Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 13-14

சவுல் தன் முதல் தவறைச் செய்கிறான்

13 சவுல் அரசனாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு அவன் 3,000 பேரை இஸ்ரவேலில் தேர்ந்தெடுத்தான். மலை நாடான பெத்லேலில் உள்ள மிக்மாசில் அவனோடு 2,000 பேர் இருந்தனர். 1,000 பேர் பென்யமீனில் உள்ள கிபியாவில் யோனத்தானோடு இருந்தனர். சவுல் மீதி உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பினான்.

யோனத்தான் பெலிஸ்தர்களை கேபாவில் தோற்கடித்தான். இதனை பெலிஸ்தர் கேள்விப்பட்டு, “இஸ்ரவேலர் புரட்சி செய்கின்றனர்” என்றார்கள்.

சவுல், “நடந்த நிகழ்ச்சியை எபிரெயர் கேட்க்கட்டும்” என்று சொன்னான். எனவே இஸ்ரவேல் நாடுகளில் எக்காளம் ஊதும்படி சொன்னான். இஸ்ரவேலர் அனைவரும் செய்தியைக் கேட்டனர். அவர்கள், “சவுல் பெலிஸ்தரின் தலைவனைக் கொன்றான். இப்போது உண்மையில் பெலிஸ்தர் இஸ்ரவேலரை வெறுக்கிறார்கள்!” என்றனர்.

கில்காலில் கூடும்படி சவுல் இஸ்ரவேலரை அழைத்தான். பெலிஸ்தர்களும் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட ஒன்று கூடினார்கள். அவர்களிடம் 30,000 ரதங்களும் 6,000 குதிரைவீரரோடும் இருந்தனர். கடற்கரை மணலைப் போல் மிக்மாசிலே (பெத்தாவேனுக்கு கிழக்கே மிக்மாஸ் இருந்தது) கூடினார்கள்.

இஸ்ரவேலர் தாம் தொல்லையில் சிக்குண்டிருப்பதாக அறிந்தனர். வலைக்குள் சிக்கியதாக அறிந்துக் குகைகளிலும் மலைப் பிளவுகளிலும் ஒளிந்துக்கொள்ள ஓடினார்கள். கிணறுகள், பாறைகள், நிலத்துவாரங்களில் ஒளிந்தனர். சிலர் யோர்தான் நதியைக் கடந்து காத், கீலேயாத் போன்ற நிலங்களுக்கு ஓடினார்கள். சவுல் கில்காலிலேயே இருந்தான். படையில் உள்ளவர்கள் நடுங்கினார்கள்.

சாமுவேல் சவுலை கில்காலில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். சவுல் 7 நாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் இன்னும் கில்காலுக்கு வரவில்லை, வீரர்கள் சவுலை விட்டு விலக ஆரம்பித்தனர். ஆகையால் சவுல், “தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறி தகன பலிகளைச் செலுத்தினான். 10 அதைச் செய்து முடிக்கும் தருவாயில் சாமுவேல் வந்தான். சவுல் அவனை சந்திக்க முன் சென்றான்.

11 சாமுவேல் “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சவுல் “வீரர்கள் என்னை விட்டு விலகுவதைப் பார்த்தேன். நீங்களும் சரியான நேரத்தில் வரவில்லை. பெலிஸ்தர்கள் மிக்மாசில் கூடிக்கொண்டிருந்தனர். 12 நான், ‘அவர்கள் வந்து கில்காலில் என்னைத் தாக்குவார்கள்’ என எண்ணினேன். நான் இதுவரை கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை! எனவே தகனபலி செலுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்” என்றான்.

13 சாமுவேலோ, “நீ முட்டாள்தனமாக இதைச் செய்தாய்! நீ உனது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர் உன் குடும்பத்தை என்றென்றைக்கும் இஸ்ரவேலை ஆளச் செய்திருப்பார். 14 இப்போது உனது அரசு தொடராது. கர்த்தர் தனக்குக் கீழ்ப்படிகிறவனையே தேடிக்கொண்டிருக்கிறார்! எனவே கர்த்தர் அந்த மனிதனைத் தெரிந்துக்கொண்டார். கர்த்தர் தம் ஜனங்களுக்காக அவனை தேர்ந்தெடுப்பார். கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீ கீழ்ப்படியவில்லை. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்தார்” என்றான். 15 பின் சாமுவேல் எழுந்து கில்காலை விட்டு விலகினான்.

மிக்மாசில் போர்

சவுலும், மீதியாக இருந்த அவனது சேனையும் கில்காலை விட்டு பென்யமீனில் உள்ள கிபியாவிற்கு சென்றனர். தன்னிடம் உள்ளவர்களை எண்ணினான். அவர்கள் 600 பேர், 16 சவுல், அவனது மகன் யோனத்தான், வீரர்கள் அனைவரும் கிபியாவிற்குச் சென்றனர்.

பெலிஸ்தர்கள் மிக்மாசில் முகாமிட்டிருந்தனர். 17 அவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்ரவேலரைத் தண்டிக்கத் தீர்மானித்தனர். எனவே, அவர்களது சிறந்த வீரர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மூன்றாகப் பிரிந்து ஒரு குழு வடக்கே சூகாலின் அருகிலுள்ள ஒப்ரா வழியிலும் 18 இரண்டாவது குழு தென் கிழக்கே பெத்தொரோன் சாலையிலும் சென்றது. மூன்றாவது படை வனாந்தரத்தை நோக்கிப் போகும் செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான வழியில் சென்றது.

19 இஸ்ரவேலர்கள் யாருக்கும் இரும்பு ஆயுதங்களைச் செய்யத் தெரியாது. இஸ்ரவேலில் இரும்புக் கொல்லர்கள் யாரும் இல்லை. பெலிஸ்தர்கள் அவர்களுக்கு ஆயுதம் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கத்தி, வாள், ஈட்டிகளை செய்துவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள். 20 பெலிஸ்தர் மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கூர்படுத்த அறிந்திருந்தனர். இஸ்ரவேலர் தங்கள் கடப்பாரை, மண் வெட்டி, முக்கூருள்ள வேலாயுதங்கள், கோடரி, தாற்றுக்கோல் போன்றவற்றை கூர்மையாக்க பெலிஸ்தரிடம் சென்றனர். 21 பெலிஸ்தர்களின் கொல்லர்கள் கடப்பாரை, மண்வெட்டியை கூர்மைப்படுத்த 1/3, 1/6 சேக்கல் வெள்ளியை வசூலித்தனர். 22 எனவே, போரிடும் நாளில் சவுலோடு சென்ற இஸ்ரவேலர்களின் கையில் வாளோ அல்லது கேடயமோ எதுவும் இல்லை. சவுலிடமும் அவன் மகன் யோனத்தானிடமும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

23 ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.

யோனத்தான் பெலிஸ்தர்களைத் தாக்குகிறான்

14 அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் மகனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான்.

சவுல் மலையோரத்தில் மிக்ரோனில் ஒரு மாதுளை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். அதனருகில் போரடிக்கிற களம் இருந்தது. அவனோடு 600 பேர் இருந்தனர். அந்நாட்களில் அகியா என்ற ஒருவன் இருந்தான். இப்போது அகியா ஆசாரியனாயிருந்தான். அகியா ஏபோத்தைத் தரித்து ஆசாரிய ஊழியம் செய்துவந்தான். அகியா என்பவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். இக்கபோத் பினெகாசின் மகன். பினெகாசு ஏலியின் மகன். சீலோவில் முன்பு ஏலி ஆசாரியனாக இருந்தான்.

யோனத்தான் தனியாக விட்டுப் போயிருந்ததை யாரும் அறியவில்லை. அவன் சென்ற வழியில் இரு பக்கமும் போசே, சேனே எனும் இரு பெரும் பாறைகள் இருந்தன. இந்தக் கணவாய் வழியாகச் செல்ல யோனத்தான் திட்டமிட்டான். இந்தப் பாறைகளில் ஒன்று மிக்மாசை நோக்கியும் இன்னொன்று கிபியாவை நோக்கியும் இருந்தன.

யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்து வந்த இளம் உதவியாளனிடம், “வா, நாம் அந்நியரின் முகாமுக்குப் போவோம், அவர்களைத் தோற்கடிக்க ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவலாம்! கர்த்தரை யாராலும் தடுக்க முடியாது. நமது எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அது காரியமல்ல” என்றான்.

அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் “உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்” என்றான்.

அப்பொழுது யோனத்தான், “சரி போவோம், பள்ளத்தாக்கைக் கடந்து பெலிஸ்தர்களின் எல்லைக்குள் செல்வோம். நம்மை அவர்கள் பார்க்கும்படி செய்வோம். அவர்கள், ‘நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்றால் நாம் அங்கேயே நிற்போம். மேலே செல்லமாட்டோம். 10 ஆனால் அவர்கள், ‘இங்கே வாருங்கள்’ என்றால் போவோம். ஏனென்றால் கர்த்தர் நாம் அவர்களைத் தோற்கடிக்க அனுமதிக்கிறார் என்பதற்கு இது தேவனுடைய அடையாளமாகும்” என்றான்.

11 பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர். 12 கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர், “இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!” என அவர்களை நோக்கிக் கூவினர்.

யோனத்தான் தன் உதவியாளரிடம், “மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!” என்றான்.

13-14 யோனத்தான் தன் கைகளாலும், கால்களாலும் பற்றியபடி மலைமீது ஏறினான். உதவியாளன் பின்னால் ஏறினான். அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களைத் தாக்கி, முதலில் 20 பேரை கொன்றனர். முன்னால் வருகின்றவர்களை யோனத்தானும், பின்னால் வருகிறவரை உதவியாளனும் கொன்றனர்.

15 வயலிலும், கோட்டையிலும், முகாமிலும் உள்ள வீரர்கள் இவர்களைக் கண்டு பயந்தனர்! பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு மிகுந்த தைரியமுள்ள வீரர்களும் மென்மேலும் பயந்தனர்.

16 பென்யமீன் நாட்டில் கிபியாவிலே சவுலின் காவல்காரர்கள், பெலிஸ்தர் பல்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். 17 சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான்.

அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.

18 சவுல் அகியாவிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை கொண்டுவா!” என்றான். (அப்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி அவர்களோடுதான் இருந்தது.) 19 சவுல் ஆசாரியனாகிய அகியாவிடம் பேசிக்கொண்டே தேவனுடைய ஆலோசனைக்குக் காத்திருந்தான். பெலிஸ்தர்களின் முகாமில் கூச்சலும் குழப்பமும் மிகுந்தன. இதனால் சவுல் பொறுமையை இழந்து, ஆசாரியனாகிய அகியாவிடம், “இது போதும்! உன் கைகளைத் தளர்த்தி ஜெபத்தை நிறுத்து!” என்றான்.

20 சவுல் தன் படையைச் சேர்த்துக்கொண்டு சண்டையிடச் சென்றான். பெலிஸ்தர்கள் குழப்பமுற்று தங்களுக்குள் வாளால் மோதிக்கொண்டனர். 21 ஏற்கெனவே சில எபிரெயர் பெலிஸ்தருக்கு அடிமைவேலை செய்து கொண்டிருந்தனர்! அவர்களும் இப்போது இஸ்ரவேல் மற்றும் சவுல் யோனத்தானோடு சேர்ந்தனர். 22 எப்பிராயீம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தோல்வியைக் கேள்விப்பட்டு அவர்களும் சேர்ந்து துரத்தினார்கள். 23 எனவே, கர்த்தர் அன்று இஸ்ரவேலரை காப்பாற்றினார். அச்சண்டை பெத்தாவேனைக் கடந்தது. சவுலிடம் இப்போது 10,000 வீரர்களும் முழுபடையும் இருந்தனர். மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தப் போர் பரவியது.

சவுல் இன்னொரு தவறு செய்கிறான்

24 அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர்.

25-26 சிலர் போர் செய்த வண்ணம் காட்டுப் பகுதிக்குப் போனபோது தேன் கூடுகளைக் கண்டும் ஆணைக்குப் பயந்து உண்ணவில்லை. 27 ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான்.

28 ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால்தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான்.

29 யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்! 30 பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.

31 அன்று இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களைத் தோற்கடித்து, அவர்களை மிக்மாஸ் முதல் ஆயலோன் வரை துரத்தினபடியால் களைப்பாகவும், பசியாகவும் இருந்தனர். 32 அவர்கள் ஆடுகளையும், கன்றுகுட்டிகளையும் பெலிஸ்தர்களிடமிருந்து கைப்பற்றி கொன்று தின்றனர். அம்மிருகங்களின் இரத்தம் இன்னும் உறையாதிருந்தது!

33 ஒருவன் சவுலிடம், “பாருங்கள்! ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டனர். அவர்கள் இறைச்சியை அதில் இரத்தம் இருக்கும்போது தின்று கொண்டிருக்கின்றனர்!” என்றான்.

சவுலோ, “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள்! இப்போது இங்கே பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான். 34 மேலும், “ஜனங்களிடம் போங்கள், இரத்தத்தோடு இருப்பதைச் சாப்பிடுவதால் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டீர்கள். தங்கள் மாட்டையும் ஆட்டையும் என் முன் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுங்கள். இங்குதான் அவர்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொல்லவேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யவேண்டாம். இரத்தம் உறையாதிருக்கிற இறைச்சியை உண்ணவேண்டாம்” என்றான்.

அன்று இரவு ஒவ்வொருவனும் தங்கள் மிருகங்களைக் கொண்டு வந்து அங்கே கொன்றனர். 35 பின் சவுல் அங்கே கர்த்தருக்காக பலிபீடம் கட்டினான். சவுல் தானாகவே கர்த்தருக்காக அப்பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினான்!

36 சவுல், “இன்று இரவு பெலிஸ்தர்களுக்கும் பின்னால்போய் அவர்களைக் கொன்று அவர்களுடையதை எடுத்து வருவோம்!” என்று சொன்னான்.

படையினர், “உங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.

ஆனால் ஆசாரியனோ, “தேவனைக் கேட்போம்” என்றான்.

37 எனவே சவுல் தேவனிடம், “பெலிஸ்தர்களைத் துரத்திப் போகலாமா? அவர்களைத் தோற்கடிக்கவிடுவீரா?” என்று கேட்டான். ஆனால் தேவன் அன்று சவுலுக்கு பதில் சொல்லவில்லை.

38 எனவே, “எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம். 39 நான் இஸ்ரவேலை காக்கும் கர்த்தருடைய பேரில் சத்தியம் செய்திருக்கிறேன். என் மகனே பாவம் செய்தாலும் சாகடிக்கப்படுவான்” என்றான். யாரும் பதில் சொல்லவில்லை.

40 பின் அவன், “நீங்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள், நானும் என் மகனும் இந்தப் பக்கம் நிற்போம்” என்றான்.

வீரர்களும், “உங்கள் விருப்பம் ஐயா!” என்றனர்.

41 அப்பொழுது சவுல், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, உமது தொண்டனுக்கு இன்று ஏன் பதில் சொல்லவில்லை? நானோ அல்லது என் மகனோ பாவம் செய்திருந்தால், ஊரீம்மைத் தாரும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்திருந்தால் தும்மீம்மைத் தாரும்” என்று ஜெபித்தான்.

சவுலும் யோனத்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனங்கள் தப்பினார்கள். 42 சவுல் “மீண்டும் சீட்டைப் போட்டு, பாவி நானா என் மகனா” என்று கேட்டான். யோனத்தான் மேல் சீட்டு விழுந்தது.

43 சவுல் மகனிடம், “சொல் என்ன பாவம் செய்தாய்?” என்று கேட்டான்.

அதற்கு யோனத்தான், “நான் என் கோலின் நுனியில் இருந்த கொஞ்சம் தேனை சுவைத்தேன். அதற்காக நான் மரிக்க வேண்டுமா?” என்று கேட்டான்.

44 ஆனால் சவுல், “என் சத்தியத்தை நான் காப்பாற்றாவிட்டால் தேவன் என்னைத் தண்டிப்பார்! நீ மரிக்கத்தான் வேண்டும்” என்றான்.

45 ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை.

46 சவுல் பெலிஸ்தர்களைத் துரத்தாததால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போனார்கள்.

சவுல் இஸ்ரவேலரின் பகைவரோடு போரிடுகிறான்

47 சவுல் இஸ்ரவேலர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி அவர்களின் அரசனானான். மோவாப், அம்மோனியர், ஏதோம் எனும் சோபா அரசன், பெலிஸ்தர்களை சவுல் வென்றான். சவுல் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் இஸ்ரவேலரின் பகைவர்களையெல்லாம் வென்றான். 48 சவுல் மிகத் தைரியமானவன். இஸ்ரவேலை கைப்பற்ற முயன்ற அனைத்து பகைவரையும் வென்றான். மேலும் அமலேக்கியரையும் தோற்கடித்தான்!

49 யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா ஆகியோர் சவுலின் மகன்கள். மூத்தமகள் மேராப், இளையவள் மீகாள். 50 சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவள் அகிமாசின் மகள்.

அவனது தளபதியின் பெயர் அப்னேர், இவன் சவுலின் சித்தப்பா நேரின் மகன். 51 கீஸ் சவுலின் தந்தை. அப்னேரின் தந்தையான நேர் ஆபியேலின் மகன்.

52 சவுல் தன் ஆயுள் முழுவதும் பெலிஸ்தரோடு போரிட்டான். தைரியமும் வீரமும் உள்ள யாரைப் பார்த்தாலும் அவனை அழைத்து வீரர்களின் சேனையில் சேர்ந்துவிடுவான். அவர்கள் அரசனுக்கு அருகாமையில் இருந்து அரசனை காப்பாற்றுவர்.

லூக்கா 10:1-24

எழுபத்திரண்டு பேரை அனுப்புதல்

10 இதன் பின்பு இயேசு கூடுதலாக எழுபத்திரண்டு [a] மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு இரண்டு பேராக இயேசு அவர்களை அனுப்பினார். தான் போக விரும்பிய ஒவ்வொரு நகருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினார். இயேசு அவர்களுக்கு, “அறுவடைக்கு மிக அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறுவடை செய்வதற்கு உதவியாக மிகக் குறைவான வேலையாட்களே உள்ளனர். தேவன் அறுவடைக்கு (மக்களுக்கு) எஜமானர். அறுவடை செய்வதற்கு ஏற்ற அதிகமான வேலைக்காரர்களை அனுப்பும்படியாக தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

“நீங்கள் இப்போது போகலாம். ஆனால் கேளுங்கள். நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கு நடுவில் சிக்கிய ஆடுகளைப்போல் காணப்படுவீர்கள். பணப் பையையோ, பையையோ, காலணிகளையோ எடுத்துச்செல்லாதீர்கள். வழியிலே மக்களோடு பேசுவதற்காக நிற்காதீர்கள். ஒரு வீட்டினுள் நுழையும் முன்பே, ‘இவ்வீட்டில் அமைதி நிலவட்டும்’ என்று வாழ்த்துங்கள். அமைதிக்குத் தகுதியுள்ள மனிதன் அங்கு வாழ்ந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி அவனோடு தங்கட்டும். அமைதிக்குத் தகுதியற்ற மனிதன் அங்கிருந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி உங்களுக்கே திரும்பட்டும். அமைதியான வீட்டில் தங்குங்கள். அவ்வீட்டிலுள்ள மக்கள் தரும் உணவை உண்டு, பானத்தைப் பருகுங்கள். ஒரு வேலைக்காரனுக்குச் சம்பளம் தரப்படவேண்டும். இன்னொரு வீட்டில் தங்கும்பொருட்டு அந்த வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்.

“ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள். அங்கு வாழும் நோயுற்ற மக்களைக் குணப்படுத்துங்கள். பின்னர், ‘தேவனின் இராஜ்யம் உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறுங்கள்.

10 “ஒரு நகரத்துக்குப் போகும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், அந்நகரத்தில் உள்ள தெருக்களுக்குச் சென்று, 11 ‘எங்கள் கால்களில் பட்டிருக்கும் உங்கள் நகரத்தின் தூசியைக் கூட உங்களுக்கு எதிராகத் தட்டி விடுகிறோம். ஆனால் தேவனின் இராஜ்யம் சீக்கிரமாக வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள். 12 நியாயம் தீர்க்கிற நாளில் அந்நகரத்து மக்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு, சோதோம் நாட்டு மக்களுக்குக் கிடைத்ததைவிடக் கொடுமையானதாக இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

விசுவாசமற்றோருக்கு எச்சரிப்பு(A)

13 “கோராசீனே! உனக்குக் கேடு வரும். பெத்சாயிதாவே! உனக்குக் கேடு உண்டாகும். உங்களுக்கு அநேக அற்புகங்களைச் செய்தேன். தீருவிலும், சீதோனிலும் அதே அற்புதங்களைச் செய்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே அப்பட்டணங்களின் மக்கள் தங்கள் வாழ்வை மாற்றி, பாவம் செய்வதை விட்டு விட்டிருப்பார்கள். துயரத்தின் ஆடையை உடுத்திக்கொண்டு, சாம்பலைத் தங்கள் மேல் தூவிக்கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்துவதைக் காண்பித்து இருப்பார்கள். 14 நியாயம் தீர்க்கிற நாளில் தீரு, சீதோன் ஆகிய இடங்களைக் காட்டிலும் உங்கள் நிலை மோசமாக இருக்கும். 15 கப்பர்நகூம் நகரமே, நீ பரலோகத்திற்கு நேராக எழுப்பப்படுவாயா? இல்லை, மரணத்துக்குரிய இடத்திற்கு நேராக நீ வீசி எறியப்படுவாயாக.

16 “ஒருவன் நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது அவன் உண்மையாகவே எனக்குச் செவிசாய்க்கிறான். ஆனால் ஒருவன் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் என்னை அனுப்பியவராகிய தேவனை ஏற்க மறுக்கிறான்” என்றார்.

சாத்தான் விழுதல்

17 எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.

18 அம்மனிதர்களை நோக்கி இயேசு, “வானிலிருந்து மின்னலைப்போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன். 19 கேளுங்கள். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை நான் உங்களுக்குக் கொடுத்தேன். பகைவனின் (பிசாசின்) வல்லமையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களை எதுவும் காயப்படுத்துவதில்லை. 20 ஆம், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன. மகிழ்ச்சியாக இருங்கள். ஏன், உங்களுக்கு இந்த வல்லமை இருப்பதால் அல்ல, உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதால் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார்.

இயேசுவின் பிரார்த்தனை(B)

21 அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.

22 “எனக்கு எல்லாவற்றையும் என் பிதா தந்துள்ளார். மகன் யார் என்பது பிதாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பிதா யார் என்பதை மகன் மட்டுமே அறிவார். மகன் அதனைத் தெரிவிக்கும்பொருட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் மட்டுமே தந்தையைப்பற்றி அறிந்துகொள்வார்கள்” என்றார்.

23 பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். 24 நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், அரசர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center