Old/New Testament
8 ஒரு நாள் நான் (எசேக்கியேல்) என் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டிருந்தேன். யூதாவின் மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். இது நாடுகடத்தப்பட்ட ஆறாம் ஆண்டின் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாளாக இருந்தது. திடீரென்று எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமை என்மேல் வந்தது. 2 நெருப்புபோன்ற ஒன்றை நான் பார்த்தேன். அது மனித உடலைப்போன்றும் இருந்தது. இடுப்புக்குக் கீழே அது நெருப்பைப் போன்றிருந்தது. இடுப்புக்கு மேலே நெருப்பிலே பழுத்த உலோகம்போன்று மின்னிக்கொண்டிருந்தது. 3 பிறகு நான் கையைப்போன்று தோன்றிய ஒன்றைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் தலைமயிரைப் பிடித்துத் தூக்கினார். பின்னர் ஆவியானவர் என்னைத் தூக்கிக்கொண்டு, தேவதரிசனத்திலே என்னை எருசலேமிற்குக் கொண்டுபோனார். அவர் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையில்விட்டார். தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற சிலையும் அங்கே இருந்தது. 4 ஆனால் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமையும் அங்கே இருந்தது. அம்மகிமையானது நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்திற்கு ஒத்ததாக இருந்தது.
கேபார் பள்ளத்தாக்கினில்
5 தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, வடக்கை நோக்கிப் பார்.” எனவே, நான் வடக்கு நோக்கிப் பார்த்தேன்! அங்கே, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே, நடையிலே தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிற சிலை இருந்தது.
6 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற வெறுக்கத்தக்க காரியங்களை நீ காண்கிறாயா? அவர்கள் இங்கே எனது ஆலயத்தை அடுத்து அந்த பயங்கரமான சிலையைக் வைத்திருகிறார்கள்! நீ என்னோடு வந்தால், இதைவிடப் பயங்கரமானவற்றையெல்லாம் நீ பார்க்கலாம்!”
7 எனவே, நான் பிரகாரத்தின் வாசலுக்குப் போனேன். நான் சுவற்றில் ஒரு துவாரத்தைப் பார்த்தேன். 8 தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, சுவற்றில் ஒரு துவாரம் செய்” என்றார். எனவே, நான் சுவற்றில் ஒரு துவாரம் செய்தேன். அங்கே நான் ஒரு கதவைப் பார்த்தேன்.
9 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “உள்ளே போய் ஜனங்கள் செய்யும் வெறுக்கத்தக்கதும் கெட்டதுமானவற்றையெல்லாம் பார்.” 10 எனவே, நான் உள்ளே போய் பார்த்தேன். நீங்கள் நினைத்துப் பார்க்கவே வெறுக்கின்ற ஊர்கின்ற மற்றும் ஓடுகின்ற மிருகங்களின் சிலைகள் இருந்தன. அவை இஸ்ரவேல் ஜனங்களால் வழிபடப்படுகிற அருவருப்பான சிலைகள். அந்த நரகலான சிலைகள் சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தன!
11 பின்னர், நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் (தலைவர்கள்) எழுபது பேரும் அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும் தொழுதுகொண்டு இருப்பதைக்கவனித்தேன். அவர்கள் ஜனங்களுக்கு முன்னால் இருந்தனர்! ஒவ்வொரு தலைவரும் தன் கையிலே தூப கலசத்தை வைத்திருந்தனர். அவற்றிலிருந்து வெளிவந்த புகை காற்றில் எழும்பியது: 12 பிறகு தேவன் என்னிடம் சொன்னார். “மனுபுத்திரனே, இருளிலே இஸ்ரவேலின் மூப்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? ஒவ்வொருவனும் தமது பொய்த் தெய்வத்துக்கு ஒரு சிறப்பான அறை வைத்திருக்கிறான். அம்மனிதர்கள் தங்களுக்குள், ‘கர்த்தரால் நம்மைப் பார்க்கமுடியாது. கர்த்தர் இந்நாட்டை விட்டு விலகிப்போய்விட்டார்’ என்கின்றனர்.” 13 பிறகு தேவன் என்னிடம்: “நீ என்னோடு வந்தால், அம்மனிதர்கள் இதைவிடப் பயங்கரமானவற்றைச் செய்வதை நீ காணலாம்” என்றார்.
14 பிறகு தேவன், கர்த்தருடைய ஆலய வாசலுக்கு அழைத்துச் சென்றார். இந்த வாசல் வடப் பக்கத்தில் இருந்தது. அங்கே பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பொய்த் தெய்வமான தம்மூஸுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
15 தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இப்பயங்கரமானவற்றைப் பார்த்தாயா? என்னோடு வா. இதைவிட மிக மோசமானவற்றை நீ பார்ப்பாய்!” என்றார். 16 பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!
17 பிறகு தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இதனைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் எனது ஆலயத்தை முக்கியமானதாகக் கருதாமல், என் ஆலயத்தில் இவ்வாறு பயங்கரமான காரியங்களைச் செய்கின்றனர்! இந்நாடு வன்முறையால் நிறைந்துள்ளது. என்னைக் கோபப்படுத்தும்படியான காரியங்களை எப்பொழுதும் செய்கின்றனர். பார்! தம் மூக்கில் வளையங்களை சந்திரன் எனும் பொய்த் தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக அணிந்துள்ளனர்! 18 நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்! நான் அவர்களுக்காக வருத்தப்படமாட்டேன்! அவர்கள் அழுது, சத்தமானக் குரலில் என்னைக் கூப்பிடுவார்கள்! ஆனால் நான் அவற்றைக் கவனிக்க மறுக்கிறேன்!”
9 பின்னர் தேவன், தண்டனைக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்களிடம் சத்தமிட்டார். ஒவ்வொரு தலைவரும் தமது கையில் கொலைக்குரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். 2 பிறகு உயர்ந்த வாசலிலிருந்து ஆறு மனிதர்கள் சாலையில் நடந்து வருவதை நான் பார்த்தேன். அவ்வாசல் வடபகுதியில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது கையில் வெட்டுகிற ஆயுதத்தை வைத்திருந்தனர். ஒரு மனிதன் சணல் நூல் ஆடை அணிந்திருந்தான். அவன் தன் இடுப்பில் நகலரின் எழுது கோலையும் மைக்கூட்டையும் வைத்திருந்தான். அம்மனிதர்கள் ஆலயத்தில் உள்ள வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றனர். 3 பிறகு இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன் மேலிருந்து எழும்பியது. பிறகு அந்த மகிமை ஆலயத்தின் வாசலுக்குச் சென்றது. அங்கே நின்று, அம்மகிமை சணல் நூலாடை அணிந்து மைக்கூடும் எழுதுகோலும் வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டது.
4 பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”
5-6 பிறகு தேவன் மற்றவர்களிடம் கூறுகிறதைக் கேட்டேன்: “நீங்கள் முதல் மனிதனைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தன் நெற்றியில் அடையாளம் இல்லாத ஒவ்வொருவரையும் நீங்கள் கொல்லவேண்டும். நீங்கள் யார் மேலும் பரிதாபப்படவேண்டாம். நெற்றியில் அடையாளம் இல்லாத மூப்பர்கள் (தலைவர்கள்) இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பிள்ளைகள் தாய்மார்கள் உள்பட எல்லோரையும் கொல்லுங்கள். உங்கள் ஆயுதங்களால் அவர்களைக் கொல்லவேண்டும். அவர்களிடம் இரக்கம் காட்டவேண்டாம். எவருக்காகவும் வருத்தப்படவேண்டாம். எனது ஆலயத்திலிருந்தே தொடங்குங்கள்.” எனவே, ஆலயத்தின் முன்னாலிருந்து மூப்பர்களோடு ஆரம்பித்தார்கள்.
7 தேவன் அவர்களிடம் சொன்னார்: “இந்த ஆலயத்தை தீட்டுப்படுத்துங்கள். இப்பிரகாரங்களை மரித்த உடல்களால் நிரப்புங்கள்! இப்பொழுது போங்கள்!” எனவே, அவர்கள் நகருக்குள் போய் ஜனங்களைக் கொன்றார்கள்.
8 அம்மனிதர்கள் போய் ஜனங்களைக் கொல்லும்போது நான் அங்கே தங்கினேன். நான் என் முகம் தரையில் படும்படிக் குனிந்து வணங்கிச் சொன்னேன். “எனது கர்த்தராகிய ஆண்டவரே, எருசலேமின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறவரே, இஸ்ரவேலில் தப்பிப் பிழைத்த அனைவரையும் கொல்லப் போகிறீரா?”
9 தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்திருக்கின்றனர்! நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நகரம் குற்றங்களால் நிறைந்திருக்கின்றது. ஏனென்றால், ஜனங்கள் தங்களுக்குள் ‘கர்த்தர் நாட்டை விட்டு விலகினார். நாம் செய்கின்றவற்றை அவரால் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றனர். 10 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் இந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டேன். அவர்கள் இதனைத் தாமாகவே கொண்டுவந்தனர். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுக்கிறேன்!”
11 பிறகு சணல் நூலாடை அணிந்து நகலரின் எழுது கோலும் மைக்கூடும் வைத்திருந்தவன் பேசினான். அவன், “நீர் கட்டளையிட்டபடி நான் செய்திருக்கிறேன்” என்றான்.
10 பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது. 2 பிறகு சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் சணல் நூலாடை அணிந்த மனிதனிடம் சொன்னார்; “சக்கரங்களுக்கு இடையில் வா, கேருபீனின் கீழ் உள்ள பகுதிக்கு வா, கேருபீன்களின் நடுவிலே எரிந்துகொண்டிருந்த நெருப்புத் தழலைக் கை நிறைய எடு. அவற்றை எருசலேம் நகரத்தின் மேல் ஏறி.”
அந்த மனிதன் என்னைக் கடந்து போனான். 3 அந்த மனிதன் மேகங்களுக்குள் நடந்துப் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன. அந்த மேகம் உட்பிரகாரத்தை நிரப்பியது. 4 பிறகு பிரகாரத்திலும் ஆலயத்தின் வாசலிலும் நின்றுகொண்டிருந்த கேருபீன்களின் மேலிருந்து கர்த்தருடைய மகிமை எழும்பியது. பிறகு மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் ஆலயப் பிரகாரம் நிரம்பியது. 5 பின்னர் நான் கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தமானது, சர்வ வல்லமையுள்ள தேவன் பேசும்போது ஏற்படும் இடியோசை போன்றிருந்தது. சிறகுகளின் சத்தத்தை வெளிப்பிரகாரம்வரை கேட்கமுடிந்தது.
6 தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான். 7 அப்போது ஒரு கேருபீன் தன் கையை கேருபீன்களுக்கிடையில் உள்ள நெருப்புவரை நீட்டி எடுத்தது. அம்மனிதனின் கைகளில் நெருப்புத் துண்டுகளை இட்டது. அம்மனிதன் போனான். 8 (கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)
9 பிறகு நான் நான்கு சக்கரங்கள் இருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு கேருபீனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒளிமிக்க மஞ்சள் நிற இரத்தினக்கல் போலிருந்தது. 10 அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது. 11 அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை. 12 அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. 13 சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என்று அழைக்கப்படுவதை நான் கேட்டேன்.
14-15 ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதல் முகம் கேருபீன் முகமாக இருந்தது. இரண்டாவது முகம் மனிதமுகமாக இருந்தது. மூன்றாவது முகம் சிங்கமுகமாக இருந்தது. நான்காவது முகம் கழுகின் முகமாக இருந்தது. நான் கேபார் ஆற்றருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்கள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
கேருபீன்கள் மேலே எழும்பின. 16 அவற்றோடு சக்கரங்களும் எழும்பின. கேருபீன்கள் மேலே எழும்பிக் காற்றில் பறந்தபோது சக்கரங்கள் திசை மாறவில்லை. 17 கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.
18 பிறகு கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியில் இருந்து கேருபீன்களின் மேலிருந்த இடத்திற்குச் சென்று நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தம் சிறகுகளை விரித்துக் காற்றில் பறந்தன. அவை ஆலயத்தை விட்டுப் போவதைப் பார்த்தேன். சக்கரங்கள் அவற்றோடு சென்றன. பின்னர் அவை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலில் நின்றன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமையானது அவற்றின்மேல் காற்றில் இருந்தது.
20 பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன். 21 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் சிறகுகளுக்கடியில் மனித கரங்களைப்போன்று மறைந்தும் இருந்தன. 22 கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.
தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு
13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 2 மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. 3 நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
4 திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். 5 பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,
“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். (A)
6 எனவே,
“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். (B)
7 உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். 8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். 9 எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.
10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.
17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.
18 எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். 19 உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.
20-21 சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22 என் சகோதர சகோதரிகளே! உங்களை உற்சாகப்படுத்த நான் எழுதிய சிறு செய்தியை நீங்கள் பொறுமையுடன் கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை உங்களை பலப்படுத்தும். இது நீண்ட நிருபம் அன்று. 23 நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.
24 உங்கள் தலைவர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லுங்கள். இத்தாலியில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
25 உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக.
2008 by World Bible Translation Center