரியர்களும் அங்குள்ள அனைத்து ஜனங்களும் கேட்க முடிந்தது. 6 எரேமியா அனனியாவிடம் “ஆமென்! கர்த்தர் இவற்றைச் செய்வார் என்று நான் உண்மையில் நம்புகிறேன்! நீ பிரச்சாரம் செய்கிற இச்செய்தியை கர்த்தர் உண்மையாகும்படி செய்வார். பாபிலோனிலிருந்து கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களை எல்லாம் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன். தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து ஜனங்களையும் இந்த இடத்திற்குத் திரும்பவும் கர்த்தர் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.
7 “ஆனால் நான் சொல்லவேண்டியதை கவனி, அனனியா, ஜனங்கள் அனைவருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்பதையும் கவனி. 8 நீயும் நானும் தீர்க்கதரிசிகளாக வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பு சில தீர்க்கதரிசிகள் இருந்தனர். போர், பசி, பயங்கரமான நோய் ஆகியவை பல நாடுகளுக்கும், பெரும் இராஜ்யங்களுக்கும் ஏற்படும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர். 9 ஆனால் பிரச்சாரம் செய்கிற தீர்க்கதரிசி நமக்கு சமாதானம் வரும் என்று சொன்னால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவனா என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி சொன்ன செய்தி உண்மையானால் பிறகு ஜனங்கள் அவன் உண்மையில் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவார்கள்.”
10 எரேமியா தன் கழுத்தைச்சுற்றி நுகத்தை அணிந்துக்கொண்டான். பிறகு அனனியா தீர்க்கதரிசி அந்த நுகத்தை எரேமியாவின் கழுத்திலிருந்து எடுத்தான். அனனியா அந்நுகத்தை உடைத்தான். 11 பிறகு அனனியா உரக்கப் பேசினான், எனவே அனைத்து ஜனங்களாலும் கேட்க முடிந்தது. அவன், “கர்த்தர் கூறுகிறார்: ‘இதே மாதிரி நான் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் ஆட்சியை உடைப்பேன். அவன் அந்நுகத்தை உலகிலுள்ள அனைத்து நாடுகள் மேலும் வைத்தான். இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னால் நான் அந்நுகத்தை உடைப்பேன்’” என்றான்.
அதனை அனனியா சொன்ன பிறகு, எரேமியா ஆலயத்தை விட்டுச் சென்றான்.
12 பிறகு கர்த்தருடைய செய்தி எரேமியாவிற்கு வந்தது. இது, அனனியா எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தை எடுத்து உடைத்தப் பிறகு நிகழ்ந்தது. 13 கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார், “போய் அனனியாவிடம் சொல். ‘இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நீ ஒரு மரநுகத்தை உடைத்து விட்டாய். நான் மரநுகத்தின் இடத்தில் இரும்பாலான நுகத்தை வைப்பேன்.’ 14 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த அனைத்து நாடுகளின் கழுத்துகளிலும் இரும்பு நுகத்தைப் பூட்டுவேன். அவர்கள் அனைவரும் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சருக்கு சேவை செய்யும்படிச் செய்வேன். அவர்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பார்கள். நேபுகாத்நேச்சருக்குக் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுப்பேன்.’”
15 பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம் சொன்னான், “அனனியா, கவனி! கர்த்தர் உன்னை அனுப்பவில்லை. ஆனால் நீ யூதாவின் ஜனங்களைப் பொய்யை நம்பச்செய்தாய். 16 எனவே கர்த்தர் இதைத்தான் சொல்கிறார்: ‘அனனியா, உன்னை இந்த உலகத்தை விட்டு விரைவில் எடுத்துவிடுவேன். இந்த ஆண்டில் நீ மரிப்பாய். ஏனென்றால் நீ ஜனங்களை கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படிக் கற்பித்தாய்.’”
17 அனனியா அதே ஆண்டில் ஏழாவது மாதத்தில் மரித்தான்.
பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம்
29 எரேமியா பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். பாபிலோனில் உள்ள மூப்பர்களுக்கும் (தலைவர்கள்) ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அவன் அதனை அனுப்பினான். இந்த ஜனங்களெல்லாம் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். 2 (இந்தக் கடிதம், எகொனியா அரசனும், அரச மாதாவும், அதிகாரிகளும், யூதா, எருசலேம் மற்றும் யூதா தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் எருசலேமிலிருந்து கொண்டு செல்லப்பட்டப் பிறகு அனுப்பப்பட்டது). 3 சிதேக்கியா எலெயாசா மற்றும் கெமரியாவை நேபுகாத்நேச்சார் அரசனிடம் அனுப்பினான். சிதேக்கியா யூதாவின் அரசன். எலெயாசா சாப்பானின் மகன். கெமரியா இலக்கியாவின் மகன். எரேமியா அவர்களிடம் பாபிலோனுக்கு கொண்டு செல்லுமாறு கடிதத்தைக் கொடுத்தான். கடிதம் சொன்னது இதுதான்:
4 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்ட அனைவருக்கும் இதைக் கூறுகிறார்: 5 “வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள். 6 திருமணம் செய்துக்கொண்டு மகன்கள் மற்றும் மகள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் மகள்கள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் மகன்களும் மகள்களும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள். 7 நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.” 8 சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார். “உங்களது தீர்க்கதரிசிகளும் மந்திரம் பழகும் ஜனங்களும் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் வைத்துள்ள கனவுகளைக் கேட்காதீர்கள். 9 அவர்கள் பொய்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். அச்செய்தி என்னிடமிருந்து வந்ததாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன். 11 நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன். 12 பிறகு, ஜனங்களாகிய நீங்கள் எனது நாமத்தை அழைப்பீர்கள். நீங்கள் என்னிடம் வருவீர்கள்: ஜெபம் செய்வீர்கள், நான் உங்களை கவனிப்பேன். 13 நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப்பிடிக்கலாம். 14 நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 நீங்கள், “ஆனால் கர்த்தர் இங்கே பாபிலோனில் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லலாம். 16 ஆனால் கர்த்தர் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படாத உறவினர்களைப்பற்றி இவற்றைக் கூறுகிறார். நான், இப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் இருக்கிற அரசனைப் பற்றியும் எருசலேம் நகரிலுள்ள ஜனங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். 17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் விரைவில் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயை எருசலேமில் இன்னும் வாழும் ஜனங்களுக்கு எதிராக அனுப்புவேன். நான் அவர்களை உண்ணவே முடியாத அளவிற்கு அழுகிப்போன கெட்ட அத்திப் பழங்களைப் போன்று ஆக்குவேன். 18 நான், இன்னும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை பட்டயம், பசி, மற்றும் பயங்கரமான நோயால் துரத்துவேன். நான் இதனைச் செய்வேன். அதனால் அந்த ஜனங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்த்து பூமியில் உள்ள அனைத்து இராஜ்யங்களும் பயப்படும். அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நிகழ்ந்தவற்றைப்பற்றி அவர்கள் கேள்விப்படும்போது ஜனங்கள் ஆச்சரியத்துடன் பிரமிப்பார்கள். அவர்கள், ஜனங்களுக்குத் தீயவை நடைபெறட்டும் என்று கேட்கும்போது ஜனங்கள் அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்துவர். அந்த ஜனங்களை நான் போகும்படி வற்புறுத்தும் போதெல்லாம் ஜனங்கள் அவர்களை நிந்திப்பார்கள். 19 அவையெல்லாம் நடக்கும்படி நான் செய்வேன். ஏனென்றால், எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் எனது வார்த்தையைக் கேட்கவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களுக்கு எனது செய்தியை மீண்டும் மீண்டும் அனுப்பினேன். நான் அந்த ஜனங்களுக்கு எனது வேலைக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி எனது செய்தியைக் கொடுத்தேன். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 20 “ஜனங்களாகிய நீங்கள் கைதிகள். நான் உங்களை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். எனவே கர்த்தரிடமுள்ள செய்தியைக் கேளுங்கள்.”
21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கொலாயாவின் மகனான ஆகாப் மற்றும் மாசெயாவின் மகனான சிதேக்கியாவைப் பற்றியும் கூறுகிறார்: “உங்களிடம் இவ்விருவரும் பொய்யைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் செய்தி என்னிடம் இருந்து வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தனர். நான் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் கைதிகளாய் உங்கள் முன்னால் கொல்லுவான். 22 அனைத்து யூதா கைதிகளிலும் மற்றவர்களுக்குத் தீயவை ஏற்படட்டும் என்று கேட்கும்போதெல்லாம் அம்மனிதர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொள்வார்கள். அக்கைதிகள் சொல்லுவார்கள்: ‘சிதேக்கியா மற்றும் ஆகாப் போன்று கர்த்தர் உன்னை நடத்தட்டும். பாபிலோனின் அரசன் அவ்விருவரையும் நெருப்பில் எரித்தான்.’ 23 இஸ்ரவேல் ஜனங்களிடையே அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் மிகவும் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் தங்கள் அயலவர் மனைவிகளோடு சோரம் என்னும் பாவத்தைச் செய்தனர். அவர்களும் பொய்களைப் பேசினார்கள். அத்துடன் அப்பொய்கள் கர்த்தராகிய என்னிடமிருந்து வந்தது என்றும் கூறினர். அவற்றைச் செய்யும்படி நானே அவர்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நானே ஒரு சாட்சி” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
செமாயாவுக்கு தேவனுடைய செய்தி
24 செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன். 25 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “செமாயா, எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். மாசெயாவின் மகனான செப்பனியா ஆசாரியர்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். நீயும் அனைத்து ஆசாரியர்களுக்கும் கூட கடிதங்களை அனுப்பினாய். அக்கடிதங்களை நீ கர்த்தருடைய அதிகாரத்தால் அல்லாமல் உனது சொந்தப் பெயரில் அனுப்பினாய். 26 செமாயா, செப்பனியாவிற்கான கடிதத்தில் நீ சொன்னது இதுதான்: ‘செப்பனியா, கர்த்தர் உன்னை யோய்தாவின் இடத்தில் ஆசாரியனாக ஆக்கியிருக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளனாக நீ இருக்கிறாய். பைத்தியம் போலவும் தீர்க்கதரிசி போலவும் நடிக்கின்ற எவரையும் நீ கைது செய்யலாம். நீ அவர்களின் கால்களுக்கு இடையில் மரக் கட்டைகளையும் கழுத்தில் இரும்புச் சங்கிலிகளையும் மாட்டலாம். 27 இப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி போன்று நடிக்கிறான். எனவே, அவனை ஏன் கைது செய்யாமல் இருக்கிறாய்? 28 எரேமியா பாபிலோனிலுள்ள எங்களுக்கு அவனது செய்தியை அனுப்பியிருக்கிறான்: பாபிலோனில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் அங்கேயே நீண்டகாலம் இருப்பீர்கள். எனவே, வீடுகளைக்கட்டி அங்கேயே குடியிருங்கள். தோட்டங்களை ஏற்படுத்தி நீங்கள் வளர்த்தவற்றை உண்ணுங்கள்.’”
29 செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான். 30 பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: 31 “எரேமியா, இந்த வார்த்தையை பாபிலோனில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளுக்கும் அனுப்பு, ‘நெகெலாமியனாகிய செமாயாவைப்பற்றி கர்த்தர் கூறுவது இதுதான்: செமாயா உங்களிடம் பிரசங்கம் செய்திருக்கிறான். ஆனால் நான் அவனை அனுப்பவில்லை. செமாயா உங்களை ஒரு பொய்யை நம்பும்படி செய்திருந்தான். 32 ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.”
வாழ்வதற்கேற்ற சரியான வழி
3 கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், 2 யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு.
3 கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம். 4 ஆனால் பிறகு, இரட்சகராகிய தேவனுடைய கிருபையும், அன்பும் வெளிப்படுத்தப்பட்டன. 5 தேவனுடன் சரியான வகையில் இருக்கும்பொருட்டு நாம் செய்த எந்த நல்ல செயல்களாலும் இரட்சிக்கப்படவில்லை. அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நம்மைப் புதிய மனிதர்களாக்கும் சுத்திகரிப்பின் மூலமும், பரிசுத்த ஆவியின் புதுப்பிக்கும் வல்லமை மூலமும், அவர் இரட்சித்தார். 6 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தப் பரிசுத்த ஆவியை நம் மீது முழுமையாகப் பொழிந்தார். 7 தேவனது கிருபையால் நாம் அவரோடு நீதிமான்களானோம். தேவன் நமக்கு ஆவியைக் கொடுத்தார். அதனால் நாம் நித்திய வாழ்வைப் பெறமுடியும். அதுவே நாம் நம்பிக்கொண்டிருப்பதும் ஆகும். 8 இந்தப் போதனை உண்மையானது.
மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை.
9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை. 10 எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு. 11 ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது.
நினைவில் வைக்கவேண்டியவை
12 நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன். 13 வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய். 14 நன்மை செய்வதற்குரியதாகத் தம் வாழ்வைப் பயன்படுத்தும்படி நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையானவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். பிறகு அவர்களின் வாழ்வு பயனற்றதாக இருக்காது.
15 என்னுடன் இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்து கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நீயும் வாழ்த்து கூறு.
உங்கள் அனைவரோடும் தேவனுடைய கிருபை இருப்பதாக.
2008 by World Bible Translation Center