Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 30-31

சிக்லாக் மீது அமலேக்கிய தாக்குதல்

30 மூன்றாவது நாள், தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தனர். அங்கே அமலேக்கியர்கள் அந்நகரைத் தாக்குவதைக் கண்டனர். அவர்கள் நெகேவ் பகுதியில் நுழைந்து சிக்லாகைத் தாக்கித் தீ மூட்டினர். சிக்லாகில் உள்ள பெண்களைச் சிறைப்பிடித்தனர். இளைஞர் முதல் முதியோர்வரை அனைவரையும் பிடித்தனர். ஆனால் யாரையும் கொல்லவில்லை. அவர்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது. அவர்களின் மனைவியர், ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரும் அமலேக்கியர்களால் சிறைகொண்டு போகப்பட்டனர். அவர்கள் இதனைக் கண்டு கதறி அழுதனர். மீறி அழுது அழ முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தனர். அமலேக்கியர்கள் தாவீதின் இரு மனைவியரான யெஸ்ரேலின் அகினோவாளையும், கர்மேலிலுள்ள நாபாலின் விதவையான அபிகாயிலையும் பிடித்துச் சென்றிருந்தார்கள்.

படையில் உள்ள அனைவரும் தமது மகன்களையும் மகள்களையும் பறிகொடுத்ததால், கடுங்கோபமும் வருத்தமும் கொண்டனர். அவர்கள் தாவீதைக் கல்லெறிந்து கொல்ல எண்ணினார்கள். இந்த செய்தி தாவீதைத் தளரச் செய்தது. எனினும் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்தினான். தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான்.

பிறகு தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். “எங்கள் குடும்பத்‌தை பிடித்துக் கொண்டு போனவர்களைத் துரத்தட்டுமா? அவர்களைப் பிடிப்போமா?” என்று கேட்டான்.

அதற்கு கர்த்தர், “அவர்களைத் துரத்து, நீ பிடிப்பாய், நீ உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவாய்” என்றார்.

எகிப்திய அடிமையை தாவீதும் அவனது ஆட்களும் காண்கிறார்கள்

9-10 தாவீது தன்னோடு 600 வீரர்களை அழைத்துக் கொண்டு பேசோர் ஆற்றருகே வந்தான். அங்கு 200 பேர்த் தங்கிவிட்டனர். காரணம் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அமலேக்கியரைத் துரத்திக் கொண்டு தாவீது 400 பேரோடு கிளம்பினான்.

11 வயலில் ஒரு எகிப்திய அடிமையை தாவீதின் ஆட்கள் கண்டனர். அவனை தாவீதிடம் அழைத்து வந்தனர். அவனுக்கு உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கொடுத்தனர். 12 அவர்கள் அவனுக்கு அத்திப் பழ அடையின் ஒரு துண்டையும் வற்றலான இரண்டு திராட்சைக் குலைகளையும் தின்ன கொடுத்தனர். அதை உண்டு அவன் சிறிது பெலன் பெற்றான். அவன் மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் இருந்தப்படியால் மிகவும் பலவீனமாக இருந்தான்.

13 தாவீது அந்த அடிமையிடம், “உனது எஜமானன் யார்? நீ எங்கேயிருந்து வருகிறாய்?” எனக் கேட்டான்.

அதற்கு அவன், “நான் ஒரு எகிப்தியன், நான் அமலேக்கியனின் அடிமை. மூன்று நாட்களுக்கு முன் நான் சுகமில்லாமல் போனதால் என்னை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டனர். 14 நாங்கள் கிரேத்தியர்கள் வாழும் நெகேவ் பகுதியைத் தாக்கினோம். யூதா நாட்டையும் காலேப் பகுதியையும் தாக்கினோம். சிக்லாகையும் தீ மூட்டி எரித்தோம்” என்று பதிலுரைத்தான்.

15 தாவீது அவனிடம், “எங்கள் குடும்பத்தைப் பிடித்துப் போனவர்கள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துப் போவாயா?” எனக் கேட்டான்.

அதற்கு அந்த எகிப்தியன், “தேவன் முன்னிலையில் சிறப்பு ஆணை செய்து தந்தால் நான் உங்களுக்கு உதவுவேன். அதன்படி நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது, அதோடு என் எஜமானனிடமும் என்னைத் திரும்ப அனுப்பக் கூடாது” என்றான்.

தாவீது அமலேக்கியரைத் தோற்கடிக்கிறான்

16 அந்த எகிப்தியன் அமலேக்கியர் இருக்கும் இடத்திற்கு தாவீதை அழைத்துப் போனான். அங்கே அவர்கள் தரையில் புரண்டு, குடித்து வெறித்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். பெலிஸ்தர்களின் நகரங்களில் இருந்தும் யூதாவிலிருந்தும் கொண்டு வந்த பொருட்களால் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்தனர். 17 தாவீது அவர்களை தாக்கிக் கொன்றான். அவர்கள் காலை முதல் மறுநாள் மாலைவரை சண்டையிட்டனர். அமலேக்கியரில் 400 இளைஞர்கள் மட்டும் ஒட்டகத்தின் மூலம் தப்பித்துப்போனார்கள், மற்றவர் எவரும் பிழைக்கவில்லை.

18 அமலேக்கியர்கள் கைப்பற்றிய அனைத்தையும் தாவீது திரும்பப்பெற்றான். இரண்டு மனைவியரையும் பெற்றுக்கொண்டான். 19 எதுவும் தவறவில்லை. சிறுவர்களும், முதியவர்களும் கிடைத்தனர். மகன்களையும், மகள்களையும் திரும்பப் பெற்றனர். விலை மதிப்புள்ள பொருட்களையும் பெற்றனர். 20 அனைத்து ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தாவீது கைப்பற்றினான். அவைகளை தங்களுக்கு முன்னால் ஓட்டினார்கள். தாவீதின் ஆட்கள், “அவை தாவீதின் பரிசுகள்” என்றனர்.

அனைவருக்கும் சம பங்கீடு

21 தனது 200 ஆட்கள் இருக்கும் பேசோர் ஆற்றங்கரைக்கு தாவீது வந்துச் சேர்ந்தான். அங்கு களைப்பாகவும் பலவீனமாகவும் இருந்தவர்கள் தாவீதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். 22 தாவீதைப் பின்தொடந்தவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், குழப்பம் செய்வபவர்களாகவும் இருந்தனர். அவர்கள், “இந்த 200 பேரும் எங்களோடு வரவில்லை. எனவே நாங்கள் கைப்பற்றியவற்றில் இவர்களுக்குப் பங்கு கொடுக்கமாட்டோம். இவர்களுக்கு இவர்களது மனைவி ஜனங்கள் மட்டுமே உரியவராவார்கள்” என்றனர்.

23 தாவீதோ, “அவ்வாறில்லை, என் சகோதரரே அப்படிச் செய்யக்கூடாது! நாம் மீட்டதை, கர்த்தர் நமக்குக் கொடுத்ததைப் பாருங்கள்! நம்மை தாக்கியவர்களை கர்த்தர் தான் தோல்வியுறச் செய்தார். 24 உங்கள் பேச்சுக்கு யாரும் சம்மதம் தெரிவிக்க முடியாது! இங்கே தங்கியவர்களாயினும் சரி, சண்டைக்கு போனவர்களாயினும் சரி, அனைவருக்கும் சமபங்கு உண்டு” என்று பதில் சொன்னான். 25 தாவீது இதனை இஸ்ரவேலருக்கு ஒரு விதியாக்கினான். இது இன்றும் தொடர்ந்து வருகிறது.

26 தாவீது சிக்லாகை வந்தடைந்தான். யூதாவின் தலைவர்களுக்கும் அவனது நண்பர்களுக்கும் அமலேக்கியரிடம் அபகரித்தப் பொருட்களில் சிலவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். அவன் “கர்த்தருடைய பகைவரிடமிருந்து வென்று எடுத்தப் பொருட்களை உங்களுக்குத் தருகிறோம்” என்றான்.

27 அவன் மேலும் பெத்தேல் நெகெவிலுள்ள ராமோத், யாத்தீர், 28 ஆரோவேர், சிப்மோத், எஸ்கேமோவா, 29 ராக்கால், யெராமித்தீயரின் கேனிய நகரங்கள் 30 ஓர்மா, கொராசீன், ஆற்றாகில், 31 எப்ரோன் ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்கும் தாவீது தன் ஆட்களுடன் எங்கெங்கே தங்கினானோ, அங்கே உள்ள தலைவர்களுக்கும் அன்பளிப்பைக் கொடுத்து அனுப்பினான்.

சவுலின் மரணம்

31 பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில்போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர். சவுலுக்கும் அவனது மகன்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.

சவுலுக்கு எதிராக போரானது மேலும் மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான். தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், “உனது பட்டயத்தை எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்” என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். சவுல் மரித்துப்போனதை, ஆயுதங்களை எடுத்து வரும் அவனது உதவியாளன் அறிந்து, தனது வாளால் தானும் மடிந்தான். எனவே சவுலும் அவனது மூன்று மகன்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.

சவுலின் மரணத்தால் பெலிஸ்தியர் மகிழ்ச்சியடைகின்றனர்

பள்ளத்தாக்கின் மறு பக்கத்தில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் சேனை பயந்து ஓடுவதைக் கண்டனர். சவுலும் அவனது மகன்களும் மரித்துப்போனதை அறிந்தனர். எனவே அவர்கள் தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். பெலிஸ்தியர் அந்நகரங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர். 10 சவுலின் ஆயுதங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.

11 இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர். 12 எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது மகன்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர். 13 பின்பு சவுல் மற்றும் அவனது மகன்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.

லூக்கா 13:23-35

23 ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான்.

24 இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. 25 ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். 26 பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். 27 அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான்.

28 “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். 29 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். 30 வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார்.

எருசலேமில் இயேசு மரிப்பார்(A)

31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள்.

32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.

34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center