Old/New Testament
சாலொமோன் ஞானத்தைக் கேட்டல்
3 சாலொமோன், பார்வோன்எனும் எகிப்திய மன்னனோடு, ஒப்பந்தம் செய்து அவனது மகளை திருமணம் செய்துகொண்டான். சாலொமோன் அவளை தாவீது நகரத்திற்கு அழைத்து வந்தான். அப்போது, சாலொமோன் தனது அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எருசலேமைச் சுற்றிலும் ஒரு சுவரையும் கட்டிக்கொண்டிருந்தான். 2 ஆலயம் முடிக்கப்படாமல் இருந்தது. எனவே ஜனங்கள் பொய் தெய்வங்களின் பலிபீடங்களில் மிருகங்களைப் பலிகொடுத்து வந்தனர். 3 சாலொமோன் கர்த்தரை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டான். அவனது தந்தையான தாவீது சொன்னதற்கெல்லாம் கீழ்ப்படியும்பொருட்டு அவன் இவ்வாறு செய்து வந்தான். அதனால் அதோடு தாவீது சொல்லாத சிலவற்றையும் அவன் செய்துவந்தான். அவன் மேடைகளுக்குப் பலி கொடுப்பதையும் நறுமணப்பொருட்களை எரிப்பதையும் இன்னும் கடைப்பிடித்தான்.
4 அரசனான சாலொமோன் கிபியோனுக்குச் சென்று பலிகொடுத்தான். அது மிகவும் முக்கியமான தெய்வீகஇடம் என்பதால் அவன் அங்கே சென்றான். அவன் பலிபீடத்தில் 1,000 பலிகளைச் செய்தான். 5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது. அன்று இரவு கனவில் கர்த்தர் வந்தார். தேவன், “உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதனை நான் உனக்கு தருவேன்” என்றார்.
6 சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது மகனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர். 7 என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை அரசனாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன். 8 உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு அரசன் அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். 9 எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.
10 இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். 11 தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். 12 எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள். 13 அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன். 14 என்னைப் பின்பற்றுமாறும் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உன் தந்தை தாவீது செய்ததுபோல் செய். அவ்வாறு செய்தால், உனக்கு நீண்ட ஆயுளையும் தருவேன்” என்றார்.
15 சாலொமோன் விழித்தபொழுது, கனவிலே தேவன் பேசினார் என்று அவனுக்குத் தெரிந்தது. பின் அவன் எருசலேம் போய் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் முன்பு நின்று கர்த்தருக்குத் தகனபலியைச் செலுத்தினான். கர்த்தருக்குத் சமாதான பலியையும் தந்தான். பின், அவன் தன் ஆட்சிக்கு உதவும் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விருந்துகொடுத்தான்.
16 ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் அரசன் முன்பு நின்றனர். 17 அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள். 18 மூன்று நாட்களுக்குப் பின் இவளும் குழந்தைப் பெற்றாள். அந்த வீட்டில் எங்களைத் தவிர எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம். 19 ஒரு இரவில் இவள் தன் குழந்தையோடு தூங்கும்போது, குழந்தை மரித்துப்போனது. 20 அப்பொழுது நான் தூங்கிக்கொண்டிருந்ததால், இவள் என் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவளது மரித்த குழந்தையை என் கையருகில் போட்டுவிட்டாள். 21 மறுநாள் காலையில் எழுந்து என் குழந்தைக்குப் பால் கொடுக்க முயன்றேன். ஆனால் குழந்தை மரித்திருப்பதை அறிந்தேன். பிறகு உற்றுப்பார்த்தபோது அது என் குழந்தையல்ல என்பதை அறிந்துகொண்டேன்” என்றாள்.
22 ஆனால் அடுத்தவள், “இல்லை உயிரோடுள்ள குழந்தை என்னுடையது. மரித்துப்போன குழந்தை உன்னுடையது” என்றாள்.
ஆனால் முதல் பெண், “இல்லை நீ தவறாக சொல்கிறாய்! மரித்த குழந்தை உன்னுடையது. உயிருள்ள குழந்தை என்னுடையது” என்றாள். இவ்வாறு இருவரும் அரசனுக்கு முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.
23 பிறகு சாலொமோன் அரசன், “இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்” என்றான். 24 பிறகு சாலொமோன் வேலைக்காரனை அனுப்பி ஒரு வாளைக் கொண்டுவரச் செய்தான். 25 பின்னர் அவன், “நம்மால் செய்யமுடிந்தது இதுதான். உயிரோடுள்ள குழந்தையை இரு துண்டுகளாக வெட்டுவோம். ஆளுக்குப் பாதியைக் கொடுப்போம்” என்றான்.
26 இரண்டாவது பெண், “அதுதான் நல்லது. குழந்தையை இரண்டாக வெட்டுங்கள். பிறகு இருவருக்குமே கிடைக்காமல் போகும்” என்றாள்.
ஆனால் முதல் பெண், அக்குழந்தை மேல் மிகுந்த அன்பு கொண்டவள். அவளே உண்மையான தாய், அவள் அரசனிடம், “ஐயா அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்! அதனை அவளிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
27 பிறகு சாலொமோன், “அக்குழந்தையைக் கொல்லவேண்டாம். அதனை முதல் பெண்ணிடமே கொடுத்துவிடுங்கள். அவளே உண்மையான தாய்” என்றான்.
28 இஸ்ரவேல் ஜனங்கள் சாலொமோனின் முடி வைப்பற்றி கேள்விப்பட்டனர். அவனது அறிவுத் திறனைப் பாராட்டி அவனைப் பெரிதும் மதித்தனர். அவன் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று சரியான முடிவுகளை எடுத்துள்ளான் என்று அறிந்தனர்.
சாலொமோனின் இராஜ்யம்
4 சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஆண்டான். 2 கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவனது ஆட்சிக்கு உதவினார்கள்.
சாதோக்கின் மகனான அசரியா ஆசாரியனாக இருந்தான்.
3 சீசாவின் மகனான ஏலிகோரேப்பும், அகியாவும் எழுத்தாளர்கள்.
அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளர்.
4 யோய்தாவின் மகன் பெனாயா படைத் தலைவன்.
சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்கள்.
5 நாத்தானின் மகன் அசரியா மணியக்காரர்களின் தலைவன்.
நாத்தானின் மகன் சாபூத் அரசனின் அன்புக்குரிய பிரதானியும், ஆசாரியனுமாயிருந்தான்.
6 அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன்.
அப்தாவின் மகன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.
7 இஸ்ரவேல் பன்னிரெண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சாலொமோன் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆள ஆளுநர்களை தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களைச் சேகரித்து அரசனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அளித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 8 கீழ்க்கண்டவர்களே அந்தப் பன்னிரண்டு ஆளுநர்களாவார்கள்:
எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர் ஊரின் குமாரன்.
9 தேக்கேரின் குமாரன், மாக்காத்சிலும், சால்பீமிலும் பெத்ஷிமேசிலும், ஏலோன் பெத்தானானிலும் ஆளுநராக இருந்தான்.
10 ஏசேதின் குமாரன் அறுபோத்திலும், சோகோப்பிலும், எப்பேர் சீமையிலும் ஆளுநராக இருந்தான்.
11 அபினதாபின் மகன் இரதத்தின் ஆளுநர்.
இவன் சாலொமோனின் மகளான தாபாத்தை மணந்திருந்தான்.
12 அகிலூதின் மகனான பானா, தானாகு, மெகிதோ, சர்த்தனாவுக்கு அருகிலும் ஆளுநர்.
இது யெஸ்ரயேலுக்கு கீழாகவும் பெத்செயான் முதல் ஆபேல்மெகொல்லா வரையிலும் யக்மெயாமுக்கு அப்புறம் மட்டும் இருந்தது.
13 ராமோத் கீலேயாத்தின் ஆளுநராக கேபேரின் மகன் இருந்தான்.
கீலேயாத் மனாசேயின் மகனான யாவீரின் எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
மேலும் பாசானில் அர்கோப் மாவட்டத்திற்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
இப்பகுதியில் பெரிய மதில்களைக்கொண்ட 60 நகரங்கள் இருந்தன.
இந்த நகரங்களின் வாயில்களில் வெண்கலக்கம்பிகளும் இருந்தன.
14 இத்தோவின் மகனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.
15 அகிமாஸ் நப்தலியில் ஆளுநர்.
இவன் சாலொமோனின் மகளான பஸ்மாத்தை மணந்திருந்தான்.
16 ஊசாயின் மகனான பானா ஆசேரிலும் ஆலோத்திலும் ஆளுநர்.
17 பருவாவின் மகன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.
18 ஏலாவின் மகன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.
19 ஊரியின் மகன் கேபேர் கீலேயாத் நாட்டில் ஆளுநர்.
இங்கு எமோரியரின் அரசனாகிய சீகோனும் பாசானின் அரசனாகிய ஓகு ஜனங்களும் வாழ்ந்தனர்.
எனினும் இவன் மட்டுமே இங்கு ஆளுநராக இருந்தான்.
20 யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
21 சாலொமோன், ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தர் நாடுவரையுள்ள நாடுகளை ஆண்டு வந்தான். அவனது எல்லை எகிப்து வரை விரிந்திருந்தது. இந்நாடுகள் சாலொமோனுக்குப் பரிசுகளை அனுப்பி அவனது வாழ்வு முழுவதும் கட்டுபட்டு வாழ்ந்தது.
22-23 சாலொமோனுக்கும் அவனோடு மேஜையில் உணவைச் சேர்ந்து உண்ணும் மற்றவர்களுக்கும் ஒரு நாளுக்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்பட்டன:
30 மரக்கால் மெல்லியமாவு, 60 மரக்கால் மாவு, 10 கொழுத்த பசுமாடுகள், 2 நன்றாக மேய்ந்த பசுமாடுகள், 100 ஆடுகள், கலைமான்கள், வெளிமான்கள், பறவைகள்.
24 சாலொமோன் ஐபிராத்து ஆற்றின் மேற்கிலுள்ள நாடுகளையும் அரசாண்டான். இது திப்சா முதல் ஆசா மட்டும் இருந்தது. சாலொமோன் தனது இராஜ்யத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமாதானமாயிருந்தான். 25 சாலொமோனின் வாழ்நாளில் யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள், தாண் முதல் பெயெர்செபா வரை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் இருந்தனர். இவர்கள் தமது அத்திமரத்தின் நிழலிலும், திராட்சைகொடியின் நிழலிலும் சமாதானத்தோடு குடியிருந்தனர்.
26 சாலொமோனிடம் 4,000 இரதக் குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர். 27 ஒவ்வொரு மாதமும் பன்னிரெண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆளுநர்களும் அரசனான சாலொமோனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து வந்தனர். அரசனோடு உணவு அருந்துகின்றவர்களுக்கு இது போதுமானதாக இருந்தது. 28 இரதக் குதிரைகளுக்கும் சவாரிக்குதிரைகளுக்கும் தேவையான வைக்கோல், பார்லி போன்றவற்றையும் அவர்கள் கொடுத்துவந்தனர். ஒவ்வொரு வரும் தங்கள் பொறுப்பின்படி தேவையான தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தனர்.
சாலொமோனின் ஞானம்
29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது. 30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது. 31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான். 32 அவனது வாழ்வில் 3,000 நீதிமொழிகளையும் 1,005 பாடல்களையும் எழுதினான்.
33 சாலொமோனுக்கு இயற்கையைப்பற்றி தெரியும். வீபனோனில் உள்ள கேதுரு மரங்கள் முதற் கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரை பலவிதமான தாவரங்கள்பற்றி கற்பித்தான். மேலும் அவன் மிருகங்கள் பறவைகள் ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்பித்தான். 34 அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு அரசர்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
5 ஈராம் தீரு நாட்டு அரசன். அவன் எப்போதும் தாவீதின் நண்பனாக இருந்தான். தாவீதிற்குப் பிறகு அவனது மகன் சாலொமோன் புதிய அரசனானதை அறிந்து தனது வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். 2 சாலொமோன் ஈராம் அரசனுக்கு,
3 “என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார். 4 ஆனால் தேவனாகிய கர்த்தர் எனது நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைதியையும் சமாதானத்தையும் தந்திருக்கிறார். இப்போது எனக்குப் பகைவர்கள் யாரும் இல்லை. என் ஜனங்களுக்கும் ஆபத்தில்லை.
5 “என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் மகனை அரசனாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன். 6 எனவே எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். லீபனோனுக்கு உங்கள் ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே எனக்காக கேதுரு மரங்களை வெட்டவேண்டும். எனது வேலையாட்களும் அவர்களோடு வேலை செய்வார்கள். உங்கள் ஆட்களுக்கு எவ்வளவு கூலிக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கூலியை நான் கொடுப்பேன். ஆனால் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. சீதோனில் உள்ள தச்சர்களைப்போன்று அவ்வளவு சிறந்தவர்களாக இங்குள்ள தச்சர்கள் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
7 சாலொமோனின் வேண்டுகோளை அறிந்து ஈராம் மிகவும் மகிழ்ந்தான். அவனும், “இப்படி ஒரு அறிவு மிக்க மகனை தாவீதிற்குத் தந்து இவ்வளவு அதிகமான ஜனங்களை ஆளவிட்டதற்குக் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படட்டும்!” என்றான். 8 பிறகு ஈராம் சாலொமோனுக்கும் செய்தி அனுப்பினான்.
அதில், “நீங்கள் கேட்டிருந்தவற்றை அறிந்தேன். நான் இங்குள்ள அனைத்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும் வெட்டி உங்களுக்குத் தருவேன். 9 எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.
10-11 சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.
12 கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
13 சாலொமோன் அரசன் கோவில் வேலைக்காக 30,000 இஸ்ரவேல் ஆண்களைப் பயன்படுத்தினான். 14 சாலொமோன், இவர்களுக்கு மேற்பார்வையாளராக அதோனிராமை நியமித்தான். அரசன் தம் ஆட்களை மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் 10,000 பேரை வகுத்தான். ஒவ்வொரு குழுவும் ஒரு மாதம் லீபனோனிலும், இரு மாதம் தம் வீட்டிலும் இருந்தனர். 15 சாலொமோன் மலைநாட்டில் வேலை செய்ய 80,000 ஆட்களை அனுப்பினான். இவர்கள் கற்பாறைகளை உடைத்தனர். 70,000 ஆட்கள் அவற்றைச் சுமந்து வந்தனர். 16 3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர். 17 ஆலயத்திற்கு அடித்தளக் கல்லாக பெரிய கல்லை வெட்டும்படி ஆணையிட்டான். கற்கள் கவனமாக வெட்டப்பட்டன. 18 சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.
யூத அதிகாரிகளின் கேள்வி(A)
20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். 2 அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
3 இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். 4 மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
5 ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். 6 ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். 7 எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
8 எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
திராட்சைத்தோட்ட உவமை(B)
9 பின்னர் இயேசு மக்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தன் வயலில் திராட்சைச் செடிகளை பயிரிட்டான். சில உழவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகையாகக் கொடுத்தான். பின்னர் நீண்டகாலம் அங்கிருந்து சென்றுவிட்டான். 10 திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம் நெருங்கியது. அம்மனிதன் உழவர்களிடம் அவனது வேலைக்காரனைத் தனக்குரிய பாகமான திராட்சை பழங்களைப் பெற்றுவருமாறு அனுப்பினான். ஆனால் உழவர்கள் அந்த வேலைக்காரனை அடித்து ஒன்றுமே தராமல் அனுப்பிவிட்டார்கள். 11 எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள். 12 எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.
13 “வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான். 14 உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர். 15 எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
“வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்? 16 அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர்.
அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர். 17 ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது:
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’ (C)
18 அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.
19 யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.
யூத அதிகாரிகளின் தந்திரம்(D)
20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.
23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”
என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.
25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.
26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.
2008 by World Bible Translation Center