Old/New Testament
கடல் வியாபாரத்தின் மையமாக இருந்த தீரு
27 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார். 2 “மனுபுத்திரனே, தீருவைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. 3 தீருவைப்பற்றி இவற்றைக் கூறு: ‘தீரு, நீ கடல்களுக்குக் கதவாக இருக்கிறாய், பல நாடுகளுக்கு நீ வியாபாரி. கடற்கரையோரமாக உள்ள பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறாய். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘தீருவே, நீ மிக அழகானவள் என்று எண்ணுகிறாய்.
நீ முழுமையான அழகுடையவள் என்று எண்ணுகிறாய்!
4 உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல்
எல்லையாக இருக்கிறது.
உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும்
கப்பலைப்போன்று முழு அழகோடு கட்டினார்கள்.
5 சேனீர் மலைகளிலிருந்து வந்த தேவதாரு மரங்களால்
உன் கப்பலின் தளத்திற்கான பலகைகளைச் செய்தார்கள்.
லீபனோனிலிருந்து கொண்டுவந்த கேதுரு மரங்களால்
பாய்மரங்களைச் செய்தார்கள்.
6 பாசானின் கர்வாலி மரங்களினால்
உன் துடுப்புகளைச் செய்தார்கள்.
சீப்புரு தீவுகளிலிருந்து கொண்டு வந்த பைன்மரத்தால்
உன் கப்பல் தளத்தை செய்தார்கள்.
அதனை அவர்கள் தந்தங்களால் அலங்காரம் செய்தனர்.
7 உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள
சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள்.
அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது.
உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது.
அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.
8 உனது படகுகளை சீதோன் அர்வாத் என்னும் நகரங்களின் ஜனங்கள் உங்களுக்காக ஓட்டினார்கள்.
தீரு, உன் ஞானிகள் உனது கப்பலில் மாலுமிகளாக இருப்பார்கள்.
9 கேபாரின் நகரத்து மூப்பர்களும் ஞானிகளும்
கப்பலில் உள்ள பலகைகளை ஒன்றோடொன்றை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
கடலில் உள்ள அனைத்து கப்பல்களும் அவற்றிலுள்ள மாலுமிகளும்
உன்னுடன் வியாபாரம் செய்வதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
10 “‘உனது படையில் பெர்சியரும் லூதியரும் பூத்தியரும் இருந்தனர். அவர்கள் உனது போர் வீரர்கள். அவர்கள் தமது கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உன் நகரத்திற்கு பெருமையும், மகிமையும் கொண்டுவந்தனர். 11 அர்வாத் மற்றும் சிலிசியாவின் ஆண்கள் உனது சுவரைச் சுற்றிலும் காவல் காத்தார்கள். கம்மாத் ஆண்கள் உன் கோபுரங்களில் இருந்தனர். அவர்கள் தம் கேடயங்களை உனது நகரைச் சுற்றியுள்ள சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உனது அழகை முழுமையாக்கினர்.
12 “‘தர்ஷீஸ் ஊரார் உன்னுடைய சிறந்த வாடிக்கையாளர்கள். அவர்கள் வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் மற்றும் நீ விற்பனை செய்த சிறந்த பொருட்களை வியாபாரம் செய்தனர். 13 கிரீஸ், துருக்கி, கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதி ஜனங்கள் உன்னோடு வணிகம் செய்தனர். அவர்கள் அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் வியாபாரம் செய்தனர். 14 தொகர்மா சந்ததியினர் நீ விற்ற பொருள்களுக்காக போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கொண்டுவந்தனர். 15 தேதான் ஜனங்கள் உன் வியாபாரிகளாய் இருந்தார்கள். நீ உன் பொருட்களைப் பல இடங்களில் விற்றாய். ஜனங்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவற்றுக்குப் பதிலாகக் கொண்டுவந்தனர். 16 அராம் உன்னோடு வியாபாரம் செய்ய வந்தது. ஏனென்றால், உன்னிடம் பல நல்ல பொருட்கள் இருந்தன. அராம் ஜனங்கள் மரகதங்களையும். இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும், உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.
17 “‘யூதா ஜனங்களும், இஸ்ரவேல் ஜனங்களும் உன்னுடன் வியாபாரம் செய்யவந்தனர். கோதுமை, தேன், எண்ணெய், பிசின் தைலம் ஆகியவற்றை உன்னிடம் வாங்க வந்தனர். 18 தமஸ்கு சிறந்த வாடிக்கையாளர். உன்னிடமிருந்த அற்புதமான பொருட்களுக்காக உன்னோடு வியாபாரம் செய்ய வந்தார்கள். கெல்போனின் திராட்சைரசத்தையும், வெண்மையான ஆட்டு மயிரையும் உனக்கு விற்றார்கள். 19 தமஸ்கு உசேரில் உள்ள திராட்சை ரசத்தை உன் பொருட்களுக்காகக் கொடுத்தனர். அவர்கள் துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கத்தையும், வசம்பையும் உன் சந்தைகளில் விற்றார்கள். 20 தேதானின் ஆட்கள் நல்ல வியாபாரம் செய்தனர். அவர்கள் இரதங்களுக்குப் போடுகிற இரத்தினக் கம்பளங்களை உன்னோடு வியாபாரம் பண்ணினார்கள். 21 அரபியரும் கேதாரின் எல்லா தலைவர்களும் வாடிக்கையாளர்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளையும், ஆட்டுக் கடாக்களையும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 22 சேபா, ராமா நகரங்களில் உள்ளவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தனர். மேல்தரமான எல்லா மணப்பொருட்களையும், எல்லா இரத்தினக் கற்களையும், பொன்னையும் உன் சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். 23 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தார்களும் சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 24 இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத் தையலாடைகளும் அடங்கிய புடவைக் கட்டுக்களையும் விலை உயர்ந்த துணிகள் வைக்கப்பட்டு கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப் பெட்டிகளையும் கொண்டுவந்து உன்னோடு வியாபாரம் செய்தனர். இவைகளையே அவர்கள் உன்னோடு வியாபாரம் செய்தனர். 25 தர்ஷீசின் கப்பல்கள் நீ விற்றப் பொருட்களைக் கொண்டுபோனார்கள்.
“‘தீரு, நீயும் ஒரு சரக்குக் கப்பலைப்போன்றவள்.
நீ கடலில் செல்வங்கள் ஏற்றப்பட்ட கப்பல்.
26 கப்பலைச் செலுத்துகிறவர்கள் ஆழமான தண்ணீரில் உன்னை அழைத்துக்கொண்டு போனார்கள்.
ஆனால் கடலில் உன் கப்பலை பலமான கிழக்குக் காற்று அழித்தது.
27 உனது செல்வங்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கும்.
நீ விற்க வைத்திருந்த செல்வமும் வாங்கிய செல்வமும் கடலுக்குள் மூழ்கும்.
உனது கப்பலாட்களும், மாலுமிகளும், கப்பலைச் செப்பனிடுகிறவர்களும் உன் வியாபாரிகளும்
உன்னில் உள்ள எல்லாப் போர் வீரர்களும்
கடலுக்குள் மூழ்குவார்கள்.
இது, நீ அழியும் நாளில் நிகழும்!
28 “‘நீ உனது வியாபாரிகளைத் தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினாய்.
அந்த இடங்கள் உனது மாலுமியின் அழுகுரலைக் கேட்டு அச்சத்தால் நடுங்கும்!
29 கப்பலைச் செலுத்தும் முழுக் குழுவும் கப்பலை விட்டுக் குதிக்கும்.
கப்பலாட்களும் கடல் மாலுமிகள் அனைவரும் தம் கப்பல்களை விட்டுக் குதித்து கரையை அடைவார்கள்.
30 அவர்கள் உன்னைப்பற்றி துக்கப்படுவார்கள்.
அவர்கள் அழுவார்கள்.
அவர்கள் தம் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்.
அவர்கள் சாம்பலில் புரளுவார்கள்.
31 அவர்கள் உனக்காகத் தம் தலையை மொட்டையடிப்பார்கள்.
அவர்கள் துக்கத்தின் ஆடையை அணிவார்கள்.
அவர்கள் உனக்காக மரித்துப்போனவர்களுக்காக அழுவதுபோன்று அழுவார்கள்.
32 “‘அவர்கள் தம் பலத்த அழுகையில், உன்னைப்பற்றிய இந்தச் சோகப் பாடலைப் பாடி உனக்காக அழுவார்கள்.
“‘தீருவைப்போன்று யாருமில்லை!
தீரு கடல் நடுவில் அழிக்கப்படுகிறது!
33 உன் வியாபாரிகள் கடல் கடந்து போனார்கள்.
உனது பெருஞ்செல்வம் மற்றும் உன் சந்தையின் மூலம் நீ பலரைத் திருப்திப்படுத்தினாய்.
நீ பூமியின் அரசர்களைச் செல்வர்கள் ஆக்கினாய்!
34 ஆனால் இப்பொழுது கடல் அலைகளால்
ஆழங்களில் உடைக்கப்பட்டாய்.
நீ விற்ற அனைத்துப் பொருட்களும்
உனது ஆட்களும் விழுந்துவிட்டனர்!
35 கடலோரங்களில் வாழும் ஜனங்கள்
உன்னைப்பற்றி அறிந்து திகைக்கிறார்கள்.
அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள்.
அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.
36 பிற நாடுகளில் உள்ள வியாபாரிகள்
உனக்காக பரிகசிப்பார்கள்.
உனக்கு நிகழ்ந்தவை ஜனங்களைப் பயப்படச் செய்யும், ஏனென்றால்,
நீ முடிந்துபோனாய்.
நீ இனி இருக்கமாட்டாய்.’”
தீரு தன்னைத்தானே ஒரு தேவன் என்று நினைக்கிறது
28 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, தீருவின் அரசனிடம் கூறு: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘நீ மிகவும் பெருமைகொண்டவன்!
நீ சொல்கிறாய்: “நான் தெய்வம்!
கடல்களின் நடுவே தெய்வங்கள் வாழும் இடங்களில்
நான் அமருவேன்.”
“‘நீ ஒரு மனிதன். தெய்வம் அல்ல!
நீ தேவன் என்று மட்டும் நினைக்கிறாய்.
3 நீ தானியேலைவிட புத்திசாலி என்று நினைக்கிறாய்!
உன்னால் எல்லா இரகசியங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறாய்!
4 உனது ஞானத்தாலும், புத்தியினாலும்
நீ உனது செல்வத்தை பெற்றாய்.
நீ பொன்னையும் வெள்ளியையும்
உன் செல்வத்தில் சேர்த்துக்கொண்டாய்.
5 உன் ஞானத்தாலும் வியாபாரத்தாலும்
செல்வத்தை வளரச்செய்தாய்.
அச்செல்வத்தால்
இப்பொழுது பெருமைகொள்கிறாய்.
6 “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
தீரு, நீ ஒரு தேவனைபோன்று உன்னை நினைத்தாய்.
7 உனக்கு எதிராகச் சண்டையிட நான் அந்நியரை அழைப்பேன்.
அவர்கள், நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்!
அவர்கள் தம் வாளை உருவி,
உனது ஞானத்தால் கொண்டுவந்த அழகிய பொருட்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் உன் சிறப்பைக் குலைப்பார்கள்.
8 அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள்.
நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய்.
9 அம்மனிதன் உன்னைக் கொல்வான்.
“நான் ஒரு தேவன்” என்று இனியும் சொல்வாயா?
இல்லை! அவன் தனது வல்லமையால் உன்னை அடைவான்.
நீ தேவனில்லை, மனிதன் என்பதை நீ அறிவாய்.
10 அந்நியர்கள் உன்னை வெளிநாட்டவரைப்போல நடத்தி கொலை செய்வார்கள்!
அவை நிகழும், ஏனென்றால், நான் கட்டளையிட்டேன்!’”
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “மனுபுத்திரனே, தீரு அரசனைப்பற்றிய சோகப் பாடலை நீ பாடு. அவனிடம் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘நீ உயர்ந்த (இலட்சிய) மனிதனாக இருந்தாய்.
நீ ஞானம் நிறைந்தவன்.
நீ முழுமையான அழகுள்ளவன்.
13 நீ ஏதேனில் இருந்தாய்.
அது தேவனுடைய தோட்டம்.
உன்னிடம் எல்லா விலையுயர்ந்த கற்களும் பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றை வைத்திருந்தாய்.
இவை அனைத்தும் பொன்னில் வைக்கப்பட்டிருந்தன.
நீ படைக்கப்பட்ட நாளிலேயே இவ்வழகுகள் உனக்குக் கொடுக்கப்பட்டன.
தேவன் உன்னை பலமுள்ளதாகச் செய்தார்.
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது
சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன்.
நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய்.
நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய்.
ஆனால் பிறகு கெட்டவனானாய்.
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது.
ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய்.
எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன்.
நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன்.
உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும்
நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது.
உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது.
எனவே உன்னைத் தரையில் எறிவேன்.
இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.
18 நீ பல பாவங்களைச் செய்தாய்.
நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய்.
இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய்.
எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன்.
இது உன்னை எரித்தது!
நீ தரையில் எரிந்து சாம்பலானாய்.
இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.
19 “‘மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் உனக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து திகைத்தார்கள்.
உனக்கு நடந்தது ஜனங்களை அஞ்சும்படிச் செய்யும்.
நீ முடிவடைந்தாய்!’”
சீதோனுக்கு எதிரான செய்தி
20 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, சீதோனுக்கு எதிராகத் திரும்பி எனக்காகத் தீர்க்கதரிசனம் சொல். 22 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என்று சொல்.
“‘சீதோனே நான் உனக்கு எதிராக இருக்கிறேன்!
உன் ஜனங்கள் என்னை மதிக்க கற்பார்கள்.
நான் சீதோனைத் தண்டிப்பேன்.
பிறகு, நானே கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
பிறகு, நான் பரிசுத்தமானவர் என்று அறிவார்கள்.
அவ்வாறே என்னை அவர்கள் மதிப்பார்கள்.
23 நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன்.
நகரத்தில் பலர் மரிப்பார்கள்.
பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”
இஸ்ரவேலைக் கேலி செய்வதை நாடுகள் நிறுத்தும்
24 “‘இஸ்ரவேலைச் சுற்றிலுள்ள நாடுகள் அவளை வெறுத்தனர். ஆனால் அந்நாடுகளுக்குத் தீமைகள் ஏற்படும். பிறகு அங்கே இஸ்ரவேல் வம்சத்தாரைப் புண்படுத்தும் முட்களும் துன்புறுத்தும் நெருஞ்சிலும் இல்லாமல் போகும். அப்பொழுது நானே அவர்களுடைய கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்ளுவார்கள்.’”
25 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “நான் இஸ்ரவேல் ஜனங்களை மற்ற நாடுகளில் சிதறடித்தேன். ஆனால் மீண்டும் இஸ்ரவேல் வம்சத்தாரை ஒன்று சேர்ப்பேன். பிறகு அந்நாடுகள் நான் பரிசுத்தமானவர் என்பதை அறிந்து அவ்வாறு என்னை மதிப்பார்கள். அந்நேரத்தில், இஸ்ரவேலர்கள் தம் நாட்டில் வாழ்வார்கள், நான் அந்த நாட்டை என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்தேன். 26 அவர்கள் தம் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வீடுகட்டுவார்கள். திராட்சை தோட்டங்களை அமைப்பார்கள். அதனை வெறுக்கிற, சுற்றிலும் உள்ள அனைத்து நாட்டினரையும் நான் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
எகிப்துக்கு விரோதமான செய்தி
29 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எகிப்து மன்னனான பார்வோனைப் பார். அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக எனக்காகப் பேசு. 3 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன்.
நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு,
“இது என்னுடைய நதி!
நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.
4-5 “‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன்.
நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும்.
நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து,
வறண்ட நிலத்தில் போடுவேன்.
நீ தரையில் விழுவாய்.
உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள்.
நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன்.
நீ அவற்றின் உணவு ஆவாய்.
6 பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும்
நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!
“‘ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்?
இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!
7 இஸ்ரவேல் ஜனங்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
ஆனால் எகிப்து அவர்களது கைகளையும் தோள்களையும் கிழித்தது.
அவர்கள் உதவிக்காக உன்மேல் சாய்ந்தார்கள்.
ஆனால் நீ அவர்களின் இடுப்பை திருப்பி முறிந்துபோகப் பண்ணினாய்.’”
8 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன்.
நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.
9 எகிப்து வெறுமையாகி அழியும்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
தேவன் சொன்னார்: “ஏன் நான் இவற்றைச் செய்யப்போகிறேன்? நீ, ‘இது எனது நதி. நான் இந்த நதியை உண்டாக்கினேன்’ என்று கூறினாய். 10 எனவே, நான் (தேவன்) உனக்கு விரோதமாக இருக்கிறேன். உன் நைல் நதியின் பல கிளைகளுக்கும் நான் விரோதமானவன். நான் எகிப்தை முழுமையாக அழிப்பேன். நகரங்கள் மிக்தோலிலிருந்து செவெனேவரை, எத்தியோப்பியா எல்லைவரை வெறுமையாகும். 11 எந்த மனிதரும் மிருகமும் எகிப்து வழியாகப் போகமுடியாது. எதுவும் 40 ஆண்டுகளுக்கு எகிப்தில் வாழ முடியாது. 12 நான் எகிப்தை அழிப்பேன். நகரங்கள் 40 ஆண்டுகளுக்கு அழிந்த நிலையிலேயே இருக்கும். நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். நான் அவர்களை அயல்நாடுகளில் அந்நியர்களாக்குவேன்.”
13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். ஆனால் 40 ஆண்டுகள் முடிந்ததும் அவர்களை மீண்டும் கூட்டுவேன். 14 நான் எகிப்திய கைதிகளை மீண்டும் கொண்டுவருவேன். நான் எகிப்தியர்களை மீண்டும் அவர்கள் பிறந்த நாடான பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். ஆனால் அவர்களது அரசு முக்கியமற்றிருக்கும், 15 இது மிக அற்பமான அரசாக இருக்கும். இது மற்ற நாடுகளைவிட மேலாக என்றும் உயராது. நான் அதனை வேறு நாடுகளை ஆளமுடியாதபடி மிகச் சிறிதாக்குவேன். 16 இஸ்ரவேல் வம்சத்தார் மீண்டும் எகிப்தைச் சார்ந்திருக்கமாட்டார்கள். இஸ்ரவேலர்கள் தம் பாவத்தை நினைப்பார்கள். அவர்கள் தேவனை நோக்கித் திரும்பாமல், உதவிக்காக எகிப்திடம் திரும்பினார்கள். அவர்கள் நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்பதை அறிவார்கள்.”
பாபிலோன் எகிப்தைக் கைப்பற்றும்
17 இருபத்தேழாம் ஆண்டின் முதலாம் மாதம் (ஏப்ரல்) முதலாம் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார், தீருவுக்கு எதிராகத் தன் படையைக் கடுமையாகப் போரிடுமாறு செய்தான். அவர்கள் எல்லா வீரர்களின் தலைகளையும் மொட்டையடித்தனர். ஒவ்வொருவரின் தோளும் பாரமான தடிகள் சுமந்து தோல் உரிந்துபோனது, நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் தீருவைத் தோற்கடிக்கக் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அக்கடும் வேலையால் அவர்கள் எதையும் பெறவில்லை.” 19 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “நான் எகிப்து நாட்டை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் எகிப்தியர்களைச் சிறை எடுத்துச்செல்வான். நேபுகாத்நேச்சார் எகிப்திலிருந்து பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்வான். இது நேபுகாத்நேச்சாரின் படைகளுக்கான கூலியாகும். 20 நான் நேபுகாத்நேச்சாருக்கு அவனது கடுமையான உழைப்புக்குப் அன்பளிப்பாக எகிப்தைக் கொடுப்பேன். ஏனென்றால், அவர்கள் எனக்காக உழைத்தார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்!
21 “அந்த நாளில் நான் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பலமுள்ளவர்களாக்குவேன். பிறகு உன் ஜனங்கள் எகிப்தியரைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
மனைவியரும் கணவன்மார்களும்
3 அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். 2 உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். 3 கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. 4 உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,
5 பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தேவனின் நம்பிக்கைக்கொண்ட பரிசுத்த பெண்கள் அவ்வாறே வாழ்ந்தனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். 6 நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள்.
7 அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு எந்தக் தொந்தரவும் நேராமல் இருக்க இவற்றைச் செய்யுங்கள்.
நேர்மையினிமித்தம் துன்பம்
8 எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். 9 உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் 10 வேதவாக்கிம் கூறுகிறது:
“வாழ்க்கையை நேசிக்கவும்
நல்ல நாட்களை அனுபவிக்கவும்
விரும்புகிற மனிதன் தீயவற்றைப்
பேசுவதை நிறுத்தல் வேண்டும்.
11 அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும்.
அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும்.
12 கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார்.
அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார்.
ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.” (A)
13 எப்போதும் நன்மை செய்யவே நீங்கள் முயன்றுகொண்டிருந்தால் ஒருவனும் உங்களைத் துன்புறுத்த முடியாது. 14 ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.” 15 ஆனால் உங்கள் இதயங்களில் கர்த்தராகிய கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கிக் கூறும்படியாகக் கேட்போருக்குப் பதில் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள். 16 ஆனால் அவர்களுக்கு மரியாதையோடும் மென்மையாகவும் பதில் கூறுங்கள். உங்கள் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது கிறிஸ்துவைப் பின்பற்றும் உங்கள் நடத்தையைக் குறை கூறிப் பேசுகின்ற மக்கள் வெட்கமடைவார்கள். கிறிஸ்துவில் நீங்கள் வாழும் நல்வாழ்க்கைக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்களுக்கெதிராகப் பேசியவற்றிற்காக வெட்கமடைவார்கள்.
17 தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது.
18 ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம்
பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார்.
குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார்.
இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார்.
இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது.
ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில்
அவர் மீண்டும் எழுப்பப்பட்டார்.
19 சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். 20 நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள். 21 இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. 22 இப்போது இயேசு பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் தேவதூதர்களையும், அதிகாரங்களையும், ஆற்றல் வாய்ந்தோரையும் ஆளுகிறார்.
2008 by World Bible Translation Center