Old/New Testament
7 கீரியாத்யாரீம் ஜனங்கள் வந்து கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் அதனை பாறைமேல் இருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். கர்த்தருடைய பெட்டியைக் காக்க அபினதாபின் மகன் எலெயாசாருக்கு அவர்கள் சிறப்பான சடங்குகளைச் செய்தார்கள். 2 பெட்டி கீரியாத்யாரீமிலேயே 20 ஆண்டுகள் இருந்தது.
இஸ்ரவேலர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்
இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தரைப் பின்பற்ற தொடங்கினார்கள். 3 சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே கர்த்தரிடம் மனப்பூர்வமாக திரும்புவீர்கள் என்றால் உங்களிடம் உள்ள அந்நிய தெய்வங்களை தூர எறியுங்கள். அஸ்தரோத் விக்கிரகங்களைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். நீங்கள் கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்! பின்னரே கர்த்தர் உங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்றான்.
4 எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர்.
5 சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான்.
6 இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடினார்கள். அவர்கள் தண்ணீரை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள். இவ்விதமாக உபவாசம் இருந்தனர். அன்றைய நாளில் எந்த வகை உணவும் உண்ணாமல், தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதை அறிக்கையிட்டனர். “நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” என்றனர், எனவே சாமுவேல் இஸ்ரவேலர்களின் நீதிபதியாக மிஸ்பாவில் இருந்தான்.
7 பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் அரசர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள். 8 அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர்.
9 சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார். 10 சாமுவேல் தகனபலியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுடன் போரிட வந்தனர். ஆனால் கர்த்தர் பெலிஸ்தியர்கள் பக்கம் பெரிய இடிமுழங்குமாறு செய்தார். இது பெலிஸ்தரைக் அச்சப்படுத்தியது, மேலும் குழப்பியது. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே இஸ்ரவேலர்கள் அவர்களைப் போரில் தோற்கடித்தனர். 11 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர்.
இஸ்ரவேலுக்கு சமாதானம் திரும்புகிறது
12 இதற்குப்பின், சாமுவேல் ஒரு சிறப்பான கல்லை நிறுவினான். அது தேவனுடைய உதவியை ஜனங்கள் நினைவு கூரும்படி இருந்தது. இந்த கல் மிஸ்பாவிற்கும் சேணுக்கும் இடையில் இருந்தது. அதற்கு “எபெனேசர்” (உதவியின் கல்) என்று பேரிட்டான். “இந்த இடம் வரும்வரை கர்த்தர் நமக்கு உதவிச் செய்தார்” என்றான்.
13 பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. சாமுவேலின் மீதியான வாழ்வு முடியுமட்டும் கர்த்தர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக இருந்தார். 14 பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக் கைப்பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர்.
இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.
15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களை வழிநடத்திச் சென்றான். 16 இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டு சாமுவேல் இடம்விட்டு இடம் சென்றான். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்பயணம் செய்து, அவன் பெத்தேல், கில்கால், மிஸ்பா போன்ற இடங்களில் நியாயம் விசாரித்து வந்தான். 17 அவனது வீடு ராமாவில் இருந்தது. எனவே எப்போதும் அங்கேயே திரும்பி வருவான். இஸ்ரவேலர்களை அங்கிருந்தே ஆண்டு கொண்டும் நியாயம் விசாரித்தும் வந்தான். சாமுவேல் ராமாவில் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினான்.
இஸ்ரவேலர் ஒரு அரசன் வேண்டும் என்று கேட்கிறார்கள்
8 சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். 2 அவனது மூத்த மகனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். 3 ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது மகன்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். 4 எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். 5 மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் மகன்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு அரசனைத் தாருங்கள்” என்று கேட்டனர்.
6 எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு அரசனை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். 7 கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! 8 அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். 9 எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு அரசன் அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு அரசன் எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.
10 அவர்கள் சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். 11 அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு அரசன் வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் மகன்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி அரசனின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும்.
12 “அரசன் உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள்.
“அரசன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!
13 “அரசன் உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.
14 “அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். 15 உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான்.
16 “அரசன் உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். 17 உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.
“நீங்களோ அரசர்களுக்கு அடிமையாவீர்கள், 18 காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.
19 ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம். 20 அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர்.
21 சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான். 22 கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார்.
பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.
சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுகிறான்
9 பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் மகன். அபியேல் சேரோரின் மகன், சேரோர் பெகோராத்தின் மகன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் மகன். 2 கீஸுக்கு சவுல் என்ற மகன் இருந்தான். இவன் அழகான இளைஞன். இவனைப்போல் அழகுள்ளவன் யாரும் இல்லை. இஸ்ரவேலில் எல்லோரும் இவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரம் இருந்தான்.
3 ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் மகன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான். 4 சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 இறுதியாக, சவுலும் வேலைக்காரனும் சூப் நாட்டிற்கு வந்தனர். சவுல் தன் வேலைக்காரனிடம், “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றான்.
6 ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான்.
7 சவுல் தன் வேலைக்காரனிடம், “உறுதியாக, நாம் நகருக்குள் போவோம், ஆனால் அவருக்கு எதைக் கொடுப்பது? தேவமனிதனுக்கு கொடுக்க அன்பளிப்புகள் எதுவுமில்லை. நம்மிடம் உணவு கூட இல்லையே?” என்றான்.
8 மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான்.
9-11 சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள்.
சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.)
12 அந்த இளம் பெண்கள், “ஆம், சீயர் இங்குதான் இருக்கிறார். அவர் சாலையில் சற்று தூரத்தில் தங்கி இருக்கிறார். அவர் இன்றுதான் ஊருக்கு வந்தார். சமாதான பலிகளைச் செலுத்துவதற்காக இன்று சிலர் அவரை ஆராதனை இடத்தில் சந்திக்கிறார்கள். 13 ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள்.
14 சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான்.
15 சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம், 16 “நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார்.
17 சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர், “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார்.
18 சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.
19 அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன். 20 மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான்.
21 அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பந்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான்.
22 பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான். 23 சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான்.
24 சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.
25 அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான். 26 சவுல் அதில் உறங்கினான்.
மறுநாள், அதிகாலையில் சவுலை மேல் வீட்டிற்கு அழைத்தான். “எழு, நான் உன்னை உன் வழியிலே அனுப்புவேன்” என்றான். அவனும் தயார் ஆகி சாமுவேலோடு வீட்டைவிட்டு வெளியேறினான்.
27 சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.
இயேசுவே கிறிஸ்து(A)
18 ஒருமுறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள்” எனக் கேட்டார்.
19 சீஷர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் எனக் கூறுகின்றனர். பிறர் எலியா என்கிறார்கள். மற்றும் சிலர் நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து உயிரோடு எழுந்துள்ள ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றனர்.” எனப் பதில் கூறினர்.
20 அப்போது இயேசு அவரது சீஷர்களை நோக்கி “நீங்கள் என்னை யார் என நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
பேதுரு, “நீர் தேவனிடமிருந்து வந்த கிறிஸ்து” என்று பதிலளித்தான்.
21 பிறருக்கு இதனைச் சொல்லாதபடிக்கு இயேசு அவர்களை எச்சரித்தார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(B)
22 பின்பு இயேசு, “மனிதகுமாரன் பல விஷயங்களில் துன்புற வேண்டும். மூத்த யூதத் தலைவர்களும், முக்கியமான போதகர்களும், வேதபாரகரும் அவரை நிராகரிப்பர். மனித குமாரன் கொல்லப்படுவார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின்னர் மரணத்தினின்று உயிர்த்தெழுவார்” என்றார்.
23 தொடர்ந்து அவர்களிடம் இயேசு, “என்னைப் பின்பற்றிவர யாரேனும் விரும்பினால், அவன் தனக்கு விருப்பமான செயல்களுக்கு மறுப்புச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் துயரங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும். 24 தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான். 25 ஒருவன் அழிந்துபோன நிலையில் இருந்தால் உலகம் முழுவதும் அவனுடையதாக இருந்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. 26 ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன். 27 உங்களுக்கு நான் உண்மையைச் சொல்கின்றேன். இங்கு நிற்பவர்களில் சிலர் தாம் மரணமடைவதற்கு முன் தேவனுடைய இராஜ்யத்தைக் காண்பார்கள்” என்றார்.
மோசே, எலியாவுடன், இயேசு(C)
28 இச்செய்திகளை இயேசு கூறினதற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு மலையின்மீது ஏறினார். 29 இயேசு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது அவரது முகம் மாற்றமடைந்தது. அவரது ஆடைகள் ஒளி விடும் வெண்மையாக மாறின. 30 பின்னர் இரண்டு மனிதர்கள் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசேயும், எலியாவும் ஆவர். 31 மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருசலேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 32 பேதுருவும் மற்றவர்களும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் விழித்து இயேசுவின் மகிமையைக் கண்டனர். இயேசுவோடுகூட நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களையும் அவர்கள் பார்த்தனர். 33 மோசேயும், எலியாவும் பிரிந்து செல்லும்போது பேதுரு, “குருவே, நாம் இங்கிருப்பது நல்லது. நாங்கள் இங்கு மூன்று கூடாரங்களை, ஒன்று உமக்காகவும் ஒன்று மோசேக்காகவும், ஒன்று எலியாவுக்காகவும், அமைப்போம்” என்று கூறினான். (பேதுரு தான் சொல்லிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கவில்லை)
34 இவ்வாறு பேதுரு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்களைச் சூழ்ந்தது. மேகம் சூழ்ந்ததும் பேதுரு, யாக்கோபு, யோவான், ஆகியோர் பயந்தனர். 35 மேகத்தினின்று ஒரு அசரீரி, “இவர் எனது மகன். நான் தேர்ந்துகொண்டவர் இவரே, இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றது.
36 அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.
2008 by World Bible Translation Center