Old/New Testament
பல இடங்களுக்கு தாவீது போகிறான்
22 தாவீது காத்தை விட்டு அதுல்லாம் குகைக்கு ஓடினான். தாவீது அதுல்லாமில் இருப்பதாக அவனது சகோதரர்களும் உறவினர்களும் அறிந்துக்கொண்டனர். அவனைப் பார்க்க அங்கே சென்றார்கள். 2 பலர் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். சிலர் சிலவிதமான பிரச்சனைகளில் இருந்தனர். சிலர் கடன்பட்டவர்கள். சிலர் தம் வாழ்வில் விரக்தியடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தாவீதோடு சேர்ந்து, அவனை தலைவன் ஆக்கினார்கள். இப்போது அவன் 400 பேர்களோடு இருந்தான்.
3 தாவீது அதுல்லாமை விட்டு மோவாபிலுள்ள மிஸ்பாவிற்கு சென்றான். மோவாபின் அரசனிடம், “எனக்காக தேவன் என்ன செய்யப்போகிறார் என்று தெரியும்மட்டும் என் தாயும் தந்தையும் இங்கு வந்து தங்கி இருக்க தயவு செய்து அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். 4 அவ்வாறே அவர்களை அங்கே அடைக்கலமாக இருக்கச் செய்தான். தாவீது கோட்டையில் இருக்கும்வரை அவர்களும் இருந்தார்கள்.
5 ஆனால் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “கோட்டையில் தங்க வேண்டாம். யூதா நாட்டிற்குப் போ” என்று சொன்னான். எனவே அவன் விலகி ஏரேத் எனும் காட்டிற்குச் சென்றான்.
சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழிக்கிறான்
6 ஜனங்கள் தாவீது மற்றும் அவனது ஆட்கள் மூலம் சேர்ந்து வருவதை சவுல் கேள்விப்பட்டான். அவன் கிபியா மேட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஈட்டி இருந்தது. அதிகாரிகள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர். 7 அவன் அவர்களிடம், “பென்யமீனின் ஜனங்களே! கவனியுங்கள். தாவீது உங்களுக்கு வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தருவான் என்று நினைக்கிறீர்களா? அவன் உங்களை 1,000 பேருக்கும் 100 பேருக்கும் அதிகாரிகளாக்குவான் என்று எண்ணுகிறீர்களா? 8 நீங்கள் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்! இரகசியத் திட்டங்களைப் போடுகிறீர்கள். என் மகன் யோனத்தானைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை. அவன் தாவீதோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. என் மகன் தாவீதை உற்சாகப்படுத்தி, அவனிடம் மறைந்திருந்து என்னைத் தாக்கச் சொல்கிறான் என்பதை யாரும் எனக்குக் கூறவில்லை. நீங்கள் யாரும் என் மீது அக்கறை கொள்ளவில்லை! யோனத்தான் தாவீதுடன் சேர்ந்து அதையே இப்போது செய்துக்கொண்டிருக்கிறான்!” என்றான்.
9 அப்போது ஏதோமியனாகிய தோவேக்கு, சவுலின் அதிகாரிகளோடு நின்று கொண்டிருந்தான். அவன், “நான் தாவீதை நோப்பில் பார்த்தேன். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கைப் பார்க்க வந்தான். 10 அகிமெலேக்கும் தாவீதிற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான், உணவளித்தான், கோலியாத்தின் பட்டயத்தைக் கொடுத்தான்” என்றான்.
11 பிறகு சவுல் சிலரை அனுப்பி ஆசாரியனை அழைத்துவரக் கட்டளையிட்டான். நோப்பில் ஆசாரியர்களாக இருந்த அகிமெலேக்கின் உறவினர்களையும் அழைத்து வர கட்டளையிட்டான். அகிமெலேக்கின் உறவினர்களும் நோப்பில் ஆசாரியர்களாக இருந்தார்கள். அனைவரும் அரசனிடம் வந்தார்கள். 12 சவுல் அகிமெலேக்கிடம், “அகிதூபின் மகனே! கவனி” என்றான்.
அவன், “சரி ஐயா” என்றான்.
13 சவுல் அகிமெலேக்கிடம், “நீயும் ஈசாயின் மகனான தாவீதும் சேர்ந்து எனக்கு எதிராக ஏன் இரகசிய திட்டமிட்டீர்கள்? நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்திருக்கிறாய்! அவனுக்காக தேவனிடம் ஜெபம் செய்திருக்கிறாய்? இப்போது தாவீது என்னை தாக்குவதற்குத் தயாராக இருக்கிறான்!” என்றான்.
14 அதற்கு அகிமெலேக்கு, “உங்களிடம் தாவீது உண்மையுள்ளவனாக இருக்கிறான். உங்கள் அதிகாரிகளில் எவரும் அவனைப் போன்றவர்கள் இல்லை. அவன் உமது சொந்த மருமகன் அவன் உமது கட்டளைகளுக்கு விசுவாசத்தோடு அடிபணிகிறான். உமது குடும்பம் அவனை மதிக்கிறது. 15 நான் தாவீதிற்காக தேவனிடம் ஜெபம் செய்வது முதல் முறையன்று, இல்லவே இல்லை, என்னையோ, என் உறவினர்களையோ இதற்காகப் பழி சுமத்த வேண்டாம். நாங்கள் உமது சேவகர்கள், நீர் சொல்லும் காரியங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
16 ஆனால் அரசனோ, “அகிமெலேக்கே, நீயும் உனது உறவினர்களும் மரிக்க வேண்டும்!” என்றான். 17 பிறகு அவன் தன் காவலர்களைப் பார்த்து, “போய் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள். ஏனென்றால், அவர்கள் தாவீதின் பக்கம் இருக்கிறார்கள். அவன் தப்பித்துப்போனதை அறிந்தும், அவர்கள் என்னிடம் சொல்லவில்லை” என்றான்.
ஆனால் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 18 எனவே, அரசன் தோவேக்கிற்கு கட்டளையிட்டான். தோவேக், “நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுவிடு” என்றான். எனவே, அவன் போய் ஆசாரியர்களைக் கொன்றான். அன்று 85 ஆசாரியர்கள் அவனால் கொல்லப்பட்டனர். 19 நோவாப் ஆசாரியர்களின் நகரமாக இருந்தது. அங்குள்ள அனைவரையும் கொன்றான். அவன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கைப்பிள்ளைகள் என அனைவரையும் வாளால் கொன்றுப் போட்டான். அதோடு அவன் பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றையும் கொன்றான்.
20 ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான். 21 அவன் தாவீதிடம் சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுப்போட்டதைக் கூறினான். 22 பின் தாவீது அவனிடம், “நான் ஏதோமியனாகிய தோவேக்கை அன்று பார்த்தேன். அவன் சவுலிடம் சொல்வான் என்றும் தெரியும்! எனவே உன் தந்தையும் மற்றவர்களும் மரித்துப் போனதற்கு நானே பொறுப்பு. 23 சவுல் உன்னை மட்டுமல்ல என்னையும் கொல்ல விரும்புகிறான். பயப்படாதே, என்னோடு பாதுகாப்பாக இருக்கலாம்” என்றான்.
கேகிலாவில் தாவீது
23 ஜனங்கள் தாவீதிடம், “பாருங்கள் பெலிஸ்தியர்கள் கேகிலாவிற்கு எதிராகப் போரிடுகிறார்கள். அவர்கள் அறுவடை களத்திலிருந்து தானியங்களைக் கொள்ளையிடுகிறார்கள்” என்றனர்.
2 உடனே தாவீது கர்த்தரிடம், “நான் போய் பெலிஸ்தியர்களோடு போரிடட்டுமா?” என்று கேட்டான்.
கர்த்தர், “ஆமாம் நீ பெலிஸ்தியர்களோடு போரிட்டு கேகிலாவைக் காப்பாற்று” என்று பதிலுரைத்தார்.
3 ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், “பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்” என்றனர்.
4 தாவீது மீண்டும் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர், “கேகிலாவிற்குப் போ, பெலிஸ்தியர்களை வெல்ல நான் உதவுவேன்” என்றார். 5 எனவே, தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவிற்கு சென்றனர். அவர்கள் பெலிஸ்தியரோடு சண்டையிட்டு தோற்கடித்து, அவர்களின் மந்தைகளைக் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு, தாவீது கேகிலாவைக் காப்பாற்றினான். 6 (அபியத்தார் தாவீதிடம் ஓடிப்போனபோது அவன் தன்னோடு ஏபோத்தையும் கொண்டு சென்றான்.)
7 ஜனங்கள் சவுலிடம் வந்து தாவீது கேகிலாவில் இருப்பதை அறிவித்தனர். அதற்கு சவுல் “தேவன் தாவீதை எனக்குக் கொடுத்தார்! அவன் தானே வலைக்குள் விழுந்திருக்கிறான். அவன் பூட்டிப் போடக்கூடிய கோட்டைக் கதவுகளை உடைய நகரத்திற்குள் போய்விட்டான்” என்றான். 8 சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.
9 தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.
10 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன். 11 சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான்.
“சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.
12 மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான்.
“அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
13 எனவே தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவை விட்டு விலகினார்கள். அவனோடு 600 பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்தனர். கேகிலாவிலிருந்து தாவீது தப்பிவிட்டதை சவுல் அறிந்தான். எனவே அவன் அந்நகரத்திற்குப் போகவில்லை.
சவுல் தாவீதைத் துரத்துகிறான்
14 பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.
15 சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். 16 ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். 17 யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.
18 யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.
சீப்பிலுள்ள ஜனங்கள் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கின்றனர்
19 சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது. 20 இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.
21 சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 22 போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார் யார் வந்து சந்திக்கின்றனர். ‘தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான்’ என்று நினைத்தான். 23 தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
24 பின்னர் சீப்பிலுள்ள ஜனங்கள் திரும்பிப் போனார்கள். சவுல் தாமதமாகப் போனான்.
தாவீதும் அவனது ஆட்களும் மாகோன் பாலைவனத்தில் இருந்தனர். அவர்கள் இருந்த பகுதி எஷிமோனின் தென் பகுதியில் இருந்தது. 25 சவுல் தன் ஆட்களோடு தாவீதைத் தேடிச் சென்றான். சவுல் தேடுவதாக ஜனங்கள் தாவீதை எச்சரித்தனர். அதனால் மாவோனில் உள்ள “கன்மலையில்” தாவீது இறங்கினான். சவுல் இதனை அறிந்து அங்கும் தாவீதைத் தேடிப்போனான்.
26 சவுல் மலையின் ஒரு பகுதியில் இருந்த போது தாவீதும் அவனது ஆட்களும் அடுத்த பகுதியில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விரைவாக விலகினான். சவுலும் அவனது ஆட்களும் மலையைச் சுற்றிப் போய் தாவீதையும் அவனது ஆட்களையும் பிடிக்க முயன்றனர்.
27 அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!” என்றான்.
28 எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை “வழுக்கும் பாறை” அல்லது “சேலா அம்மாலிகோத்” என்று அழைக்கின்றனர். 29 தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.
தாவீது முன் சவுலின் அவமானம்
24 சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, “தாவீது என்கேதி அருகிலுள்ள பாலைவனப்பகுதியில் இருக்கிறான்” என்று ஜனங்கள் அறிவித்தனர்.
2 எனவே சவுல் இஸ்ரவேலரில் 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான். 3 சவுல் சாலையோரத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். அதன் அருகில் ஒரு குகை இருந்தது. சவுல் அதனுள்ளே தீட்டுக்கழிக்கச் சென்றான். அதன் பின் பகுதியில் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்தனர். 4 தாவீதிடம் அவனது ஆட்கள், “கர்த்தர் சொன்ன நாள் இதுவே! கர்த்தர், ‘நான் உனது பகைவனை உன்னிடம் தருவேன். நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.
தாவீது சவுலின் அருகில் ஊர்ந்து சென்றான். சவுலின் சால்வை நுனியை அறுத்தான். அதனைச் சவுல் கவனிக்கவில்லை. 5 பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். 6 தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான். 7 தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான்.
சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான். 8 தாவீது வெளியே வந்து சவுலைப் பார்த்து, “என் ஆண்டவனாகிய அரசனே” என்று சத்தமிட்டான்.
தாவீது தரையில் முகம் குப்புற வணங்குவதை சவுல் திரும்பிப் பார்த்தான். 9 தாவீது சவுலிடம், “‘உமக்குத் தீங்கிழைக்க தாவீது திட்டமிடுகிறான்’ என்று ஜனங்கள் சொல்வதை ஏன் காது கொடுத்துக் கேட்கிறீர்? 10 “நான் உமக்குத் தீமை செய்ய விரும்பவில்லை! இதனை உமது கண்களாலேயே பார்க்கலாம்! இன்று கர்த்தர் உம்மைக் குகைக்குள் அனுப்பினார். ஆனால் நான் உம்மைக் கொல்ல மறுத்து விட்டேன். உம் மீது இரக்கம் கொண்டேன். நானோ, ‘நான் என் எஜமானனுக்குத் தீமை செய்யமாட்டேன்! சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்!’ என்று கூறினேன். 11 என் கையிலுள்ள இந்தத் துண்டுத் துணியை பாரும். இதனை உமது சால்வை நுனியில் இருந்து வெட்டி எடுத்தேன். நான் உம்மை கொன்றிருக்கலாம்! நான் அப்படிச் செய்யவில்லை. இதனை நீர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உமக்கு எதிராக எந்த தீமையும் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்! நான் உமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆனால் நீர் என்னை வேட்டையாடிக் கொல்லப்பார்க்கிறீர். 12 கர்த்தர் தாமே இதில் தீர்ப்பளிக்கட்டும்! நீர் எனக்குச் செய்த தீமைக்குத் தக்கதாக கர்த்தர் உம்மை தண்டிக்கக் கூடும். ஆனால் நான் உமக்கு எதிராகச் சண்டையிடமாட்டேன்.
13 “‘கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி.’
“நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்! 14 நீர் யாரைத் தேடுகிறீர்? இஸ்ரவேல் அரசன் யாரோடு சண்டையிட அலைகிறார்? உமக்குத் தீமை செய்யும் உமது எதிரியைத் தேடவில்லை! ஒரு மரித்த நாயை, தெள்ளுப்பூச்சியைத் தேடி அலைகிறீர்கள். 15 கர்த்தர் தாமே தீர்ப்பளிக்கட்டும். நம் இருவரையும் பற்றி அவர் முடிவு செய்யட்டும், நான் சொல்வது சரி என்று கர்த்தருக்குத் தெரியும். அவர் எனக்கு உதவுவார். கர்த்தர் உம்மிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.
16 தாவீது பேசி முடித்ததும் சவுல், “இது உன் குரல்தானா என் மகனாகிய தாவீதே?” என்று சொல்லி கதறி அழுதான். 17 அவன், “நீ சரியானவன். நான் தவறானவன். நீ என்னிடம் நல்லபடியாக இருக்க நான் உன்னிடம் தவறாக நடந்துக்கொண்டேன். 18 நீ எனக்குச் செய்த நன்மைகளைப்பற்றிக் கூறினாய். கர்த்தர் என்னை உன்னிடம் ஒப்படைத்தார். நீ என்னைக் கொல்லவில்லை. 19 இது நான் உன் எதிரி அல்ல என்பதைக் காட்டும். எவனும் தன் எதிரியைப் பிடித்தால் எளிதில் விடமாட்டான். இன்று எனக்கு நீ செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்குப் பதிலளிப்பார்! 20 நீ புதிய அரசனாவாய் என்பது எனக்குத் தெரியும். நீ இஸ்ரவேல் சாம்ராஜ்யத்தை ஆளுவாய் 21 இப்போது எனக்கொரு சத்தியம் செய்துக் கொடு. எனது சந்ததியாரைக் கொல்லமாட்டேன் என்று கர்த்தருடைய பேரில் சத்தியம் செய். என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் பெயரையும் அழிக்காமல் இருக்கவேண்டும்” எனக்கேட்டுக் கொண்டான்.
22 எனவே தாவீதும் தான் சவுலின் குடும்பத்தாரைக் கொல்லமாட்டேன் என்று சவுலிடம் சத்தியம் செய்தான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதும் அவனது ஆட்களும் கோட்டைக்குப் போனார்கள்.
பரிசேயரைப் போல இராதீர்
12 பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். 2 மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். 3 இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார்.
தேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்(A)
4 பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. 5 நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.
6 “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. 7 இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.
இயேசுவைக் குறித்து வெட்கப்படாதீர்(B)
8 “நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். 9 ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன்.
10 “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான்.
11 “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். 12 அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
தன்னலம் கூடாது
13 கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான்.
14 ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். 15 பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.
16 பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. 17 அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான்.
18 “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். 19 அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான்.
20 “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார்.
21 “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.
கவலை வேண்டாம்(C)
22 இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். 23 உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. 24 பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். 25 கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. 26 சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?
27 “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க அரசனான சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 28 வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.
29 “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். 30 இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். 31 நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”
2008 by World Bible Translation Center